Read in : English
லஸ்ட் ஸ்டோரிஸ் முதல் பாகத்தைப் போலவே, தற்போது லஸ்ட் ஸ்டோரிஸ் 2 நான்கு கதைகளாக வெளிவந்துள்ளது. காமம் தான் மனிதனின் உளவியல் சிக்கல்களில் முக்கியப் பங்கு வகிக்கிறது என்றார் சிக்மெண்ட் பிராய்ட்.
இன்றுவரை அவரது கூற்று விவாதத்திற்கு உரியதாக இருந்தாலும், மனிதனின் உள்ளச் சீர்மைக்கும் பிறழ்வுக்கும் அதுவே காரணமாக இருக்கிறது என்பதை எவராலும் மறுக்க முடியாது. அதைப் பல நேரங்களில் வெளிப்படையாக விவாதிக்க இயலாததாகவும் இருக்கிறது. அதையே கதைகளாக்கிக் கடத்துகிறது நெட்பிளிக்ஸில் வெளியாகியுள்ள ‘லஸ்ட் ஸ்டோரிஸ் 2’. 2018இல் வெளியான முதல் பாகத்தில் நான்கு கதைகள் இடம்பெற்றிருந்தன.
அந்த வகையில், ‘லஸ்ட் ஸ்டோரிஸ் 2’. ‘ஆந்தாலஜி’ வடிவமைப்பிலேயே அமைந்துள்ளது. இயக்குநர்கள் ஆர்.பால்கி, கொங்கனா சென் சர்மா, சுஜய் கோஷ், அமித் ரவீந்திரநாத் ஆகியோர் இதனை இயக்கியுள்ளனர்.
கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளை உற்றுநோக்கினால், குறுந்தொகை காலத்தில் காதலையும் காமத்தையும் கொண்டாடியதற்கும் இன்று அதைப் பொதுவெளியில் பேசவே தயங்குவதற்குமான மாபெரும் வித்தியாசத்தை உணர முடியும். அவ்வளவு ஏன்? நம் தாத்தா பாட்டி காலத்தில் ‘செக்ஸ்’ பற்றியும் ‘காமம்’ குறித்தும் அமைந்த பேச்சுகள் இன்று அறவே இல்லை. அதேநேரத்தில், அவற்றைத் தவறாகப் புரிந்துகொள்வதற்கான வாய்ப்புகள் அதிகமாகியிருக்கின்றன. திருமணமான தம்பதிகளிடம் ‘சந்தோஷமா இருக்கீங்களா’ என்பதை உளப்பூர்வமாகக் கேட்ட சமூகம் இது.
லஸ்ட் ஸ்டோரிஸ் முதல் பாகத்தைப் போலவே, தற்போது லஸ்ட் ஸ்டோரிஸ் 2 நான்கு கதைகளாக வெளிவந்துள்ளது. இயக்குநர்கள் ஆர்.பால்கி, கொங்கனா சென் சர்மா, சுஜய் கோஷ், அமித் ரவீந்திரநாத் ஆகியோர் இதனை இயக்கியுள்ளனர்
அதாவது, வாழ்வின் ஆதாரமே காமம் தான் என்பதைப் புரிந்துகொண்டார்களா என்கிற அக்கறை அதில் இருக்கும். அதையே வேறுவிதமாகப் பேசுகிறது பால்கி இயக்கியுள்ள ‘மேட் ஃபார் ஈச் அதர்’. நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திக்கும் இரண்டு நண்பர்கள், தங்களது பிள்ளைகளுக்குத் திருமணம் செய்து வைக்க எண்ணுகின்றனர். அதற்கேற்றவாறு, இளம் ஜோடிகள் சந்தித்துப் பேசித் தங்களுக்குள் இருக்கும் ஒற்றுமைகளைச் சிலாகிக்கின்றனர்.
