Read in : English
முற்றிலும் இல்லை என்பதை விட ஏதோ கொஞ்சம் என்பது சிறந்தது என்று கருத்து சொன்ன சென்னை உயர் நீதிமன்றம், மாநகரங்கள் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்துவதற்காக 499 தாழ்தளப் பேருந்துகளை வாங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருக்கிறது.
சென்னை, புறநகர்ப் பகுதிகள் மற்றும் பிற மாநகரங்களுக்கு தாழ்தள பேருந்துகளை மட்டுமே வாங்க வேண்டும் என்று தமிழக அரசை நிர்பந்திக்கக் கோரி மாற்றுத் திறனாளிகள் தொடர்ந்து நீண்டகாலம் நிலுவையில் இருந்த வழக்கு இதன்மூலம் ஏப்ரல் 18ஆம் தேதி முடிவுக்கு வந்துள்ளது.
சாலைப் போக்குவரத்துக் கழகம் (ஐஆர்டி) 900 மிமீ உயரமுள்ள தளம் கொண்ட உயர்தளப் பேருந்துகளை வாங்க அனுமதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் மொத்தம் 950 பேருந்துகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருக்கிறது. எதிர்காலத்தில் பேருந்துகளைக் கொள்முதல் செய்வது சட்டத்தின் தேவைகளுக்கு இணங்க இருப்பதை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும் என்று வைஷ்ணவி ஜெயக்குமார் எதிர் தமிழ்நாடு அரசு வழக்கில் தற்காலிகத் தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி. பரத சக்ரவர்த்தி ஆகியோர் பிறப்பித்த உத்தரவில் அறிவுறுத்தியுள்ளது.
மாற்றுத் திறனாளிகள் பேருந்துகளைப் பயன்படுத்தும் வகையில் பொறுமையுடன் நடந்து கொள்ளப் போக்குவரத்து ஊழியர்களுக்குப் பயிற்சியும், விழிப்புணர்வும் அளிக்கப்பட வேண்டும்
குறிப்பாக, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் ’இந்தியாவில் பரந்துபட்ட அணுகலுக்கான ஒருங்கிணைக்கப்பட்ட வழிகாட்டுதல்கள் மற்றும் தரநிலைகள்- 2021’ சொல்லும் விதிமுறைகள் கடைப்பிடிக்கப் படவேண்டும் என்று நீதிமன்றம் கூறியிருக்கிறது.
மேலும், மாற்றுத் திறனாளிகள் மற்றும் சக்கர நாற்காலிகளைப் பயன்படுத்துபவர்கள் பேருந்துகளைப் பயன்படுத்தும் வகையில் பொறுமையுடன் நடந்து கொள்ளப் போக்குவரத்து ஊழியர்களுக்குப் பயிற்சியும், விழிப்புணர்வும் அளிக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது.
மேலும் படிக்க: சிங்காரச் சென்னை 2.0: திட்டம் சரி, ஆனால் செயற்பாடுகள்..?
நூறு சதவீதம் தாழ்தளப் பேருந்துகளை வாங்குவதைத் தவிர்க்க தமிழக அரசு முன்வைத்த வாதத்திற்குப் பதிலளித்த நீதிமன்றம், பேருந்து நிறுத்தங்களின் வடிவமைப்பு, புனரமைப்பு, பழுதுபார்த்தல் அல்லது மேம்பாடு உள்ளிட்ட எதிர்காலச் செயல்பாடுகள் மாற்றுத்திறனாளிகளும் போக்குவரத்து வசதியைப் பயன்படுத்தும் இலக்குடன் இருக்க வேண்டும் என்று கூறியது.
மேலும், அதிக எண்ணிக்கையிலான உயர்மட்டப் பேருந்துகளை (வயதானவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் ஏறுவதற்கும் இறங்குவதற்கும் கடினமாக இருக்கும்) வாங்குவதற்கு தமிழக அரசுக்கு வழங்கப்பட்ட விதிவிலக்கு தற்போதைக்கு மட்டுமே; எதிர்காலக் கொள்முதல் நெறிமுறைப்படி அமைய வேண்டும். இந்த உத்தரவு தில்லியில் இதேபோன்ற ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவைப் போன்றது.
