Read in : English
கொங்கு வட்டாரத்தில் சேலம், ஈரோடு, தர்மபுரி, நாம’கல் திருப்பூர் போன்ற பகுதிகளில் ஆடி முதல் நாள் கொண்டாடப்படும் தேங்காய் சுடும் பண்டிகை பிரபலமானது. தமிழ் மாதமான ஆடி முதல் நாளை, தேங்காய் சுட்டு உணவு தயாரித்து வரவேற்கும் வழக்கம் இங்கு உள்ளது. கொங்கு வட்டாரத்தில் இந்த வினோத பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் கொண்டாட்டப்படுகிறது.
தமிழகத்தில் பிற மாவட்டங்களில் இதுபோல் இந்தநாளில் கொண்டாடும் வழக்கம் இருப்பதாக தெரியவில்லை. என்றாலும், ஆடி மாதப்பிறப்பை பெரும்பாலான தமிழர்கள் கொண்டாட்டத்துடனே துவங்குவது குறிப்பிடத் தக்கது. மண் மணம் சார்ந்து தயாரிக்கும் உணவும் இதில் முக்கிய இடம் பிடிக்கிறது.
கொங்கு வட்டாரத்தில் சேலம், ஈரோடு, தர்மபுரி, நாம’கல் திருப்பூர் போன்ற பகுதிகளில் ஆடி முதல் நாள் கொண்டாடப்படும் தேங்காய் சுடும் பண்டிகை பிரபலமானது
கொங்கு வட்டாரத்தில் இந்த பண்டிகையை மகாபாரதக் கதையுடன் தொடர்பு படுத்தி பேசுவோரும் உண்டு. மகாபாரத யுத்தம், ஆடி முதல் தேதி துவங்கி, 18 நாட்கள் நடைபெற்றதாக புராண நம்பிக்கை உள்ளது. போரின்போது உணவு தயாரிப்புக்கு அச்சாரமாக இந்தப் பண்டிகை கொண்டாடுவதாக சிலர் குறிப்பிடுகின்றனர்.
பண்டிகையை ஒட்டி நடக்கும் தேங்காய் சுட்டு வித்தியாசமான முறையில் தயாரிக்கும் உணவு வழக்கத்தை ஒரு ஐதீகமாகக் கடைபிடிப்பதாகக் கூறுகின்றனர். அதுவே, தேங்காய் சுடும் பண்டிகையாக தொடர்ந்து வருவதாக நம்புகின்றனர்.
தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் இந்த ஆண்டு, கடந்த திங்கள்கிழமை அதாவது ஜூலை 17ஆம் தேதி கோலாகலமாக இந்த பண்டிகை கொண்டாடப்பட்டது. சிறுவர், சிறுமியர் உட்பட குடும்பத்தில் அனைவரும் உற்சாகத்துடன் பங்கேற்று வீடுகள் தோறும் மகிழ்ச்சி கரை புரண்டது.
ஒவ்வொரு குடும்பத்திலும் புதிய தேங்காய் ஒன்றை எடுத்து கொள்வார். அதன் மேல் உள்ள நாரை அகற்றுவர். உள்ளிருக்கும் ஓடு நன்கு தெரியும் வகையில் கூர்மையான கத்தியால் சுரண்டி சுத்தம் செய்வர். நார் முழுதும் நீங்கி இருக்க வேண்டும். பெரும்பாலும் தேங்காயின் மேல்பாகம் மூன்று கண்கள் உடையதாக இருக்கும். அதன் ஒரு கண்ணில் துளையிடுவர். உள்ளே இருக்கும் தேங்காய் நீரை, தனியாக பாத்திரத்தில் பிடித்து வைத்துக்கொள்வர்.
துளையிட்ட கண் வழியாக, பச்சரிசி, பருப்பு, வெல்லம், எள் மற்றும் சிறிதளவு ஏலப்பொடியை போட்டு, பிடித்து வைத்திருக்கும் தேங்காய் நீரையும் ஊற்றுவர். தேங்காயின் உள்ளே முக்கால் பாகம் தானிய கலவையும், கால் பாகம் தேங்காய் நீரும் இருக்கும்.
