Site icon இன்மதி

கட்டா குஸ்தி: ஆணாதிக்க கணவன்மார்களுக்கு..!

Read in : English

திரையரங்கில் படம் பார்த்துவிட்டு வெளியே வரும் கும்பல் மத்தியில், ‘இதுல சொன்ன மெசேஜை பார்த்தேள்ல’ என்று விவாதம் எழுவது அரிதான விஷயம். ஒரு குடும்பத்திற்குள், கணவன் மனைவிக்குள் அவ்வாறு நிகழும்போது அதன் வீரியம் இன்னும் அதிகம். குறைந்தபட்சமாக, ‘அந்த படத்துல வந்த மாதிரி’ என்று தொடங்கி சின்னதாய் வாக்குவாதம் எழலாம்.

சில வாரங்களுக்கு முன் வெளியான ‘லவ் டுடே’ பார்த்துவிட்டு ‘நாம போனை மாத்திக்கலாமா’ என்று யோசித்த ஜோடிகள் எண்ணிக்கை கணிசம். அது போலவே விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லெட்சுமி நடித்த ‘கட்டா குஸ்தி’ ட்ரெய்லர் பார்த்தபோதும், ஆணாதிக்கம் குறித்து அப்படியொரு விவாதம் வருமோ என்ற எண்ணம் துளிர்த்தது. முழுப்படமும் அதற்கு வகை செய்திருக்கிறதா?

குஸ்தி ஆடும் நாயகி!
தான் அதிகம் படிக்கவில்லை என்பதால், தனக்கு வரப்போகும் பெண் குறைவாகப் படித்தவராக இருக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறார் நாயகன். அவர் எட்டாம் வகுப்பு வரை படித்திருக்கிறார். குஸ்தி போட்டியில் தேசிய அளவில் வெற்றி பெற வேண்டுமென்ற வேட்கையுடன் இருக்கும் நிலையில், அதையே காரணம் காட்டி தன்னைப் பெண் பார்க்க வருபவர்கள் ‘வேண்டாம்’ என்கிறார்களே என்ற எரிச்சலில் இருக்கிறார் நாயகி. இவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்தால் என்ன நடக்கும் என்பதுதான் ‘கட்டா குஸ்தி’யின் கதை.

வழக்கமாக, ஒரு கமர்ஷியல் படத்தில் நாயகன் என்னவெல்லாம் செய்வாரோ அதையெல்லாம் இதில் நாயகி செய்வதாக காட்டியிருப்பதே முக்கியமான சிறப்பு.

லவ் டுடே பார்த்துவிட்டு ‘நாம போனை மாத்திக்கலாமா’ என்று யோசித்தது போல, கட்டா குஸ்தி திரைப்படம் தம்பதியர் இடையே ஆணாதிக்கம் குறித்த விவாதத்தை எழுப்புமா? 

இந்த படத்தில் நாயகனாக வீரா எனும் பாத்திரத்தில் நடித்துள்ளார் விஷ்ணு விஷால். தனக்குச் சொந்தமான தென்னந்தோப்பில் இருந்து வருமானம் வரும் மிதப்பில் எந்நேரமும் வெட்டி அரட்டை, ஊர் வம்பு, குடி போதை என்றிருப்பவர். தாய் தந்தையைச் சிறுவயதிலேயே இழந்த காரணத்தால் மாமாவின் அரவணைப்பில் வளர்வதாகக் காட்டப்படுகிறது. அந்த மாமா பாத்திரத்தில் நடித்திருப்பவர் கருணாஸ். பெண்ணை ஆண் அடக்கி வாழ வேண்டுமென்று சொல்லும், அதையே வாழ்விலும் செய்து காட்டும் பாத்திரம் அவருடையது. அதற்காக, இவ்விரண்டு பாத்திரங்கள் மட்டுமே படத்தில் ஆணாதிக்கம் பேசுவதாக நினைத்துவிட வேண்டாம்.

கிராமங்கள் மட்டுமல்லாமல் நகரங்களிலும் கூட ஆணாதிக்கச் சிந்தனை இன்னும் இருந்து வருகிறது என்பதைப் போகிற போக்கில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் செல்லா அய்யாவு.

மேலும் படிக்க: லவ் டுடே: இன்றைய காதலர்களுக்கானதா?

