Read in : English
தமிழகத்தில் வன விலங்குகளைப் பாதுகாப்பதில் வனத்துறை தீவிர கவனம் செலுத்தி வருகிறது. வேட்டை தடுப்பு காவலர்கள் கண்காணிப்பைப் பலப்படுத்தியுள்ளனர். வனங்களின் அருகே உலவும் மான் போன்ற விலங்குகளை இறைச்சிக்காக வேட்டையாடுவது பெருமளவில் தடுக்கப்பட்டுள்ளது. ஆனால், முற்றாக அது பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படவில்லை.
வன விலங்குகளைப் பாதுகாப்பதில் கடுமையான சட்ட நடைமுறை அமல்படுத்தப்பட்ட போதிலும், போதிய விழிப்புணர்வு இன்மையால் சட்ட மீறல் தொடர்கிறது. இந்த ஆண்டில் மட்டும் தர்மபுரி, வேலுார் அருகே சிங்காரத்தோப்பு, திண்டுக்கல், கன்னியாகுமரி மாவட்டங்களில் மான்களை வேட்டையாடும் சம்பவங்களை வனத்துறை கண்டறிந்துள்ளது.பல மான்கள் கொல்லப்பட்டுள்ளன. அவற்றை வேட்டையாடியதாகப் பலர் பிடிபட்டுள்ளனர். பலர் தலைமறைவாக வாழ்கின்றனர்.
கன்னியாகுமரி அருகே மருந்துவாழ்மலை காட்டில் சமீபத்தில் ஒரு மான் வேட்டை சம்பவம் நடந்தது. பூதப்பாண்டி வனச்சரகத்துக்கு உட்பட்ட இந்த பகுதியில் இரண்டு மான்கள் கொல்லப்பட்டுள்ளன. அவற்றின் இறைச்சி மருந்துவாழ்மலை அருகே பெருமாள்புரம் என்ற கிராமத்தில் வீடு வீடாக விற்கப்பட்டிருந்தது. தகவல் அறிந்த வன அதிகாரிகள், அக்கிராமத்தில் சோதனை நடத்தினர். வீடுகளில் சமைத்த, சமைக்காத நிலையில் இருந்த மான் மாமிசத்தைக் கண்டறிந்து பறிமுதல் செய்தனர்.
மான்களை வேட்டையாடிய கும்பலைச் சேர்ந்தவர்களில் சிலரைப் பிடித்துள்ளனர். மான் மாமிசம் வாங்கியவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட, 30 லட்சம் ரூபாய்க்கு மேல் அபராதம் வசூலிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், இந்த வேட்டையில் ஈடுபட்ட பலர் இன்னும் கைது செய்யப்படவில்லை.
கன்னியாகுமரி அருகே மருந்துவாழ்மலை காட்டில் சமீபத்தில் ஒரு மான் வேட்டை சம்பவம் நடந்தது. அவற்றின் இறைச்சி பெருமாள்புரம் என்ற கிராமத்தில் வீடு வீடாக விற்கப்பட்டிருந்தது. மான் மாமிசம் வாங்கியவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது
ராஜஸ்தானில் மான் வேட்டையாடி சிக்கிய பிரபல நடிகர் சல்மான்கான் சிறைத் தண்டனை பெற்றார். தண்டனை என்பது ஒருவருக்கான உணர்த்தலே தவிர, சமூகத்தில் பொது அறத்தை வளர்க்கும் கருவியாக இன்னும் மாறவில்லை என்றே கூற வேண்டும். அதனால்தான் சல்மான்கான் தண்டனை பெற்றது பெரும் பரபரப்பாகப் பேசப்பட்ட போதிலும், அது போன்ற குற்ற நடவடிக்கைகள் குறைந்தபாடில்லை. மாறாக, நாட்டின் பல பகுதிகளிலும் தொடர்கிறது.
மான் போன்ற வன விலங்குகளைப் பாதுகாப்பதுடன், அவற்றுக்கு தீமை செய்யாதிருப்பதும் வனங்கள் அருகே வசிப்போரின் கடமை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அந்த கடமை உணர்வைச் சட்டம் மட்டுமே உருவாக்குமா என்றால் கேள்விக்குறி தான் மிஞ்சும்.
