ஆங்கிலத்தில் ‘loser’ என்ற சொல் ஒன்று உண்டு. (பலவற்றை) இழப்பவர், இழந்தவர் என்று பொருள். ஒருவரை இழிவுபடுத்தும் சொல்லாகவே அது பயன்படுத்தப்படும்.
அண்மையில் மறைந்த மதுரை ராஜனுக்கு அச்சொல் பொருந்துமா? 18, 19 வயதில் செயற்பாட்டாளனாகிறார். 40ல் நோய்வாய்ப்பட்டு படுக்கையில். 60ல் மரணம்.
இருபது ஆண்டுகளே அவர் களத்தில் இயங்கிய காலம். ஐ டி ஐ படித்துவிட்டு, உருப்படியாக எந்த வேலையும் செய்யாமல், புரட்சி, தலித் என்று பேசிக்கொண்டு திரிந்தாலும் பலரின் மதிப்பிற்கும், மரியாதைக்கும் உள்ளானார்,. ஒரு சிலர் அவரை இகழவும் செய்தனர் என்பதும் உண்மையே.
எது சரியான புரிதல் என்பது ஒரு புறமிருக்க,, பல்வேறு பொருளாதார சிக்கல்களுக்கு ஆளானார் என்பதையும் நாம் நோக்கலாம்.
நோய்வாய்ப்பட்ட பின் அவரை முழுநேரம் கவனித்துக்கொண்டதும், குடும்ப பாரத்தை முழுமையாக சுமந்ததும், இரு பிள்ளைகளையும் வளர்த்து ஆளாக்கியதும் அவரது மனைவிதான். அவர்களுக்கிடையே எப்போதும் ஒரு பதட்ட உறவே, ஆனால் ராஜனுக்கு எக்குறையும் அவர் வைக்கவில்லை.
எக்கோணத்திலிருந்து பார்த்தாலும் பொதுவான சமூக மதிப்பீட்டில் ராஜன் ஒரு ‘loser’ தான். ஆனால் தொடர் பின்னடைவுகளை அவர் பொருட்படுத்தவே இல்லை,. எப்போதும் சிரித்துக்கொண்டேதான் இருப்பார், ஆர்வலராக வலம் வந்தபோதும் சரி, பின்னர் படுக்கையில் வீழ்ந்தபோதும் சரி.
கடைசி 15 ஆண்டுகள் அவரால் பேசக்கூட முடியவில்லை. எல்லாம் படுக்கையில்தான். மற்றவர் உதவியின்றி ஒரு நொடி கூட அவர் வாழ்ந்திருக்க இயலாது. ஆனாலும் நாம் பேசுவதை அவரால் புரிந்து கொள்ள முடியும், பலமாகச் சிரிப்பார்.
சீனிவாசராவ் என்று மகனுக்கும், நிவேதிதா என்று மகளுக்கும் பெயரிட்டார். இருவருக்குமே யார் அந்த நபர்கள் எனத் தெரியாது. மகனை ஆகாஷ் என்று மாடர்னாக தாய் அழைப்பார்.
நான் அவர்களது பெயர்களின் பின்புலம் குறித்துக் கேட்டு, அவர்கள் வெட்கத்துடன் தலை குனிந்து கொண்டபோது, ஏதோ செய்தி சொல்ல முனைந்தேன். ராஜன் அப்போதும் சிரித்துக்கொண்டுதான் இருந்தார். ‘விடுய்யா…வெட்டி வேலை,’ என்று கூறுகிறார் எனப் புரிந்துகொண்டு, என் விளக்கத்தை நிறுத்தினேன். பிள்ளைகளும், ‘ஆளை விடுங்க சாமி’ என்று சொல்லாமல் சொல்லி, அங்கிருந்து ஓடிவிட்டனர்.
அவரை நலம் விசாரிக்கச் செல்லும் நண்பர்களின் கண்கள் குளமாகும், ஆனால் ராஜன் எதையும் நினைத்து வருந்தியதாக நினைவில்லை. அவர் பரிதாபப் படவேண்டியவர்தானா? என்னால் உறுதியாகச் சொல்ல இயலவில்லை. ஆனால் எனக்கும், அவருக்கு நெருக்கமாக இருந்த சிலருக்கும் அவர் மீது இருந்த அளவு கடந்த மரியாதையும், நட்பும் இறுதிவரை சற்றும் குறையவில்லை.
