Site icon இன்மதி

எம்ஜிஆருக்கு வெற்றிப் பாதை அமைத்துத் தந்த உலகம் சுற்றும் வாலிபன்!

Read in : English

ஒரு சாதாரண பொழுதுபோக்குப் படம் உலகம் சுற்றும் வாலிபன். ஆனால் எம்ஜிஆர் இயக்கி நடித்த அந்தத் திரைப்பட வெற்றிக்கும், அளப்பரிய ஆச்சரியம் தந்த அவரது அரசியல் வெற்றிக்கும், அவரது ரசிகர்களை விட அதிகம் பங்காங்காற்றியது திமுகதான். எம்ஜிஆரைத் தூக்கியெறிந்து அவருக்கு முட்டுக்கட்டைகளும் குடைச்சல்களும் தந்த திமுகவினால்தான் அவரால் சரித்திரம் படைக்க முடிந்தது என்பது ஒரு நகைமுரண்.

எம்.ஜி.ராமச்சந்திரன் என்ற எம்ஜிஆரின் மாபெரும் வெற்றித் திரைப்படங்களில் ஒன்றான உலகம் சுற்றும் வாலிபன் (மே 11, 1973) வெளிவந்து ஐம்பது ஆண்டுகளாகின்றன. வழமையான ஆடல், பாடல், சண்டை, சென்டிமென்ட் என்று எல்லா வகையான எம்ஜிஆரின் வெற்றிச் சூத்திரங்களையும் உள்ளடக்கிய வெறும் கேளிக்கை நாடகம்தான். மின்னலிலிருந்து அணுசக்தியைத் தயாரிக்க உதவும் ஒரு ஃபார்முலாவை எதிரிகளின் கைகளில் சிக்கவிடாமல் தடுக்க நாடுதோறும், நாள்தோறும் கதாநாயகன் செய்யும் தேடல்தான் படத்தின் ஒருவரிக் கதை. (இதைத்தான் புத்தாயிரத்தில் தசாவதாரம் எடுத்த கமலும் செய்தார்.)

ஆனால் 1970களின் ஆரம்பத்தில் தமிழ்நாட்டில் கொளுத்திய அரசியல் வெப்பம் உலகம் சுற்றும் வாலிபனைச் சுட்டெரிக்க முயன்றது. இவ்வளவுக்கும், 1952இல் திமுகவின் ’கல்ட்’ படமான பராசக்தி செய்ததைப் போல, எம்ஜிஆரின் உலகம் சுற்றும் வாலிபன் அரசைக் கடுமையாக விமர்சிக்கவில்லை; அது அரசியல் படமும் அல்ல. ‘நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்’ என்று ஆரம்பத்தில் ஒலித்து ரசிகர்களிடம் ஆரவாரத்தையும் ஆனந்தத்தையும் அலைகடலென கிளப்பிவிட்ட, படத்திற்குச் சம்பந்தமே இல்லாத பாட்டைத் தவிர, அரசியல் நெடி என்று பெரிதாக எதுவுமே இல்லை. ஆனால் அப்போதைய அரசின் நெற்றிக்கண்ணிலிருந்து வெறுப்பும் நெருப்பும் வெடித்தது.ஏன்? முக்கிய காரணம் திமுகவில் எம்ஜிஆர் ஏற்படுத்திய பெரிய சலசலப்பு.

சென்னைக்கு அருகிலுள்ள திருக்கழுக்குன்றத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அப்போதைய திமுக தலைவரும் அவரது நீண்டகால நண்பருமான கருணாநிதியின் தலைமையை எதிர்த்து எம்ஜிஆர் கேள்வி எழுப்பிய சில நாட்களுக்குப் பிறகு, அக்டோபர் 10, 1972 அன்று கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். அவருக்கு எதிராக திமுக தலைவர்களும் கட்சியினரும் எதிர்ப்புக் குரல் எழுப்பத் தொடங்கினர்.

சத்தமில்லாமல் கடந்து சென்றிருக்க வேண்டிய, வணிகரீதியாக வெற்றிபெற்ற ஒரு திரைப்படம் எம்ஜிஆர். என்ற நடிகரை இமாலயப் புகழ்பெற்ற அரசியல்வாதியாக மடைமாற்றி நிறமாற்றி உயர்த்தியது படத்திற்குச் சம்பந்தமே இல்லாத அரசியல்

இந்த சூழ்நிலையில், சக்திக்கு மீறி பெரும் முதலீடு செய்து தான் தயாரித்து இயக்கி நடித்த உலகம் சுற்றும் வாலிபனை பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில் எவ்வாறு வெளியிடுவது என்று எம்ஜிஆரை மூளையைக் கசக்கி யோசிக்க வைத்தது. ஒரு பக்கம் கட்சி தன்னை வெளியேற்றி விட்டது; தான் தயாரித்த படம் பல்வேறு பிரச்சினைகளில் சிக்கியிருக்கிறது.

