Read in : English
முதல்வர் மு.க.ஸ்டாலின் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனிடமிருந்து நிதித்துறையைப் பறித்து அதை தங்கம் தென்னரசிற்குத் தந்திருக்கிறார். பிடிஆர் இனி தகவல் தொழில்நுட்பத் துறையைக் கவனித்துக் கொள்வார். அதற்காக முதல்வருக்கு பிடிஆர் தன் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
சமீபத்தில் பிடிஆர் டேப்புகளை மலிவான அரசியல் என்று கூறி முதல்வர் மு.க.ஸ்டாலின் அதை நிராகரித்துள்ளார். பிடிஆர் பழனிவேல் தியாகராஜனும் அந்த டேப்புகள் போலி என்று நிரூபிக்க முயன்றிருக்கிறார். ஆடியோ விவகாரம் காரணமாக தமிழக நிதியமைச்சராக பிடிஆர் தொடர முடியாது என்பது தமிழக அரசியலுக்கு ஒரு சோக நாள்தான்.
அதற்கான காரணங்கள் இதோ:
பொதுவாக எந்த அரசியல்வாதியிடமும் இல்லாத மிகவும் வசீகரமான தொழில்முறைத் தற்குறிப்பு பிடிஆரிடம் இருக்கிறது. ஏதாவது ஒரு துறைசார்ந்த நிபுணத்துவம் என்பது இதழியல் துறையிலும் சரி, அரசியல் துறையிலும் சரி, பெரிதாக மதிக்கப்படுவதில்லை. ஆனால் முன்னேறிய நாடுகளில் தொழில்முறை சாதனை அரசியல் பதவிக்கு ஒரு பெரிய தகுதியாகப் பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் அரசியலில் களம் இறங்கும் தொழில் வல்லுநர்கள் பெரும்பாலும் ஏளனம் செய்யப்படுகிறார்கள். அவர்கள் அதிதீவிரமாக இல்லை அல்லது போதுமான அர்ப்பணிப்புடன் இல்லை; ஏனெனில் அவர்கள் எப்போது வேண்டுமானாலும் வேறொரு தொழிலுக்குத் திரும்பக்கூடும் என்றெல்லாம் அவர்களிடமே சொல்லப்படுகிறது.
தங்களுக்கும், அமைப்புக்கும் நன்றிக் கடன்பட்டுக் கிடப்பவர்களை, அமைப்பைத் தாண்டி வெளியே வாழ்க்கை ஏதும் இல்லாதவர்களையே தலைவர்கள் விரும்புவார்கள். எனவே பிடிஆர் போன்றவர்கள் ஒருபோதும் ஓர் அமைப்பின் முழுமையான மையத்தில் இருக்க மாட்டார்கள். அவர்கள் பல்வேறு பாகையளவுகள் கொண்ட விளிம்புநிலைகளிலே வைக்கப்படுகிறார்கள்.
ஒரு நிதியமைச்சராக, பிடிஆர் திமுகவின் நலத்திட்டங்களை நிறைவேற்ற முயன்ற போதும், பொருளாதாரத்தின் அடிப்படைகளை அவர் கடைப்பிடித்து வருகிறார்; பற்றாக்குறைகளை கட்டுக்குள் வைத்துள்ளார். அத்துடன், நலத்திட்டப் பலன்கள் உரிய பயனாளிகளுக்குச் சென்றடைய பிரயத்தனம் செய்திருக்கிறார்
ஆனால் அரசியல் பதவிகளுக்குள் அதிக திறனை, இலக்கின் தீர்க்கத்தைக் கொண்டுவர தொழில் வல்லுநர்களால்தான் முடியும். ஒரு நிதியமைச்சராக, பிடிஆர் திமுகவின் நலத்திட்டங்களை நிறைவேற்ற முயன்ற போதும், பொருளாதாரத்தின் அடிப்படைகளை அவர் கடைப்பிடித்து வருகிறார்; பற்றாக்குறைகளை கட்டுக்குள் வைத்துள்ளார். அத்துடன், நலத்திட்டப் பலன்கள் உரிய பயனாளிகளுக்குச் சென்றடைய பிரயத்தனம் செய்திருக்கிறார்.
