Read in : English
எங்கெங்கோ சுற்றித் திரிந்தாலும் ஒரு நாடோடிக்குப் பூர்விகம் அல்லது பிடித்தமானது அல்லது வாழ்வதற்கேற்றது என்று ஏதோ ஒரு இடம் ஆதாரத் தளமாக இருக்கும். அப்படித்தான் ஒரு திரைப்படத்தில் பல காட்சிகள் இருந்தாலும் கதையின் மைய இழையாக ஒரு சரடு இருக்கும். மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்திருக்கும் ‘கலகத் தலைவன்’ படக்கதையில் அப்படியொரு மையமாக ஒரு வேதிப்பொருள் ஆலை இடம்பெற்றுள்ளது. அது, ஸ்டெர்லைட் விவகாரத்தை நினைவூட்டுகிறதா என்றெழும் சந்தேகம் மிக இயல்பானது.
அம்பலப்படும் கார்பரேட் ரகசியங்கள்!
சர்வதேச அளவில் நாடுகளைப் பற்றி, பன்னாட்டு நிறுவனங்களைப் பற்றி, தலைவர்கள் மற்றும் தொழிலதிபர்கள் பற்றிய உண்மைகளைப் பொதுவெளியில் கசியவிடுபவர்கள் உலகம் முழுக்க இருக்கின்றனர். பலவாறாகப் பேச்சுகள் சுற்றி வந்தாலும், ஜூலியஸ் அசாஞ்சே அதற்கொரு சிறந்த உதாரணம். என்னதான் அப்படிப்பட்ட நபர்களின், அமைப்புகளின் இயக்கத்தை முடக்கினாலும், அந்த செயல்பாடு தொடரத்தான் செய்யும் என்ற வாதத்தோடு ‘கலகத் தலைவன்’ திரைக்கதையை வடிவமைத்திருக்கிறார் இயக்குனர் மகிழ் திருமேனி.
வஜ்ரா எனும் கார்பரேட் நிறுவனம் புதிதாக ’டியூப்ரடார்’ எனும் ட்ரக்கை அறிமுகம் செய்யத் திட்டமிடும் காட்சியோடு ‘கலகத் தலைவன்’ திரைக்கதை ஆரம்பமாகிறது. அதிகளவில் எடை ஏற்றவல்ல ஒரு கனரக வாகனம் என்றே அது விளம்பரப்படுத்தப்படுகிறது. ஆனால், அதில் இருந்து வெளியேறும் புகை காற்று மாசு கட்டுப்பாட்டைக் காட்டிலும் அதிகம் என்ற தகவல் பணியாளர்களிடம் இருந்து வருகிறது. அது ரகசியமாகவே இருக்கட்டும் என்று உத்தரவிடுகிறார் வஜ்ரா குழுமத் தலைவர்.
ஆனால், அத்தகவல் தொலைக்காட்சிகளில் செய்தியாக வெளியாகிறது. அதனால், அந்த ட்ரக் விற்பனை சர்வதேச அளவில் அடியோடு பாதிக்கப்படுகிறது. தொடர்ந்து தங்களது நிறுவனங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுவதாக உணரும் வஜ்ரா குழுமத் தலைவர், இதன் பின்னணியில் இருக்கும் சதியை ஆராய அர்ஜுன் (ஆரவ்) என்பவர் தலைமையில் ஒரு குழுவை அமர்த்துகிறார். எந்த பாதகங்களுக்கும் அஞ்சாதவர்கள் அதில் இடம்பெற்றிருக்கின்றனர்.
கார்பரேட் ரகசியங்கள் வெளியே கசிய பணம் முதல் பொதுநலம் வரை பல காரணங்கள் இருக்கும் என்பதைச் சொல்கிறது கலகத் தலைவன்
காற்று மாசு தகவலைச் சொன்ன பணியாளரில் தொடங்கி யார் யார் மூலமாக அத்தகவல் வேறு நபர்களுக்குத் தெரிய வந்தது என்று ஆராய்கிறார் அர்ஜுன். இறுதியாக வஜ்ரா கணக்குப் பிரிவில் இருக்கும் ஜேபி (ஜீவா ரவி) மீது சந்தேகம் விழுகிறது. கிட்டத்தட்ட ஒரு மாத கால கண்காணிப்புக்குப் பிறகு அவருக்கு சந்தேகத்திற்கிடமான ஒரு மின்னஞ்சல் வருவதை அறிகிறது அர்ஜுன் கும்பல். திருச்சி ரயில் நிலையத்தில் அவர் ஏதோ ஒரு தகவலை பரிமாறவிருப்பதைக் கண்டறிகின்றனர். ஜேபி கண் பார்வையில் இருந்து தப்பிவிடாமல் இருக்க அத்தனை வேலைகளையும் செய்கின்றனர். அதனை மீறி, ஜேபியிடம் இருந்து ஒரு பென் டிரைவை பெறுகிறார் காந்தி (கலையரசன்). அர்ஜுனின் ஆட்கள் அவரைத் தாக்காமல் காப்பாற்றுவது திரு (உதயநிதி ஸ்டாலின்).காந்தி, திரு இருவருமே வஜ்ராவில் பணியாற்றுபவர்கள்.
