Read in : English
சென்ற மே மாதம் 18-ம் தேதி டில்லி உச்சநீதிமன்றம், பேரறிவாளன் வழக்கு தொடர்பாக, தனது அசாதாரணமான சிறப்பதிகாரத்தைப் பயன்படுத்தி, முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையில் குற்றம்சாட்டப்பட்டு தண்டனை அடைந்த பேரறிவாளனை, அவரது 31 ஆண்டு கால சிறைவாசத்திற்குப் பின் விடுதலை செய்து அளித்த தீர்ப்பில் நமது தமிழ் மாநில ஆளுநரின் அதிகாரம் அதிகமான விவாதத்திற்கும், கடுமையான விமர்சனத்திற்கும் உள்ளாக்கப்பட்டிருக்கிறது என்றால் உங்களால் நம்பமுடிகிறதா? ஆமாம். அது உண்மைதான். பேரறிவாளனின் விடுதலைக்கான தீர்ப்பில், மாநில ஆளுநரின் அதிகாரங்கள் அல்லது அதிம் கேள்விக்குள்ளாக்கப்பட்டிருப்பது உண்மைதான்.
பேரறிவாளனின் விடுதலைக்கான 31 ஆண்டுகள் போராட்டத்தை நடத்திய, அவரது தாயார் அற்புதம்மாளின் மேல்முறையீட்டு மனுக்களால் டில்லி உச்சநீதிமன்றத்தின் கதவுகள் மிக பலமாக தட்டப்பட்டதால், L.நாகேஸ்வரராவ், B.R.கவாய், A.S.போப்பண்ணா ஆகிய மூன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கொண்ட அமர்வில், மூத்த நீதிபதி L.நாகஸ்வரராவ், பேரறிவாளனை சிறைத் தண்டனையிலிருந்து விடுவித்து, வீட்டுக்கு அனுப்பி சுதந்திர காற்றை சுவாசிக்க அனுமதிக்கும் வகையில் பிரதானமான பின்வரும் காரணங்களைக் கூறி தீர்ப்பளித்துள்ளார்.
முதலாவதாக, மாநில ஆளுநர், இந்திய அரசியல் சட்ட பிரிவு 161-ன் படி தனது அதிகாரத்தை செயல்படுத்துவதில், ஏற்கனவே உச்சநீதிமன்றத்தால் பல்வேறு சமயங்களில் சொல்லப்பட்டு தெளிவாக வரையறுக்கப்பட்ட தீர்ப்புகள்படி, மாநில அரசின் அமைச்சரவை முன் வைக்கும் ஆலோசனைக்கும் அறிவுரைக்கும் கட்டுப்பட்டு நடக்கக் கடமைப்பட்டவர்.
இரண்டாவதாக அரசியல் சட்ட பிரிவு 161-ன் கீழ் மாநில ஆளுநர் தனது அதிகாரத்தை செயல்படுத்த காரணம் சொல்லமுடியாத அளவிற்கு காலதாமதம் செய்ததும், அதற்காக சிறைக் கைதியை குற்றம்சாட்ட முடியாத சூழ்நிலையில், அதிலும் குறிப்பாக மாநில அரசின் அமைச்சரவை, அந்த சிறைக்கைதியை விடுதலை செய்ய முடிவெடுத்து அதற்காக ஆளுநருக்கு பரிந்துரையும் அனுப்பிய பட்சத்தில், ஆளுநரின் தாமத அதிகார செயல்பாடு இந்த நீதிமன்றத்தால் நீதிவிசாரணை னைக்கு உட்பட வேண்டியாதாகும்.
மூன்றாவது பேரறிவாளனின் விடுதலைக்கான தமிழக அரசு அமைச்சரவையின் பரிந்துரையினை மாநில ஆளுநர் எந்தவித அரசியல்சட்ட விதிமுறை ஆதரவும் இல்லாமல், அந்த பரிந்துரை தமக்கு அனுப்பப்பட்டு இரண்டரை ஆண்டுகள் காலதாமதத்திற்குபின் இந்திய ஜனாதிபதியின் பார்வைக்கு அனுப்பியது முற்றிலும் இந்திய அரசியல் சட்ட கோட்பாடுகளுக்கு விரோதமான செயலாகும். உண்மையில் இந்த உச்சநீதிமன்றத்தால் பல தீர்ப்புகளில் சொல்லப்பட்டுள்ளவாறு“ஆளுநர் என்பதற்கான சுருக்கமான அர்த்தம் மாநில அரசு ஆகும்”.
