Site icon இன்மதி

நரிக்குறவர் போராட்டம் சில குறிப்புகள்

Narikuravar rally

Read in : English

நரிக்குறவர் சமூக மக்கள் தொடர்ந்து நடத்திய போராட்டங்களால், பழங்குடி பட்டியல் இனத்தில் அவர்களைச் சேர்க்கும் முடிவை இந்திய அரசு எடுத்துள்ளது. நரிக்குறவர் போராட்டம் என்பது வெறுமனே அடையாளப் போராட்டம் அல்ல. அது உரிமையை வென்றெடுக்கும்வரை தொடர்ந்திருக்கிறது. நாடோடிகளாக வாழும் அவர்களை ஒருங்கிணைக்கவே முடியாது என்ற அரசியல் கட்சிகளின் வாக்கை, 40 ஆண்டுகளுக்கு முன்பே, மாநாடு மற்றும் பேரணி நடத்தி, பொய்யாக்கியுள்ளனர்.

தமிழகத்தில் சமூக, பொருளாதார, கல்வி நிலையில் மிகவும் பின்தங்கிய நிலையில் நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்தோர் வாழ்கின்றனர். அரசின் சலுகை பெறுவதில் மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தனர். பழங்குடியினர் பட்டியலில் தங்களைச் சேர்க்க வேண்டும் எனப் பல ஆண்டுகளாக அவர்கள் போராடி வருகின்றனர்.

சமூக, கல்வி, பொருளாதார, வாழ்வாதார, குடியிருப்பு உரிமை போன்ற அடிப்படை உரிமைகள் அற்றிருந்த நிலையில், இந்த மக்களை அமைப்பாக்கிக் கோரிக்கையை வலியுறுத்தும் நிலை, 1980 வரை ஏற்படவில்லை.

தமிழகத்தில் நாடோடிகளாகத் திரிந்த இந்த மக்களுக்குக் குரல் கொடுக்க அரசியல் கட்சிகளோ சமூக இயக்கங்களோ தயாராக இல்லை. சுதந்திரத்துக்குப் பின், தமிழகத்தில் காமராஜர் ஆட்சியின்போது, போளூர் பகுதியில் நரிக்குறவர்கள் குடும்பத்துடன் ஒரே இடத்தில் நிலையாக வசிக்கும் வகையில் குடியிருப்பு மனை ஒதுக்கப்பட்டது.

சமூக, கல்வி, பொருளாதார, வாழ்வாதார, குடியிருப்பு உரிமை போன்ற அடிப்படை உரிமைகள் அற்றிருந்த நிலையில், அங்கொருவரும் இங்கொருவருமாக அலைந்து திரிந்து இது போல் சில உதவிகளைப் பெற்றனர்.

மேலும் படிக்க: பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர்

இந்த மக்களை அமைப்பாக்கிக் கோரிக்கையை வலியுறுத்தும் நிலை, 1980 வரை ஏற்படவில்லை. பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் இனத்தவராக இருந்ததால், இட ஒதுக்கீடுகளைப் பயன்படுத்தி முன்னேற வாய்ப்பு இல்லாத நிலையில் அவர்கள் இருந்தனர். அந்த அளவு பின்தங்கிய நிலையில் இருந்தனர்.

தமிழ்நாடு நரிக்குறவர் பேரவை ஒருங்கிணைப்பாளர் போதி தேவவரம்

பட்டியல் இனத்தில் இடம்பெறுவதன் மூலம் தங்கள் சமூகம் முன்னேற முடியும் என்று நம்பிய அவர்கள், அதுவே முதன்மைத் தேவை என்பதையும் உணர்ந்தனர். இந்த முதன்மைத் தேவையை மையப்படுத்தி, சென்னை, செங்கல்பட்டு பகுதிகளில் உள்ள நரிக்குறவரின மக்களைச் சந்தித்து – ஒருங்கிணைக்கும் பணியை, தமிழ்நாடு நரிக்குறவர் பேரவை என்ற அமைப்பின் அமைப்பாளராகச் செயல்பட்டு நிறைவேற்றினார் சமூக சேவகர் போதி தேவவரம்.