திருமணப் பேச்சு ஒரு வடிவத்தைப் பெறும்போது, பெண்ணின் பாட்டி இடையே புகுகிறார். இளம் ஜோடிகளுக்கு இடையே செக்ஸில் புரிதல் உள்ளதா என்று கேட்கிறார். அதாவது, இருவரும் உறவு கொண்டு திருப்தியானார்களா என்று கேட்கிறார். அதைக் கேட்டதும், அப்பெற்றோர்கள் திகைத்துப் போகின்றனர். ‘இப்படியா வெளிப்படையாகப் பேசுவது’ என்று கூனிக் குறுகுகின்றனர். ஆனால், தன் பேச்சு சரியானது என்பதைப் பேத்திக்கு எடுத்துச் சொல்கிறார் அந்த மூதாட்டி. அவரது பேச்சை அந்த ஜோடி கேட்டதா இல்லையா என்பதோடு முடிவடைகிறது அந்தக் கதை.
மேலும் படிக்க: மாமன்னன்: முன்னாள் சபாநாயகர் தனபால் கதையா?
கொங்கனா சென் சர்மா இயக்கிய ‘தி மிரர்’, காமத்தைச் சுகிக்க ஒரு இணை கிடைக்காமல் துவண்டு போயிருக்கிற ஒரு நடுத்தர வயதுப் பெண்ணின் மனப்பிறழ்வைப் பேசுகிறது. வேலைக்காரி அவரது கணவருடன் உறவு கொள்ளத் தன் வீட்டைப் பயன்படுத்துவதைப் பார்த்துவிடுகிறார் அந்தப் பெண். திரும்பத் திரும்ப, அதனை நேரில் கண்டு திருப்தி அடைவது தான் அவரது பிரச்சினை.
ஒருநாள் இந்த விஷயம் அம்பலமாகிறது. அப்போது, ’நான் ரொம்பவே நல்லவள்’ என்று இருவருமே நிரூபிக்க முயல்கின்றனர். அதனால் என்ன பாதிப்பு உருவானது என்பதைப் பேசுகிறது இந்தக் கதை.
சுஜய் கோஷ் இயக்கிய ‘செக்ஸ் வித் தி எக்ஸ்’, ஒரு திருமணமான ஆண் தனது பழைய காதலியைத் திடீரென்று சந்திக்கும் நிகழ்வினைச் சொல்கிறது. அங்கும் காமம் தான் பிரதான இடம் வகிக்கிறது என்றபோதிலும், அக்கதையில் பேண்டஸியும் த்ரில்லும் ரொம்பவே அதிகம். அதனால், நான்கு அத்தியாயங்களில் காமத்தின் ரூபத்தை மிகக்குறைவாகப் பேசுகிற படைப்பும் இதுவே.
அமித் ரவீந்திரநாத் இயக்கிய ‘தில்சட்டா’, ஆண்ட பரம்பரை என்ற பெருமையுடன் வாழும் ஒரு ராஜாவின் அந்தரங்க லீலைகளைப் பேசுகிறது. அவரது மனைவி ஒருகாலத்தில் விலைமாதுவாக இருந்தவர். திருமணத்திற்குப் பிறகும், அந்த அரண்மனையில் அவரை அப்படியே நடத்துகிறார் அந்த ஆண். அதனால், பெயரளவிலேயே அவர் ராணியாக இருக்கிறார். அந்த தம்பதிக்கு ஒரு மகன் உண்டு. விடலைப் பருவத்தில் இருக்கும் அந்த இளைஞனுக்குத் தந்தையின் காம வெறி எரிச்சலூட்டுகிறது.
தன் கண் முன்னே பல இளம்பெண்களை அவர் சீரழிப்பதைக் கண்டதால் ஏற்பட்ட விளைவு அது. ஒருநாள், அவர்களது அரண்மனைக்கு ஒரு இளம்பெண் பணி செய்ய வருகிறார். வழக்கம்போல, ராஜா அப்பெண்ணிடமும் காமச்சீண்டல்களில் ஈடுபடுகிறார். அதனைப் பார்க்கும் மகன் முகம் சுளிக்கிறார். அந்தப் பெண் ஒரு விலைமாது என்பது பின்னர் தெரிய வருகிறது. இறுதியில் எதிர்பாராத திருப்பத்துடன் அக்கதை முடிவடைகிறது. காமத்தின் ரூபம் வெவ்வேறாயினும் ஊற்றுக்கண் ஒன்றுதானே என்கிறது ‘லஸ்ட் ஸ்டோரிஸ் 2’.ஆனால், முதலிரண்டு கதைகளில் காமம் நிறைந்திருக்கிறது; பின்னிரண்டில் அது காட்சிப்பொருளாக மட்டுமே இருக்கிறது.