நான்காவதாக, இதே உச்சநீதிமன்றத்தின் M.P.Special Police Establishment V. State of M.P வழக்கில் ஏற்பட்ட தீர்ப்பு, பேரறிவாளன் வழக்கு சங்கதிகளுக்கு பொருந்தாததாகும். மேலும் பேரறிவாளனின் விடுதலைக்கான பரிந்துரையை தமிழக அரசின் அமைச்சரவை ஓருதலைபட்சமாகவோ தேவையற்ற சங்கதிகளைக் கருத்தில் கொண்டோ செயல்பட்டதாக மத்திய அரசு தரப்பில் எடுத்துக்காட்ட முடியவில்லை. ஆனால் மேலே சொன்ன M.P.Special Police Establishment V. State of M.P வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு அச்சாணியே, மத்தியபிரதேச அரசின் அமைச்சரவை தங்களது சகமந்திரிகளை தண்டனையிலிருந்து காப்பாற்ற, ஒருதலைபட்சமாக நடந்து கொண்டதும், தேவையற்ற சங்கதிகளை கருத்தில் கொண்டதும்தான். ஆக மத்தியபிரதேச போலீஸ் வழக்கும், பேரறிவாளன் வழக்கும் ஒன்றல்ல.
அரசியல் சட்டத்தின் 7-வது ஷெட்யூல் III-ம் பட்டியலில், முதல் பதிவு 302 பிரிவு இந்திய தண்டனைச் சட்டத்தை உள்ளடக்கிய கிரிமினல் சட்டம் என்பதால், மத்திய மாநில அரசுகளுக்குரிய பொதுப்பட்டியல் (Concurrent List) எனும் முறையில், மாநில அரசின் நிர்வாக வரம்பு, பேரறிவாளன் பிரச்சனைக்கு நீள்வதாக கருதுகிறோம்
ஐந்தாவதாக, Sriharan V. Union of India வழக்கில் இந்திய தண்டனைச் சட்ட பிரிவு 302-ஐ பொருத்தமட்டில் தண்டனையிலிருந்து விடுவிக்கவோ (to remit) தண்டனைக் குறைப்பு செய்யவோ (to commute) மத்திய அரசுக்கு (Union Government) மட்டுமே அதிகாரம் என தீர்ப்பு சொல்லியிருப்பது சரியானதல்ல. அப்படி மத்திய அரசுக்கு அரசியல் சட்ட விதிகளிலோ, நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட தனிச்சட்டம் மூலமாகவோ ஒரு வெளிப்படையான நிர்வாக அதிகாரம் (Executive Power) வழங்கப்படாத பட்சத்தில், S.302 IPC க்கான மன்னிப்பு (Clemency) அதிகாரம் மத்திய அரசினுடையது என எடுத்துக்கொள்ள முடியாது. அவ்வாறு குறிப்பான நிர்வாக அதிகாரம் மத்திய அரசுக்கு உறுதி செய்யப்படாத பட்சத்தில், அரசியல் சட்டத்தின் 7-வது ஷெட்யூல் III-ம் பட்டியலில், முதல் பதிவு 302 பிரிவு இந்திய தண்டனைச் சட்டத்தை உள்ளடக்கிய கிரிமினல் சட்டம் என்பதால், மத்திய மாநில அரசுகளுக்குரிய பொதுப்பட்டியல் (Concurrent List) எனும் முறையில், மாநில அரசின் நிர்வாக வரம்பு, பேரறிவாளன் பிரச்சனைக்கு நீள்வதாக கருதுகிறோம்.
ஆறாவதாக, மேல்முறையீட்டாளரான பேரறிவாளனின் வெகு நீண்ட கால சிறைவாசம், சிறையிலும், பரோல் காலத்தில் வெளியிலும் பாராட்டக்கூடிய அவரது நன்னடத்தை, அவருக்குள்ள கடுமையான நோய்கள் குறித்த மருத்துவ ரிக்கார்டுகள், சிறைவாச காலத்தில் அவர் பெற்ற கல்வித் தகுதிகள், அரசியல் சட்டப்பிரிவின் 161-ன் கீழ் தமிழக அரசின் அமைச்சரவை அவரது விடுதலைக்கு அனுப்பிய பரிந்துரையை இரண்டரை வருடங்களுக்கு கிடப்பில் போட்டு வைத்திருந்தது என அனைத்தையும் கருத்தில்கொண்டு, திரும்ப மேற்படி பரிந்துரை மீது முடிவெடுக்க மாநில ஆளுநருக்கு அனுப்புவது சரியாக இருக்கும் என நாங்கள் கருதவில்லை. இந்த உச்சநீதிமன்றத்திற்குறிய அரசியல் சட்ட பிரிவு 142-ன் கீழான அசாதாரன சிறப்பதிகாரத்தினை பயன்படுத்தி, மேல்முறையீட்டாளாரான பேரறிவாளன் கு.எண்.329/1991 தொடர்பான தண்டனை காலத்தை முழுமையாக கழித்துவிட்டதாக கருதி, விடுதலைக்கு உத்திரவிடுகிறோம்.