நீண்டகாலமாகவே தயாரிப்பில் இருந்ததால் படம் வெளிவர வாய்ப்பில்லை; வெளிவந்தாலும் வெற்றி பெறாது என்று பத்திரிகைகள் ஹேஷ்யங்கள் எழுதின.

மேலும் படிக்க: எம்ஜிஆர் படங்களில் பெருந்தாக்கம் ஏற்படுத்திய ஹாலிவுட் நடிகர்கள்!

ஆனால், திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட எம்ஜிஆர், 1972-ஆம் ஆண்டு அக்டோபர் 17-ஆம் தேதி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். ஏழு மாதங்களுக்குப் பிறகு, 1973 மே மாதம் 11 அன்று உலகம் சுற்றும் வாலிபன் படத்தை நீண்ட போராட்டத்திற்குப் பிறகு வெளியிட்டார் எம்ஜிஆர்.

இப்போது பின்னோக்கிப் பார்த்தால், மாபெரும் வெற்றி பெற்ற அந்தப் படத்தின் திரைக்கதையை விட அதன் வெளியீட்டுக்கு முன்பு நிகழ்ந்த நிஜக் கதைகள் சுவாரஸ்யமானவை; திரில்லர் வகையறாவைப் போல விறுவிறுப்பானவை.

சத்தமில்லாமல் கடந்து சென்றிருக்க வேண்டிய, வணிகரீதியாக வெற்றிபெற்ற ஒரு திரைப்படம் எம்ஜிஆர். என்ற நடிகரை இமாலயப் புகழ்பெற்ற அரசியல்வாதியாக மடைமாற்றி உயர்த்தியது படத்திற்குச் சம்பந்தமே இல்லாத அரசியல்.

1970-களின் ஆரம்பத்தில் எம்ஜிஆருக்கு பல சோதனைகள் ஏற்பட்டன. அவர் அகவை ஐம்பதைத் தாண்டியிருந்தார். அப்போதைய முதல்வர் கருணாநிதி, தனது மகன் மு.க. முத்துவை திரைப்படத்தில் அறிமுகப்படுத்தினார். எம்ஜிஆர் ஃபார்முலாவைப் பின்பற்றி முத்துவின் அறிமுகப்படமான பிள்ளையோ பிள்ளை அமோக வெற்றி பெற்று, எம்ஜிஆருக்கு அதிர்ச்சியைத் தந்தது.

ஆனால் திரைப்படத்தில் எம்ஜிஆர் அணிந்த ஆடைகளையும், கேசத்தையும் அவரது உடல்மொழியையும் வேறு எவர் காப்பியடித்தாலும் காமெடி ஆகிவிடும் என்ற உண்மையை பழுத்த திரைப்படக் கதை வித்தகர் கருணாநிதிக்குத் தெரியாமல் போனது ஆச்சரியம். தன்னால் புரட்சி நடிகரான ஒருவர் அரசியலில் புரட்சித் தலைவராகப் பரிணாமம் அடைவார்; பரிமாணம் கொள்வார் என்பதை அரசியல் மாக்கியவெல்லி கருணாநிதியால் கணிக்க முடியவில்லை. ஆனாலும் எம்.ஜி.ஆருக்குக் கிடைத்த அசாத்தியமான வெற்றி அவ்வளவு எளிதாகக் கிட்டியதில்லை.

இந்திராகாந்தி தலைமையிலான அப்போதைய ஒன்றிய அரசிடமிருந்து எம்.ஜி.ஆருக்கு வருமான வரி மற்றும் அன்னியச் செலாவணி தொடர்பாக ஏற்கனவே சில சிக்கல்கள் இருந்தன. திமுக மேடை பேச்சாளர்கள் எம்ஜிஆரின் இனப்பூர்வீகம் குறித்து கேள்வி எழுப்பி,னர். அச்சும், வானொலியும் மட்டுமே பெரியதோர் ஊடகமாக இருந்த அந்தக் காலத்தில், திரைப்பட விளம்பரத்தின் முக்கிய வாகனமாக சுவரொட்டிகள் இருந்தன. எனவே, எம்ஜிஆர் என்னும் மாயாஜால மந்திர அலையைத் தடுக்கும் முகாந்திரத்தில், சென்னை மாநகராட்சி சுவரொட்டிகளுக்கு வரி விதித்தது, ஆதலால் உலகம் சுற்றும் வாலிபனால் சுவரொட்டிகளில் இடம் பெற முடியவில்லை.