சிரிப்புக்கு உத்தரவாதம்!
வாழ்க்கையில் நாம் இயல்பாகக் கடக்கும் விஷயங்களைக் காட்சிகளாக்கி, அதில் ஆங்காங்கே நகைச்சுவையை தூவுவதுதான் ரசிகர்கள் மனதைத் தொடும். ‘கட்டா குஸ்தி’யும் அதைச் செய்திருக்கிறது.

கருணாஸ், அவரது மனைவியாக நடித்தவர், காளி வெங்கட், முனீஸ்காந்த், ரெடின் கிங்ஸ்லி, ஹரிஷ் பேரடி உட்படப் பலர் கிச்சுகிச்சு மூட்டியிருக்கின்றனர். முன்பாதியில் வில்லனாக வரும் தெலுங்கு நடிகர் அஜய்யும் அதையே பின்பற்றும்போது, படம் இன்னும் கலகலப்பானதாக மாறுகிறது.

தமிழ் படங்களில் ஸ்டைலான அரசு அதிகாரியாக, மேல்தட்டு வர்க்க தந்தையாக நடித்து வரும் மேத்யூ வர்கீஸும் இதிலும் வந்து போகிறார். அவரது சகாவாக வரும் தெலுங்கு நடிகர் சத்ரு மட்டுமே கொஞ்சமாய் ‘ஓவர் ஆக்ட்’ செய்திருக்கிறார். அவரது வில்லத்தனம் ஹீரோயிசம் வெற்றி பெறுவதாய் காட்டவே உதவியிருக்கிறது.

மொத்தக் கதையும் நாயகியின் மீதிருப்பதால், தான் அடக்கி வாசிப்பதே சிறந்தது என்று உணர்ந்து நடித்திருக்கிறார் விஷ்ணு விஷால். அதனை ஈடுகட்டும்விதமாக, கிளைமேக்ஸ் காட்சியில் அவரைக் கொண்டாடவும் வழி ஏற்படுத்தித் தந்திருக்கிறார் இயக்குனர்.

நாயகி ஐஸ்வர்யா லெட்சுமியைப் பொறுத்தவரை, கட்டா குஸ்தி ஒரு முக்கியமான படம். ’கார்கி’ படத் தயாரிப்பில் ஈடுபட்டது, ’பொன்னியின் செல்வ’னில் பூங்குழலியாக வந்து கவனம் ஈர்த்தது என்றிருந்தவருக்கு மேலுமொரு சிறப்பைச் சேர்த்திருக்கிறது ‘கட்டா குஸ்தி’. வெறுமனே நாயகனைக் காதலித்து டூயட் பாடுவதோடு நின்றுவிடாமல், நாயகிக்கும் தனியாக லட்சியங்கள் இருக்கும் என்பதை வெகு இயல்பாக உணர வைக்கிறது அவரது இருப்பு.

கிராமங்கள் மட்டுமல்லாமல் நகரங்களிலும் கூட ஆணாதிக்கச் சிந்தனை இன்னும் இருந்து வருகிறது என்பதைப் போகிற போக்கில் சொல்லியிருக்கிறார் இயக்குனர்

என்னதான் நகைச்சுவைக்கு நிறைய இடமிருந்தாலும், ‘ஆணாதிக்கம் தேவையா’ என்று கேள்வி எழுப்பும் வகையிலான சென்டிமெண்ட், காதல் காட்சிகளின்போது பார்வையாளர்கள் மனதை அப்படியே தடம் மாற்றியிருக்கிறார் இயக்குனர். இந்த திறன் வெகு சில கமர்ஷியல் பட இயக்குனர்களுக்கு மட்டுமே கைவரப்பெற்ற ஒன்று.

லாஜிக் சேர்ந்து பல கேள்விகளை எழுப்ப முடியுமென்றாலும், திரையரங்கில் இருக்கையில் ’நாம் சிரித்துக் கொண்டிருக்கிறோம்’ என்ற எண்ணமே அவற்றைப் புறந்தள்ள வைக்கிறது. ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம்.நாதன், கலை இயக்குனர் உமேஷ் குமார், படத்தொகுப்பாளர் பிரசன்னா ஜி.கே. மற்றும் சண்டைக்காட்சி வடிவமைப்பாளர்கள் அன்பறிவ் சகோதரர்களின் கூட்டுழைப்பு ‘கட்டா குஸ்தி’யைத் திரையில் வண்ணமயமாகக் காட்டத் துணை நிற்கிறது.