ஒரு முனையில் கூராக சீவப்பட்ட அழிஞ்சில் மரக்குச்சி ஒன்றை அந்த தேங்காயின் திறந்திருக்கும் கண்ணில் செருகுவர். குச்சியைச் சுற்றி தேங்காய் மீது மஞ்சள் துாள் பூசி மூடுவர். தொடர்ந்து, வீட்டு வாசலில் ஒரு இடத்தை தேர்வு செய்து சுத்தமாக தயாராக வைத்திருப்பர். அந்த இடத்தில் சிறிய அடுப்பு கூட்டி, நெருப்பு மூட்டி, குச்சியில் சொருகப்பட்ட தேங்காயை வைத்து சுடுவர்.
குறிப்பிட்ட பக்குவத்தில் தேங்காய் சுடப்படும். பின், அருகில் இருக்கும் கோவிலுக்கு எடுத்துச்சென்று படைத்து வழிபடுவர். சுட்ட தேங்காயை வீட்டிற்கு எடுத்துவந்து, அதை உடைத்து உள்ளே இருக்கும் கலவை உணவை உற்றார், உறவினர்களுடன் பகிர்ந்து உண்டு மகிழ்வர். இது இன்றும் வழக்கமாக உள்ளது. சிலர், வீட்டிலே படைத்து, பூஜை செய்து உண்பதும் உண்டு.
நெருப்பில் பக்குவமாக சுடப்பட்ட தேங்காய் பூரணத்துடன் வெந்து மிகவும் சுவையாக இருக்கும். எள்ளு, பாசிப்பயறு, வெல்லம், அவலுடன் தேங்காய் சேரும்போது உண்டாகும் சுவைக்கு ஈடு இணையில்லை
நெருப்பில் பக்குவமாக சுடப்பட்ட தேங்காய் பூரணத்துடன் வெந்து மிகவும் சுவையாக இருக்கும். எள்ளு, பாசிப்பயறு, வெல்லம், அவலுடன் தேங்காய் சேரும்போது உண்டாகும் சுவைக்கு ஈடு இணையில்லை. நெருப்பில் சுட்டு எடுப்பதால் ஏற்படும் தனித்துவமான வாசனையும் ஈர்க்கும். உணவுப் பொருள்கள் வெந்து தேங்காய் மணத்துடன் எங்கும் இனிமை பரவும்.
இந்த தேங்காய் உணவு வயிற்றுப் புண்ணை ஆற்ற வல்லது. புரத சத்து நிறைந்தது. உடலுக்கு வலிமை அளிக்கும். தேங்காய் சுடுவதற்குப் பயன்படுத்தும் அழிஞ்சில் குச்சியும் மருத்துவ பண்புகள் நிறைந்தது. நெடுங்காலமாக கொண்டாடப்பட்டு வரும் இந்த திருவிழா மீதுள்ள மோகம் இப்போது குறையத் துவங்கியுள்ளதாக முதியவர்கள் கவலை தெரிவித்தனர்.
ஒவ்வொரு திருவிழாவுக்கும் பின்புலமாக உணவும், உற்சாகமும் சமூக பொறுப்பும் தமிழகத்தில் உண்டு. துவக்க கால மருத்துவ செயல்பாடாகவும் இது இருக்கலாம். மருத்துவ வசதி பரலாக இல்லாத காலத்தில், மக்களிடையே சூட்சுமமாக இது போன்ற விழாக்கள் அறிவுரைகள் கூற உருவாக்கப்பட்டதாகவும் எடுத்துக்கொள்ளலாம்.இந்த வகை பண்டிகை கால உணவு தயாரிப்பு முறைகள் பற்றி உணவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து அதன் உள்ளுறையும் பொருளை வெளிப்படுத்தலாம்.
அந்த வகையில் தமிழர்களின் முக்கிய உணவு பொருளான தேங்காயை முன்வைத்து பிரத்யேகமாக கொண்டாடப்படும் திருவிழா மனம், உடல்நலத்தை பேண உதவும்.
தமிழகத்தில் வட்டார ரீதியாக கால நிலைக்கு ஏற்ப உணவு தயாரிக்கும் வழக்கம் இருக்கிறது. அது பல இடங்களில் பண்டிகையாக கொண்டாடப்படுவதும் உண்டு. மேற்கு மாவட்டங்களான சேலம், ஈரோடு, தர்மபுரி, நாமக்கல், திருப்பூர் பகுதிகளில் ஆண்டு தோறும் ஒரு வினோத பண்டிகை வித்தியாசமான உணவு சார்ந்து கொண்டாடப்படுகிறது.
Read in : English