ஏதோ ஓர் அரங்கக் கூட்டத்திற்குப் பின்னர் அவராகவே வந்து தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டார். உற்சாகமாக, நகைச்சுவையாகப் பேசினார். அப்போது நான், அவரிடம், ”சரி, நீங்க என்ன செய்யப்போவதாக உத்தேசம்? எதிர்காலம் பற்றி யோசித்தீர்களா? ஐ டி ஐ படிச்சிருக்கீங்க…ஏதாவது கம்பெனியில் சேர்ந்தால் என்ன? நான் கேட்டுப்பார்க்கட்டுமா.?” எனக் கேட்டேன். அதற்கும் பதில் சிரிப்புத்தான். தெய்வீகச் சிரிப்பு என்று சொன்னாலும் மிகையில்லை!
தொடர்ந்து ராஜன், “நாளைக்கு என்ன நடக்கப் போவுதுன்னு நமக்குத் தெரியுமா? நினைக்கிறதெல்லாம் நடந்திடுமா என்ன? விடுங்க காம்ரேட்..” என்றார். என்ன பதில் சொல்வது?
அராத்து, அகந்தை, விவரமில்லாதவர் என்றெல்லாம் அவரை சித்தரிக்கலாம். நண்பர், மூத்த பத்திரிகையாளர், கல்யாணராமன், அடிக்கடி, சுட்டிக்காட்டுவதைப் போல, ராமநாதபுரத்தில் ஐஸ் குச்சி விற்பவர் ஒருவரை ராஜன் மேற்கோள் காட்டுவார். அவர் மார்க்சீயம் அறிந்தவர். அது தெரியாதவர்களை அலட்சியமாகப் பார்ப்பார். அடுத்த வேளை உணவுக்கு வழியில்லை என்ற நிலையிலும், சமூக அக்கறை இல்லாதவர்களையும், மார்க்சீயத்தின் மேன்மை அறியாதவர்களையும், “என்ன மனுசன்யா நீ.” என்ற ரீதியில் தான் அந்த ஐஸ் குச்சி விற்பவர் இழிவாகப் பார்ப்பார்.
சிவகங்கையில் இருந்த ஒரு தொழுநோய்ப் பிச்சைக்காரரைப் பற்றியும் ராஜன் நினைவுகூர்வார். “மாம்ஸ்..அவ்ரு படுத்துகிட்டேதான் இருப்பார் பெரும்பாலும். அவருக்கு அருகே ஒரு குவளை இருக்கும். அவரைத் தாண்டிச் செல்பவர்களில் சிலர் ஏதோ பரிதாபப்பட்டு ஏதாவது சில்லறை போட்டுவிட்டுச் செல்வார்கள்..ஆனால் ஒருவரையும், ’அம்மா, அய்யா, பிச்சை போடுங்க,’ன்னு கேக்க மாட்டார். எவ்வளவு சேர்ந்தாலும் சரிதான், அதில்தான் அவர் வாழ்க்கை ஓடியது. அதில ஒரு கம்பீரம் இருந்தது, எனக்குப் பிடிக்கும்…”
ஐஸ் குச்சிக்காரர், பிச்சைக்காரர் இருவருடைய மனநிலைக்கும் ராஜனின் பார்வைகளுக்கும் அதிக வேறுபாடில்லை எனலாம். அத்தகைய அணுகுமுறையே என் போன்றோரை அவர் பால் ஈர்த்தது.
நக்சல் குழுக்களுடன் நெருங்கிய தொடர்பிலிருந்தார். ஆனால் எதிலும் அவர் உறுப்பினராகவில்லை. அவ்வப்போது ஏதாவது பணிகள் செய்வார், அவ்வளவுதான். மற்றபடி அவர்கள் மீது கடுமையான விமர்சனமும் இருந்தது. அதனை வெளிப்படுத்தவும் அவர் தயங்கியதில்லை. அதனாலேயே அவர் அத்தகைய தோழர்களிடமிருந்து அந்நியமானார்.
