Read in : English
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 6 பேரையும் விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தமிழ்நாடு ஆளுநரான ஆர்.என்.ரவியின் ‘சட்டத்துக்கு எதிரான போக்கை’ வெளிப்படுத்தக் கிடைத்த வாய்ப்பாகப் பார்க்கப்படுவதுடன் ஒரு மாநிலத்தில் ஆளுநர் என்பவரின் வேலை என்ன என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வெளியான உடனேயே, ஆளுநர் மீதான முதல் தாக்குதலை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடுத்துள்ளார். “தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் நிறைவேற்றும் தீர்மானங்களை நியமன ஆளுநர்கள் கிடப்பில் போடக் கூடாது. மாநில அரசின் உரிமைகளை நிலைநாட்ட திமுக அரசு வாதங்களை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் மாநில அரசின் நிலைப்பாட்டை உறுதி செய்துள்ளது” என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ம.தி.மு.க தலைவர் வைகோவும் ஆளுநரைக் கடுமையாக சாடினார். பன்வாரிலால் புரோகித், ஆர்.என்.ரவி என்ற இரண்டு ஆளுநர்கள் எழுவரின் விடுதலையில் தாமதம் ஏற்படுவதற்கு முக்கியக் காரணமாக இருந்தார்கள் என்று குற்றம்சாட்டிய வைகோ “மத்திய அரசிடம் கருத்துக் கேட்க வேண்டிய அவசியமே கிடையாது. ஆனால், மத்திய அரசிடம் கருத்து கேட்டதாகவும் மத்திய அரசு தடை போடுவதாகவும் மோசடி நாடகத்தை நடத்தி வந்தனர்” என்று கூறினார்.
இந்த தீர்ப்பு ஆளுநருக்கும் மத்திய அரசுக்கும் ஒரு பாடம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. இன்னும் ஒருபடி மேலே சென்று, இந்த விவகாரத்தில் தனது ‘சட்டப்பிழைக்காக’ ஆளுநர் பதவி விலகுவாரா என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேட்டார். இந்த தீர்ப்புக்குப் பின்னராவது அரசியல் சாசனப்படி செயல்பட வேண்டும் என்றும் கவர்னருக்கு அறிவுறுத்தினார்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வெளியான உடனேயே, “தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் நிறைவேற்றும் தீர்மானங்களை நியமன ஆளுநர்கள் கிடப்பில் போடக் கூடாது” என்று ஆளுநர் மீதான முதல் தாக்குதலை தொடுத்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஆளுநருக்கு எதிராக கண்டனக் கணைகள் எழுவதற்கு முக்கியக் காரணம் இந்த வழக்கின் வரலாற்றைப் பார்த்தாலே தெரியும். தமிழ்நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும் ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநருக்கும் இடையே இருபது ஆண்டுகளுக்கு மேலாக நீடித்த போராட்டத்தின் விளைவாகவே இந்த விடுதலை இத்தனை நாள் நீண்டுள்ளது.
1999ம் ஆண்டு பாத்திமா பீவி ஆளுநராக இருந்தபோது குற்றவாளிகளான நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகிய 4 பேரின் கருணை மனுக்களை கருணாநிதி தலைமையிலான மாநில அரசைக் கலந்தாலோசிக்காமலேயே நிராகரித்தார். அந்த உத்தரவுக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டது.
மேலும் படிக்க: பேரறிவாளன் வழக்கு: சர்ச்சைக்குள்ளான ஆளுநரின் அதிகாரம்
மாநில அரசுடன் ஆலோசனை செய்யாமல் ஆளுநர் இந்த முடிவை எடுக்க முடியாது என்ற வாதத்தை ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் ஆளுநரின் உத்தரவை ரத்துசெய்தது. இது ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் ஆளுநருக்கு எதிராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குக் கிடைத்த முதல் வெற்றி.
14 ஆண்டுகளுக்குப் பிறகு மறைந்த ஜெயலலிதாவின் தலைமையிலான அதிமுக அரசு, குற்றவாளிகள் அனைவருக்கும் தூக்குத் தண்டனையைக் குறைத்து ஆயுள் தண்டனையாக மாற்றியது. இதை எதிர்த்து மத்தியில் ஆண்ட திமுகவை உள்ளடக்கிய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.
இந்த வழக்கில் புகழ்பெற்ற வழக்கறிஞர் ராம் ஜெத்மலானியை களம் இறக்கிய வைகோவின் முயற்சியால் சென்னை உயர் நீதிமன்றம் அவர்களின் தூக்கு தண்டனைக்குத் தடை விதித்தது. பின்னர் இந்த வழக்கில், அனைத்து குற்றவாளிகளுக்கும் தூக்கு தண்டனையைக் குறைத்து உத்தரவிட்ட நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு, குற்றவாளிகளின் விடுதலைக்கான மனுவை மாநில அரசு பரிசீலிக்கலாம் என்று கூறியது.