இது குறித்து, இன்மதி.காம் இணைய இதழிடம், ‘சென்னை, செங்கல்பட்டு ஆகிய இரண்டு மாவட்டங்களிலும், 38 ஊர்களில் இம்மக்களின் வாழ்விடங்களைக் கண்டறிய முடிந்தது. சிறுசிறு சந்திப்புகள் மூலம் ஒருங்கிணைக்கும் வாய்ப்பும் கிடைத்தது. இதுவே சென்னை – செங்கை மாவட்ட நரிக்குறவர் இன மக்களின் மாநாடாக, 1980இல் உருவெடுத்தது. மாநாட்டை, சென்னை எழும்பூர் ரயில் நிலையம், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள துாய ஆன்ரூஸ் கெர்க் தேவாலயச் சமூகக் கூடத்தில் நடத்தினோம். அந்தத் தேவாலய நிர்வாகம் கட்டணம் வாங்காமல், இலவச அனுமதி வழங்கியதுடன், 800 பேருக்குப் பகலுணவும் தந்து ஆதரித்தது…’ என்று பழைய நினைவுகளைப் பகிர்ந்தார்.

மாநாட்டை, சென்னை எழும்பூர், துாய ஆன்ரூஸ் கெர்க் தேவாலயச் சமூகக் கூடத்தில் நடத்தினோம். தேவாலய நிர்வாகம் கட்டணம் வாங்காமல், இலவச அனுமதி வழங்கியதுடன், 800 பேருக்குப் பகலுணவும் தந்து ஆதரித்தது.

சென்னை ஸ்டெல்லாமேரி கல்லூரி வளாகத்தில் அமைந்திருந்த, ‘நவநிர்மணா சமூக கல்வி மைய’மும் சென்னை சமூகப்பணி கல்விப் பள்ளி மாணவர்களும் தன்னார்வலர்களாகப் பணிபுரிந்து மாநாட்டுக்கு உதவினர்.

தமிழ்நாடு அரசு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை நிதி உதவியுடன், சென்னை சைதாப்பேட்டையில் சிவானந்தா ஆசிரமம் சார்பில் இயங்கும் நரிக்குறவர் மாணவர் விடுதிக் காப்பாளர்கள் ஞானசெளந்தரி, ரகுபதி உள்ளிட்டோர் மாநாட்டில் கலந்துகொண்டதாக, அந்த கால நிகழ்வை நினைவுகூர்ந்தார் தேவவரம்.

இம்மாநாட்டில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றில் முக்கியமானவை.

தொன்மை அடையாளங்கள் படி, நரிக்குறவர் சமூகத்தினராகிய நாங்கள் – அட்டவணைப் பழங்குடியினர் சமூகத்தினர் ஆவோம். ஆனால், அரசோ மிகவும் பிற்படுத்தப்பட்டோர் அட்டவணையில் வைத்து, இவ்வளவு காலமும் எங்கள் சமூக மக்களுக்கு அநீதி இழைத்ததுள்ளது.

காலம் தாழ்த்தாமல் அரசின் சாதிகள் வகைப்பாட்டில் திருத்தம் செய்து – எங்கள் சமூகத்தை அட்டவணைப் பழங்குடியினர் எனச் சட்ட வடிவம் கொடுத்து நீதி வழங்க இம்மாநாடு மத்திய – மாநில அரசுகளை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

மேலும் படிக்க: தேங்கி கிடக்கும் அக்கிபிக்கிகள்

நரிக்குறவர் சமூக மக்களுக்கு நிரந்தர வருமானம் ஏதுமில்லை. வாழ்வாதாரம் தேடி பல இடங்களுக்குச் செல்வது இயல்பே. இதை ஒரு காரணமாக்கி அரசும் பொதுமக்களும், நரிக்குறவர் சமூகத்தை நாடோடிக் கூட்டம் என்ற கண்ணோட்டம் கொண்டுள்ளதை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது.

இக்கண்ணோட்டத்திற்கு இடம் கொடுக்காமல் – முதல் கட்டமாக, அரசு நிலங்களில் வாழும் நரிக்குறவர் சமூக மக்கள் அந்த நிலங்களை விட்டு இடம் பெயர்ந்து போகக் கூடாது. நாடோடிகள் அல்லர் , நிரந்தரமாக வாழ விரும்புகிறோம் என்பதனை உணர்த்தி அரசின் கவனத்தை ஈர்க்கவேண்டும் என நரிக்குறவர் சமூக மக்களை மாநாடு கேட்டுக்கொள்கிறது.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இது நிகழ்ந்து கிட்டத்தட்ட, 40 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. நீண்ட தாமதத்துக்கு பின், நரிக்குறவர் இன மக்களை, பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கான நடவடிக்கை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

Share the Article

Read in : English

Exit mobile version