Site icon இன்மதி

அலோபதியில் மாற்று மருத்துவம்: சரியா?

Read in : English

பெருந்தொற்றில் இருந்து மெதுவாக நாம் மீண்டு வந்து கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில், சென்னை உயர்நீதி மன்றம் அளித்த முக்கியமான தீர்ப்பொன்று போதுமான கவனம் பெறாமலே போனது. கடந்த ஜூலை மாதம் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பொன்றில், மாநில ஹோமியோபதி மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்த ஒரு மருத்துவர் மீது இருந்த அலோபதி மருத்துவச் சிகிச்சை செய்த குற்றச்சாட்டை தள்ளுபடி செய்தது.

தற்போது உள்ள நெறிமுறைகளின்படி, தமிழ்நாட்டில் ஆயுர்வேத, சித்த மற்றும் ஹோமியோபதி மருத்துவம் பயின்ற மருத்துவர்கள் மாநில மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்யும் நடைமுறை உள்ளது.
அந்த தீர்ப்பிற்குப் பின், புகழ்பெற்ற சித்த மருத்துவரும் தமிழ்நாடு மாநில வளர்ச்சிக் குழுவில் இடம்பெற்றுள்ளவருமான மருத்துவர் கு.சிவராமனின் நேர்காணல் ஒன்றையும் நாம் ஏற்கனவே வழங்கியிருந்தோம்.

இது புதிதானதொன்றும் இல்லை. 2010ல் நடந்த வேறொரு வழக்கில், இதே உயர்நீதி மன்றம் அலோபதி சிகிச்சை முறைகளான அறுவைச் சிகிச்சை, சர்க்கரை நோய்க்கான சிகிச்சை, மயக்கமருந்து அளிக்கும் அனஸ்தீசியா போன்ற பல சிகிச்சைகளையும் பதிவு செய்யப்பட்ட ஆயுர்வேத, சித்த, யுனானி மற்றும் ஹோமியோபதி உட்பட மாற்று மருத்துவம் மேற்கொள்ளும் மருத்துவர்கள் அளிக்கலாம் என்ற சர்ச்சைக்குரிய தீர்ப்பை வழங்கியது.

இது போன்ற தொடர் நிகழ்வுகள், தற்போது மத்தியில் உள்ள அரசாங்கத்தின் நோக்கத்தோடு இசைந்த ஒன்றுதான். தற்போது இந்திய அரசாங்கம், ’ஆயுஷ்’ என்ற பெயரில் மாற்று மருந்துகளுக்கான துறையை ஒரு தனி அமைச்சகத்தின் கீழே உருவாக்கியுள்ளது. ஏற்கனவே பலகாலமாக சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகமும் தனியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் புதிய அமைச்சகத்தின் நோக்கம், மாற்று மற்றும் பாரம்பரிய மருத்துவ வகைகளை ஊக்குவிப்பதாகும்.

மாற்று மருத்துவ முறைகள் அலோபதியைப் போன்றே முறையான சோதனைகளைக் கடுமையாகப் பின்பற்றுவதில்லை என்ற குற்றச்சாட்டு வெகுகாலமாக இருந்து வருகிறது

இப்போதைய அரசாங்கத்தின் நோக்கம், நடவடிக்கைகள் ஆகியவை செல்லும் திசையையும், குறிப்பாகப் பொது நல மருத்துவ அமைப்பின் மீது அது ஏற்படுத்தும் சிக்கல்களையும் புரிந்துகொள்ள முயற்சிப்போம்.

முதலில், இது தொடர்பாக இந்திய அரசாங்கத்தின் ஆயுஷ் வலைத்தளம் நம் கவனத்தில் இடம்பெறுகிறது. மேலோட்டமான பார்வையில், இந்த வலைத்தளம் மாற்று மருத்துவ நடைமுறைகளைப் பற்றிய பல தகவல்களுடன் சுவாரஸ்யமாகத் தோன்றுகிறது. இங்கே ஒவ்வொரு அமைப்புக்கும், அவற்றின் மருத்துவப் பயன்பாட்டிற்கும் வழிகாட்டுதல்களைத் தனித்தனியாக வழங்குகிறது. அது போக, இது போன்ற மருந்துகளுக்கான பரிசோதனை அமைப்புகளையும் பட்டியலிட்டுள்ளது. அதைவிட மிகமுக்கியமாக, ஏற்கனவே உள்ள மருந்து மற்றும் மருத்துவம் தொடர்பான சட்டங்களில் கடந்த 2 ஆண்டுகளாக செய்யப்பட்ட திருத்தங்கள் பற்றிய தகவல்களும் உள்ளன.

