Read in : English
சித்த மருத்துவரான கு. சிவராமன், சித்த மருத்துவத்தின் பிரதிநிதியாக தொடர்ந்து சித்த மருத்துவம் தொடர்பான பொதுவிவாதங்களில் கலந்துகொள்கிறார். மரபு மருத்துவம், நவீன மருத்துவம் இரண்டையும் அததற்குரிய முக்கியத்துவத்துடன் அணுகுபவர். அவருடன், ஆயூஸ் மருத்துவர்கள் ஆங்கில மருத்துவத்தையும் பரிந்துரைக்கலாம் என அண்மையில் உயர்நீதிமன்றம் ஒரு தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தது தொடர்பாக உரையாடினோம்.
சில காலமாகவே இப்படியான விவகாரம் நீதிமன்றத்துக்கு வந்த வண்ணம் உள்ளது. அண்மையில், ஒரு ஹோமியோபதி மருத்துவர், ஆங்கில மருந்துகளைப் பரிந்துரைக்கிறார் என்ற புகாரின்பேரில் அவரது கிளினிக்கில் சுகாதாரத் துறையினர் சோதனை நடத்தினர். இந்த வழக்கு நீதிமன்றத்துக்குப் போனது. உயர் நீதிமன்றம் ஆயுஷ் மருத்துவர்கள் ஆங்கில மருந்துகளைப் பரிந்துரைக்கலாம் என்று தெரிவித்தது. தமிழக அரசின் அரசாணை ஒன்றும் இப்படியான பயிற்சிகளை அனுமதிக்கிறது.
டாக்டர் சிவராமன் சித்த மருத்துவம், இந்திய மரபு மருத்துவம்ம் ஆகியவற்றின் பின்னணி பற்றிப் பகிர்ந்துகொண்டார். ஒரு குருவிடம் கற்றுக்கொள்வதும் அல்லது ஒரு குடும்பத்தினர் வாரிசுகளுக்குக் கற்றுத்தருவதுமாக இருந்த மரபு மருத்துவ முறைகளை வெகுமக்களும் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் அவை நிறுவனமயப்படுத்தப்பட்டதைச் சுட்டிக்காட்டினார்.
சித்த மருத்துவம் உள்ளிட்ட இந்திய மரபு மருத்துவத்தை அதன் பல்வேறு பரிமாணங்களுடன் நிறுவனங்களால் மட்டுமே வழங்க முடியும் என்பதை வலியுறுத்தினார். இளம் மருத்துவர்கள் இந்திய மருத்துவக் கட்டமைப்பை நன்கு புரிந்துகொள்ளவும் அது உதவும்.
ஒரு குருவிடம் கற்றுக்கொள்வதும் அல்லது ஒரு குடும்பத்தினர் வாரிசுகளுக்குக் கற்றுத்தருவதுமாக இருந்த மரபு மருத்துவ முறைகளை வெகுமக்களும் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் அவை நிறுவனமயப்படுத்தப்பட்டதைச் சுட்டிக்காட்டினார்
1970 இல் கொண்டுவரப்பட்ட இந்திய மருத்துவ மத்திய கவுன்சில் சட்டம், மரபு மருத்துவத்தின் அனைத்துப் பிரிவுகளையும் ஒரு குடையின் கீழ் கொண்டுவந்தது. மரபு மருத்துவக் கல்வி நிறுவனங்களை நிறுவவும் இந்தச் சட்டம்தான் வழிகாட்டியது. பாடத்திட்டம் போன்ற விஷயங்களில் மரபு மருத்துவக் கல்வி நிறுவனங்கள் எப்படி ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்பது பற்றியும் இந்தச் சட்டம் கூறியது.
மாணவர்களுக்கு நவீன அறிவியல் அடிப்படையில் உடற்கூறு உள்ளிட்ட விஷயங்களுடன் மரபு மருத்துவமும் பயிற்றுவிக்கப்பட்டன அந்தந்த மருத்துவ முறைகளைப் பயின்ற மருத்துவர்கள் அந்தந்த மருத்துவத்தை மட்டுமே பரிந்துரைக்க வேண்டும் என்பது அந்தச் சட்டத்தின் அடிப்படையாக இருந்தது. எனினும், அந்தச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட சில திருத்தங்கள், நெருக்கடி காலத்தில், நிறுவனத்தில் பயிற்சிபெற்ற மரபு மருத்துவர்கள் ஆங்கில மருந்துகளைப் பரிந்துரைக்க வாய்ப்பளித்தன.
மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம் போன்ற சில மாநிலங்கள் அனைவருக்கும் மருத்துவ சேவை கிடைக்க வேண்டும் என்பதற்காக, ஆயுர்வேத மருத்துவர்களைச் சிற்றூர்களின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்களாக நியமித்தன.
தமிழ்நாட்டில் கிராமங்களில் ஆங்கில மருத்துவர்களை நியமிக்க இயலாத சூழல் நிலவுகிறது. ஆயுஸ் மருத்துவர்களைவிட ஆங்கில மருத்துவர்களுக்கு அதிக ஊதியம் தர வேண்டும், மேலும் ஆங்கில மருத்துவம் முடித்த பின்னர் மருத்துவர்கள் உயர்கல்விக்குச் சென்றுவிடுகிறார்கள்.
மேலும் படிக்க:
பொது சுகாதாரம், நீண்ட கோவிட் தொற்று, குழந்தைகளுக்கு தடுப்பூசி: மருத்துவ நிபுணர்கள் அலசுகிறார்கள்!
ஆயுர்வேதத்தில் பக்திக்குப் பதில் பகுத்தறிவைக் கொண்டுவந்தவர் சரகர்
இவற்றை மனதில் வைத்துதான் எங்களைப் போன்ற மரபு மருத்துவம் பயின்று பயிற்சியில் ஈடுபடும் மருத்துவர்களில் பெரும்பாலானோர் நாங்கள் எந்த மருத்துவத்தைப் பயின்றோமோ அந்த மருத்துவத்தின் பயிற்சியிலேயே ஈடுபடுகிறோம்.
டாக்டர் சிவராமனின் கூற்றுப் படி, மரபு மருத்துவம் பயின்ற மருத்துவர்கள் அதை மட்டுமே பயிற்சி செய்ய வேண்டுமே ஒழிய பிற மருத்துவத்தில் ஈடுபடக் கூடாது என்பதே அறம். நெருக்கடி நேரத்தை மட்டும் விதிவிலக்காகக் கொள்ளலாம்.
இந்தக் காலத்தில் மரபு மருத்துவம் பிரபலமடைந்து வருகிறது. ஆங்கில மருத்துவத்துக்கான அதிகச் செலவாலோ ஆங்கில மருத்துவத்தை அணுக முடியாத சூழலாலோ மரபு மருத்துவம் முக்கியத்துவத்தைப் பெற்றிருக்கலாம் என்கிறார் சிவராமன். மேலும், சில நோய்களுக்கு ஆங்கில மருத்துவம் முழுமையான நிவாரணத்தைத் தருவதில்லை என்ற எண்ணமும் இங்கு உள்ளது.
உயர்நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருப்பது தவறு என்று அழுத்தமாகக் கூறுகிறார் டாக்டர் சிவராமன். மரபு மருத்துவர்கள் ஆங்கில மருந்துகளைப் பரிந்துரைக்கலாம் என்ற அனுமதியை வெறுமனே அப்படியே வழங்கக் கூடாது. ஏனெனில், ஆங்கில மருத்துவத்தின் அனைத்துப் பரிமாணங்களையும் முழுமையாக அறிந்துவைத்திருக்கும் மரபு மருத்துவர்கள் இங்கே அரிதாகவே உள்ளனர் என்கிறார் அவர்.
