Read in : English
எம்.ஜி.ராம்சந்தர் , எம்.ஜி.ராமச்சந்திரனாகி பின்பு கோடிக்கணக்கான மக்களைக் கட்டிப்போட்ட எம்ஜிஆர் என்னும் மந்திரச் சொல்லாக உருமாறிய பரிணாமம் அசாதாரணமான ஒன்று.. மருதூர் கோபாலமேனன் ராமச்சந்திரன் (1917-1987) என்ற எம்ஜிஆரின் 106-ஆவது பிறந்தநாள் கடந்த ஜனவரி 17 அன்று கொண்டாடப்பட்டது.
வறுமையால் துரத்தப்பட்டு நாடகத்துறைக்குள் சோற்றுக்காக வந்த ஓர் ஏழு வயது பாலகனுக்குக் கல்வி மறுக்கப்பட்டது; பல ஆண்டுகளாக நடித்து பதின்மவயதுக்குள் வந்தபின்பும், பெரியவனான பின்பும் பிரமாதமான நடிப்புத்திறனும் அவனிடம் இல்லை; அந்தப் பையனுக்குப் பாடும் திறனும் பெரிதாக இல்லை. பதின்ம வயதுக்கு உரித்தான குரலில் மகரக்கட்டு வேறு ஏற்பட்டுவிட்டது.
இந்த நிலையில் 1936-ல் எல்லீஸ் ஆர் டங்கன் என்னும் அமெரிக்க இயக்குநர் இயக்கிய சதிலீலாவதியில் சாதாரண ஒரு போலீஸ்காரன் பாத்திரத்தில் தலைகாட்டி திரைப்பட உலகில் கால்பதித்தார் எம்.ஜி.ராம்சந்தர். அதன்பின்னர் பல்வேறு துக்கடாப் பாத்திரங்களில் தோன்றினார்; மாயாமச்சீந்திரா, முருகன், கஞ்சன், தட்சயக்ஞம் என்ற படங்களில் துணைப்பாத்திரங்களிலே நடித்தார்.
அவர்க்கு வசீகரமான முகம்; ஆனால் சிரிக்கும்போது லேசாக முன்பல் தெரியும்; இரட்டை நாடி; இதெல்லாம் குறைகளாகச் சுட்டிக்காட்டப்பட்டு அவருக்குக் கதாநாயகப் பாத்திரம் தொடர்ந்து மறுக்கப்பட்டது.
1940-களின் தொடக்கத்தில் சாயா என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக முதன்முதலில் நடிக்கத் தொடங்கிய ராம்சந்தர் அந்தப் படம் கைவிடப்பட்டதும் அதிர்ஷ்டத் தேவதையே தன்னைக் கைவிட்டதாக உடைந்துதான் போனார். ஒருகட்டத்தில் திரைப்படத் துறையே வேண்டாம் என்று ராணுவத்தில் சேரப் போனார். திரைப்படத்தில் நுழைந்து 12 ஆண்டுகளாக முக்கியத்துவம் இல்லாத பாத்திரங்களில் மட்டுமே நடித்துக் கொண்டு வாழ்க்கையை எப்படித்தான் ஓட்ட முடியும்?
டக்ளஸ் ஃபேர்ஃபாங்க்ஸ் நடித்த த மார்க் ஆஃப் ஜாரோ (1920) படம், ஒடுக்கப்பட்ட ஏழைகளுக்குக் குரல்கொடுக்கும், அநீதிக்காளாகும் பெண்களைக் காக்கும், கொடுங்கோல் மன்னர்களை அல்லது பிரபுக்களை எதிர்க்கும் ஒரு ராபின்ஹுட் பாத்திர வார்ப்பை வடிவமைத்தது
ஆனால் அவரது பொறுமையும் கற்றுக்கொண்ட சண்டைப் பயிற்சிகளும் பலனளிக்க ஆரம்பித்தன. 1947-ல் ஏஎஸ்ஏ சாமி இயக்கிய ராஜகுமாரியில் எம்.ஜி.ராமச்சந்திரன் முதன்முதலில் கதாநாயகன் ஆனார். பின்பு 1950-ல் கலைஞர் கருணாநிதி கதைவசனம் எழுதிய மந்திரி குமாரியிலும் அடுத்து மருதநாட்டு இளவரசியிலும் கதாநாயகனாக நடித்தார். கதாநாயகனாகக் கால்பதித்த போதிலும் அந்தப் படங்களின் வெற்றிக்குத் தனது கதாநாயக அந்தஸ்து காரணமில்லை என்பது அவருக்கு நன்றாகவே புரிந்தது.
