Read in : English
நரிக்குறவர் எனத் தமிழகப் பொதுவழக்கில் அழைக்கப்படும், அக்கிபிக்கி என்ற பழங்குடியினர், நாடோடிகளாக வாழ்ந்த சமூகம். கர்நாடகாவில் ஹக்கிபிக்கி என்றும், ஆந்திராவில், நக்கவாண்டோ என்றும் அழைக்கப்படுகின்றனர். உண்டி வில்லால் பறவை வேட்டை, நரி பிடிப்பது, பச்சை குத்துவது போன்றவற்றைப் பாரம்பரிய வாழ்வாதாரமாகக் கொண்டிருந்தனர்.
நகர்ப்புறங்களில் பாசி மணிகள் விற்கும் மாற்றுத் தொழிலையும் மேற்கொண்டு வருகின்றனர். இந்தோ – ஆரிய மொழியான, வாக்கிரி பூலியைத் தாய்மொழியாகப் பேசும் இவர்களின் வாழ்க்கை முறை பற்றி, முனைவர் கரசூர் பத்மபாரதி ஆராய்ந்து, ‘நரிக்குறவர் இன வரைவியல்’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.
நரிக்குறவர் இனத்தின் அசல் பெயர் அக்கிபிக்கி என்பதாகும். தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர்., ஆட்சிக் காலத்தில், நரிக்குறவர் எனத் தவறாக வழங்கப்பட்டது. தமிழகத்தில், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த இந்த இன மக்களை, தற்போது பழங்குடியினப் பட்டியலுக்கு மாற்றியுள்ளது இந்திய அரசு.
இந்தோ – ஆரிய மொழியான, வாக்கிரி பூலியைத் தாய்மொழியாகப் பேசும் இவர்களின் வாழ்க்கை முறை பற்றி, முனைவர் கரசூர் பத்மபாரதி ஆராய்ந்து, ‘நரிக்குறவர் இன வரைவியல்’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்
பன்னெடுங்காலமாக நடந்த போராட்டங்களின் விளைவாக இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. நரிக்குறவர் இன மக்களை, பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டியதன் முக்கியத்துவம் பற்றி, ‘இன்மதி.காம்’ இணைய இதழ் தொடர்ந்து கட்டுரைகள் வெளியிட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக இந்திய அரசின் இந்த முடிவு அமைந்துள்ளது.

பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பது மற்றம் குடியிருப்பு உரிமை கோரி நடத்திய போராட்டத்தில், 1981 இல் சிறை சென்ற திரும்பிய நரிக்குறவர்கள்
‘நரிக்குறவர் இனமக்கள், நிலையாக வசிப்பவர்கள் அல்ல… சுற்றிக்கொண்டே இருப்பார்கள். அவர்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பது எந்தப் பலனையும் தராது’ என்றே ஆட்சியாளர்கள் கூறினர்; அரசியல் கட்சிகளும், அதிகார வர்க்கமும் கூறி வந்தன.
இந்தக் கருத்தை தகர்க்கும் விதமாக, சென்னை அருகே ஆவடியில் குடியிருப்பு கோரி முதல் போராட்டத்தை நடத்தி, உரிமையை நிலைநாட்டினர் நரிக்குறவர் இன மக்கள். இந்தப் போராட்டத்தை ஒருங்கிணைத்தது தமிழக நரிக்குறவர் பேரவை என்ற அமைப்பு. இது, 1980 இல் தொடங்கப்பட்டது. நரிக்குறவர் இன மக்களுக்கு அடிப்படைத் தேவையான வீட்டு வசதி, கல்வி, பழங்குடி இனப் பட்டியலில் இணைப்பு போன்ற கோரிக்கைகளை முதன்மை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டது. மாவட்டந்தோறும் அவர்களை ஒருங்கிணைத்து விழிப்புணர்வுக் கூட்டங்களையும், பேரணிகளையும் நடத்தியது.
மேலும் படிக்க: நரிக்குறவர் குடியிருப்பில் அடிப்படை வசதிகள்: எப்போது விடிவு கிடைக்கும்?
சென்னை அருகே ஆவடி, டேங்க் பேக்டரி சாலை, காவலர் குடியிருப்பு அருகே, நரிக்குறவர் இன மக்கள், 1981இல் ஒரு குடியிருப்பு அமைத்திருந்தனர். அந்த இடத்தைக் காலி செய்ய வலியுறுத்தி நரிக்குறவர் இனத்தில் மூவரைச் சிறையில் அடைத்தது போலீஸ்துறை. வழக்கமாக, நரிக்குறவர் இனத்தவர், தங்கள் குடியிருப்புக்கு வெளியே ஓர் இரவுகூடத் தங்குவதில்லை.