ஒரு தலைமுறைச் சீர்திருத்தம் என்ற தனது வாக்குறுதியை பிடிஆர் முன்னெடுத்துச் செல்லவில்லை. என்றாலும் அவர் தந்திருக்கும் வெள்ளை அறிக்கை இன்னும் ஒரு முக்கிய ஆவணமாக உள்ளது. பயிற்சிபெற்ற ஒரு நிதித்துறை நிபுணராக, போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறைகளை சீர்படுத்தி சிறப்புடன் செயல்பட வைக்க அவர் விரும்பியிருந்தாலும், அந்தத் துறைகள் இன்னும் கைவைக்கப்படாமல்தான் இருக்கின்றன. எனினும் கொள்கை உருவாக்கத்திலும், நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதிலும் நிபுணத்துவம் வாய்ந்த பொருளாதார வல்லுநர்களை அவர் ஈடுபடுத்திருப்பது மாநிலத்திற்கு நீண்டகாலம் பயனளிக்கக் கூடியது.
மேலும் படிக்க: தமிழ்நாடு பட்ஜெட்: வாக்குறுதியை நிறைவேற்றும் திமுக!
தகுதியும் திறமையும் கொண்ட தொழில் வல்லுநர்களுக்கே உரிய பாணியைக் கொண்டிருக்கும் பிடிஆர், ஒருபோதும் மழுப்பல் சொல்லாடல் செய்ததில்லை. முகத்துக்கு நேராகவே கருத்துகளை விதந்தோதும் வழக்கம் கொண்டவர். அதிகாரமுள்ளவர்களுடன் மோதுவதற்குக்கூட அஞ்சாதவர். சம்பிரதாயமான விதிகளோடு சமரசம் செய்து கொள்ளாதவர்.
இந்தப் பத்திரிகையாளர் அவரை முதன்முதலில் சந்தித்தபோது, தேர்தலில் வெற்றி பெறுவதற்காகத் தான் பணம் வழங்கவில்லை என்று வெளிப்படையாகவே அவர் கூறினார். 2016-ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்னதாக அவர் அப்படிப் பேசினார். வாக்குக்குப் பணம் கொடுப்பது என்பது தமிழகத் தேர்தலின் அருவருக்கத்தக்க, வெட்கக் கேடான அம்சம் என்று நான் குறிப்பிட்டேன்.
இப்போது சர்ச்சையைப் பற்றவைத்திருக்கும் அந்த ஆடியோ ஃபைல்களில் பிடிஆர் பேசியதாகச் சொல்லப்பட்ட விசயத்தை அவர் சொல்லாமல் இருந்திருந்தால் கூட, அவர் அப்படிச் சொல்லியிருந்திருப்பார் என்று கற்பனை செய்து பார்ப்பது மிகவும் எளிது. நிர்வாகத்தில் நடக்கும் ஊழல் குறித்து பிடிஆர் பகிரங்கமாகவே பேசியிருக்கிறார். எடுத்துக்காட்டாக, ஒரு நேர்காணலில், மதுபான விற்பனை, வணிக வரிகள் மற்றும் சுரங்கம் ஆகியவற்றிலிருந்து கிடைக்க வேண்டிய மொத்த வருமானத்தில் பாதிகசிந்துப் போய்விடுகிறது; அந்த விரயம் மொத்த மாநில உற்பத்தியில் 2 முதல் 3 சதவீதமிருக்கும் என்று அவர் சொல்லியிருந்தார்.