காமத்தின் ரூபம் வெவ்வேறாயினும் ஊற்றுக்கண் ஒன்றுதானே என்கிறது ‘லஸ்ட் ஸ்டோரிஸ் 2’.ஆனால், முதலிரண்டு கதைகளில் காமம் நிறைந்திருக்கிறது; பின்னிரண்டில் அது காட்சிப்பொருளாக மட்டுமே இருக்கிறது
நான்கு கதைகளுமே சுமார் 20 – 30 நிமிட உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளன. பால்கியின் கதை சொல்லலில் புதிதாக எதுவும் இல்லை. ஆனால், ’காமம் பழகியபின்பே கல்யாணம்’ என்ற அகநானூறு காலத்துப் பழக்கத்தை முன்வைக்கிறது அப்படைப்பு.
பழமையே புதுமை என்று சொல்வதைவிட, அதுவொரு சுழற்சியாகத்தான் நம்மைப் பீடித்திருக்கிறது என்பதே பொருத்தமாக இருக்கும்.
சுஜய் கோஷின் படைப்புதான் தமன்னாவைக் கடந்த சில வாரங்களாகச் சமூகவலைதளங்களின் பேசுபொருளாக்கியது. உண்மையைச் சொன்னால், இதில் தமன்னாவின் அழகு திரையில் தகிக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். பதினைந்தாம் நூற்றாண்டு ‘மறுமலர்ச்சி ஓவியங்களில்’ இடம்பெற்ற ஐரோப்பிய அழகிகளை எல்லாம் பின்னுக்குத் தள்ளிவிடுகிறது அவரது இருப்பு. அதற்கு ஈடு கொடுக்கும் அளவுக்கு, அவரது ஜோடியாக நடித்த விஜய் வர்மா திரையில் காமத்தில் உருகியிருக்கிறார். என்ன, த்ரில்லர் படங்கள் பார்த்துப் பழகியவர்களுக்கு அந்தக் கதையின் நகர்வும் முடிவும் முன்கூட்டியே கணிக்கக் கூடியது என்பதுவே அதன் மைனஸ்.
அமித் ரவீந்திரநாத் கதையில் கஜோல் – குமுத் மிஸ்ரா ஜோடியின் நடிப்புதான் பிரதானம். அதற்கு ஈடாக, அனுஷா கவுசிக்கின் அழகும் காட்சியாக்கத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஒரு சிறுகதை பாதியிலேயே முடிந்துபோன உணர்வை உருவாக்குவது இதன் மாபெரும் பலவீனம்.
ஒளிப்பதிவாளர்கள், படத்தொகுப்பாளர்கள், இசையமைப்பாளர்கள் என்றனைத்துமே நான்காக இடம்பெற்றிருக்கும் ‘லஸ்ட் ஸ்டோரிஸ் 2’வில் தபன் துஷார் பாசு, ஆனந்த் பன்சால் ஆகியோரோடு நம்மூர் பி.சி.ஸ்ரீராமும் ஒளிப்பதிவில் பங்காற்றியுள்ளார்.
போலவே நான்கு படைப்புகளிலும் முன் தயாரிப்பு, பின் தயாரிப்பு பணிகளில் வெவ்வேறு குழுக்கள் பணியாற்றியுள்ளன. அவர்களது நேர்த்தியான உழைப்பு, இவற்றை ஒருமுறை ரசிக்கச் செய்யும் உத்தரவாதத்தைத் தரும்.
