Read in : English
கலகத்தலைவன் நன்றாகக் கட்டமைக்கப்பட்ட ஒரு த்ரில்லர் வகைத் திரைப்படம். மல்டிப்ளக்ஸ்களில் படம் பார்த்துக் களிக்கும் ரசிகர்களின் ரசனைக்குத் தீனி போடக்கூடியது. ஆழமான பல அடுக்குகள் உடைய கதையமைப்பும் மாபெரும் கருத்தியல் வாதமும் கொண்ட திரைப்படம். பெருங்கொண்ட நிறுவனங்கள் எனும் கார்பரேட்கள்தான் இந்தியர்களீன் வாழ்வை ஆண்டு கொண்டிருக்கின்றன அரசியல் கட்சிகள் உட்பட என்பதைக் கம்பீரமாகச் சொல்கிறது. அப்படிப்பட்ட ஒரு பெருநிறுவனத்தை வீழ்த்துவதை இலட்சியமாகக் கொண்ட ஒரு கலகக்காரனை நாயகனாகக் கொண்ட இந்தப் படம் உதயநிதி ஸ்டாலினை திரு என்னும் பாத்திரத்தில் முன்னிறுத்தியிருக்கிறது.
மிகப்பெரிய பாரம்பரியம் கொண்ட கட்சியான திமுக, தமிழக அரசியலின் மையமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. பெரிய நிறுவனங்கள்தான் அரசியல் கட்சிகளை ஆள்கிறது என்றால், அதிலொன்றாக இருக்கும் திமுகவையும் ஆள்வதாகத் தானே கருத முடியும். திமுகவின் வழித்தோன்றலாகவும், அதன் ஒழுக்க சீலங்களுக்கும் கேடுகளுக்கும் வாரிசாகவும், திமுக என்ற கட்டமைப்பின் இதயமாகவும் திகழ்ந்து கொண்டிருக்கும் ஒருவர் தன்னை ஒரு கலகக்காரனாக, கலகத்தலைவன் ஆகச் சித்தரித்துக் கொள்ள வேண்டிய காரணம் என்ன?
கொஞ்ச காலத்திற்கு முன்பு இன்னொரு அரசியல் வாரிசும் இதையேதான் செய்தார். அவர், காங்கிரஸ் இளவரசர் ராகுல் காந்தி; சொந்தக் கட்சியின் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியைச் சீர்குலைக்கும் வண்ணம் சிறிது காலம் கலகக் குரலை எழுப்பினார்.
திமுகவின் வழித்தோன்றலாகவும் இதயமாகவும் திகழ்ந்து கொண்டிருக்கும் ஒருவர் தன்னை ஒரு கலகத்தலைவன் ஆகச் சித்தரித்துக் கொள்ள வேண்டிய காரணம் என்ன?
ஒடிசா மாநிலத்தில் நியாம்கிரி குன்றுகளில் பாக்ஸைட்டைத் தோண்டி எடுக்கும் வேதாந்தா (!) நிறுவனத்தின் திட்டத்திற்கெதிராக டோங்க்ரியா-கோந்த் ஆதிவாசி இன மக்கள் போராடியபோது, அவர்களைச் சந்தித்து உரையாடினார் ராகுல்.
காங்கிரஸின் கூட்டணிக் கட்சியான ஆர்ஜேடி தலைவர் லல்லு பிரசாத் யாதவ் கால்நடைத் தீவன ஊழலில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டபோது, அவர் தேர்தலில் போட்டியிடுவதைத் தடுக்கும் சட்டத்தை தனது சொந்த அரசே திருத்த முயன்றபோது அதை எதிர்த்தவர் ராகுல். ’நான்சென்ஸ்’ என்று ஊடகவியலாளர்களின் முன்பு கொதித்தவர்.
ராகுலுக்கு என்று ஓர் இதயம் இருக்கிறது; அது இந்தியாவின் ஏழைகளுக்காகத் துடிக்கிறது. அவரது சொற்பிரவாகக் கலை லெனின் பாணியிலானது. எப்படி இந்த அரசியல், சமூகக் கட்டமைப்பு ஏழைகளைச் சுரண்டி அவர்களை மேலும் மேலும் ஏழ்மையிலே வைத்திருக்கிறது என்பதைப் பற்றி அவர் பல தடவை பேசியிருக்கிறார்.
மேலும் படிக்க: திமுகவில் உதயநிதியை முந்தும் கனிமொழி
இதில் நகைமுரண் என்னவென்றால் கறை படிந்த, கெட்டுப்போன இதயம் நாடி நரம்புகளைக் கொண்ட அந்தக் கட்டமைப்புதான் ராகுலை வளர்த்தெடுத்தது; இப்போதும் இயக்கிக் கொண்டிருக்கிறது.