ஆனாலும் எம்ஜிஆர் ஆதரவு நாளிதழ்களில் அவர் கூலிங்கிளாஸ் அணிந்து, சூட்கேஸைப் பிடித்து, தலை நிமிர்த்தி நிற்பது போன்ற ஒற்றை விளம்பரம் இடம் பெற்றது. ஆயிரம் விளம்பர நிகழ்ச்சிகளும், ’ப்ரமோ’ நிகழ்வுகளும் செய்ய முடியாத ஆகப்பெரும் பணியை அந்த ஒற்றை விளம்பரம் செய்தது.

சுவரொட்டிகளுக்குப் பதிலாக எம்ஜிஆர் தனது படத்தின் ஸ்டிக்கர்களை அனைத்து வாகனங்களிலும், ஆட்டோக்களிலும், சைக்கிள்களிலும், வேன்களிலும் இரு சக்கர வாகனங்களிளும், கார்களிலும் ஒட்டச் செய்தார். மறைந்த திரைப்பட நகைச்சுவை நடிகர் பாண்டு கவர்ச்சிகரமான அந்த ஸ்டிக்கர்களையும், கட்சிக் கொடியையும் வடிவமைத்ததாகக் கூறப்படுகிறது.

எம்ஜிஆர் ஆதரவு நாளிதழ்களில் அவர் கூலிங்கிளாஸ் அணிந்து, சூட்கேஸைப் பிடித்து, தலை நிமிர்த்தி நிற்பது போன்ற ஒற்றை விளம்பரம் இடம் பெற்றது. ஆயிரம் விளம்பர நிகழ்ச்சிகளும், ’ப்ரமோ’ நிகழ்வுகளும் செய்ய முடியாத ஆகப்பெரும் பணியை அந்த ஒற்றை விளம்பரம் செய்தது

அப்போது திமுகவின் மூத்த தலைவரும், மதுரை மேயருமான முத்து, படம் வெளியானால் சேலைக் கட்டிக் கொள்வதாகச் சவால் விட்டார். ஆனால் முத்துவைத் திகைக்க வைக்கும் வகையில், உலகம் சுற்றும் வாலிபன் அனைத்து தடைகளையும் தாண்டி தியேட்டர்களில் வெளியானது.

அதன் பிறகு மதுரை ரயில் நிலையம் அருகே உள்ள நீளமான சுவர்களில் “சேலைகள் இங்கே! முத்து நீ எங்கே?” என்ற கரி எழுத்துக்கள் முளைத்தன: இதில் வேடிக்கை என்னவென்றால், அதேமுத்து பின்னர் கருணாநிதியுடன் பிணக்கு கொண்டு எம்ஜிஆரை ஆதரித்து அதிமுகவில் இணைந்தார்.

படத்தை வெளியிடக்கூடாது என்று திரையரங்கு உரிமையாளர்கள் பலர் எச்சரிக்கப்பட்டார்கள். ஆனால் அவர்களில் பலர் எம்ஜிஆர் ரசிகர்களாக இருந்ததால் துணிந்து படத்தை வெளியிட்டனர். எம்ஜிஆரின் தொழில்முறை போட்டியாளரான நடிகர் திலகம் சிவாஜிகணேசன் சென்னையிலிருந்த தனது சாந்தி தியேட்டரில் படத்தை வெளியிட முன்வந்ததாகத் தகவல் உண்டு.ஆனால் அவருக்குப் பிரச்சினை வரும் என்பதால் எம்ஜிஆர் மறுத்துவிட்டார்.

ஆளும் கட்சியினரின்’ அதிகாரப்பூர்வமற்ற தடையை’ எதிர்கொண்டது உலகம் சுற்றும் வாலிபன் மட்டுமல்ல. எம்ஜிஆரின் பழைய பாக்ஸ் ஆபிஸ் வெற்றிப்படங்களான குடியிருந்த கோயில், எங்கள் வீட்டுப் பிள்ளை, அடிமைப் பெண் போன்ற படங்களின் மறு வெளியீடுகளும் தடுக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. மாநிலம் முழுவதும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், பார்வையாளர்கள், குறிப்பாக பெண்கள், தியேட்டர்களுக்கு வருவது குறைந்தது.அடிமட்ட மக்களிடம், முக்கியமாக விளிம்புநிலை மக்களிடம் வளர்ந்து வரும் எம்ஜிஆரின் செல்வாக்கைக் குலைக்கும் தந்திரம் இது.