அந்தப் பட்டியலைப் பார்க்கும்போது, மாற்று மருத்துவப் பயிற்சியை எளிதாக்கும் திருத்தங்களை மட்டுமல்லாமல், இந்த புதிய அமைப்புகளின் தேவைகளுக்கு ஏற்ப ஏற்கனவே இருந்த தர மற்றும் ஒழுங்குமுறை வழிமுறைகள் (எ.கா. விதி 170) தளர்த்தப்பட்டுள்ளதையும் காண முடியும்.

மேலும் படிக்க: மரபு மருத்துவர்கள் ஆங்கில மருந்துகளைப் பரிந்துரைப்பது சரிதானா?

உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட முன்னேறிய மருத்துவ முறைகளுடன் பகுத்தறிவு மற்றும் தர்க்கரீதியாக இந்த மாற்று மருத்துவ நடைமுறைகள் முரண்படும் ஒரு முக்கியமான இடம், மருந்துகளின் மீதான வெளிப்படையான மற்றும் கடுமையான சோதனை நடைமுறைகள். மாற்று மருத்துவ முறைகள் அலோபதியைப் போன்றே முறையான சோதனைகளைக் கடுமையாகப் பின்பற்றுவதில்லை என்ற குற்றச்சாட்டு வெகுகாலமாக இருந்து வருகிறது. அதனால்தான், இந்த மாற்று மருத்துவ முறைகள் அலோபதி மருந்துகளின் பாதுகாப்பான பயன்பாட்டிற்கு அடிப்படையான, தரவுகள் சார்ந்த அறிவியலுடன் முரண்படுகின்றன.

வெகுகாலமாகவே மருந்துகளைப் பரிசோதிப்பதற்கான முறையான, தர்க்கரீதியான நடைமுறைகள் உருவாகி வந்துள்ளன. மருத்துவர்கள், தங்கள் சிகிச்சைக்குப் பரிந்துரைக்கும் மருந்தை, சோதனை முடிவுகளின் அடிப்படையில் சரியாகத் தேர்ந்தெடுக்கப் பயிற்சி பெற்றிருக்கின்றனர். சோதனை முடிவுகளை மாற்றும் பேராசை பிடித்த சில மருந்து நிறுவனங்களும், மருத்துவப் பிரதிநிதிகள் பரிந்துரைக்கும் மருந்துகளை மட்டுமே பயன்படுத்தும் நேர்மையற்ற சில மருத்துவர்களும் உள்ளனர் என்பது உண்மையே. இருப்பினும், அவை விதிவிலக்குகள் தானேயன்றி, விதி அல்ல. மருந்து நிறுவனங்கள் கொடுக்கும் தரவுகளில் ஏதேனும் குறைபாடு இருந்தால், அதை அடையாளம் காணும் வகையில்தான் மருத்துவர்களின் பயிற்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

பரிந்துரைக்கப்படுவதற்கு முன்னர், அந்த மருந்துகளின் தரவுகள் மருத்துவ சஞ்சிகைகளில் பதிப்பிக்கப்பட்டு மருத்துவர்கள், மருத்துவ கவுன்சில்கள், மற்றும் பல்வேறு மருத்துவ அமைப்புகளாலும் ஆராயப்பட்டு உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகிறது. இது மருந்துகளின் தவறான பயன்பாட்டைப் பெருமளவில் தடுக்கிறது. போலியான சோதனைத் தரவுகளின் மூலம், தரமற்ற மருந்துகளுக்கு அனுமதி பெற முயலும் நேர்மையற்ற சில மருந்து நிறுவனங்கள் இருக்கத்தான் செய்கின்றன.

இருப்பினும், விரிவான மற்றும் முறையான ஆய்வு வழிமுறைகள் காரணமாக, இந்த சம்பவங்கள் காலப்போக்கில் குறைந்துகொண்டே வருகின்றன. இந்த நடைமுறை, மருந்துகள் மற்றும் சிகிச்சையின் வெளிப்படைத்தன்மை, திறன் இரண்டையும் உறுதி செய்கிறது.