அவருக்கென்று ஒரு கனவு இருந்தது. ஹாலிவுட் கதாநாயகர்களான டக்ளஸ் ஃபேர்பாங்க்ஸ் (ஊமைப்படங்கள்) மற்றும் எரால் ஃப்ளைன் (பேசும் படம்) திரையில் நிகழ்த்திய வில், அம்பு, வாள் சண்டைச் சாகசங்களை, ஏழைகளுக்காகப் போராடி அதிகார வர்க்கத்தினரோடு போராடிய அந்த ராபின்ஹுட் பாத்திரங்களைத் தானும் ஏற்று நடித்து பெரிய கதாநாயகனாக உலாவர வேண்டும் என்பதுதான் அந்தக் கனவு.
மேலும் படிக்க: எம்ஜியார் என்னும் மந்திரச்சொல்லின் மர்மம்!
1952-ல் பராசக்தி என்ற முதல் படத்திலே தன் நடிப்புத்திறனாலும் அனல்வீசும் வசனம் பேசும் திறனாலும் புகழடைந்த அவரது சகநடிகரும், போட்டியாளரும் நண்பருமான சிவாஜி கணேசன் போல எம்ஜிஆருக்கு திடீர்ப் புகழ் வாய்க்கவில்லை. ஆனால் 1950-கள் எம்ஜிஆரின் கனவைத் திரையில் நிஜமாக்கத் தொடங்கின.
தன்னை மையமாக்கி வீரதீரக் காதல் அம்சங்களைச் சரியான கலவையில் கொடுக்கும் கதைகளைத் தேட ஆரம்பித்தார் எம்ஜியார். அந்தக் கதைகளுக்கு ஏற்கனவே ஹாலிவுட் மாடல்கள் இருந்தன. அந்த மாடல்களை உருவாக்கிய டக்ளஸ் ஃபேர்ஃபாங்க்ஸ், எரால் ஃப்ளைன் ஆகிய ஹாலிவுட் நடிகர்கள் எம்ஜிஆருக்கு ஆதர்ச புருஷர்களானார்கள்.
டக்ளஸ் ஃபேர்ஃபாங்க்ஸ் நடித்த த மார்க் ஆஃப் ஜாரோ (1920) படம், ஒடுக்கப்பட்ட ஏழைகளுக்குக் குரல்கொடுக்கும், அநீதிக்காளாகும் பெண்களைக் காக்கும், கொடுங்கோல் மன்னர்களை அல்லது பிரபுக்களை எதிர்க்கும் ஒரு ராபின்ஹுட் பாத்திர வார்ப்பை வடிவமைத்தது. அதில் ஒரு காட்சியில் பெண்ணொருத்தியைப் பாலியல் சீண்டல் செய்யும் வில்லனை எங்கிருந்தோ வந்து குதித்த, முகமூடி அணிந்த ஃபேர்ஃபாங்க்ஸ் ஒரு வசீகரப் புன்னகையோடு தடுப்பார். மிகவும் நிதானமாக ஆனால் உக்கிரமும் துல்லியமும் தவறாத காலடிகளோடு அவர் எதிரியோடு வாள்சண்டை போடுவார். ஆண்மையும் வன்மையும் கொண்ட ஒரு வீரமகனின், பெண்மையை மதிக்கும், காக்கும் ஒரு தீரனின் வல்லமையை வெளிப்படுத்திய அந்தக் காட்சிக்குப் பல்லாயிரக் கணக்கில் ரசிகர்கள் உருவாயினர்.
