Read in : English
சமீபத்தில் 30 ஆண்டுகளாக என் அண்டை வீட்டுக்காரராக இருக்கும் ஒருவர் என் வீட்டுக்கு வந்து கோயில் பிரசாதம் போலத் தெரிந்த ஒரு பொருளை என்னிடம் தந்தார். குடும்பத்துடன் வாரணாசி உட்பட பல இடங்களுக்குக் குடும்பத்துடன் ஓர் ஆன்மீகச் சுற்றுலா சென்று வந்ததாகவும், அப்படியே அயோத்திக்கும் சென்றதாகவும் அவர் கூறினார்.
என் அண்டைவீட்டுக்காரர் வழமையான தமிழ் அல்லது நீங்கள் சொல்ல விரும்பினால், திராவிட அரசியலுணர்வு கொண்டவர். அப்பட்டமான பிராமண எதிர்ப்புணர்வை வெளிக்காட்டுபவர். கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது, ஓர் இடதுசாரி (கம்யூனிஸ) இளைஞர் அமைப்புச் செயற்பாட்டாளராக இருந்தவர்.
இப்போது அயோத்தி ராமர் கோயில் ஒரு சகஜநிலைக்கு வந்துவிட்டது போலத் தோன்றுகிறது, அவரது பார்வையிலும் கூட. பிரியத்துக்குரிய ஒரு தெய்வத்தின் புனிதத்துக்குரிய ஆலயம் அது.
அந்தக் கோயில் திட்டம் ஓர் இனத்தை வேண்டுமென்றே அச்சுறுத்தி, குறியீட்டுரீதியாக மிருகத்தனமாகக் கொடுமைப்படுத்திய செயலை நினைவுப்படுத்துகிறது என்று அந்த அண்டை வீட்டுக்காரர் கருதவில்லை.
இதெல்லாம் அவருக்கு மறந்துப் போய்விட்டது; அல்லது மரத்துப் போய்விட்டது. பாபர் மசூதியை இடித்தது எல்லாம் இறந்தகாலச் சம்பவம். அவர் அதைக் கடந்து சென்றுவிட்டது போலத் தோன்றியது.
கம்யூனிசம் என்னும் பொதுவுடமைத் தத்துவம் உச்சநிலையில் இருந்த போது, அதன் தலைவர்கள் ஒருவருக்கொருவர் தோழமையற்ற முறையில் மோதிக்கொண்டனர்
பாபர் மசூதியை இடித்த நிகழ்வின் போது நான் கல்லூரியில் இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்தேன். உலகம் முழுவதும் பரபரப்பு தொற்றிக் கொண்டிருந்த காலகட்டம் அது. ரஷ்யாவில் அதிகாரத்தில் இருந்த கோர்பசேவ் சோசலிச உலகத்தில் மாற்றங்கள் செய்து கொண்டிருந்தார். சித்தாந்தங்கள் கேள்விக்குள்ளாகிக் கொண்டிருந்தன.
அவற்றின் நம்பகத்தன்மையும், மதிப்பும் சந்தேகக் கணைகளுக்காளாகிக் கொண்டிருந்தன. இந்தியாவில் ஒருபக்கம் காங்கிரஸ் பலகீனமாகிக் கொண்டிருக்க, மறுபக்கம் மாற்று அரசியல் சக்திகள் பலமாகிக் கொண்டிருந்தன.
பரபரப்பான போஃபோர்ஸ் ஊழலும், விபி சிங் அரசியலும் இந்தியாவை அடுத்த காலகட்டத்திற்குக் கொண்டு சென்றன. இந்தச் சூழலில் பாஜகவும் மேலெந்துவரப் போட்டிப் போட்டது.
மேலும் படிக்க: கம்யூனிஸ்ட் தோழர் “ஜனசக்தி” வி. ராதாகிருஷ்ணனுக்கு 101 வயது!
மண்டல் கமிஷன் என் கல்லூரியில் உத்வேகமான உணர்ச்சிப்பூர்வமான விவாதத்தைக் கிளப்பி விட்டிருந்தது. இத்தனைக்கும் அந்தக் கமிஷனின் பிரதானமான அம்சம் தமிழ்நாட்டில் பல தசாப்தங்களுக்கு முன்னமே நடைமுறைப்படுத்தப் பட்டிருந்தது.
நானும் ஓர் இடதுசாரி மாணவர் அமைப்பில் செயற்பாட்டாளராக இருந்தேன். பாபர் மசூதி இடிப்புக்கு ஒருவாரம் கழித்து, அந்த அமைப்பு சென்னையின் பிரதானமான பகுதியான பாரிமுனையில் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்தத் திட்டமிட்டிருந்தது. அந்த நாட்களில் சென்னையின் பிரதானமான பகுதியில் எதிர்ப்பு ஊர்வலங்களும் போராட்ட நிகழ்வுகளும் அனுமதிக்கப்பட்டன.
அந்த அமைப்பில் எனது பங்களிப்பு அடிமட்டத்தில் கட்டமைக்கும் பணியை விட அதிகமான அளவுக்கு அறிவூப்பூர்வமானதாக இருந்தது. ஆயினும் நான் மசூதி இடிப்பு விசயத்தில் மாணவர்களை ஒன்றிணைத்து மனிதச் சங்கிலிப் போராட்டக் களத்திற்குக் கொண்டுவரும் முயற்சிகளில் ஈடுபட்டிருந்தேன். இரண்டு இஸ்லாமிய கல்வி நிறுவனங்களிலிருந்து என்னால் மாணவர்களைக் கொண்டுவர முடிந்தது. எனக்குத் தெரிந்த இந்து மாணவர்கள் இந்த விசயத்தில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை; இவ்வளவுக்கும் அவர்களும் இடதுசாரி, திராவிட இலட்சியங்களை அடிக்கடி ஆர்வமுடன் ஆதரித்தவர்கள்தான். ஆனால் பாபர் மசூதி விவகாரம் அவர்களை ஒன்றும் பாதித்திடவில்லை.