மேலும் படிக்க: தண்டட்டி: ஆணவக் கொலை பற்றிய வித்தியாசமான திரைப்படம்
இன்று, காமம் குறித்துப் பொதுவெளியில் பேசுவது வெட்கக்கேடானதாகக் கருதப்படுகிறது. ஏன் இந்த மாற்றம்? யார் இதனைச் செய்தது? இந்தக் கேள்விகள் வரலாற்றைப் புரட்டிப் பார்க்கச் செய்யும். அத்திசையில் செல்லாமல், நம் வாழ்வில் காமத்தின் பங்கு பற்றிப் பேசுகிறது ‘லஸ்ட் ஸ்டோரிஸ் 2’. முதல் பாகத்தைப் போலவே இதிலும் சொல்லவியலா காமமே கதைகளாக உருமாறியுள்ளது.
இதனைப் பார்க்கும் ஒரு பார்வையாளருக்கு, பால்கியின் இயக்கத்தில் வெளியான படைப்பு உடனடியாகப் பிடிக்கும். அதில் ‘மவுண்ட் ப்யூஜி’ என்ற பதம் வசனத்தில் பயன்படுத்தப்படுகிறது. மூத்த நடிகை நீனா குப்தா அந்த வார்த்தையை உதிர்க்கும்போது மிருனாள் தாகூர் வெட்கத்துடன் அதனை ரசிப்பார். காத்திருக்கும் எரிமலை போன்றிருக்கும் ஒரு பெண்ணுடலை ஒரு ஆணின் நெருக்கம் எப்படிப்பட்டதாக மாற்ற வேண்டும் என்பது அவ்வசனத்தின் வழியே சொல்லப்படும். இன்று சமூகவலைதளங்களில் பெருமளவில் விவாதிக்கப்படும் விஷயம் அது. ஆண்களும் பெண்களும் ஒரு கும்பலாகக் கூடுகையில் பேசுகிற விஷயங்கள்தான் அவை. என்றபோதும், இன்றைய சமூகம் அதற்கு மாறான ஒரு பிம்பத்தை உருவாக்கி முதியவர்களைப் பத்தாம்பசலிகளாகக் கருதுவதை இப்படைப்பு விமர்சிக்கிறது.
சுஜய் கோஷின் படைப்பு ஒரு ‘எரோடிக் த்ரில்லர்’ என்றே எண்ணத் தோன்றுகிறது. போலவே, அமித் ரவீந்திரநாத்தின் ‘தில்சட்டா’வில் நாடகத்தனம் மிக அதிகம்.
அந்த வகையில், கொங்கனா சென் சர்மாவின் படைப்பு மட்டுமே முழுமையானதொரு காமக் கதையாக விளங்குகிறது. இத்தனைக்கும் அதில் ஒரு பெண்ணின் மனப்பிறழ்வு செயல்பாடுகளே பிரதானமாக இடம்பெற்றுள்ளன. ஆனாலும், இறுகிப் போயிருந்த ஒரு பெண்ணின் மனதையும் உடலையும் அதுவே நெகிழ்ந்து தன்மையாக்குகிறது என்று சொன்னவிதத்தில் கொண்டாடத்தக்க ஒரு படைப்பைத் தந்திருக்கிறார் கொங்கனா.
நம்மூரில் ‘போர்னோ’, ‘எரோட்டிக்’ படங்களுக்கான வித்தியாசம் பலருக்குத் தெரிவதில்லை. எந்திரத்தனமான புனைவை விடப் புரிதலும் காதலும் மிக்க சங்கமத்திற்கு ஆயுள் அதிகம் என்பதே இரண்டுக்குமான வித்தியாசம். அது புரிந்தால், காதலுக்கும் காமத்துக்குமான ஒற்றுமை வேற்றுமைகளைப் பட்டியலிடாமல் மனங்களின் சீர்மைக்கும் இயல்பான இயக்கத்திற்கும் காமம் எத்தனை முக்கியம் என்பது புலப்படும்.
‘லஸ்ட் ஸ்டோரிஸ் 2’வில் இருக்கும் நான்கு கதைகளில் ஒரு பார்வையாளரால் தனக்கான விருப்பத்தைத் தேர்வு செய்துகொள்ள முடியும். அப்போது, இதர கதைகளின் குறைகள் தானாகப் பிடிபடும்.
Read in : English