அவர்களில் இளைமைக்கால எம்.ஜி.ராம்சந்தரும் ஒருவர். பிற்கால எம்ஜியாருக்கு ஃபேர்ஃபாங்க்ஸின் அந்த வசீகரக் காட்சி ஒரு வழிகாட்டியானது; எத்தனை படங்களில் எம்ஜியார் கதாநாயகிகளையும் பிற பெண்களையும் திடுதிப்பென்று தோன்றி காப்பாற்றியிருப்பார்!
ஹாலிவுட் பேசத் தொடங்கிய காலத்தில் ஃபேர்ஃபாங்க்ஸைத் தொடர்ந்து எரால் ஃப்ளைன் அந்தச் சூத்திரத்தையே தன் படங்களில் பின்பற்றினார். ஹாலிவுட்டின் பொற்காலத்தில் ஆட்சி செய்த எரால் ஃப்ளைன் புரட்சிக்காரனாக, ஏழைப் பங்காளனாக, ஆபத்பாண்டவனாக, ராபின்ஹுட்டாக தோன்றி பெரும் ரசிகப் பட்டாளத்தை உருவாக்கினார். அவருக்கு ஜோடியாக ஒலிவியா டி ஹாவில்லாண்ட் கதாநாயகியாக ஒன்பது திரைப்படங்களில் நடித்தார். எரால் ஃப்ளைனுக்கு அழகிலும் வசீகரத்திலும் ஈடுகொடுத்து அவர் நடித்தார்.
1938-;ல் வெளிவந்த ‘ராபின்ஹூட்டின் வீரதீரச் செயல்கள்’ என்ற எரால் ஃப்ளைனின் திரைப்படம் எம்ஜிஆருக்கான மாடலை வடிவமைத்தது. தன்னை வசீகரித்து மனதில் ஆழமாகப் பதிந்துபோன அந்தக் காட்சிகளை எம்.ஜி.ராமச்சந்திரன் 1950-களில் மீளுருவாக்கம் செய்து தனது கதாநாயகப் பிம்பத்தை கட்டமைத்துக் கொண்டார்
அந்தப் பொற்காலத்தின் கடைசி சாட்சியாக. அகாதெமி விருது வாங்கிய ஒலிவியா 21-ஆம் நூற்றாண்டு பிறந்த பின்னும் உயிரோடு இருந்து 2020-ஆம் ஆண்டு ஜூலை 26 அன்றுதான் காலமானர். தனது பிறந்தநாள் நூற்றாண்டைக் கொண்டாடிய நடிகை அவர்.
ஆங்கில இலக்கியத்திலும் தொன்மங்களிலும் காலங்காலமாகக் கொண்டாடப் பட்ட வீரமகன் ராபின்ஹுட். அவனை மையமாக வைத்து பல புதினங்கள், திரைப்படங்கள் பல உண்டு.
நாட்டிங்காம் மாளிகையில் பிரபுக்கள் சூழ ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு ஆட்சியாளர்களாக இருந்த டியூக்கிடமும், கொடுங்கோல் இளவரசனோடும் காரசாரமாக ராபின்ஹூட்டான எரால் ஃப்ளைன் பேசும் வசனம் பிரசித்தி பெற்றது. வந்தேறிகளான நார்மன் இனத்தைச் சேர்ந்த ஆட்சியாளர்களின் ஆட்சியில் வரிச்சுமைகளால் ஏழைகளான சாக்ஸன் இன மக்கள் கஷ்டப்படுகிறார்கள். “உங்களுக்கு எதிராக புரட்சி வெடிக்கும். மரணத்திற்குப் பதில் மரணம்தான்,” என்று வசனம் பேசுகிறார் எரால் ஃப்ளைன்.
மேலும் படிக்க: நடிகவேள் எம். ஆர். ராதா: சமூக சீர்திருத்த அக்கறை கொண்ட கலகக்காரன்!