அவரைக் கவர்ந்த ஒருவர் தென் தமிழகத்தைச் சேர்ந்த நமஸ். அவர் ஒரு கள[ப் போராளி, துப்பாக்கி எல்லாம் செய்யக் கூடியவர். மிக எளிமையானவர், இனிமையானவர். அணுகுமுறை சரியோ தவறோ, நேர்மை, எளிமை, அர்ப்பணிப்பு அவசியம் என்பதே ராஜனின் கருத்து.
மற்ற பல தோழர்களின் ஆர்ப்பரிப்பு, அலப்பறை, வீண் ஜம்பம் அவருக்குக் கட்டோடு பிடிக்காது. அவர்களும் ராஜனை எரிச்சலுடன் பார்த்தனர், அவரை எதிலும் கலந்தாலோசிப்பதும் இல்லை.
அதே போலத்தான் தலித் அமைப்புக்கள், தலைவர்களுடனான அவரது உறவும். தான் உடன்படும் முன்னெடுப்புக்களுக்கு உதவுவார், ஆர்வமாகக் கலந்து கொள்வார். அவரது எழுத்து வன்மை பலருக்கும் பயன்பட்டது.
ஜப்பானின் புராகு என்றழைக்கப்படும் ஒரு பிரிவினரினர் உண்டு. ஒரு காலத்தில் துப்புரவுத் தொழிலாளர்களர்களாகப் பணியாற்றியவர்கள், காலம் மாறியது, ஆனால் அவர்கள் தொடர்ந்து ஒதுக்கப்பட்டே வந்தனர். அநீதியும் இழைக்கப்பட்டு வந்தது.
அவர்களது அவல நிலை குறித்து மதுரையைச் சேர்ந்த அமைப்பொன்று ஆர்ப்பாட்டம் நடத்தியபோது, ராஜன் ஆங்கிலத்தில் கிடைத்த சில தரவுகளைத் தொகுத்து, தமிழில் சிறிய கையேடாக்கினார்.
இந்த ஆர்ப்பாட்டம் நடந்து பல மாதங்களுக்குப் பிறகு, ராம.திருஞான சம்பந்தம் தினமணி ஆசிரியராகிறார். அவர் என்னை அழைத்து, ’உனக்குத் தெரிந்த ஆர்வலர்களை அறிமுகப்படுத்துய்யா,’ எனக் கேட்டுக்கொள்ள, நானும் ராஜனிடம் சொல்ல, அவர் புராகு குறித்த கட்டுரை ஒன்றை அனுப்பிவைத்தார். பிரசுரமாகியது.
சில நாட்கள் கழித்து சம்பந்தம் என்னை அவரது அலுவலகத்திற்கு வரச் சொன்னார். நானும் ராஜனுக்கோ/எனக்கோ நல்லதொரு வாய்ப்பு வருகிறது என்று குதூகலத்துடன் சென்றால், அங்கே காத்திருந்ததோ அதிர்ச்சி.
ராஜன் எழுதிய பிரசுரம், உடன் அந்த மதுரை அமைப்பின் நிறுவனரிடமிருந்து கண்டனக் கடிதம், இரண்டையும் என் முன் வீசினார் சம்பந்தம். அப்பிரசுரத்தைத் திருடிவிட்டார் ராஜன் என்று ,குற்றச்சாட்டு. அப்படியே ஒரு வரி பிசகாமல் அனுப்பியிருக்கிறார் ராஜன்.
சம்பந்தத்திற்கு கடுங்கோபம், நான் அவரிடம் அந்த அட்டையில் எழுதப்பட்டிருக்கும் கட்டுரையே ராஜனுடையதுதான், எனக்குத் தெரியும் என்று சொல்லிப் பார்த்தேன். ’தினமணிக்கு அனுப்பியபோது அதையும் தெரியப்படுத்தியிருக்க வேண்டாமா, எங்களுக்கல்லவா தர்மசங்கடம்…” பொரிந்து தள்ளிவிட்டார் மனிதர். தினமணி மன்னிப்பு கேட்கவேண்டியதாயிற்று.