2018 ஆம் ஆண்டில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியின் அமைச்சரவை, அனைத்து குற்றவாளிகளையும் பிரிவு 161ன் கீழ் விடுதலை செய்யப் பரிந்துரைத்தது. ஆனால், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இந்த விஷயத்தில் எந்த முடிவும் எடுக்கவில்லை. இறுதியாக, குற்றவாளிகளில் ஒருவரான பேரறிவாளன் சிறையில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்ற பிறகு, தண்டனைக் கைதிகளை விடுவிக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் முன்பிருந்த ஆளுநரின் அடிச்சுவடுகளையே பின்பற்றினார். கடந்த ஆண்டு முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, முந்தைய அதிமுக அரசின் முடிவை வலுவாக ஆதரித்ததுடன், மாநில அரசின் சட்டப்பிரிவு 161ன் கீழ் விடுதலைக்கான மனுக்கள் மீது முடிவெடுக்க மாநில அரசுக்கே அதிகாரம் என்று உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டது தமிழ்நாடு அரசு.
இந்த ஆண்டு மே மாதம் இந்த வழக்கில் பேரறிவாளனைச் சிறையில் இருந்து விடுவிக்க வேண்டுமென்று நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ், பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது. இந்த தண்டனையை ரத்து செய்யுமாறு தமிழக அமைச்சரவை அனுப்பிய பரிந்துரையை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பிய நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.
மறைந்த ஜெயலலிதாவின் தலைமையிலான அதிமுக அரசு, குற்றவாளிகள் அனைவருக்கும் தூக்குத் தண்டனையைக் குறைத்து ஆயுள் தண்டனையாக மாற்றியது
“ஆளுநர் தனது நடவடிக்கையைச் சரியென்று காட்ட அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் எந்த ஒரு பிரிவையும் சுட்டிக்காட்டவில்லை அல்லது மாநில அமைச்சரவையால் இந்தியக் குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரை செய்வதற்கான ஆளுநர் அதிகாரத்தின் அடிப்படை குறித்தும் திருப்திகரமான பதில் எதுவும் வழங்கப்படவில்லை.
ஆளுநரின் நடவடிக்கை அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது” என்று நீதிமன்றம் கூறியது. இது இந்த வழக்கில் ஆளுநர் நடந்துகொண்ட முறைக்கு வலுவான கண்டனமாக அமைந்தது.
இப்போது, நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் நீதிபதி பி.வி. நாகரத்னா ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு மாநில அரசின் நிலைப்பாட்டை ஏற்று, ஆறு குற்றவாளிகளையும் விடுவிக்க அரசியலமைப்பின் 142வது பிரிவின் கீழ் அதன் அசாதாரண அதிகாரங்களைச் செயல்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் ஆளுநரின் நிலைப்பாட்டை ரத்து செய்த நீதிமன்றத்தின் இரண்டாவது உத்தரவு, ஆளுநர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளைக் கூறும் திமுகவுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் கிடைத்த வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: துணைவேந்தர் நியமன மசோதா: 28 ஆண்டுகளுக்கு முந்திய வரலாறு மீண்டும் திரும்புகிறது!
ஏற்கனவே, திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்யக் கோரி குடியரசுத் தலைவருக்கு மனு அனுப்பியிருக்கிறது. மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசைக் கொள்கைரீதியிலும் செயல்பாட்டிலும் எதிர்க்கிறார் என்று குற்றம்சாட்டிய திமுக அணி, இது அரசியலமைப்பு அமைப்புக்கும் ஜனநாயகத்துக்கும் சாவுமணி அடிப்பதாகக் கூறியது.
மேலும் சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டங்களுக்கு ஒப்புதல் தராமல் கிடப்பில் போடுவதையும் அந்த மனு சுட்டிக்காட்டியது. இது மாநில நிர்வாகத்தில் தலையிடுவதற்குச் சமமானது என்றும் அந்த மனு கூறியது. இப்போது, உச்ச நீதிமன்றத் தீர்ப்பும் ஆளுநர் செய்தது சட்டப்படி தவறானது என்பதைக் காட்டியுள்ளது.
இத்தீர்ப்பின் காரணமாக மாநிலங்களில் ஆளுநரின் பணி என்ன?, ஆளுநர் பதவி தேவையா? என்ற விவாதங்கள் தமிழ்நாட்டில் கொட்டும் மழையின் குளிரையும் தாண்டி அனல்பறக்கிறது.
Read in : English