சற்று நேரத்தில் அவரது நாற்காலியின் பக்கவாட்டில் ஒரு கத்தி பறந்துவந்து பற்றிக் கொள்ளும். சுதாகரித்த எரால் ஃப்ளைன் நாற்காலியைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு குதித்து தன்முதுகில் உள்ள அம்பறாத்தூணியிலிருந்து அம்புகளை எடுத்து எய்துகொண்டே கோட்டையை விட்டு ஓடும் காட்சியும், வழியெங்கும் எதிரிகளை அம்புமழைக்கு இரையாக்கி விட்டு குதிரையில் தாவி தப்பிக்கும் காட்சியும் இளைஞர் எம்.ஜி.ராம்சந்தரின் மனதில் ஆழமாகப் பதிந்திருந்தது. 1938-;ல் வெளிவந்த ‘ராபின்ஹூட்டின் வீரதீரச் செயல்கள்’ என்ற எரால் ஃப்ளைனின் திரைப்படம் எம்ஜிஆருக்கான மாடலை வடிவமைத்தது.
தன்னை வசீகரித்து மனதில் ஆழமாகப் பதிந்துபோன அந்தக் காட்சிகளை எம்.ஜி.ராமச்சந்திரன் 1950-களில் மீளுருவாக்கம் செய்து தனது கதாநாயகப் பிம்பத்தை, எதற்கும் அஞ்சாத தனது பிரதிமையைக் கட்டமைத்துக் கொண்டார். அதன்படியே எழுத்தாளர்களை, கவிஞர்களை எழுத வைத்தார். ஆரம்பக்காலங்களில் ஏஎஸ்ஏ சாமி, கலைஞர் கருணாநிதி, கவியரசர் கண்ணதாசனை, ரவீந்தர் ஆகியோரை வைத்து தன்பிம்பத்தை விஸ்வரூபமாக்கினார்.
“கரிகாலன் குறிவைத்தால் தப்பாது; தப்பும் என்றால் குறிவைக்க மாட்டான்,” என்ற ப்ஞ்ச் லைனோடு (பஞ்ச் லைன் டிரெண்டை முதலில் ஆரம்பித்தவரே எம்ஜிஆர்தான்) அரச சபையில் வில்லொடு தோன்றி அந்தரத்தில் துள்ளிக் குதித்து தனது நாற்காலியில் உட்காருவார் எம்ஜிஆர். கொடுங்கோலாட்சி ராணியை எதிர்கொண்டு “காட்டில் ஒளிந்திருக்கும் இந்தக் கரிகாலன் இதோ உங்கள் முன்னாடி நிற்கிறான்,” என்று சொல்லிவிட்டு, வரிச்சுமையால் கஷ்டப்படும் ஏழைகளுக்காக உரக்கப் பேசுவார்; அப்போது அவரது நாற்காலின் பக்கவாட்டில் கத்தியொன்று குத்தி நிற்கும்.
உடனே எழுந்து அம்புகளை ஏவிக் கொண்டே எதிரிகள் பின்தொடர தப்பிக்கும் காட்சி இடம்பெற்ற மர்மயோகி (1951) திரைப்படம் எரால் ஃப்ளைனை ரொம்பவே ஞாபகப்படுத்தியது.
அப்போதுதான் திரைப்படத்துறையில் தான் பயணிக்க வேண்டிய பயண எல்லைகளை எம்ஜிஆரால் தீர்க்கமாகத் தீர்மானிக்க முடிந்தது. தனக்கான வெற்றிச் சூத்திரம் என்னவென்று அந்தக் காலகட்டத்தில்தான் அவருக்குப் பிடிபட்டது.
மர்மயோகியைத் தொடர்ந்து மலைக்கள்ளன் (1954) வடிவில் ராபின்ஹுட் வந்தார். ஜனாதிபதி விருது வாங்கிய முதல் தமிழ்ப் படம் இது.
வாயில் கத்தியில் வைத்துக்கொண்டு முகமூடி அணிந்துகொண்டு மாடிச்சுவர் ஏறி கதாநாயகியைக் கண்டு உரையாடும் அந்தக் காட்சியில் பானுமதி ஆபத்தைப் பற்றி உங்களுக்கு கவலை இல்லையா என்பது போல் கேட்பார். “தோட்டக்காரனைக் கேட்டுவிட்டா வண்டு மலைரைத் தேடி வரும்?” என்று கலைஞர் எழுதிய வசனத்தைப் பேசுவார் எம்ஜிஆர்.