சரி, உதயநிதி ஸ்டாலின் விசயத்திற்கு வருவோம். ஸ்டெர்லைட் பிரச்சினை வெடித்தபோது உதயநிதி தூத்துக்குடிக்குச் செல்லவில்லை. ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய நெடுவாசலுக்கும் அவர் சென்றதில்லை; ஜல்லிக்கட்டுப் போராட்டம் உச்சத்திலிருந்த மெரினா புரட்சியிலும் கலந்து கொண்டதில்லை.
அதனால் என்ன? இது தமிழ்நாடு. இங்கே களப்புரட்சிகளை எல்லாம் கவர்ச்சியும் வசீகரமும் மிக்க திரைப்படங்களில் நடித்துக் காட்டினாலே போதும்.
நிஜம் நிர்மூலமாக்குவதும் நிம்மதி இழக்கச் செய்வதும் சாதாரண மக்களைத்தான். யதார்த்த உலகின் தூசுப்படலமும் புழுதியும் தன்னைத் தீண்டாத தூரத்தில் நின்று கொண்டு, அவலங்கள் அற்ற உலகத்தில் அரிதாரம் பூசிக்கொண்டு தன்னைத் தமிழகத்தின் சே குவாரா என்று சிறப்பாக உதயநிதியால் காட்டிக்கொள்ள முடியும்.
உதயநிதி மிகச்சிறந்த நடிகர் அல்ல. கலகத்தலைவனில் சிறந்த ஹாலிவுட் பாணியிலான ஆகச்சிறந்த உச்சக்காட்சி இருக்கிறது. வேட்டையாடப்படுபவன் வேட்டைக்காரனாக மாறி வில்லன்களைத் துவம்சம் செய்யும் உத்திகள் இருக்கின்றன; அவற்றைத் திறமையுடன் கையாண்டிருக்கிறார் இயக்குநர் மகிழ் திருமேனி. ஆனால் படத்தில் வில்லன்களுக்கு எதிராக நிகழும் நிகழ்வுகளுக்கு, நாயக பாத்திரத்தின் புத்திசாலித்தனமான உத்திகளுக்கு, தீர்க்கமான சிந்தனைக்கு உதயநிதி உரிமை கொண்டாட முடியாது.
பெரிய நிறுவனங்கள்தான் அரசியல் கட்சிகளை ஆள்கிறது என்றால், அதிலொன்றாக இருக்கும் திமுகவையும் ஆள்வதாகத் தானே கருத முடியும்
ஏனென்றால், படம் முழுக்க அவரது முகம் ஒரேமாதிரியாகவே இருக்கிறது. ஒரு மெல்லிய புன்னகையால், லேசான உதட்டசைவால் நிறைய விசயங்களைச் சொல்ல முடியும். ஆனால் இயக்குநர் மகிழ் திருமேனி கதாநாயகனின் முகத்திற்கு அருகாமையில் வெகுஅணுக்கமாக கேமரா கோணங்களை வைக்க விரும்பவில்லை என்பது நிதர்சனமாகத் தெரிகிறது. படம் முழுக்க மிகையில்லாத இயல்பான நடிப்பை உதயநிதி வெளிப்படுத்தியதுபோல ஒரு மாயத்தோற்றம் மட்டுமே தெரிகிறது.
கேமராவுக்கு நேராகப் பேசுவது என்பது இயக்குநர் மகிழ் திருமேனியின் பாணி அல்ல. பெரிதாக உணர்வுகளை வெளிக்காட்டாத குணாம்சம் கூட இயக்குனரே வடிவமைத்ததாக இருக்கலாம். ஆனால், காதலி தரும் உணர்ச்சிமிக்க முத்தம் கூட கதாநாயகன் திருவிடம் எந்தவித முகபாவனை மாற்றத்தையும் உருவாக்கவில்லை.
மிகையற்ற இயல்பான நடிப்பு தலைசிறந்த நடிகர்களுக்குத் துணை புரியும். ஆனால் உதயநிதி அந்த பாணியைத் தனக்கேற்ற வகையில் கையாண்டிருக்கிறார் அல்லது இயக்குனரால் அவ்வாறு கையாளப்பட்டிருக்கிறது.
உதயநிதிக்குத் திரைப்படம் என்பது பொழுதுபோக்கோ, கேளிக்கை ஆசையோ மட்டுமல்ல. திமுக ஆட்சிக்கு மீண்டும் வந்ததிலிருந்து உதயநிதியின் அரசியல் ஏறுமுகத்திற்குத் துணை செய்ய திமுகவுக்குக் கிடைத்த பெருங்கருவியே திரைப்படம்.