மாற்று மருத்துவ முறைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க முனையும் அரசாங்கமும் கூட, மாற்று மருந்துவ முறைகளின் மீது முறையான அறிவியல் ஆராய்ச்சி மற்றும் சோதனைக்கு உட்படுத்தும் நோக்கத்துக்குப் போதுமான முக்கியத்துவம் கொடுக்கவில்லை

மாற்று மருத்துவ முறைத் தரப்பு போதுமான சோதனை முடிவுகளை வழங்காமலோ, முறையான சோதனை முறைகளை நிராகரித்தோ வரும் மனப்பாங்குதான் மாற்று மருத்துவ நடைமுறையில் உள்ள முக்கியமான சர்ச்சை ஆகும். மாறாக, அவை எப்போதும் வாய்வழிச் செய்திகளை சோதனை முடிவுகளாகக் குறிப்பிடுவது வழக்கம். அவர்கள் வரலாற்றுரீதியாகவே அறிவியல் அடிப்படையிலான அலோபதி முறைகள் மற்றும் நுட்பங்களை “இயற்கைக்கு மாறான ஒன்று“ என்றும், “அதீதமான” மற்றும் “தீங்கு விளைவிப்பவை” என்றும் நிராகரித்தே வந்துள்ளனர். தங்கள் சிகிச்சை முறைகளை “பாரம்பரிய வழி வந்தது” என்று கூறி, முறையான ஆராய்ச்சி, சோதனை மற்றும் ஆவணப்படுத்தல் ஆகியவற்றுக்கு ஆட்படுத்த மறுத்தே வந்துள்ளனர்.

இது போன்ற மாற்று மருத்துவ முறைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க முனையும் அரசாங்கமும் கூட, மாற்று மருந்துவ முறைகளின் மீது முறையான அறிவியல் ஆராய்ச்சி மற்றும் சோதனைக்கு உட்படுத்தும் நோக்கத்துக்குப் போதுமான முக்கியத்துவம் கொடுக்கவில்லை. இந்த அமைப்புகள் ஒவ்வொன்றிற்கும் வெளியிடப்பட்ட பல்வேறு அரசு வழிகாட்டுதல்கள் (எ.கா. ஆயுஷ் அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட ஆயுர்வேத மருந்து மேம்பாட்டிற்கான வழிகாட்டுதல்) மிகவும் விரிவான குறிப்புகளைக் கொண்டிருக்கின்றன. இருப்பினும் அதன் பின்னால் எந்த ஒழுங்குமுறை ஆணையமோ, சான்றளிக்கும் வழிமுறைகளோ இல்லை.

மேலும் படிக்க: ஆயுர்வேதத்தில் பக்திக்குப் பதில் பகுத்தறிவைக் கொண்டுவந்தவர் சரகர்

இந்த நிலையில், இத்தொடர் தீர்ப்புகளும், மேலே குறிப்பிடப்பட்டது போன்ற திருத்தங்களும் அதிக முக்கியத்துவத்தையும் கவனத்தையும் கோருகின்றன.

தற்போதைய மருந்து மற்றும் வேதியல் பொருட்கள் சட்டத்தின் (Drug and cosmetics Act ) மீது, சோதனை மற்றும் ஒழுங்குமுறையை நீர்த்துப்போகச் செய்யும் எந்தத் திருத்தமும், இந்த நாட்டில் உள்ள கோடிக்கணக்கான மக்களின் மருத்துவம் மற்றும் சுகாதாரத்தின் மீது மோசமான தாக்கங்களை ஏற்படுத்தும். காலம்காலமாக அலோபதியின் அடிப்படை நோக்கமான தரவு சார்ந்த அறிவியலுக்கு உட்பட மறுக்கும் மாற்று மருத்துவ நிபுணர்களை, அலோபதி முறைகளைப் பயன்படுத்த அனுமதிக்கும் நீதிமன்றத்தின் தீர்ப்பு நேர்மையற்றதாகவும் முரண்பாடாகவும் மட்டும் இல்லை. இது மிக மிக ஆபத்தான ஒன்றும் கூட.

இக்கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட பேட்டியில் கூட டாக்டர். கே.சிவராமன் இந்தப் பிரச்சினையை ஒப்புக்கொள்கிறார். கூடுதலாக, நேர்மையற்ற அலோபதி மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ நிறுவனங்கள், அலோபதி மருத்துவர்களின் இடத்தில் இத்தகைய மாற்று மருத்துவர்களை நியமிக்கலாம் என்ற ஆழமான பிரச்சினையையும் குறிப்பிடுகிறார். இது போன்ற சந்தர்ப்பங்களில், அந்த மாற்றத்தை பற்றித் தெரியாத நோயாளிகள் இதில் உள்ள அபாயங்களைப் பற்றி அறிந்திருக்கவே வாய்ப்பில்லை.

