Read in : English
எல்லாக் காலத்திலும் ‘காதல்’ விமர்சனத்திற்கு உள்ளாகும் ஒன்றாகவே இருந்து வருகிறது. இன்றைய தலைமுறையினரின் காதல் முந்தைய தலைமுறைக்கு ‘ஒவ்வாமை’ தருவதாகவே இருந்து வந்திருக்கிறது. ‘எங்க காலத்துல இப்படியில்லையே’ என்ற அங்கலாய்ப்பும் தொடர்ந்து வருகிறது. எதிரெதிர் திசைகளில் பயணிக்கும் இந்த இரு வேறு தலைமுறையையும் ஒருசேர திருப்திப்படுத்துவது சாத்தியமில்லாத விஷயம். அதனை முயற்சித்திருக்கிறது ‘லவ் டுடே’.
ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யுக்தா, கே.எஸ்.ரவிக்குமார், வினோதினி நடித்த ‘கோமாளி’ மூலமாக, 90ஸ் கிட்ஸ் காலரை தூக்கிவிட்டு கெத்தாக வீறுநடை போடும்படி செய்தவர் அப்படத்தின் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன்.. என்னதான் புதிது புதிதாக தொழில்நுட்பங்கள் வந்தாலும் மனிதர்களின் அடிப்படையான உணர்வுகளில் மாற்றம் இருக்காது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டியவர். பொழுதுபோக்கு என்பதையும் தாண்டி, படம் பார்த்து முடிந்ததும் நல்லதொரு மனநிலையை ரசிகர்கள் உணருமாறு செய்தவர்.
அதனாலேயே, அவரே இயக்கி நாயகனாக நடிக்கும் ‘லவ் டுடே’ மீதும் பெரிய எதிர்பார்ப்பு உருவாகியிருந்தது. உண்மையிலேயே, அப்படியொரு பூரண திருப்தியை ஏற்படுத்துகிறதா இத்திரைப்படம்?
எப்போது ஒரு காதல் நகைச்சுவையாக மாறும். அந்த இணை பொருத்தமில்லாததாக அமைந்தாலோ அல்லது இயல்பை மறைத்துக்கொண்டு காதலித்தாலோ அது நிகழும்
இதுவா காதல்?
ஒரு ஆணும் பெண்ணும் காதலிக்கின்றனர் என்பது ‘ஆலம் அரா’ காலம் தொட்டு திரைப்படங்களில் இடம்பெறும் விஷயம். அவர்களுக்கு இடையிலான காதலிலும் புதிதென்று ஏதும் இருக்காது. அதையும் மீறி, ஒரு காதல் படத்தை ரசிகர்கள் கொண்டாடும்படி செய்வது எது? நகைச்சுவை மட்டுமே அதற்கான காரணமாக இருக்க முடியும். எப்போது ஒரு காதல் நகைச்சுவையாக மாறும். அந்த இணை பொருத்தமில்லாததாக அமைந்தாலோ அல்லது இயல்பை மறைத்துக்கொண்டு காதலித்தாலோ அது நிகழும். அதையே ‘லவ் டுடே’யின் ஆதாரமாகக் கொண்டிருக்கிறார் பிரதீப்.
‘லவ் டுடே’யின் உத்தமன் பிரதீப்பும் (பிரதீப் ரங்கநாதன்) நிகிதாவும் (இவானா) ஒருவரையொருவர் 100 சதவிகிதம் புரிந்து கொண்டிருப்பதாகச் சொல்லிக் கொள்கின்றனர். இவர்களது காதல் நிகிதாவின் தந்தை வேணுவுக்கு (சத்யராஜ்) தெரியவரும்போது, அந்த நம்பிக்கை உடைபடுகிறது. இருவரும் தங்களது மொபைல் போன்களை ஒருநாள் மட்டும் மாற்றிக்கொள்ள வேண்டுமென்று நிபந்தனையிடுகிறார் வேணு. வேறு வழியில்லாமல் இருவரும் அதற்குச் சம்மதிக்கின்றனர்.
மேலும் படிக்க: சீதா ராமம் முன்வைப்பது மத நல்லிணக்கமா?