மாநில ஆளுநரின் நிர்வாக அதிகாரமும் மாநில அமைச்சரவையின் தீர்மானமும்இந்திய அரசியல் சட்டம் சொல்வதென்ன?
மரணதண்டனை அல்லது ஆயுள் சிறை தண்டனை உறுதி செய்யப்பட்ட குற்றவாளிகளின் மன்னிப்பு கோரும் மனுக்களைப் பெற்று, குறிப்பிட்ட தண்டனையை நிறுத்த, ரத்து செய்ய, குறைக்க,இந்திய அரசியல் சட்டப் பிரிவு 161, மாநில ஆளுநருக்கு அதிகாரம் வழங்கியுள்ளது. அதாவது மாநில அரசு நிர்வாகம், சட்டம் இயற்றும் அதிகார எல்லைக்குட்பட்ட குற்றசம்பவங்கள் சம்மந்தமாக தண்டிக்கபட்ட எந்த ஒரு நபரின் தண்டனையையும் மன்னிக்கும் விதத்தில் நிறுத்தி வைக்கவோ, ரத்து செய்யவோ, குறைக்கவோ மாநில ஆளுநருக்கு அரசியல் சட்டம் அதிகாரம் வழங்கி உள்ளது.
இந்திய அரசியல் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு மாநில அரசின் நிர்வாகம் தொடர்பான எந்த பொருள் (கிரிமினல் சட்டம்) குறித்தும் சட்டம் இயற்ற மாநில சட்டமன்றத்திற்கு அதிகாரம் உள்ளதென்று அரசியல் சட்டப்பிரிவு 162 தெளிவாக சொல்கிறது. அதாவது இந்திய அரசியல் சட்டத்தின் 7வது ஷெட்யூலில் III –வது பட்டியலில் 1-வது பொருள் கிரிமினல் சட்டமான இந்திய தண்டனைச் சட்டத்தில் கூறப்பட்டு உள்ளவை குறித்தும் 2-வது பொருள் குற்றவியல் நடைமுறைச் சட்டம் குறித்தும் சட்டத்தையோ, சட்டத் திருத்தத்தையோ, மாநில சட்டமன்றம் இயற்றும் அதிகாரம் உள்ளதென்று மேற்படி சட்டப்பிரிவு 162 உறுதி செய்கிறது.
அதே சமயம் இந்திய அரசியல் சட்டப்பிரிவு 163-படி மாநில முதலமைச்சர் மற்றும் அமைச்சரவையின் உதவியிலும் ஆலோசனை பேரிலும் மட்டுமே எந்த ஒரு விசயத்திலும் மாநில ஆளுநர் செயலாற்ற முடியும், அதாவது அரசியல் சட்டத்தில் ஏற்கனவே குறிப்பிட்ட விசயங்களில் தன்னிச்சையாக செயல்படலாம் என சொல்லப்பட்டிருப்பவை தவிர.
ஆக இந்திய அரசியல் சட்டப்பிரிவுகள் 161-மாநில ஆளுநருக்கு உள்ள மன்னிப்பு அதிகாரம், 162-மாநில அரசுக்குள்ள சட்டமியற்றும் அதிகாரம், 163-மாநில ஆளுநரின் செயல்பாட்டுக்கு உதவியும், ஆலோசனையும் சொல்ல மாநில முதலமைச்சருக்கும் அமைச்சரவைக்கும் உள்ள அதிகாரம், குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவுகள்432(1) மற்றும் (7)-ல் வரையறுக்கப்பட்டுள்ளபடி சம்மந்தப்பட்டஉரிய மாநில அரசுக்கு ஒரு குற்றம் நிமித்தம் தண்டிக்கப்பட்ட நபரின் தண்டனையை நிறுத்தி வைக்கவும், ரத்து செய்து விடுவிக்கவும், குறைக்கவும் உள்ள அதிகாரம் ஆகியவற்றின் அடிப்படையில், சமீபத்தில் பேரறிவாளன் 31 ஆண்டுகால சிறைவாசத்திற்குப் பின் அவரது தாயாரின் தொடர் சட்ட போராட்டத்தின் வாயிலாக கடந்த 18.05.2022 தேதியில் உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான மூன்று நீதிபதிகளின் அமர்வு அளித்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு நமக்கு பின்வரும் விசயங்கள் குறித்து தெளிவுபடுத்தியுள்ளது:
அந்தந்த மாநில ஆளுநருக்கு உள்ள செயலாற்றும் அதிகாரம் என்பது, அந்தந்த மாநில அரசின் முதல் அமைச்சர் மற்றும் அமைச்சரவையின் உதவிக்கும் ஆலோசனைக்கும் கட்டுப்பட்டதாகும்
i. இந்திய அரசியல் சட்டமும், இந்திய உச்ச நீதிமன்றமும் மத்திய அரசுனுடனான உறவு என்பது, ஒவ்வோரு மாநில அரசுக்கும் கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில்அமைந்ததுதான் என்பதை அங்கீகரித்துள்ளன.