மேலும் படிக்க: வனவிலங்குச் சடலம்: கெளரவத்துடன் கையாள வழிகாட்டும் கர்நாடகம்
மான்வேட்டையால் பரபரப்படைந்துள்ள கிராமமான பெருமாள்புரத்தை சுற்றிப் பார்த்தபோது, பல்வேறு கேள்விகள் எழுந்தன. கிராமத்தில் உரிய சட்ட நடவடிக்கை எடுத்துள்ள வனத்துறையின் போக்கு மிகச் சரியானது. வறுமை அகன்று, பொருளாதார வளம் நிறைந்த கிராமம் அது.
பெரும்பாலானோர், நான்கு சக்கர வாகனம் சொந்தமாக வைத்துப் பராமரிக்கும் அளவு வளம் பெற்றவர்கள். பெரும்பாலும் பள்ளிக் கல்வியை முடித்தவர்கள் தான் வசிக்கின்றனர். படிப்பறிவு, வன உரியினத்தின் மீது கருணை கொள்ளச் செய்யவில்லை.
எந்த அறமும் இன்றி மான்களை வேட்டையாடி, மாமிசத்தைப் பகிர்ந்துள்ளனர். இது முதல் வழக்கு என்று கூறப்படுகிறது. ஆனால், மாமிசத்தைப் பகிர்ந்துள்ள விதம் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அதனால், இங்கு நடக்கும் வேட்டைகள் குறித்து வனத்துறை மேலும் விசாரிக்க வேண்டும்.
படிப்பறிவு, வன உரியினத்தின் மீது கருணை கொள்ளச் செய்யவில்லை.எந்த அறமும் இன்றி மான்களை வேட்டையாடி, மாமிசத்தைப் பகிர்ந்துள்ளனர்
இந்த கிராமம் அருகே உள்ள மருந்துவாழ்மலை காடு மிகச்சிறிய பரப்பளவில் உள்ளது. எனவே, ஊரை ஒட்டியுள்ள விளைநிலப் பகுதிகளுக்கு வன விலங்குகள் வருவது மிகச் சாதாரணமாக நடக்கிறது. மான்களை வேட்டையாடுவதோ, அவற்றின் மாமிசத்தை உண்பதோ அறமற்ற செயல் என்று கிராமவாசிகளுக்குத் தெரியவில்லை. பிடிபட்டால் மட்டுமே அது குற்றம் என்ற உணர்வுடன் இருக்கின்றனர். இது போன்ற எண்ணப்போக்குள்ள பகுதிகளில் நிரந்தரமாக வேட்டையைத் தடுப்பது முற்றாக முடியாத காரியம்.
மேலும் படிக்க: பாலூட்டி கடற்பசுவைக் காப்பாற்றிய மீனவர்கள்
அதே நேரம், வனவிலங்குகளை இது போன்ற எண்ணப்போக்குடையோரிடம் இருந்து காப்பற்ற வேண்டியது மிகவும் முக்கிய கடமை. இந்தச் சூழலில், வனத்துறை கண்காணிப்பை அதிகரிப்பதுடன் விழிப்புணர்வுக்காகப் பிரசாரங்களையும் செய்யலாம். வனவிலங்குகளைக் காப்பதால் ஏற்படும் நன்மைகள், மக்களுக்கு கிடைக்கும் சூழல் லாபம் குறித்து, இது போன்ற கிராம மக்களிடம் எளிய முறையில் பிரசாரம் மேற்கொள்ளலாம்.
வனங்களின் அருகே கிராமப்புறப் பள்ளிகளில் சிறுவர் சிறுமியருக்கு வனம், வன விலங்குகளின் நன்மை, அவற்றின் மீது கொள்ள வேண்டிய பரிவு, சுற்றுச்சூழலை மேம்படுத்துவதில் வனம், வனவிலங்குகள் தரும் பங்களிப்பு பற்றி விழிப்புணர்வு வகுப்புகளை நடத்தலாம்.
இது போன்ற முன்னெடுப்புகள் மட்டுமே, வனவிலங்கு வேட்டையை முற்றாகத் தடுத்து அவற்றின் மீது நெகிழ்வான பார்வையை ஏற்படுத்தும். அப்படிச் செய்யாதபோது, கொல்லப்பட்ட விலங்கின் உடல் பாகங்களுடன் கொன்றவர்கள் இருக்கும் போட்டோக்களை வெளியிட்டு, தங்கள் சாகசத்தை மட்டுமே வனத்துறை வெளிப்படுத்த முடியும். அது முற்றாகப் பயன் தராது!
Read in : English