Site icon இன்மதி

சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜக வெற்றி: இந்தியா எங்கே போகிறது?

உததரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்தியநாத்..Photo Credit : Yogi Adityanath twitter Page.

Read in : English

அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களின் முடிவுக்குப் பின்னர், சமூக நல்லிணக்கத்தை விரும்புவோரையும், முற்போக்கு சிந்தனையாளர்களையும் ஆட்டிப் படைக்கும் கேள்வி நாம் எங்கே செல்கிறோம் என்பதுதான். அவர்கள் அனைவரும் கலங்கிப்போயிருக்கின்றனர். மகாகவி பாணியில் , என் செய நினைத்தாயடா காந்தி-நேரு கண்ட எம் பாரதத்தை எனப் புலம்புகின்றனர்.

உத்தரப் பிரதேசத்தில் மட்டும் பாஜக தோற்கடிக்கப்பட்டுவிட்டால், மோடி-யோகி கூட்டிற்கு ஏற்படும் பின்னடைவு இரண்டாண்டுகள் கழித்து நடைபெறவிருக்கும் அகில இந்திய நாடாளுமன்றத் தேர்தல்களிலும் எதிரொலிக்கக் கூடும். மதச்சார்பின்மை மீட்டெடுக்கப்படக்கூடும், குகைப் பயணம் தடைபடக்கூடும் எனக் கூறப்பட்டது. ஆனால், எல்லாம் பகல் கனவாகிவிட்டது.

பாஜக கூட்டணி மொத்தம் 273 தொகுதிகளில் வென்றிருக்கிறது, பாஜக தனித்து 225. இது ஒன்றும் அமோக வெற்றியன்றுதான், ஆனால் முதல்வர் யோகி ஆதித்யநாத் குறித்து பல்வேறு விமர்சனங்கள், கோவிட்டில் பலர் இறந்தது, ;பொதுவாக மேல் சாதியினரின் அடாவடி, மோடி ஆட்சியில் பொருளாதாரத் தேக்கம் எல்லாமாகச் சேர்ந்து பாஜக அரசுக்கு முடிவுகட்டும் என்று பலர் எதிர்பார்த்துக்கொண்டிருந்த நேரத்தில், இத்தகைய பின்புலத்தில் தற்போதைய வெற்றி என்பதால் வலதுசாரிகள் ஆனந்தக் கூத்தாடுவதிலும் தவறில்லை. அண்டை மாநிலமான உத்தரகாண்டிலும் பலரது கணிப்பினைப் பொய்ப்பித்து பாரதிய ஜனதா பெரும் வெற்றி பெற்றிருக்கிறது.

இந்தியாவிலேயே ஆகப் பெரிய மாநிலம் உத்தரப் பிரதேசம். அங்கிருந்து நாடாளுமன்றத்திற்கு 85 பேர் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இந்தி பேசும் வடபகுதியின் இதயமாகக் கருதப்படுவது இது . எனவே இப்போதைய

வெற்றி அடுத்த இரண்டாண்டுகளில் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத்தேர்தல் முடிவுகளுக்கு நிச்சயம் கட்டியம் கூறுகிறது.

நலத் திட்டங்கள் பலவற்றால், குறிப்பாக விவசாயிகளுக்கு நேரடியாக நிதி உதவி வழங்குவது உள்ளிட்டவையால், பயனடைந்தோர் பலர். அதனாலேயே பெருமளவில் பெண்களும் தலித்துக்களும் பாஜகவை ஆதரித்திருக்கின்றனர். இன்னமும் ஏழ்மையின் கோரப்பிடியில் தான் அம்மாநிலம் சிக்கித் தவிக்கிறது. மோடி ஆட்சியிலும் பொருளாதார ரீதியில் சொல்லிக்கொள்ளும்படியான முன்னேற்றம் எதுவும் இல்லை. ஆயினுங்கூட ஆண்டுக்கு ரூ 6,000 தவறாமல் வங்கிக் கணக்கில் சேர்ந்து விடுவதையே மக்கள் ஏதோ வரப்பிரசாதமாகக் கருதியிருக்கக்கூடும் என ஊகிக்கப்படுகிறது.

இன்னொருபுறம், முந்தைய சமாஜ்வாடி கட்சி ஆட்சியில் அராஜகம் தலைவிரித்தாடியது. அது குண்டர்களின் ஆட்சியே. ஆனால், ஆதித்ய நாத்தின் கீழ் காவல் நிலையங்கள் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்கப்பட்டன எனவும் சிலர் வாதிடுகின்றனர்.

