Read in : English
தமிழ்நாட்டில் புத்துயிர் பெற்றுள்ள கோலி சோடா உற்பத்தி தொழில் 100-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. தமிழகம் முழுதும் விதம்விதமாக கோலி சோடாக்கள் தற்போது விற்பனைக்கு கிடைக்கிறது.
உலகம் முழுதும் உணவில் ஒரு பகுதியாக கலந்துவிட்டது குளிர்பானங்கள். இதன் சுவை பழகியவர்கள் தொடர்ந்து பயன்படுத்த தவறுவதே இல்லை. குளிர்பானங்கள் இரு வகையில் தயாரிக்கப்படுகிறது. இயற்கை பழச்சாறுகள் மற்றும் காற்றடைத்த செயற்கை குளிர்பானங்கள். குளிர்பானங்கள் முதலில் பழச்சாறு கலந்த சுவையை கொண்டிருந்தன.
இங்கிலாந்தில் எலுமிச்சை சாறுடன் தண்ணீர், இனிப்பு கலந்து குளிர்பானம் தயாரித்து குடித்து வந்தனர். இந்த வழக்கம், 1500ஆம் ஆண்டுகளில் இருந்ததாகக் கூறப்படுகிறது. பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் 1676ஆம் ஆண்டில் எலுமிச்சை, தேன், தண்ணீர் கலந்து தயாரிக்கப்பட்ட குளிர்பானங்கள் விற்பனையில் சாதனை படைத்தன.
முதன்முதலில் ஜோசப் பிரிஸ்டிலி என்பவர் தண்ணீரை கார்பன்-டை-ஆக்ஸைடுடன் வினை புரிய வைத்து, காற்றேற்றிய குளிர்பானத்தை 1767 இல் தயாரித்தார். இது, பின்னாளில் சோடாவாக உருவானது
முதன்முதலில் ஜோசப் பிரிஸ்டிலி என்பவர் தண்ணீரை கார்பன்-டை-ஆக்ஸைடுடன் வினை புரிய வைத்து, காற்றேற்றிய குளிர்பானத்தை 1767இல் தயாரித்தார். இது, பின்னாளில் சோடாவாக உருவானது. காற்றேற்றிய ஜிஞ்சர் பீர், 1800ஆம் ஆண்டுகளில் விற்பனைக்கு வந்தது.
தொடர்ந்து, 1870களில் இங்கிலாந்தில் கோலி சோடா விற்பனை தீவிரமடைந்தது. இது போன்ற குளிர்பானத்தை மக்கள் அதிகம் விரும்புகின்றனர். கிராமங்கள் வரை இது எளிதாக சென்று சேர்ந்துள்ளது. பன்னாட்டு நிறுவனங்களுடன் காளீஸ்வரி போன்ற உள்நாட்டு நிறுவனங்களும் சந்தையில் தனி இடம் பிடித்துள்ளன.
கோகோகோலா நிறுவனம், 1886 இல் ஆரம்பிக்கப்பட்டது. இது மட்டும் 150 குளிர்பான வகைகளை தயாரித்து விற்கிறது. உலக அளவில் கோகோகோலா, பெப்சிகோ, நெஸ்லே, சண்டோரி, டிஆர் பெப்பர் ஸ்னாப்பிள், டேனோன், கிரின், ரெட்புல், அஸாஹி போன்றவை, குளிர்பான விற்பனை சந்தையில் கோலோச்சுகின்றன.
மேலும் படிக்க: வேகவைத்த உணவா: ட்ரெண்டாகும் உணவுகளை, ஆரோக்கியமானதாக மாற்ற இவைதான் டிப்ஸ்..
இந்தியவில் ஜெயந்தி பிவரேஜஸ், ஸ்ரீ பிரெஹ்ம் சக்தி பிரின்ஸ், பிவரேஜஸ் ஹஜூரி சன்ஸ் போன்ற நிறுவனங்கள் தயாரித்து விற்றன. தமிழ்நாட்டில் குளிர்பானம் என்றால் நினைவுக்கு வருவது கோலி சோடாதான். விருந்தினர்களை உபசரிக்க பெட்டிக்கடையில் கோலி சோடா போன்ற குளிர்பானங்கள் வாங்கித் தருவது வழக்கமாக இருந்தது. பின்னர் வெளிநாட்டு குளிர்பானங்கள் பிரபலமானது. ஆனாலும் கோலி சோடாவுக்கு மவுசு குறையவில்லை.