அந்தந்த மாநில ஆளுநருக்கு உள்ள செயலாற்றும் அதிகாரம் என்பது, அந்தந்த மாநில அரசின் முதல் அமைச்சர் மற்றும் அமைச்சரவையின் உதவிக்கும் ஆலோசனைக்கும் கட்டுப்பட்டதாகும்.
ii. இந்திய அரசியல் சட்டத்தின் பிரிவு 162-ன் கருத்துப்படி மாநில அரசு, அரசியல் சட்டம் 7-வது ஷெட்யூலின் III –வது பொது (Concurrent) பட்டியலில் 1-வது பொருளாக (Subject Matter) கூறப்பட்டிருக்கும் இந்திய தண்டனைச்சட்டம் தொடர்பாகவும், 2-வது பொருளாக கூறப்பட்டிருக்கும் குற்றவியல் நடமுறைச் சட்டப்பிரிவுகள் தொடர்பாகவும், தமது சட்டமன்றத்தின் மூலம் புதிதாகவும், திருத்தப்பாடு செய்தும் (as amendment) சட்டம் இயற்ற முடியும்.
கடந்த 09.09.2018 தேதியில் தமிழ்நாடு மாநில சட்ட மன்ற தீர்மானத்தின் அடிப்படையில் (தமிழக அமைச்சரவை), ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக தண்டிக்கப்பட்ட நபர்களான பேரறிவாளனுடன் சேர்த்து 7 பேரை, தண்டனைக்குறைப்பு செய்து விடுதலைக்கு அப்போதே பரிந்துரை அனுப்பியிருக்க, அப்போதைய ஆளுநர், இரண்டரை ஆண்டுகள் கிடப்பில் போட்டிருந்தது தவறு என்றும், பின்னர் உச்சநீதிமன்ற விசாரணையின்போது அதே பரிந்துரையை ஜனாதிபதிக்கு அனுப்பி, அவர்தான் மன்னிப்பு குறித்து முடிவெடுக்கமுடியும் என்று ஆளுநர் கூறியது தவறு என்றும், இந்திய அரசியல் சட்ட விதிமுறைகள்படி மாநில ஆளுநருக்கு அனுப்பப்படும் பரிந்துரையை தாம் ஒப்புதல் கொடுத்து (giving consent) ஆதரிக்காத பட்சத்தில், திரும்ப தமது மாநில மந்திரி சபைக்கே மறுபரிசீலனைக்காக (for re consideration) அனுப்பி வைக்கலாமே ஒழிய, நேரடியாக ஜனாதிபதியின் பரிசீலனைக்கு அனுப்ப அரசியல் சட்டத்தில் வழிகள் இல்லை.
தற்போது இந்திய உச்சநீதிமன்றமோ, 09.09.2018 தேதியில் தமிழ்நாடு மந்திரி சபையால் 7 பேர் விடுதலைக்கான பரிந்துரை தொடர்பாக, அந்த பரிந்துரை ஒரு தலைபட்சமாகவோ, நியாமற்ற விசயங்களை கருத்தில் கொண்டோ அனுப்பப்பட்டதல்ல என பல்வேறு உச்சநீதிமன்ற முன் தீர்ப்புகளின் அடிப்படையில் பரிசீலித்து தீர்வு (Finding) கண்டபின் அதே உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், தமிழ்நாடு சிறைகளில் 31 ஆண்டுகளுக்கு மேலாக அடைந்து கிடக்கும் மற்ற 6 பேர்களை, தற்போதைய ஆளுநரரே மன்னித்து தண்டனை குறைப்பு செய்து விடுவிக்க வாய்ப்புள்ளது.
(கட்டுரையாளர், குற்றவியல் வழக்கறிஞர், பாலக்கோடு)
Read in : English