எதிர்காலத்தில் தாழ்தளப் பேருந்துகளுக்கு மட்டுமே சந்தை உண்டு என்பதை மோட்டார் வாகன உற்பத்தியாளர்களுக்கு (தமிழக போக்குவரத்துக் கழகங்களுக்கு பேருந்துகளை வழங்குவதில் ஆதிக்கம் செலுத்தும் அசோக் லேலண்ட் போன்ற நிறுவனங்களுக்கு) தெரிவிக்க வேண்டும்.
நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாளிலிருந்து இரண்டு வாரங்களுக்குள் 157 கூடுதல் தாழ்தளப் பேருந்துகளுக்கான டெண்டர் விடவேண்டும். மேலும் அரசு, ஐஆர்டி மற்றும் எம்டிசி ஆகியவற்றின் பிரதிநிதிகள் மட்டுமல்லாமல், மாற்றுத் திறனாளிகள் அமைப்பைச் சேர்ந்த ஒருவரும் இடம்பெறும் குழுவை அமைத்து அதன் மூலம் தாழ்தளப் பேருந்துகளை இயக்குவதற்கான வழித்தடங்கள் மற்றும் நேரங்களை அடையாளம் காண வேண்டும்.
பொது போக்குவரத்து வசதிக்காகச் செய்யப்பட்ட முக்கிய மேம்பாடுகளில் ஒன்று கைப்பேசி செயலி. இயக்கப்படும் பேருந்துகள் மற்றும் அனைத்து பேருந்து நிறுத்தங்களில் பேருந்துகளின் வருகை நேரம் ஆகியவற்றைப் பற்றி நிகழ்நேர பயணித் தகவல்களை வழங்கும் சேவையைச் செய்கிறது கைப்பேசி செயலி.
ஆண்ட்ராய்டு கைப்பேசிக்கான இந்தச் செயலி சென்னையில் ஆரம்பகட்டச் செயல்பாட்டில் இருக்கிறது. இந்த வசதி சென்னையைத் தவிர கோயம்புத்தூர், திருச்சி, மதுரை போன்ற அனைத்து முக்கிய தமிழக மாநகரங்களிலும் கிடைக்க வேண்டும். இதற்காக சலோ என்ற கைப்பேசி செயலியை சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் வாங்கியுள்ளது.
பொதுப் போக்குவரத்து வளர்ச்சியில் தமிழகம் மிகவும் முன்னேறிய மாநிலங்களில் ஒன்றாக இருந்தாலும், சென்னை மற்றும் பிற முக்கிய மாநகரங்களில் பேருந்து விரிவாக்கம் மெதுவாகத்தான் நிகழ்கிறது. நான்கு மாவட்டங்களில் பரந்து விரிந்துள்ள சென்னை பெருநகரப் பகுதியில் இயங்கும் பேருந்துகளின் எண்ணிக்கை சுமார் 35,000 என்ற அளவிலே பல ஆண்டுகளாக தேங்கி விட்டது. மேலும் ஒட்டுமொத்த பயணங்கள் மற்றும் பேருந்து பயணிகளின் விகிதாச்சாரம் பல ஆண்டுகளாக குறைந்து கொண்டே வருகிறது.
இந்த வழக்கில், மாநகர போக்குவரத்துக் கழகமும், தமிழக அரசும் சாலைகளின் பொருத்தமற்ற வடிவமைப்பு, மோசமாக வடிவமைக்கப்பட்ட வேகத்தடைகள், பொருத்தமற்ற பேருந்து நிறுத்தங்கள், அதிகக் கொள்முதல் செலவு மற்றும் பராமரிப்பு ஆகியவற்றை ஆகிய காரணங்களால் தாழ்தளப் பேருந்துகளை பயன்படுத்த முடியவில்லை என்று
குறிப்பிட்டன. இந்தியாவில் பல தசாப்தங்களாக, பயணிகள் பேருந்துகள் தயாரிப்பில் அசோக் லேலண்ட் மற்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவனங்களின் உலோகக் கட்டமைப்புகள் (சாஸி) பயன்படுத்தப்படுகின்றன. இவை சரக்குகளையே கொண்டு செல்வதற்கான தள உயரத்தைக் கொண்டுள்ளன. 1,200 மிமீ உயரம் கொண்ட, வடிவைக்கப்பட்ட இந்தப் பேருந்துக் கட்டமைப்புகளால் பலர் அரசுப் பேருந்துகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கிறார்கள்.