”காடுகளில் ஒளிந்து கொண்டு ஏழைகளுக்காகப் போராடுகிறீர்களே, இதனால் உங்களுக்கு என்ன வெகுமதி கிடைக்கிறது’ என்று கதாநாயகி ஒலிவியா கேட்பார்; அதற்கு “நீ இதைப் புரிந்து கொள்ளவில்லையா?” என்று எரால் ஃப்ளைன் எதிர்க்கேள்வி கேட்பார். ”கொஞ்சம் புரிகிறது,” என்று சொல்லும் ஒலிவியாவிடம் அவர் சொல்வார்: “இதுதான் என் வெகுமதி,” என்பார் எரால் ஃப்ளைன்.
இப்படி வீர்தீரத்திலும் காதலிலும் பெண்மையைப் போற்றுதலிலும் ஆழங்காற்பட்ட எம்ஜிஆர் சூத்திரம் அதுவரை மற்றவர்களுக்குச் சித்திக்க வில்லை. அதற்குப் பின்பு யாருக்கும் நூறுசதவீதம் கைகூடவில்லை.
தன்னைப் பாதித்த வெளிநாட்டுப் படங்களைத் தழுவிப் படமெடுக்க எம்ஜியார் தவறியதில்லை. ’நான் அரசன் என்றால்’, ‘ஜெண்டாவின் கைதி’ ஆகிய ஆங்கிலப் படங்களைத் தழுவி அவர் நாடோடி மன்னன் (1958) படத்தை இயக்கி நடித்தார். “படம் ஜெயித்தால் நான் மன்னன்; தோற்றால் நான் நாடோடி” என்ற அவரது வாசகம் பிரசிசித்தம் பெற்றது
மதுரை வீரன், நாடோடிமன்னன், மன்னாதி மன்னன் என்று வரிசையாக வந்த படங்களில் பெரும்வெற்றிகளை ஈட்டிய எம்ஜிஆர் ஃபார்முலாவும், அரசியலில் திராவிட இயக்கச் சிந்தனைகள் வரவேற்பு பெற ஆரம்பித்த காலகட்டமும் அவரை அடித்தட்டு மக்களிடம் கொண்டு சேர்த்தன. தங்களின் ஆபத்பாண்டவன், தங்களைப் போன்று பசிபட்டினியை அனுபவித்தவன் என்று பெருவாரியான அடித்தட்டு ஜனங்கள் எம்ஜிஆரைக் கொண்டாட ஆரம்பித்தனர்.
1960-களில் ஆரம்பித்த சமூகப் படங்களிலும் தனது மூல மந்திரத்தை, சூத்திரத்தைச் சிற்சில மாற்றங்களுடன் கடைப்பிடித்தார் எம்ஜிஆர். வாள் சண்டை, அம்புச் சண்டைக்குப் பதில் குத்துச் சண்டை, மல்யுத்தம், சிலம்பாட்டம், மான்கொம்புச் சண்டை, கோபுடா, செடிக்குச்சி என்ற வெவ்வேறு விதமான சண்டைக் காட்சிகள் இடம் பெற்றன; ஆனால் அவற்றில் ஒரு தார்மீகக் கடமை இருந்ததாகக் காண்பிக்கப் பட்டது; பெண்களின் மானங்காக்க, கொடுமைப்படுத்தப் படும் ஏழைகளைக் காக்க, அதிகார வர்க்கத்தின் ஆணவத்தை அடக்க அந்தச் சண்டைக் காட்சிகள் இடம்பெற்றன. அதனால் அந்தப் படங்கள் சோபித்தன; ஜொலித்தன.
தன்னைப் பாதித்த வெளிநாட்டுப் படங்களைத் தழுவிப் படமெடுக்க எம்ஜியார் தவறியதில்லை. ’நான் அரசன் என்றால்’, ‘ஜெண்டாவின் கைதி’ ஆகிய ஆங்கிலப் படங்களைத் தழுவி அவர் நாடோடி மன்னன் (1958) படத்தை இயக்கி நடித்தார். “படம் ஜெயித்தால் நான் மன்னன்; தோற்றால் நான் நாடோடி” என்ற அவரது வாசகம் பிரசிசித்தம் பெற்றது. ஆனால் மக்கள் அந்தப் படத்தை அமோகமாக வெற்றி பெறச் செய்து அவரை முடிசூடா மன்னனாக்கினார்கள்.