ஆனால், கடந்த ஐந்தாண்டுகளில் தலித்துக்களுக்கு எதிராகவும் முஸ்லிம்களுக்கு எதிராகவும் பல்வேறு கொடுமைகள் நிகழ்ந்தன என்றால், அத்தகைய சம்பவங்களைத் தவிர்த்துப் பார்க்கையில், . மக்கள் பொதுவாக நிம்மதிப் பெருமூச்சுவிடமுடிந்தது எனவும் வாதிடப்படுகிறது.

உ..பி.யின் மிகப் பின்தங்கிய பகுதிகளில் பெரும் வெற்றியடைந்திருக்கிறது பாஜக. மாநிலமே மிகப் பின்தங்கியது அதிலும் மிக மிகப் பின் தங்கிய பகுதிகளென்றால் எப்படியிருக்கும் என கற்பனை செய்துகொள்ளலாம். அங்கு வாழும் மக்களில் பெரும்பான்மையினர் மோடி-யோகிக்கு ஆதரவளித்திருக்கின்றனர் என்றால் அவர்கள் தங்கள் ஏழ்மையினை, தங்கள் பிராந்திய பொருளாதார சீர்குலைவினை அதிகம் பொருட்படுத்தவில்லை என்பதுதான் பொருள்.

தேர்தலுக்குப் பின் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் பலர் அயோத்தியில் ராமருக்கு ஆலயம் எழுப்புவதும் மிக அவசியமான ஒன்று, தங்கள் உணர்வுகளை ஆழமாக பாதிக்கிறது, ஆலயம் கட்டுவதனால் இறைவனருளைப் பெறமுடிகிறதே என்றெல்லாம் கூறியிருக்கின்றனர். அதாவது வசதிபடைத்திருந்தாலும் சரி, மிக வறியவர்களாயினும் சரி, ஸ்ரீராமன் மீது அப்படிக் கரைபுரண்டோடும் பக்தி.

குறிப்பாக ஏழைகள், ஜெய் ஸ்ரீராம் சொல்ல முடிந்தால் போதும், அதுவே மோட்சம், பட்டினி கிடந்தாலும் பரவாயில்லை என நினைக்கின்றனர் போலும்.

சில மாதங்களுக்கு முன் ’வைரலாகிய’ ஒரு வீடியோவில், எங்களுக்கு வேலை கிடைக்காவிடினும் பரவாயில்லை, பட்டினி கிடந்தாலும் சரி, அயோத்தியில் ராமருக்கு ஆலயம் வேண்டும் என சிலர் முழங்குவர். அது பரவலாக வடபுலத்தாரின் சிந்தனையைப் பிரதிபலிப்பதாகக்கூட எடுத்துக்கொள்ளலாம். இவ்விஷயத்தில் முக்கியமாகக் கவனிக்கவேண்டியது என்னவெனில் ஜெய் ஸ்ரீராம் என்பது முஸ்லிம்களுக்கு எதிரான போர் முழக்கமே. பூடகமாகச் சொல்கின்றனர் அவ்வளவே.

முகலாயப் படையெடுப்பு, குறிப்பாக ஔரங்கசீப் ஆட்சி, பின்னர் நாடு விடுதலை பெற்ற கட்டத்தில் நிகழ்ந்த பரவலான வன்முறைக் கோரம், இவற்றின் விளைவாக வடக்கே முஸ்லிம்களுக்கு எதிரான உணர்வுகள் நீறு பூத்த நெருப்பாய் எப்போதுமே கனன்று கொண்டிருக்கும். தொடர்ந்து காங்கிரஸ் ஆட்சியில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளைத் திருப்திப்படுத்தும் பல்வேறு முட்டாள்தனமான நடவடிக்கைகள் வேறு பரந்துபட்ட மக்களை வெறுப்படைச் செய்திருக்கக் கூடும்.

முதலில் அத்வானி, பின்னர் நரேந்திர மோடி, ஆர் எஸ் எஸ் தலைவர்கள் இப்படி எல்லோருமாகச் சேர்ந்து, கனன்றுகொண்டிருந்த நெருப்பை விசிறிவிட, மண்ணெண்ணெய் ஊற்ற, ஒட்டு மொத்த சமூகத்தினையே தீக்கிரையாக்கும் ஊழித்தீயாகிக் கொண்டிருக்கிறது இஸ்லாமிய வெறுப்பு.