1970 இல் கொண்டுவரப்பட்ட இந்திய மருத்துவ மத்திய கவுன்சில் சட்டம், மரபு மருத்துவத்தின் அனைத்துப் பிரிவுகளையும் ஒரு குடையின் கீழ் கொண்டுவந்தது. மரபு மருத்துவக் கல்வி நிறுவனங்களை நிறுவவும் இந்தச் சட்டம்தான் வழிகாட்டியது. பாடத்திட்டம் போன்ற விஷயங்களில் மரபு மருத்துவக் கல்வி நிறுவனங்கள் எப்படி ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்பது பற்றியும் இந்தச் சட்டம் கூறியது
ஆங்கில மருத்துவம் நுட்பமான அளவில் வளர்ந்திருக்கிறது. ஒவ்வொரு நோய்க்கும் சிறப்பு மருத்துவர்கள் உள்ளார்கள். புற்று நோய்க்கு சிகிச்சை தரும் டாக்டர் கல்லீரல் நோய்க்கு மருந்து தருவதில்லை. ஆங்கில மருத்துவத்தின் நுணுக்கமான விவரங்கள் மரபு மருத்துவர்களுக்குத் தெரிந்திருக்குமா என்பதும் சந்தேகம்தானே எனக் கேட்கிறார்கள் ஆங்கில மருத்துவர்கள் என அவரிடம் கேட்டபோது, டாக்டர் சிவராமன் இந்தக் கேள்வி சரிதான் என்கிறார். மருத்துவர்கள் தாங்கள் பயின்ற மருத்துவத்தை மட்டுமே பயிற்சிசெய்ய வேண்டும் என்பதை அவர் மீண்டும் வலியுறுத்துகிறார்.
ஆயுஸ் மருத்துவர்கள் அல்லது மருத்துவமனை என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த வழிகாட்டுதல்கள் உள்ளன. எடுத்துக்காட்டாக, ஆயுஸ் மருத்துவமனையில் உள்நோயாளிக்கு ஒரு நெருக்கடி வந்தால் ஆங்கில மருத்துவம் கிடைப்பதில் கால தாமதம் ஏற்படும்போது, அவர்கள் சில ஆங்கில மருந்துகளை வழங்கலாம். அவ்வளவுதான். மேலும், ஆயுஸ் மருத்துமனைகளில் அவசரகால சிகிச்சை மேற்கொள்ளப்படுவதில்லை என்பது முறையாக அறிவிக்கப்பட வேண்டும். அப்படியான அறிவிப்பு இருந்தால்தான், விபத்து போன்ற காரணங்களால் வருபவர்களது நேர விரயம் தவிர்க்கப்படும்.
நவீன மருத்துவர்களும் மரபு மருத்துவர்களும் ஒருங்கிணைந்து, நோயாளியை மையமாக வைத்து மருத்துவம் வழங்குவது நல்லது என்கிறார் அவர். ஆகவே, ஒருங்கிணைந்த மருத்துவம் வழங்குவதை ஆலோசனையாகக் கூறுகிறார் சிவராமன். நம்மைப் போல் மரபு மருத்துவம் பெரிதாக வளர்ந்திராத வெளிநாடுகளில்கூட இப்படியான ஒருங்கிணைந்த மருத்துவம் மேற்கொள்ளப்படுவதைச் சுட்டிக்காட்டுகிறார்.
நீரிழிவு நோயாளியை உதாரணம் காட்டி இதை விளக்குகிறார் அவர். இரத்தத்தில் சர்க்கரை அளவைப் பராமரிப்பதில் மூலிகைகளின் பங்கைச் சுட்டிக்காட்டும் அதே நேரத்தில் இன்சுலின் சுரக்கவே இல்லை என்றால் ஆங்கில மருத்துவத்தின் மூலம் இன்சுலின் செயற்கையாகச் செலுத்துப்பட வேண்டிய அவசியத்தையும் குறிப்பிடுகிறார்.
மரபு மருத்துவம் ஆங்கில மருத்துவம் இரண்டில் எது பெரியது என்று பார்ப்பதைவிட இரண்டு மருத்துவங்களுக்கும் இடையில் ஒரு சமரசமான நிலையைக் கொண்டு வர வேண்டும். இரண்டு மருத்துவ முறைகளும் தனித்தனியாக இயங்குவதைவிட ஒருங்கிணைந்து செயல்படும்போது, நோயைக் கண்டறிதல் நோய்க்கான சிகிச்சை போன்றவற்றில் வளர்ச்சியைக் காண இயலும்.
இந்தியாவில், அப்படியொரு நிலையை உருவாக்குவதில் சிறிய அளவிலான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மத்திய அரசு இந்த இரண்டு மருத்துவ முறைகளையும் ஒருங்கிணைப்பதில் சில தொடக்க கட்ட முயற்சிகளில் இறங்கியுள்ளது. இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியதிருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.
Read in : English