அதைப் போல செங்கிஸ்கான் என்ற ஆங்கிலப் படம்தான் அடிமைப் பெண்ணாக (1969) உருவானது. தனது இனத்தின் விடுதலைக்குப் போராடும் வேங்கையன் என்ற பாத்திரம் எம்ஜிஆரின் ஃபார்முலாவை முற்றிலும் பின்பற்றி படத்தை மெகா ஹிட்டாக்கியது.
ஆனால் எம்ஜிஆர் ஃபார்முலாவைக் குறைந்த அளவில் மட்டும் பயன்படுத்திய அவரது ரொமாண்டிக் காமெடி படமான அன்பே வா (1966) ஏவிஎம் தயாரித்த ஒரேவொரு எம்ஜிஆர் படம். அது கம் செப்டெம்பர் (1961) என்ற ஆங்கிலப் படத்தின் தழுவல். ஏற்கனவே அது 1964-இல் காஷ்மீர் கி காலி என்று இந்தி படமாக்கப்பட்டிருந்தது. அதில் ஷமி கபூரும் ஷர்மிளா தாகூரும் ஜோடியாக நடித்திருந்தனர்.
எம்ஜிஆரை வைத்து ஏசி திருலோக்சந்தர் இயக்கிய ஒரே படமும் அன்பே வா-தான். எம்ஜிஆரின் வழமை தவிர்க்கப்பட்ட ஒருசில படங்களில் இதுவும் ஒன்று. ”இது என் படமல்ல; ஏசி திருலோக்சந்தர் படம்” என்று எம்ஜிஆரே சொன்னார். ஆனாலும் படத்தின் இறுதிக்கட்டக் காட்சி ஒன்றில் சிம்லா கண்காட்சியின் போது ’சிட்டிங்புல்’ என்ற மாமிசமலை குஸ்தி பயில்வானோடு சண்டையிட்டு முடிவில் அவனை எம்ஜிஆர் அலாக்காகத் தூக்கி தோளில் வைத்து சிறிது நேரம் வைத்துவிட்டு கீழே போடும் காட்சி ரசிகர்களின் ஆரவாரங்களோடு முடிந்ததாகப் பலர் சொல்லியிருக்கின்றனர். அப்போது அவரது வயது 50-க்கு ஒன்று குறைச்சல். அந்தக் காட்சியில் எம்ஜிஆர் தூக்கிப் பிடித்தது ஒரு பயில்வானை மட்டுமல்ல; ஆபத்தில் சிக்கிய பெண்ணைக் காப்பாற்றும் எம்ஜியாரின் வழமையான வெற்றி நாயகப் பிம்பத்தையும்தான். .
மொத்தத்தில், தாயைப் போற்றும், தகப்பனை நேசிக்கும், சகோதரத்துவத்தை மதிக்கும், காதலியை உயிருக்கு உயிராகக் காதலிக்கும், ஏழைகளின் உணவை அருவருப்புக் கொள்ளாமல் தானும் உண்ணும், அவர்களுக்காக தன்னையே அர்ப்பணிக்கும், சிகரெட், மது போன்ற போதை பழக்கங்களை அறவே வெறுக்கும் ஒரு நல்லவனை, ஒரு வல்லவனை மூன்று தலைமுறைகள் ’எங்கள் வீட்டுப் பிள்ளை’ என்று சொல்லிச் சொல்லி நேசித்ததில், பூஜித்ததில் ஆச்சரியமில்லை.
ஒருவேளை அது இன்றைய மின்னணு சமூக ஊடகத் தலைமுறைக்கு எம்ஜிஆரின் அழுகைக் காட்சிகள் போல வேடிக்கையாகக் கூட இருக்கலாம்.
Read in : English