திமுகவிலும், மற்ற கட்சிகளிலும் இருக்கும் வழமையான அரசியல்வாதிகளிடமிருந்து மிகவும் வேறுபட்ட பிடிஆர் முற்றிலும் வரவேற்கத்தக்க ஒரு முரண். சொல்லப் போனால் நமக்கு இன்னும் பிடிஆர்கள் வேண்டும், ஏராளமாக; சொற்பமாக அல்ல
ஸ்டாலின் மருமகன் சபரீசனுடனான நெருக்கம் பிடிஆரின் தற்போதைய பதவிக்கு பாதிப்பு ஏற்படக் காரணமாக இருக்கலாம், ஆனால் பிடிஆரின் குணாம்சத்தை வைத்துப் பார்த்தால், அவர் அந்த டேப்புகளில் கூறியதாகச் சொல்லப்பட்டதை அவர் எளிதாகவே சொல்லியிருந்திருக்கக்கூடும். இது அவரது ஆளுமையின் பண்புதான்; ஆனால் இது அரசியல் சூதாட்டத்தில் அவர் வைத்திருக்கும் பணயமும் கூட என்பது நகைமுரண். இந்தச் சேற்றில் தான் ஓரங்கம் இல்லை என்பதும், நினைத்தால் வேறொரு தொழிலுக்குத் தன்னால் தலைநிமிந்து மடைமாற்றம் செய்துகொள்ள முடியும் என்பதும் அவரது நிலைப்பாடு.
அரசியலில் குடும்பப் பின்னணி முக்கியம் என்றால், பிடிஆரின் குடும்பத்திற்கு அது பலமாகவே உள்ளது. திராவிட இயக்கத்தின் தொடக்கக் காலத்திலிருந்து அவரது குடும்பம் சம்பந்தப்பட்டது. இவரது தாத்தா சர். பொன்னம்பல தியாகராஜன் (பி.டி.ராஜன்) நீதிக்கட்சியில் பெரியாருக்கு முன்பே இருந்தவர்; ஆனால் அவர் ஒரு பெரியாரிஸ்ட் அல்ல. பிடிஆரின் சென்னை வீட்டில் இருக்கும் விநாயகர் கோயில் குறிப்பிடத்தக்க ஒரு சிறிய சின்னமாகும். ஒரு திராவிடவாதியாக, பகுத்தறிவு இயக்க விசுவாசிகளின் குடும்பத்தில் இருப்பது பிடிஆருக்கு செளகரியமாக இருக்கிறது.
மேலும் படிக்க: இலவச வாக்குறுதிகள் சமூகநலனுக்கானவையா?
இன்றைய திமுகவில் ஆதிக்கம் செலுத்துவது கட்சி பிரமுகர்களின் மகன்களும், பேரன்களும்தான். அந்த வரிசையில் பிடிஆரும் வருகிறார். ஆனால் அவர் வெளிப்படையான பக்தி உணர்வு கொண்டவர். சபரிமலை பக்தி நெருப்பை ஏற்றியவரின் பேரன் அவர். ஸ்டாலின் ஆட்சியில் மீண்டு வந்து மீண்டும் எழுச்சி பெறவும், பாரம்பரியம் மிக்க தனது குடும்பத்தை ஒதுக்கி வைக்க முடியாது என்று உலகத்திற்குக் காட்டவும் பிடிஆர் விரும்பியிருக்கலாம். அதற்கான உந்துசக்தியை, கடந்த காலத்தில் அவரது தந்தை பிடிஆர் பழனிவேல் ராஜனை மதுரையில் அழகிரி ஓரங்கட்டிய பழைய காயம் கொடுத்திருக்கலாம்.
திமுகவிலும், மற்ற கட்சிகளிலும் இருக்கும் வழமையான அரசியல்வாதிகளிடமிருந்து மிகவும் வேறுபட்ட பிடிஆர் முற்றிலும் வரவேற்கத்தக்க ஒரு முரண். சொல்லப் போனால் நமக்கு இன்னும் பிடிஆர்கள் வேண்டும், ஏராளமாக; சொற்பமாக அல்ல.
Read in : English