பொய்யான ஆதாரங்களைத் தந்து பணியில் சேர்ந்தவர்கள். உண்மையில் இவர்கள் யார், வஜ்ராவின் வீழ்ச்சிக்கு இவர்கள் திட்டமிடுவது ஏன் என்ற கேள்விகளுக்கான பதில்கள் ஒவ்வொன்றாக அர்ஜுன் கும்பலுக்கு கிடைக்கும்போது நமது சந்தேகங்கள் தீர்கின்றன. முடிவில் திருவும் அவரைச் சார்ந்தவர்களும் ஏன் இக்காரியத்தைச் செய்கின்றனர் என்பதும் தெளிவுபடுத்தப்படுகிறது.
மேலும் படிக்க: சன் பிக்சர்ஸ், ரெட் செயிண்ட் மூவிஸ் திரைப்படத் துறையில் ஆதிக்கம் செலுத்துகிறதா?
கார்பரேட் ரகசியங்கள் வெளியே கசிய பணம் முதல் பொதுநலம் வரை பல காரணங்கள் இருக்கும். அதில் சம்பந்தப்பட்டவர்கள் பற்றிய தகவல்கள் தெரியவரும்போது அவர்களுக்கு நேரும் கொடுமைகள் எத்தகையது என்பதையும் சொல்கிறது ‘கலகத் தலைவன்’. இப்படியொரு ஆக்ஷன் கதையில் ஸ்டெர்லைட் விவகாரத்தின் சாயல் இருப்பதால் தானாகவே அரசியல் படமாகிறது.
ஸ்டெர்லைட் விவகாரம்!
திருநெல்வேலியில் இயங்கிய ஒரு வேதிப்பொருள் ஆலை மூடப்பட்டபோது, அங்கிருந்த கழிவுகள் அப்படியே சுற்றுவட்டாரங்களில் கொட்டப்பட்டதாகவும் அதனால் சுற்றுச்சூழலும் மனிதர்களும் கடும்பாதிப்புக்கு உள்ளானதாக ஒரு தகவல் சொல்லப்பட்டிருக்கிறது. ஸ்டெர்லைட் ஆலை இயங்கிய தூத்துக்குடிக்கும் திருநெல்வேலிக்கும் நிறைய தூரமில்லை. அது மட்டுமல்லாமல், இதன் தலைவர் பெயர் வேத் திவாரி என்றே சொல்லப்பட்டிருக்கிறது. வேதாந்தா நிறுவனத்திற்குச் சொந்தமானது ஸ்டெர்லைட் என்று அறிந்தவர்கள், இப்படத்தில் இயக்குனர் என்ன சொல்ல வருகிறார் என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.
அது மட்டுமல்ல, சித்ரா லட்சுமணனின் ‘டூரிங் டாக்கீஸ்’ யூடியூப் சேனலின் ’சாய் வித் சித்ரா’ நிகழ்ச்சியில் ’கலகத் தலைவன் படத்தில் ஸ்டெர்லைட் விவகாரம் இடம்பெற்றுள்ளது என்றே உதயநிதி ஸ்டாலினும் பேட்டியளித்துள்ளார். என்னதான் ‘படத்தில் வரும் சம்பவங்கள் யாரையோ எந்த நிகழ்வையோ குறிப்பிடுவன அல்ல’ என்று ‘டிஸ்க்ளெய்மர்’ கொடுத்தாலும், படத்தின் தயாரிப்பாளரே இப்படிப் பேசியிருப்பது ஆச்சர்யம்தான்.
புதிய பார்வை!
கலகத் தலைவன் மூலக்கதையை முழுக்கப் புதியது என்று சொல்ல முடியாது. ஆனால், திரைக்கதை அமைத்த வகையில் புத்துணர்வை உணரச் செய்கிறார் இயக்குனர் மகிழ் திருமேனி. கார்பரேட் நிதியாக்கம் மூலமாக அரசுகளையும் கட்சிகளையும் கார்பரேட் நிறுவனங்கள் கட்டுப்படுத்தினாலும், அவற்றின் ரகசியங்களை அம்பலத்துக்கு கொண்டுவரும் ரகசியக் குழுக்களும் அதே தீவிரத்துடன் இயங்கி வருகின்றன என்பதைச் சுற்றி திரைக்கதை அமைத்திருக்கிறார்.
நாயகன் நாயகி காதலில் காமம் மெலிதாக ஊடுருவது, ஆக்ஷன் காட்சிகளில் ரத்தம் தெறிக்க அடித்து துவைப்பது, திரையில் மிகச்சன்னமாக காட்டப்படும் சில விவரங்கள் வழியே பின்பாதி திரைக்கதையை சுவாரஸ்யம் ஆக்குவது போன்றவற்றை மகிழ் திருமேனியின் முந்தைய படங்களான தடையறத் தாக்க, மீகாமன், தடம் ஆகியவற்றில் காண முடியும். இதிலும் அப்படியே. ஆனால், சாதாரண மக்கள் பெரிதாக ஆர்வம் காட்டாத விஷயமான பொருளாதாரம் மற்றும் கார்பரேட் ஆதிக்கம் தொடர்பாக தகவல்களை வாரி இறைத்திருக்கிறார்.