ஒருவரது மொபைலை இன்னொருவர் திறந்து பார்க்கும் சூழல் உருவாகும்போது, இருவருக்குமான காதல் கேள்விக்குறியாகிறது. ‘இதுவா காதல்’ என்ற கேள்வி பார்வையாளர்கள் மனதிலும் எழுகிறது. அதையும் மீறி, இருவரும் தங்களது காதல் உணர்வை தக்க வைத்துக்கொண்டார்களா இல்லையா என்பதே ‘லவ் டுடே’வின் திரைக்கதை.
ஆபாசக் குப்பையா இது?
படத்தின் டீசரும் ட்ரெய்லரும் காட்டியதுபோல, உத்தமனுக்கும் நிகிதாவுக்கும் இருக்கும் வேறு தொடர்புகள் பற்றிப் பேசுகிறது திரைக்கதை. அந்த காட்சிகளும் வசனங்களும் கொஞ்சம் சறுக்கினாலும் ஆபாசக் குப்பையாகிவிடும் அபாயம் இருந்தும், அதனை லாவகமாக கையாண்டிருக்கிறார் இயக்குனர். அவை எந்த எல்லை வரை நீண்டன என்பதைப் பார்வையாளர்களின் யூகத்திற்கே விட்டுவிடுகிறார்.
உண்மையிலேயே சிக்கலான உறவுகளைப் பேணுபவர்களாக நாயகனும் நாயகியும் இருந்திருந்தால் எப்படியிருக்கும் என்ற கேள்விக்கு ‘லவ் டுடே’ பதிலளிப்பதில்லை; அதேநேரத்தில், இருவரும் நல்லவர்கள்தானா என்பதையும் புடம் போட்டு விளக்கவில்லை.
தனுஷ், எஸ்.ஜே.சூர்யா, விஜய் ஆகியோரின் நடிப்புச் சாயல் பிரதீப்பிடம் தென்படுகிறது. அதேநேரத்தில் பாக்யராஜ், பாண்டியராஜன், பார்த்திபன் போன்ற வரவேற்பைப் பெறும் விதமாகவே அவர் திரையில் தோன்றியிருக்கிறார். அதற்கு நகைச்சுவையைப் பெரிதும் நம்பியிருக்கிறார். அவரது நண்பர்களாக வரும் கதிர், பரத் போன்றவர்கள் அதற்கு உதவியிருக்கின்றனர்.
உண்மையிலேயே சிக்கலான உறவுகளைப் பேணுபவர்களாக நாயகனும் நாயகியும் இருந்திருந்தால் எப்படியிருக்கும் என்ற கேள்விக்கு ‘லவ் டுடே’ பதிலளிப்பதில்லை
அதே நேரத்தில், வசன உச்சரிப்பின்போது குரல் ஏற்ற இறக்கத்திற்காக அவர் மெனக்கெட்டிருப்பது ரசிகர்களை ஈர்க்கிறது என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.
‘நாச்சியார்’ படத்தில் அறிமுகமான இவானாவுக்கு இப்படத்தில் பெயர் சொல்லும் பாத்திரம். காதல் உணர்வைத் தாண்டி ஆத்திரத்திலும் அழுகையிலும் பதற்றத்திலும் எளிதாக நம் மனம் தொடுகிறார்.
மேலும் படிக்க: தன்னை அறிதலைச் சொல்லும் ‘கணம்’!
சத்யராஜ், ராதிகா போன்ற சீனியர் கலைஞர்கள் தாண்டி, யோகிபாபுவும் ரவீணாவும் எளிதாக நம்மை வசீகரிக்கின்றனர். ’மொபைல் பரிமாற்றம்’ என்ற ஒரு விஷயத்தை வைத்து முழு திரைக்கதையையும் வடிவமைத்திருக்கும் இயக்குனர், இவர்களது பாத்திரங்களையும் அதனுள் அடக்கியிருப்பது சிறப்பு. 2கே கிட்ஸ் மட்டுமல்லாமல், அதற்கு முந்தைய தலைமுறை ‘லவ் டுடே’ பார்க்க இவர்களது இருப்புதான் பெரிதும் உதவிகரமாக இருக்கும்.
காதல் திருமணம் போலவே நிச்சயிக்கப்பட்ட திருமணம் செய்துகொண்டவர்களின் தரப்பை நியாயப்படுத்துகிறது இவர்கள் இடம்பெற்றிருக்கும் காட்சிகள்.
கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியான ‘பேச்சுலர்’ போன்று திருமணத்திற்கு முந்தைய ஆண் பெண் உறவு பற்றி ‘லவ் டுடே’ பேசவில்லை. அதேநேரத்தில், சமூகவலைதளங்களின் வருகையால் ஆண் பெண்ணையும் பெண் ஆணையும் நோக்கும் விதம் எப்படியிருக்கிறது என்பதைச் சொன்ன வகையில் முக்கியத்துவம் பெறுகிறது.
ஒளிப்பதிவாளர் தினேஷ் புருஷோத்தமன், படத்தொகுப்பாளர் பிரதீப் இ ராகவ் தாண்டி, இயக்குனருக்கு கைத்தட்டல்கள் கிடைக்கும்விதமாக உழைத்திருக்கிறார் பின்னணி இசையமைத்திருக்கும் யுவன்சங்கர் ராஜா. ‘சாய்ச்சிட்டாளே’, ‘என்னை விட்டு உயிர் போனாலும்’ பாடல்கள் அவரது ரசிகர்களுக்கானவை.
லவ் டுடேவுக்கு சமர்ப்பணம்!
இன்றைய தலைமுறைக்கான படம் என்றால் இரட்டை அர்த்த வசனங்களும் ஆபாசமான காட்சியமைப்புகளும் அதிகமிருக்கும் என்ற எண்ணம் பரவலாக உண்டு. அதனையொட்டி சில காட்சிகள் இருந்தாலும் கூட, அந்த எல்லையைத் தொடாமலேயே ‘வண்டி’ ஓட்டியிருக்கிறார் பிரதீப். இது போன்ற படங்களை ஆண்களே வரவேற்பார்கள்; அதற்கேற்ப, பெண்களைக் கிண்டலடிக்கும்விதமாகவே முழுப்படமும் நகரும்.
சமூகவலைதளங்களின் வருகையால் ஆண் பெண்ணையும் பெண் ஆணையும் நோக்கும் விதம் எப்படியிருக்கிறது என்பதைச் சொன்ன வகையில் முக்கியத்துவம் பெறுகிறது
மாறாக, இப்படத்தில் இவானாவின் பாத்திரம் கேள்விகள் கேட்கும்விதமாக காட்சிகளை அமைத்திருக்கிறார். ‘நாயகனைப் போலவே நாயகியின் தரப்புக்கும் நியாயம் இருக்கும்தானே’ என்று படம் பார்க்கும் பெண்கள் எழுப்பும் கேள்விகளுக்குப் பதில் சொல்லும் விதமாக அவை உள்ளன. அந்த வகையில், 1997இல் பாலசேகரன் இயக்கத்தில் விஜய், சுவலட்சுமி, ரகுவரன் நடிப்பில் வெளியான ‘லவ் டுடே’ படத்திற்கான சமர்ப்பணம் போலவும், அதில் இடம்பெற்ற காதல் எனும் உணர்வை ‘ரீபூட்’ செய்யும் வகையிலும் இந்த ‘லவ் டுடே’வை தந்திருக்கிறார் இயக்குனர்.
திரைப்படம் வழியே ரசிகர்களுக்கு எவரும் அறிவுரையைப் புகுத்திவிட முடியாது. ஒரு திரைப்படம் பார்த்து எவரும் மனம் திருந்தியதாகச் சரித்திரமும் கிடையாது. அதேநேரத்தில், ஒரு நல்ல படம் மிகமென்மையாக பார்வையாளர்களின் மனதில் ரசாயன மாற்றங்களை ஏற்படுத்தும்.
அந்த வகையில், மிகச்சிறப்பான காட்சியாக்கம் மூலமாக நல்லதொரு பொழுதுபோக்கு சித்திரம் கண்ட திருப்தியைத் தருகிறது ‘லவ் டுடே’. இன்றைய காதலர்கள் மட்டுமல்லாமல் எல்லோரும் பார்க்கும்படியாகவும் அமைந்திருக்கிறது. மற்றபடி மிகச்சீரிய சமூக பண்பாட்டு கலாசார மாற்றங்களை இப்படம் பேசும் என்று எதிர்பார்த்துச் சென்றால் ஏமாற்றமே மிஞ்சும்!
Read in : English