எங்கும் ஆணாதிக்கம்!
வீட்டில் இருக்கும் பெண்களை அடிமைகளாகக் கருதுவதுதான் ஆணாதிக்கம் என்றில்லை. ’நான் உனக்கு எல்லா வகையிலும் ஆதரவாக இருக்கிறேன்’ என்ற போர்வையில் ஆதாயங்களை எதிர்பார்த்துப் பெண்களுக்கு ஆறுதல் சொல்பவர்களும் கூட ஆணாதிக்கவாதிகள்தான். இம்மாதிரி நபர்கள் வெளிப்படையாகப் பேசும்போதுதான், தன்னைச் சுற்றியிருக்கும் பெண்கள் பற்றி என்ன நினைக்கின்றனர் என்பது தெரியவரும். இதனை வெளிக்காட்டும் வகையில், ஐஸ்வர்யாவின் பயிற்சியாளராக வரும் சத்ரு பாத்திரத்தை வடிவமைத்திருப்பது அருமை.

கணவனை விட மனைவி அதிகம் படித்திருந்தாலோ, அதிகம் சம்பாதித்தாலோ, பிரபலமாக இருந்தாலோ, அந்த ஜோடிகளிடையே மோதல் எழும் என்ற நியதி உடைக்கப்பட வேண்டும். அதனைப் பிரச்சாரமாக அல்லாமல், போகிற போக்கில் சில வசனங்களில் சொன்ன வகையில் இன்றைய தலைமுறைக்கான படைப்பாக மாற்யிருக்கிறது ‘கட்டா குஸ்தி’.

குஸ்தி ஆட்டம் என்பது கேரளாவில்தான் இப்போதுவரை பிரபலமாக இருந்து வருகிறது என்பதால், நாயகியின் பின்புலமாக பாலக்காட்டைக் காட்டுகின்றனர். அங்கிருந்து சில நூறு கிலோமீட்டர்கள் தள்ளியிருக்கும் பொள்ளாச்சியை நாயகன் பிறந்த இடமாக காட்டியிருக்கின்றனர். சில மலையாளப் படங்களில் தமிழர்களையும் தமிழ்நாட்டையும் கிண்டலடிப்பது போல, இதில் கேரளாவையோ மலையாளிகளையோ கேலி செய்யாதிருப்பது ஆறுதல்.

மேலும் படிக்க: துணிவு Vs வாரிசு: வெடிக்கும் சரவெடி!

ஐஸ்வர்யாவின் தந்தையாக வரும் கஜராஜை தமிழராகவும், தாயாக வரும் ஸ்ரீஜாவை மலையாளியாகவும் காட்டியுள்ள இயக்குனர், அந்த ஜோடியின் பின்னணியைப் பெரிதாகப் புடம் போட்டு விளக்கவில்லை.

முழுதாகப் படம் பார்த்தபிறகு சில நகைச்சுவையும் நாயகன் நாயகி பாத்திரங்களும் நம் நினைவில் நிற்கும். ஒருவேளை பின்பாதியில் வரும் சத்ருவின் வில்லத்தனத்தை ‘கட்’ செய்திருந்தால், இக்கதை முழுக்கவே நாயகி மீதான நாயகனின் ஆணாதிக்க மனப்பான்மை எப்படி முடிவுக்கு வருகிறது என்பதாகவே முடிந்திருக்கும்; ஒரு முழுமையான குடும்பச் சித்திரமாக மாறியிருக்கும். அதனைத் தவிர்த்து கிளைமேக்ஸில் விஷ்ணு விஷாலை வில்லனோடு மோத விட்டிருப்பது இன்னும் திரைப்பட உருவாக்கத்தில் ஆணாதிக்கம் இருக்கிறது என்பதையே காட்டுகிறது.

அதனால், ’இப்படம் ஆணாதிக்க கணவன்மார்களுக்கு ஒரு சவுக்கடி’ என்றெல்லாம் சொல்ல இயலவில்லை. இயக்குனர் செல்லா அய்யாவு மட்டுமே அதற்கு பொறுப்பாக முடியாது என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது.

ஒருவேளை மேற்சொன்ன குறையைக் களைந்து இப்படம் வேறு மொழிகளில் ‘ரீமேக்’ செய்யப்பட்டால், வெறுமனே ஒரு மசாலா படம் என்றளவில் நின்றுபோன ‘கட்டா குஸ்தி’ ஒரு ‘பீல்குட் எண்டர்டெயினர்’ என்ற அந்தஸ்தைப் பெறலாம்!

Share the Article

Read in : English

Exit mobile version