மாநில அரசுகளின் மீது தேவையற்ற செல்வாக்கைச் செலுத்தி பேருந்து வடிவமைப்பு மற்றும் வசதியை நவீனமயமாக்குவதை பாரம்பரிய பேருந்து உற்பத்தியாளர்கள் தடுக்கின்றனர் என்று சில போக்குவரத்து வல்லுநர்கள் குற்றம் சாட்டுகின்றனர். தமிழ்நாட்டில், ஒரு போக்குவரத்துக் கழகம் பொதுப் பேருந்தைப் பயன்படுத்துவதற்கான அதிகாரப்பூர்வமான காலவரம்பு இப்போது ஒன்பது ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது, இருப்பினும் பல பேருந்துகள் அந்த காலவரம்பைக் கடந்து இயங்கிக் கொண்டிருக்கின்றன.
பேருந்துகளின் பாரம்பரிய உற்பத்தியாளர்கள் மாநில அரசுகளின் மீது தேவையற்ற செல்வாக்கைச் செலுத்தி பேருந்து வடிவமைப்பு மற்றும் வசதியை நவீனமயமாக்குவதைத் தடுக்கின்றனர் என்று சில போக்குவரத்து வல்லுநர்கள் குற்றம் சாட்டுகின்றனர்
பராமரிப்புக்கான முக்கியத்துவம் இப்போது குறைவாக உள்ளது. சர்வதேச அளவில், உயர்தரத்தில் கட்டப்பட்ட ஒரு நகர்ப்புறப் பேருந்தின் ஆயுட்காலம் 20 ஆண்டுகளுக்கும் அதிகமாக இருக்கிறது.
தமிழகத்தில் சாதாரண வகுப்புப் பேருந்துகளில் பெண்களுக்கான இலவச பயணம் அறிமுகப்படுத்தப்பட்டது குறித்து, ’இலவசத்தை’ எதிர்ப்பவர்கள், தரமான பேருந்துகள் இல்லாதது மற்றும் குறைந்த பேருந்துகளின் எண்ணிக்கை ஆகிய பிரச்சினைகள் இந்த இலவச பயணத்திட்டத்தால் இன்னும் மோசமடையும் என்று கூறுகின்றனர்.
போக்குவரத்துக் கழகங்களின் இழப்பை ஈடுகட்டும் வகையில் அரசு மானியம் வழங்குகிறது என்பதை அந்த விமர்சகர்கள் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர்.
மேலும் படிக்க: சென்னையின் பொதுக்கழிப்பிடப் பிரச்சினை எப்படித் தீர்ப்பது?
மாநில அரசுகள் பொதுப் போக்குவரத்தை நவீனமயமாக்குவதற்கும் மலிவான கட்டணங்களுக்கும் அதிக செலவை ஒரு தடையாகக் காட்டுகின்றன. இப்போது காலநிலை நிதியை மையமாகக் கொண்டு உலகளாவிய விவாதம் நடைபெற்று வருகிறது. அந்த நிதி, பேருந்து நவீனமயமாக்கல் நடவடிக்கைகளுக்கு உதவி செய்ய வேண்டும்.
போக்குவரத்து மூலம் தான் புவி வெப்பமயமாதலைத் தூண்டும் கரியமில வாயு அதிகம் வெளியேற்றப்படுகிறது. சுற்றுச்சூழல் துறையில் ஒரு பிரத்யேக காலநிலை மாற்றப் பிரிவை முதன்முதலில் தொடங்கிய மாநிலங்களில் ஒன்றாக இருந்தாலும், தமிழ்நாடு இந்த வாய்ப்பை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை.
எரிபொருள், பார்க்கிங் மற்றும் சொத்து வரிகள் ஆகியவை சர்வதேச அளவில் பொதுப் போக்குவரத்தை ஊக்குவிக்க அடிக்கடி பயன்படுத்தப்படும் வருவாய் ஆதாரங்களாகும், ஆனால் தமிழ்நாட்டில் சில சுயநலக் கும்பல்கள் இந்த வழிமுறைகளைத் தடுக்கின்றன.
Read in : English