தமிழ்நாட்டில் முதன் முதலில் ஆற்காடு பகுதியில் வேலுாரில் தான் கோலி சோடா தயாரானது. வெப்பம் அதிகம் நிலவும் பகுதி என்பதால் குளிர்பானங்களுக்கு தேவை அதிகம் இருந்தது. சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க மக்கள் நாடினர். இதனால் குடிசை தொழில் போல் நடந்தது. கண்ணுசாமி முதலியார் என்பவர் தான் கோலிசோடா தயாரிப்பு மற்றும் விற்பனையை முதன் முதலில் துவங்கினார்.
இதற்காக, ஜெர்மனியில் இருந்து கோலி சோடா பாட்டில்களை இறக்குமதி செய்தார். முதன் முதலில், 1924இல் அந்த நிறுவனம் கோலி சோடா தயாரித்து விற்பனையை துவங்கியதாக கூறப்படுகிறது.
கண்ணுசாமி முதலியார் என்பவர் தான் கோலிசோடா தயாரிப்பு மற்றும் விற்பனையை முதன் முதலில் துவங்கினார். இதற்காக, ஜெர்மனியில் இருந்து கோலி சோடா பாட்டில்களை இறக்குமதி செய்தார். முதன் முதலில், 1924ல் அந்த நிறுவனம் கோலி சோடா தயாரித்து விற்பனையை துவங்கியதாக கூறப்படுகிறது
அப்போதைய வட, தென் ஆற்காடு மாவட்டங்களில் பெட்டி கடைகளுக்கு கோலி சோடா சப்ளை செய்யப்பட்டது. சென்னை – பெங்களூர் சாலை போக்குவரத்து மிகுந்திருந்தது. அந்த வழியாக பயணம் செய்தவர்கள், கோலிசோடா குடிப்பதை வழக்கமாக்கியிருந்தனர். இதனால் இந்தக் குளிர்பானம் பிரபலமானது.
முதன் முதலில் பயன்படுத்திய கோலிசோடா பாட்டில் ஒன்றை இன்றும் காட்சிக்கு வைத்துள்ளது. தற்போது கண்ணன் சோடா கம்பெனி என்று அழைக்கப்படும் நிறுவனத்தில் காட்சியாக வைக்கப்பட்டுள்ளது. அதில், ‘மேட் இன் ஜெர்மனி’ என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. தற்போது, பழம் புளூபெர்ரி கோலா, எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு பச்சை என பலவித சுவை கலந்த சோடாக்களைத் தயார் செய்து கோலி பாட்டிலில் அடைத்து விற்கிறது அந்த நிறுவனம். தற்போது 100-வது ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளது.
மேலும் படிக்க: ராயல் என்ஃபீல்டு: உலகம் சுற்றும் வாலிபன்!
சோடா கம்பெனியை நடத்தி வருவோர் கூறுகையில், “கண்ணுசாமி முதலியார் சோடா கம்பெனி தொடங்கியது உள்ளூரில் விற்பனையை கருத்தில் கொண்டு தான். பயணிகள் போக்குவரத்து அதிகம் இருந்ததால் விற்பனை அதிகரித்தது. சுதந்திரத்திற்கு பின் கோலி சோடா விற்பனை தொழில் மேலும் விரிவடைந்தது. பின், வெளிநாட்டு குளிர்பான நிறுவனங்கள் வந்தன. அவற்றுடன் போட்டி போட முடியாத நிலை இருந்தது. தொழில் நலிவுற்றது. ஜல்லிக்கட்டு போராட்டம், 2017 இல் நடந்தபோது, உள்ளூர் பொருட்களை பயன்படுத்தும் எண்ணம் மக்களிடையே வளர்ந்தது. இதையடுத்து உள்ளூர் குளிர்பான தயாரிப்புகளுக்கு ஆதரவு அதிகரித்தது. அதனால், தொழிலைத் தொடர்ந்து நடத்த முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. தற்போது, உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து, பாட்டில்களை வாங்குகிறோம். அவற்றில் தான் சோடாவை அடைத்து விற்று வருகிறோம்”..என்றனர்.
Read in : English