முடிவில் நான் திரட்டியிருந்த இஸ்லாமிய மாணவர்கள் மட்டுமே மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் கலந்துகொண்டனர். நிஜத்தில் பொதுவுடமைவாதத் தோழர்கள் (கம்யூனிஸ்ட்டுகள்) அரிய பெரிய முயற்சிகளைச் செய்யாமல் விட்டுவிட்டார்களோ என்று நான் சந்தேகப்பட்டேன். என் முயற்சிகளைப் பார்த்து தலைமை புன்னகைத்தது; ”உங்கள் மனிதச் சங்கிலி துண்டுச் சங்கிலி” என்று நக்கலடித்தது.
அதற்குப்பின் நான் அரசியல் செயற்பாட்டிலிருந்து விலகினேன். உலகம் முழுவதுமான மார்க்சிச அரசியல்வாதிகள் மற்றும் தலைவர்கள் மீது எனக்குள் ஆழமானதோர் ஏமாற்ற உணர்வு ஏற்பட்டது. இந்த உலகில் ‘தோழர்’ என்ற கருத்தாக்கம் ஒன்றுதான் உருப்படியான விசயமாக எனக்குத் தோன்றியிருந்தது.
இன்றளவும் நான் அதை நம்புகிறேன். என்றாலும் மார்க்சிச உலகில் ‘தோழர்’ என்ற அந்தக் கருத்தாக்கம் பொய்மையாகத் தோற்றமளித்தது. நான் சந்தித்த மார்க்சியவாதிகள் என்று தங்களைச் சொல்லிக் கொண்டவர்கள், என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிற சில பூர்ஷ்வாக்களாகவே இருந்தார்கள்.
நான் சந்தித்த மார்க்சியவாதிகள் என்று தங்களைச் சொல்லிக் கொண்டவர்கள், என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிற சில பூர்ஷ்வாக்களாகவே இருந்தார்கள்
இடதுசாரி அரசியலோ அல்லது வேறுவகையான அரசியலோ மனிதர்களை கொரில்லாக்களாக அல்லாமல் நல்ல மனிதர்களாக மாற்றிவிடாது என்று நான் உறுதியாக நம்பினேன். சிம்பன்ஸிகளை விடவும், கொரில்லாக்களை விடவும், காடுகளின் ஹிப்பிகளாகப் போற்றப்படும் போனபோஸ்கள் மீது நான் அனுதாபம் கொண்டேன்.
கம்யூனிசம் உச்சத்தில் இருந்த போது, அதன் தலைவர்கள் ஒருவருக்கொருவர் தோழமையற்ற முறையில் மோதிக்கொண்டனர். இதெல்லாம் நீண்ட காலமாகத் தெரிந்த விசயம்தான். இப்போது மக்கள் தாங்களே அதை விரும்பவில்லை என்பதைக் காட்டியுள்ளனர்.
மேலும் படிக்க: சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜக வெற்றி: இந்தியா எங்கே போகிறது?
துரதிர்ஷ்டவசமாக, முதலாளித்துவம் முழுமையானதாக இல்லாவிட்டாலும் இயல்பான ஒரு போக்காக மாறிவிட்டது. சீனா தன் உண்மையான நிறத்தைக் காட்டி விட்டது. அந்தத் தேசத்திற்குச் சேவை செய்தவரை கம்யூனிஸ சித்தாந்தம் அங்கு செல்லுபடியானது.
இந்தியாவிலோ அல்லது வேறு இடத்திலோ ஒரு மாற்று அரசியலுக்கான, அதிக இலட்சியவாதத்தன்மையான அரசியலுக்கான நம்பிக்கை ஏதும் இல்லாமலே முப்பது ஆண்டுகள் கடந்துவிட்டன. சீனப் பொருளாதாரத்தின் வெற்றி கம்யூனிசம் இல்லாத அந்த எண்ணத்தை வலுப்படுத்தியிருக்கிறது.
இடதுசாரிக் கட்சிகள் மற்ற மாநிலங்களைப் போலவே தமிழகத்திலும் சுயமிழந்த நிழல்களாக மட்டுமே உலாவுகின்றன. 1980-களின் பிற்பகுதியிலும் 1990-களின் முற்பகுதியிலும் தமிழ்நாட்டில் ஒவ்வொரு கிராமத்தின் பிரதானப் பேருந்து நிறுத்தம் கட்சிக் கொடிகளின் சரணாலயமாக இருந்தது. அங்கே சிறிதுகாலம் செங்கொடிகள் படபடத்து அசையும் காட்சி சர்வசாதாரணமாக இருந்தது.
கம்யூனிஸ்ட் கட்சிகள் முன்னோக்கி எடுத்துவைத்த அந்தச் சுருக்கமான ஒரு அடிக்கு அப்புறம் பத்து அடிகள் பின்னோக்கி நகர்ந்து விட்டன. இன்று இடதுசாரிக் கட்சிகள் தமிழ்நாட்டுத் தேர்தலில் போட்டியிட்டால், ‘நோட்டாவை விட குறைவான வாக்குகளையே அவை பெறும்.
மீண்டும் என் அண்டை வீட்டுக்காரரிடமே வருவோம்.
ராமர் கோயில் திட்டம் அவருக்குள் மத உணர்வுகளை உருவாக்கி வந்திருக்கிறது. கோயில் திறப்புவிழா தேசிய விழாவாக மாறியிருக்கிறது. அல்லது தேசிய விழாவாக ஆக்கப்பட்டிருக்கிறது.
Read in : English