அத்தகைய பகை உணர்வுகள் காரணமாக மோடியின் அகந்தை, தலித்துக்கள் மீதான தொடர் வன்முறை, இம்மென்றால் சிறைவாசமெனும் அதிகார துஷ்பிரயோகம். பொருளாதாரப் பின்னடைவுகள் அனைத்துமே மறக்கப்படுகின்றன என்றுதான் சொல்லவேண்டும்.

உத்தரப்பிரதேச வெற்றி அடுத்த இரண்டாண்டுகளில் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத்தேர்தல் முடிவுகளுக்கு நிச்சயம் கட்டியம் கூறுகிறது. காங்கிரஸ் மரணப்படுக்கையில். சோனியா காந்தி-ராகுல் காந்தி-பிரியாங்கா இவர்கள் எது செய்தாலும் வடக்கே இனி எடுபடுப்போவதில்லை, அவர்களை நம்பி மதச்சார்பின்மை என்ற அந்த உன்னதக் கோட்பாடும் தொடர்ந்து தோல்வியைத் தான் தழுவும்.

வடக்கு மட்டுமல்ல குஜராத், மகாராஷ்டிராவிலும் இந்து மேலாதிக்க சிந்தனைகள் தழைத்தோங்குகின்றன. அசாமிலும் அதே நிலைதான், மேற்குவங்கத்தில் மம்தா, பாஜக அங்கேயும் வளர்ந்துவிட்டது, தன் ஆட்சிக்கும் ஆபத்து ஏற்படக்கூடும் என்பதால் மதவாதத்திற்கு எதிரானவராகக் காட்டிக்கொள்ள ஆர்ப்பரிக்கலாம், ஆனால் அவர் இன்னுமொரு சந்தர்ப்பவாதி. அவர் இந்து மேலாதிக்க சக்திகளை உறுதியுடன் எதிர்க்கப்போவதில்லை.

மதச்சார்பின்மை நிலைகொண்டுவிட்டதாக நாம் கருதும் தென் மாநிலங்களுக்கு மொத்தமாக நாடாளுமன்றத்தில் 130 இடங்கள் கூட இல்லை.

மதச்சார்பின்மை நிலைகொண்டுவிட்டதாக நாம் கருதும் தென் மாநிலங்களுக்கு மொத்தமாக நாடாளுமன்றத்தில் 130 இடங்கள் கூட இல்லை. இதில் கர்நாடகத்திற்கே 28 இடங்கள் அங்கும் பாஜக வேரூன்றிவிட்டது. ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் பாஜகவிற்கு அதிகம் செல்வாக்கில்லை என்றாலும் அம்மாநிலங்களின் முக்கிய கட்சிகள் இந்துத்துவாவை தீவிரமாக எதிர்ப்பதில்லை. அனுசரித்தே போகும், தேவையெனின் அவர்களே முன்னெடுப்பார்கள்.

எஞ்சுவது தமிழகமும் கேரளமும்தான். அதிலும் திமுகவை நம்பமுடியாது கோத்ரா கொடுமைகளின்போது அது அந்த மாநிலப் பிரச்சினை என ஒதுங்கியவர் கருணாநிதி. ஸ்டாலினும் இப்போதைய நிலையில் பாஜகவிற்கு எதிராகக் காட்டிக்கொள்ளலாம், ஆனால் காங்கிரசிற்கு எதிர்காலம் இல்லை என்பது தெளிவாக, அவரும் மெல்ல மெல்ல மோடி பக்கம் சென்றுவிடுவார். வெறும் 20 இடங்களுடைய கேரளம் மாத்திரம் என்ன செய்துவிடமுடியும்?

எப்படியும் இடதுகளுக்கு இந்திய அரசியல் வெளியில் என்ன இடமிருக்கிறது? மேற்கு வங்கத்தில் அவர்களது அலங்கோல ஆட்சியின் காரணமாகவே மக்களின் நம்பிக்கையினை இழந்து ஓரங்கட்டப்பட்டார்கள். ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் முக்கிய பங்கிருந்தது, மன்மோகன் சிங் அரசும் அவர்களது ஆலோசனைகளுக்கு செவி மடுத்து வந்தார். நூறு நாள் வேலை வாய்ப்புத் திட்டம், தகவலறியும் உரிமைச் சட்டம் என உருப்படியான நடவடிக்கைகள்.