சிறையில் அடைபட்டதால் இந்தச் சமூகக் கட்டுப்பாட்டை மூவரும் மீற வேண்டிய நிலை ஏற்பட்டது. இதையடுத்துப் பிரச்சினை வேறு திசையில் திரும்பியது. பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டிருந்த நரிக்குறவர்கள் யாதகிரி, சந்திரன், ஜெகதீசன் ஆகியோரைக் காண பல மாவட்டங்களில் இருந்தும் நரிக்குறவர் இன மக்கள் திரண்டு வந்தனர்.
அடிப்படை வசதியுடன், பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர். இதுவே, நரிக்குறவர் இன மக்கள் தங்கள் வாழ்க்கை முன்னேற்றத்துக்கு நடத்திய முதல் எழுச்சி மிக்கப் போராட்டமாக அமைந்தது.
சென்னை அருகே ஆவடி, டேங்க் பேக்டரி சாலை, காவலர் குடியிருப்பு அருகே, நரிக்குறவர் இன மக்கள்,1981இல் ஒரு குடியிருப்பு அமைத்திருந்தனர். அந்த இடத்தைக் காலி செய்ய வலியுறுத்தி நரிக்குறவர் இனத்தில் மூவரைச் சிறையில் அடைத்தது போலீஸ்துறை
சிறையில் அடைக்கப்பட்டிருந்த, 15 நாள்களும் பூந்தமல்லி பஸ்நிலையத்தில் தொடங்கி, சிறைச்சாலை வரை பேரணிகள் நடத்திக் கோரிக்கையை வலியுறுத்தினர். இது, அரசுக்கும், நீதித்துறைக்கும் பெரும் தலைவலியை ஏற்படுத்தியது. வெளியூர்களில் இருந்து வந்த நரிக்குறவர் இனமக்கள், தற்காலிகக் குடியிருப்பு அமைத்து, இரவு பகல் பாராது ஆர்ப்பாட்டங்களை நடத்திக் கோரிக்கையை வலியுறுத்தினர். அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறியது அரசு.

ஆவடியில் உள்ள நரிக்குறவர் குடியிருப்பைச் சேர்ந்த மாணவர்கள் மூவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்துத் தங்கள் குடியிருப்புக்கு அடிப்படை வசதிகள் தேவை எனக் கோரியிருக்கிறார்கள். இதை அடுத்து அவர்களது குடியிருப்புக்கு சிமெண்ட் சாலை போடப்பட்டிருக்கிறது. விரைவில் குடிநீர்க் குழாய் இணைப்பும் விரைவில் வழங்கப்பட இருக்கிறது
வேறு வழியின்றி, 15 நாள்களில் சிறையில் அடைபட்டிருந்தவர்களை விடுதலை செய்தது நீதிமன்றம். அன்று, சிறை வாசலில் பேரணியும், பாராட்டுக் கூட்டமும் நடத்தப்பட்டது. அப்போது, எதிர்க் கட்சியாக இருந்த தி.மு.க.வின் தலைவர் கருணாநிதி, நரிக்குறவர் இனமக்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவாகக் கட்டுரைகள் எழுதினார்.
முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர்., நடிகை ஜெயலலிதாவுடன் நரிக்குறவர் வேடமிட்டு ஆடிப்பாடும், ‘நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க’ என்ற சினிமா பாடலை முன்னிறுத்திக் கடுமையாக விமர்சித்திருந்தார்.
மேலும் படிக்க: நரிக்குறவர் குடியிருப்புக்கு ரோடு, தெரு விளக்கு வந்தது: அவர்கள் விருப்பப்படி கழிவறை வசதி செய்து தரப்படுமா?
இது போன்ற நெருக்கடிகளால் ஆவடியில் நரிக்குறவர் இனத்தவர் தங்கியிருந்த நிலத்தை அவர்களுக்கே தரச் சம்மதித்தது, தமிழக அரசு. அடிப்படை உரிமைக்காக நரிக்குறவர் இனமக்கள் நடத்திய முதல் போராட்டமே வெற்றி வாகை சூடியது. அதை உற்சாகமாகக் கொண்டாடியதுடன், தங்களைப் பழங்குடி பட்டியல் இனத்தில் சேர்க்கும் போராட்டத்தையும் தீவிரப்படுத்தினர். இதற்காக, தில்லி வரை சென்றனர். அப்போதைய பிரதமர் இந்திராகாந்தியை நேரில் சந்தித்து, பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தினர்.
இந்தப் போராட்டங்களைத் திட்டமிட்டு நடத்தியவர் அப்போதைய நரிக்குறவர் பேரவை அமைப்பாளர் வி.போதி தேவவரம். தமிழக நரிக்குறவர் இன மக்களை, அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திராகாந்தியிடம் நேரில் அறிமுகப்படுத்தி, அந்த இனத்தைப் பழங்குடியினப் பட்டியலில் சேர்க்கும் போராட்டத்தைத் தீவிரப்படுத்தினார். அதன் தொடர்ச்சியாகத் தடைகளைக் கடந்து, நரிக்குறவர்கள், பழங்குடியினப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது, கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் வாழ்நிலையில் புதிய மாற்றங்களுக்கு வழிவகுக்கும்.
Read in : English