இப்பிரச்சினை எழாமலிருந்திருந்தால் தொடர்ந்து பல வாய்ப்புக்கள் ராஜனுக்குக் கிடைத்திருக்கும். நாசமாக்கினார் அந்த மதுரை பாதிரி.
பின்னர் இன்னொரு முக்கிய தலித் தலைவர் ராஜனுக்கு உதவ முன் வந்தார். அவரது தேர்தல் அலுவலக மேலாளராகப் பணியாற்றச் சொன்னார். ஆனால் ஓரிரண்டு நாட்களிலயே ஊர் திரும்பினார் ராஜன். முழு விவரம் தெரியவில்லை.
இப்படித்தான் கைக்கெட்டியது வாய்க்கெட்டாமல் போகும், அல்லது இவர் துப்பிவிடுவார்.
எனக்கொருமுறை பாரதியார் கட்டுரைத் தொகுப்பினை பரிசாக அளித்தார். அதில் நமக்கு உணவளிக்கும் ரட்சகர்களாகிய சூத்திரர்களுக்கு காணிக்கை எனக் கூறப்பட்டிருக்கும். என்னை நிமிர்ந்து உட்காரவைத்தது அச் சொற்றொடர். ஒரே மூச்சில் படித்து முடித்தேன். தொடர்ந்தும் ராஜன் பல்வேறு மேற்கோள்களை அள்ளிவிடுவார். நான் பிரமித்துப் போவேன்.
தலித் சமூகத்தினரிடையே உள்ள முரண்பாடுகளையும் ஆழமாக அலசுவார். அம்மக்களுக்கிழைக்கப்படும் குற்றங்களைத் தடுக்கவென உருவாக்கப்பட்ட காவல் துறையே ஒதுக்கப்பட்டதொரு பிரிவு என அவர் சொல்லிதான் எனக்குத் தெரியும்.
அவரது உதவியில் இண்டியன் எக்ஸ்பிரசில் கட்டுரைகள் சில எழுத முடிந்தது. பின்னர் பிபிசி தமிழோசையிலும் தலித் நிலை குறித்து பெட்டகத் தொடர்.
முஸ்லீம் ஆர்வலர்கள் வேட்டையாடப்பட்டபோது அவர்களுக்காக பல வழிகளிலும் உதவி செய்தார். ஒரு கட்டத்தில் அவர்களிடமிருந்தும் ஒதுங்க்கினார்.
இப்படித்தான் எதிலும் நிலை கொள்ளாமல், கால் பாவாமல். இதனிடையே திருமணம் வேறு. ’உனக்கு சரி வராது, வேண்டாம்,” எனச் சொல்லிப் பார்த்தேன். அவர் கேட்கவில்லை.
விளைவு. ராஜன், அவரது மனைவி, பிறந்த இருவர், அனைவர்க்குமே பல்வேறு பிரச்சினைகள். அவற்றோடுதான் காலத்தை ஓட்டினர்.
ஆனால் அவரிடம் ஓரளவேனும் புழங்கிய நேரத்தில் மற்றவர்க்கு தயங்காமல் தாராளமாக உதவுவார், ஒரு முறை நான் கேட்காமலேயே எனக்கும்.
ராஜனுக்கு நெருக்கமான ஒருவர் அதிகமாக மது அருந்தி உயிரை இழந்தார். அப்போது ராஜனும் உடனிருந்தார். குற்ற உணர்வில் இவரும் மதுவில் வீழ்ந்தார்.
அவருக்கு சிகிச்சை செய்து வந்த முற்போக்கு மருத்துவர் ஒருவர், “தண்ணி கூடப் பரவால்ல..சிகரெட்டை நிறுத்துங்க, இல்ல குறைக்கவாவது செய்யுங்க,” என மன்றாடிப் பார்த்தார். யார் சொல்லி எதைக் கேட்டார் ராஜன். பொறுப்பற்ற மனிதர்.
இறுதியில் ‘ஸ்ட்ரோக்’, அவ்வளவுதான். வாழ்க்கை முடிந்தது. அவருக்காக வருந்துவதா, அவரது மனைவி, மக்களுக்காகவா? நான் எதுவும் செய்ய முடியவில்லை என்றா?