அமெரிக்காவுடனான அணு ஒப்பந்தத்தை எதிர்ப்பதில் பிடிவாதம் காட்டி விலகியதில், மன்மோகன் அரசின் பாதையே மாறியது, மக்களுக்கான அரசு என்பது மாறி அரசியல்வாதிகள் கொள்ளை அடிக்க என்றாக, தான் பரம யோக்கியன் என மோடி சொல்லிக்கொண்டது எடுபட, மதச் சார்பின்மை குடை சாய்ந்ததுதான். இன்னமும் எழவே இல்லை.

உண்மையையும் பொய்யினையும் வேறுபடுத்திப் பார்க்கத் தெரியாத மக்களை நம்பியே சர்வாதிகாரம் என்பார் ஹானா ஆரெண்ட் என்ற புகழ்பெற்ற சிந்தனையாளர்.

காங்கிரசிற்கு எதிர்காலம் இல்லை, அனைத்து மக்களாட்சி மாண்புகளுக்கெதிராக ஆர்வலர்கள், அறிஞர்கள் காரணம் ஏதுமின்றி சிறைபடுத்தப் படுகின்றனர், நீதிமன்றங்களும் மென்று விழுங்குகின்றன, கல்விக் கூடங்கள் பிற்போக்கு சிந்தனைகளின் விளைநிலமாகின்றன, பகுத்தறிவிற்கு இடமே இல்லை, முஸ்லிம்களுக்குதானென்றாகி வருகிறது. நேரு கண்ட இந்தியா நம் கண் முன்னே சுக்கு நூறாகிக்கொண்டிருக்கிறது.

உண்மையையும் பொய்யினையும் வேறுபடுத்திப் பார்க்கத் தெரியாத மக்களை நம்பியே சர்வாதிகாரம் என்பார் ஹானா ஆரெண்ட் என்ற புகழ்பெற்ற சிந்தனையாளர்.

நாஜிகளாயினும் சரி கம்யூனிஸ்ட் கட்சிகளாயினும் சரி எவரும் சிந்திக்க அனுமதிக்கப்படுவதில்லை. கட்சியே சிந்திக்கும் பொறுப்பினை முழுமையாக சுவீகரித்துக்கொள்கிறது, மாய்மாலங்கள் வழியே ஆள்வோர் உண்மைக்கும் பொய்க்குமிடையேயான வேறுபாடுகளை சிதைத்துவிடுகின்றனர். மேற்சொன்ன இரு ஆட்சி முறைகளிலும் துப்பாக்கிக்குப் பயந்து சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளயாக மாறவேண்டிய நெருக்கடி குடிமக்களுக்கு,

ஆனால் ஜனநாயகம் என்ற பெயரிலும் மக்களை மூளைச் சலவை செய்யமுடியும் என்பதையும் நாம் கண்டு வருகிறோம். இந்தியாவில் ஆர் எஸ் எஸ் வகையிலான மூளைச் சலவையின் உக்கிரத்தில் நாம் இதுவரை அடைந்திருக்கும் நல்லிணக்க நாகரிகத்தைத் தொலைக்கப் போகிறோம். சாதியின் பெயரால் மதத்தின் பெயரால் ஒருவரை அடித்துக் கொல்லப்போகிறோம்.

குருஷேத்திர போருக்குப் பின் எப்படி யாதவ குலத்தார் தங்களுக்குள் சண்டையிட்டு முற்றிலுமாக அழிந்தனரோ அது போன்றதொரு பயங்கரத்தை சந்திக்கவிருக்கிறோம். சனாதனத்திற்கும் பலியாகப்போகிறோம்.

இவற்றிலிருந்தெல்லாம் எளிதில் தப்ப இயலாது. மதவெறியாட்டத்தின் பின் பேரழிவை சந்தித்த பிறகு, சிதறுண்ட துண்டுகளைப் பொறுக்கியெடுத்து ஒட்ட முயலப்போகிறோம், அவ்வளவே.

ஆனாலும் இடைப் பட்ட காலத்தில் முற்போக்கு சிந்தனையாளர்கள், நல்லெண்ணம் கொண்டோர், ஒடுக்குமுறைகளைக் கண்டஞ்சாமல், அவரவர் தளங்களில் தங்களது எதிர்ப்பினைத் தெரிவிப்பதே இப்போதைக்கு சாத்தியம். அதைச் செய்யத் தயங்கக்கூடாது/

Share the Article

Read in : English

Exit mobile version