மேலும் படிக்க: திரைப்பட ரசிகர்களிடம் எடுபடாமல் போன பாக்யராஜ் அரசியல்

இருப்பினும், தனது வாழ்நாள் முழுவதும் தீமைகளை நன்மைகளாக மடைமாற்றம் செய்து கொள்ளும் மந்திரத்தால் பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் கண்டார் எம்ஜிஆர். தனது நண்பர் கருணாநிதியின் வியூகங்களை நன்கு அறிந்தவர் என்பதால், தனது படத்தின் நெகட்டிவ்களை ரகசியமாக சென்னையிலிருந்து பம்பாய்க்கு கொண்டு சென்று அவற்றைக் கழுவி செம்மைப்படுத்த வைத்தார் எம்ஜிஆர். சிங்கப்பூர், பாங்காக் மற்றும் ஹாங்காங்கில் படமாக்கப்பட்ட ஃபிலிம் ரோல்களை எரிக்க ரகசிய முயற்சிகள் நடப்பதாக வதந்திகள் பரவியதை அடுத்து அவர் இவ்வாறு செய்யவேண்டியிருந்தது.

ஜப்பானின் ஒசாகாவில் நடந்த எக்ஸ்போ-70 என்ற பிரமாண்டக் கண்காட்சியை படத்தில் கிளைமாக்ஸில் காட்டினார் அவர்.அதில் எம்ஜிஆரைத் தவிர்த்து, மஞ்சுளா, சந்திரகலா மற்றும் லதா ஆகிய மூன்று முக்கிய கதாநாயகிகள் நடித்திருந்தனர். கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் ஓடும் அந்தக் காட்சிகளில் பல்வேறு கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களின் அர்ப்பணிப்புமிக்க பணித்திறன் மிளிர்ந்தது.

படப்பிடிப்புக்கு ஜப்பானின் அனுமதியைப் பெறுவதற்கான நடைமுறைகளை எம்ஜிஆருக்குப் பிடித்த பத்திரிகையாளர் மணியன் (அப்போதைய தமிழ் இதழான இதயம் பேசுகிறது ஆசிரியர்) கவனித்துக் கொண்டார். அவரது உதவியாளரும் நம்பிக்கைக்குரியவருமான ஆர்.எம். வீரப்பன், அவருக்குப் பிடித்த இயக்குநர் ப.நீலகண்டன் மற்றும் பல திரைப்பட ஜாம்பவான்கள் இத்திரைப்படத்தின் உருவாக்கத்தில் பெரும்பங்காற்றினர்.

1972-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இருந்து கருணாநிதிக்கு எதிரான, எம்ஜிஆருக்கு ஆதரவான அலைகள் மாநிலம் முழுவதும் பரவிய நிலையில், உலகம் சுற்றும் வாலிபன் படம் குறித்து ரசிகர்கள் மத்தியிலும் எதிர்ப்பாளர்கள் மத்தியிலும் பல்வேறு விதமான எதிர்பார்ப்புகள் இருந்தன. படம் வெற்றி பெற்றால் அது எம்ஜிஆர் என்ற அரசியல்வாதியின் மாபெரும் வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதால் அவரது ரசிகர்கள் வேட்டையாடப் பட்டனர். இதை எதிர்த்து மாணவர்களின் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டது.

ஆதலால் 1972 நவம்பர் முதல் 1973 ஜனவரி வரை மாநிலம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டதை 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் இப்போதும் நினைவுகூர்கின்றனர். மேலும், 1973ஆம் ஆண்டு மே 21ஆம் தேதி நடைபெறவிருந்த திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் தனது பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் அப்போது ஏழு மாதக் கட்சியான அதிமுக-வுக்கு இருந்தது.

எனவே, அரசியல் சுழலில் சிக்கியிருந்த எம்ஜிஆர் உலகம் சுற்றும் வாலிபன் வெளியீட்டை தேர்தலுக்குப் பிறகுதள்ளிப் போடவிரும்பினார் என்று தற்போதைய அதிமுகவில் உள்ள பழைய ஆட்கள் நினைவுகூர்கின்றனர். ஆனால், வீரப்பனின் ஆலோசனையின் பேரில் படம் தேர்தலுக்கு முன்பே வெளியானது; வெற்றியும் பெற்றது.

பின்பு இரண்டே வாரங்களில், எம்ஜிஆரின் புதிய கட்சி திண்டுக்கல்லில் தனது முதல் தேர்தல் வெற்றியை ருசித்தது மட்டுமல்லாமல் ஆளும் கட்சியான திமுகவை மூன்றாவது இடத்திற்குத் தள்ளியது. நடிகன்தானே? என்ற எக்காளங்களை எம்ஜியார் எப்படி முறியடித்தார்? இறுதியில் எப்படி தமிழக முதல்வராக அரியணை ஏறினார்? என்பதெல்லாம் வரலாறு.

Share the Article

Read in : English

Exit mobile version