ஸ்டாலினின் தந்தை ஸ்டாலினுக்குச் செய்ததைப் போல, உதயநிதியைக் கட்சியில் சிம்மாசனம் ஏற்றுவதற்கு அவரது தந்தை எளிதான பாதை போட்டுத் தரலாம். அதிமுக்கிய முடிவெடுக்க வேண்டிய தருணம் எழும்பட்சத்தில், உள்கட்சிப் பூசல்களும் அல்லது புகைச்சல்களும் சரி செய்யப்பட்டு எல்லோரும் உதயநிதியின் தலைமைக்குத் தலைவணங்க வேண்டி வரலாம்.
மேலும் படிக்க: ‘கலகத் தலைவன்’ படத்தில் ஸ்டெர்லைட் அடையாளம்!
அதுவரை திரைப்படத்தில் அன்று எம்ஜிஆர் செய்ததைப் போல உதயநிதி இன்று செய்ய முயற்சிக்கலாம்.
1969ல் திமுக ஆட்சியில் இருக்கும்போதே மேயர் மற்றும் இருவரை ஊழல்வாதிகளாகக் காட்டி அவர்களுக்கு எதிராகப் போராடிய கதாநாயகனாக எம்ஜியார் நடித்த நம்நாடு வெளியானது; அதுதான் தமிழில் நடப்பு அரசியலை விமர்சித்த முதல் திரைப்படம். அதன்பின்புதான் 1970களின் ஆரம்பத்தில் தமிழ்நாட்டின் முதல் ஊழலாகச் சென்னை மாநகராட்சி ‘மஸ்டர் ரோல்’ ஊழல் வெளிவந்தது.
உதயநிதியின் முந்தைய படமான நெஞ்சுக்கு நீதி அவரை தலித்துகளின் காவலனாகக் காட்டியது. திரைப்படத்தில் சமூகநீதிக்கான போராளியாக வேடமேற்று, ஏழைகளின் இலட்சியங்களுக்காக உழைக்கும் செயற்பாட்டாளராகத் தன்னை நிலைநிறுத்த அவர் விழைகிறார்.
எம்ஜிஆரும் பெரிய நடிகர் அல்ல. ஆனால் அவருக்குக் குறிப்பிட்டவொரு பின்புலம் இருந்தது. பல தசாப்தங்களாக, பல தலைவர்களால் பரப்புரைகள் செய்து கட்டமைத்து எழுப்பப்பட்ட கருத்தாக்கம் தான் எம்ஜிஆருக்குக் கிடைத்த பலமான பின்புலம்.
காங்கிரஸ் இளவரசர் ராகுல் காந்தி தன் சொந்த கட்சியின் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியைச் சீர்குலைக்கும் வண்ணம் சிறிதுகாலம் கலகக்குரலை எழுப்பியிருக்கிறார்
திரை வாழ்விலும் நிஜ வாழ்விலும் எம்ஜிஆர் நல்லவர், நல்லது செய்பவர் என்ற பிம்பத்தினைக் கட்டமைத்ததில் திமுகவுக்குப் பெரும்பங்கும் உண்டு; காரணங்களும் உண்டு. பின்னர் சரியான நேரம் கனிந்தது; எம்ஜிஆர் என்ற ஏழைகளின் பாதுகாவலன் எழுந்தார்; அவர்களுக்கான கடவுள் ஆனார்.
ஆனால் எம்ஜிஆரின் வார்ப்படம் என்பது எல்லோருக்குமான வார்ப்படம் அல்ல. அவரது வெற்றி இதுவரை யாரும் சாத்தியப்படுத்திக் காட்டாத ஒன்று. அதற்குத் துணைசெய்த பின்புலமும் இப்போது இல்லை. காலங்களும் மாறிவிட்டன; காட்சிகளும் மாறிவிட்டன.
ராகுல் காந்தி விசயத்தில், கட்சிக்குப் புறத்தே இருப்பவர் என்ற படிமத்தை உருவாக்க எடுத்துக்கொண்ட அவரின் முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. இடதுசாரி நிலைப்பாடுகள் நோக்கி காங்கிரஸ் நகர்ந்தது; அதற்கு ராகுலின் தூண்டுதல் காரணமாக இருக்கலாம். ஆனால் 2019ல் நரேந்திர மோடியை எதிர்த்துப் போராடியதில் அவர் ஒரு வேட்பாளராகத் தோற்றுப் போய்விட்டார்.
அழுத்தமான, ஆழமான அரசியல் செயற்பாடுகள் இல்லாத வெறும் புரட்சிக் கோஷங்கள் இன்று எடுபடாது. பலமான செயற்பாடுகள் இல்லாத அடர் வனத்திலிருந்து ராகுல் இன்னும் வெளிவரவில்லை.
இதிலிருந்து உதயநிதி பாடம் கற்றுக் கொள்ளலாம், அவர் விரும்பினால்.
Read in : English