‘டூரிங் டாக்கீஸ்’ யூடியூப் சேனலில் ’கலகத் தலைவன் படத்தில் ஸ்டெர்லைட் விவகாரம் இடம்பெற்றுள்ளது என்றே உதயநிதி ஸ்டாலினும் பேட்டியளித்துள்ளார்
அரசுக்குச் சொந்தமான ஆலையைக் குறைந்த விலையில் தனியார் நிறுவனங்கள் வாங்குவதில் தொடங்கி அதன் இயக்கம் முற்றிலுமாக நிறுத்தப்படும்போது நேரடியாகவும் மறைமுகமாகவும் அப்பாவிப் பொதுமக்கள் எத்தனை பேர் பாதிக்கப்படுகின்றனர் என்பதைச் சொல்லியிருக்கிறார் மகிழ் திருமேனி. கொஞ்சம் பாடம் எடுக்கும்விதமாக அமைந்தாலும், அதுவே இக்கதையின் அடிப்படை என்பதை மறுக்க முடியாது.
அது புரியவில்லை என்று சொல்லும் ரசிகர்களையும் சில விமர்சன காணொளிகளில் காண முடிகிறது. அதேநேரத்தில், மெத்தப் படித்த சிலர் அதனை ‘ஸ்பூன் பீடிங்’ என்று விமர்சிப்பதையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. திரையை நோக்கி கர்ஜிக்காமல், ’பஞ்ச்’ டயலாக் பேசாமல், அந்தரத்தில் பறந்து எதிரிகளை பந்தாடாமல் ஒரு ‘ஆக்ஷன்’ படத்தில் நடித்திருக்கிறார் உதயநிதி.
அவரைக் குறை சொல்லாத அளவுக்கு காட்சிகளைச் செதுக்கியிருக்கிறார் இயக்குனர். கலையரசன், ஆரவ் நடிப்பு படத்தின் உயிர்நாடி. நிதி அகர்வாலின் இருப்பு திரைக்கதைக்குத் தடையாக இருந்தாலும், மெலிதாகச் சிரிக்கவும் ரசிக்கவும் உதவியிருக்கிறது. அரோல் கொரேலியின் இசையில் இடம்பெற்ற இரண்டு பாடல்களுமே மெலடி ரகம். திரையில் காமச்சுவை இழையோட இரண்டும் உதவியிருக்கின்றன. பின்னணி இசையில் விறுவிறுப்பூட்டி காட்சிகளின் தாக்கத்தை அதிகப்படுத்தியிருக்கிறார் ஸ்ரீகாந்த் தேவா.
மேலும் படிக்க: முத்துநகர்ப் படுகொலை பற்றி முத்திரை பதித்த ஆவணப்படம்
ஒளிப்பதிவாளர் தில்ராஜ், படத்தொகுப்பாளர் ஸ்ரீகாந்த் என்பி, கலை இயக்குனர் டி.ராமலிங்கம் மற்றும் இயக்குனர் மகிழ் திருமேனியின் குழுவினருக்கு இடையிலான ஒருங்கிணைப்பு எத்தகையது என்பதை அறிய திருச்சி ரயில்நிலையத்தில் நிகழ்வதாக இடம்பெறும் காட்சிக் கோர்வையொன்றே போதும். அந்த 20 நிமிடங்கள் தரும் உற்சாகமே ’கலகத் தலைவன்’ படத்தின் யுஎஸ்பி.
இயக்குனர் மகிழ் திருமேனியின் படைப்புகளைக் கொண்டாடும் ரசிகர் கூட்டத்தில் நானும் ஒருவன். ‘மீகாமன்’ படத்திற்கு மிகப்பெரிய ரசிகன். அவரது இதர படங்களைப் போல ’கலகத் தலைவ’னும் இரண்டாம், மூன்றாம் முறையாகப் பார்க்கையில் கொண்டாடப்படலாம். ஆனால், சாதாரணமாகத் திரையரங்குகளுக்கு வருபவர்களுக்கு அது முற்றிலும் சம்பந்தமில்லாதது.
அவர்களுக்கு கார்பரேட் அத்துமீறல்கள் பற்றிப் பேசும் இப்படம் பிடிக்குமா என்பது சந்தேகம்தான். அனைத்தையும் மீறி கார்பரேட் நிறுவனங்கள் கட்சிகளுக்கு நிதி வழங்குவதையும் அது வெளிப்படையாகப் பொதுவெளியில் தெரிய வர வேண்டும் என்றும் சொல்கிறது ‘கலகத் தலைவன்’. பொதுவாக அரசியல் கட்சிகளின் கூட்டங்களில் தவிர்க்கப்படும் இது போன்ற விஷயங்கள் ‘கலகத் தலைவன்’ படத்தில் இடம்பெற்றிருப்பதற்காகவே இதனை ரசிக்கலாம்!
Read in : English