அலோபதி முறை கூட முறையான அறிவியல் ஆராய்ச்சியைக் கடைப்பிடிப்பதன் மூலம் பல தவறான வழிகளைக் காலப்போக்கில் தொடர்ந்து திருத்தியே உருவானது. முதலில் மேற்கில் மருந்து நிறுவனங்களால் இந்த வளர்ச்சி முன்னெடுக்கப்பட்டது என்றாலும், தொழில்மயமாக்கலுக்குள் அவர்கள் முதலில் இணைந்தவர்கள் என்ற முறையில்தான் அது நிகழ்ந்தது.

அங்குள்ள பாரம்பரிய நடைமுறைகள் உட்பட அன்றிருந்த சிகிச்சை முறைகளின் அடிப்படைக் கட்டமைப்பின் மீது தான் அலோபதியும் ஆரம்பித்தது. எவ்வாறாயினும், தொடர்ந்த முறையான செயல்பாடுகளின் மூலம், அந்த சிகிச்சை முறைகள் தொடர்ந்து திருத்தி அமைக்கப்பட்டு, இன்று நாம் இருக்கும் முன்னேற்றத்தை அடைந்துள்ளன.

தற்போதைய மருந்து மற்றும் வேதியல் பொருட்கள் சட்டத்தின் மீது சோதனை மற்றும் ஒழுங்குமுறையை நீர்த்துப்போகச் செய்யும் எந்தத் திருத்தமும், இந்த நாட்டில் உள்ள கோடிக்கணக்கான மக்களின் மருத்துவம் மற்றும் சுகாதாரத்தின் மீது மோசமான தாக்கங்களை ஏற்படுத்தும்

உலகமயமாக்கலுக்குப் பிறகே, முன்பு வெறும் ஜெனரிக் மருந்து தயாரிப்பாளராக இருந்த இந்திய மருந்து உற்பத்தித் துறை, புதிய மருந்துகளின் ஆராய்ச்சியிலும் முதலீடு செய்யத் தொடங்கியது. எனவே, அலோபதி மருத்துவம் முற்றிலும் மேற்கத்திய மருந்தகக் கட்டமைப்பே என்ற வாதம், இனி ஒப்புக்கொள்ளக்கூடிய ஒன்றல்ல.

இந்த பாரம்பரிய மருத்துவ முறைகளின் உண்மையான ஆதரவாளர்கள் அவர்கள் ஆதரவு அளிக்கும் மருத்துவ முறை முன்னேறிய நிலையை அடைய வேண்டும் என்று உண்மையாகவே விரும்பினால், அவர்கள் அத்தகைய முறையான ஆதாரப்பூர்வமான செயல்முறைகளையும் அதை முறையாக ஆவணப்படுத்தும் செயல்பாடுகளையும் முன்னெடுக்க ஆதரவு அளிக்க வேண்டும். பல மாற்று மருத்துவ முறைகள் இங்குதான் தோன்றியவை என்ற காரணத்தினால், அலோபதியில் இருந்தது போல வேறு இடங்களில் உருவான அடிப்படை ஆராய்ச்சியின் பலன்களை பெற்று அதன் மேல் நம் ஆராய்ச்சிகளைக் கட்டமைக்க முடியாது.

எனவே ஆதாரபூர்வமான அறிவியலின் அடிப்படையின் மேல் கட்டமைக்கப்பட்ட, முறையான வலுவான ஆராய்ச்சிக்கான உள்கட்டமைப்பை நாம்தான் உருவாக்க வேண்டும். மாற்று மருத்துவச் செயல்முறைகளின் முதன்மையான ஆதரவு நிலைப்பாட்டை எடுத்திருக்கும் அரசும் அதற்கான சரியான ஒழுங்குமுறை மற்றும் சான்றளிப்பு அமைப்பை உருவாக்குவதின் மூலம் அதைத் துவக்கி வைத்து ஊக்கமளிக்க முடியும்.

அதுவரை இதுபோன்ற கலந்து கட்டிய மருத்துவம் என்பது முறையான பயிற்சி இல்லாதவர்கள் கையில் ஒரு கொலை வாளைக் கொடுப்பது போன்றதே!

Share the Article

Read in : English

Exit mobile version