Site icon இன்மதி

வாத்தி – ஆசிரியர் அவதாரத்தில் தனுஷ்!

Read in : English

தனுஷின் படங்கள் என்றால் இப்படித்தான் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உண்டு. பெரிதாகப் படிக்காமல், வேலைக்குச் செல்லாமல், நாயகியின் பின்னால் சுற்றுவதே தன் பிழைப்பு என்றிருக்கும் அவரது பாத்திரங்கள். நண்பர்கள் என்ற போர்வையில் ஒரு வேலைவெட்டியற்ற கும்பல் அவரைச் சுற்றிவருவதும் நிச்சயம் இருக்கும்.

நாயகியைக் கைபிடிக்க வில்லனிடம் சவால் விட்டாலும், தன் குயுக்திகளால் அவரை வீழ்த்துவார் நாயகன். கடந்த ஆண்டு வெளியான ‘திருச்சிற்றம்பலம்’, ‘நானே வருவேன்’ ஆகியன, இந்த டெம்ப்ளேட்டில் இருந்து விலகி வேறுபட்ட தனுஷைக் காட்டியிருந்தன.

ஆனால், மேற்சொன்ன பார்முலாவை அடியொற்றியே அமைந்திருக்கிறதோ எனும் சந்தேகத்தை விதைத்தது ‘வாத்தி’ பட ட்ரெய்லர். இப்போது படமும் வந்துவிட்டது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகியிருப்பது அந்த சந்தேகத்தை மேலும் வலுவாக்கியது. உண்மையில், ‘வாத்தி’ வழக்கமான தனுஷ் படமாகத்தான் உள்ளதா?

‘என்னதான் பணத்தைச் சம்பாதித்தாலும் மரியாதையைப் பெற்றுத் தருவது கல்விதான்’ எனும் வார்த்தைகளைத் தாங்கி வந்திருக்கிறது ‘வாத்தி’

சார் எனும் மரியாதை!
‘என்னதான் பணத்தைச் சம்பாதித்தாலும் மரியாதையைப் பெற்றுத் தருவது கல்விதான்’ எனும் வார்த்தைகளைத் தாங்கி வந்திருக்கிறது ‘வாத்தி’ திரைப்படம்.

ஒரு சிற்றூர். அங்கு ஒரு ஆசிரியர் புதிதாக வந்து சேர்கிறார். பள்ளிக்கு மாணவ மாணவியர் வருவதில்லை. வறுமை உட்படப் பல்வேறு காரணங்களால் படிப்பைக் கைவிட்டவர்களை மீண்டும் வகுப்பறையில் அமர வைக்கிறார் அந்த ஆசிரியர். ஆனால், அவர்களைப் படிக்கவிடாமல், ஆசிரியரைக் கற்றுத் தர விடாமல் தடுக்கிறார் வில்லன். தடைகளை மீறி, அம்மாணவ மாணவியரை நல்ல மதிப்பெண் பெறவைத்து அவர்களது வாழ்க்கையை அந்த ஆசிரியர் மாற்றுகிறாரா, இல்லையா?
விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்கள் எப்படி வெற்றி பெறுவதோடு முடியுமோ, அதேபோல கல்வியை மையமாகக் கொண்ட படங்களின் கதையமைப்பும் பொதுவாக இப்படித்தான் இருக்கும்.

மேலும் படிக்க: ஃபார்ஸி: கள்ளநோட்டு கதையில் விஜய் சேதுபதி!

‘வாத்தி’யின் சாராம்சமும் இதுதான். ஆனாலும், காட்சிகளாகத் திரைக்கதையை வடித்த வகையில் வித்தியாசப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் வெங்கி அட்லூரி. அரசுப் பள்ளிகளின் முன்னேற்றத்தைப் பல வகையிலும் தடுத்தே தனியார் பள்ளிகள் ஒரு மாஃபியாவாக வளர்ந்தன. அந்த வளர்ச்சி நிகழ்ந்த காலத்தைச் சுற்றி வருகிறது ‘வாத்தி’.

தனியார் பள்ளியொன்றில் பிரதானப் பொறுப்பு வகிக்காத ஆசிரியர்களை, ஒரு திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் இருக்கும் காலிப் பணியிடங்களில் அமர்த்துவதாகச் சொல்லப்படும் காரணம் அதற்கு அடித்தளமிடுகிறது.
அவ்வாறு அரசுப் பள்ளிக்குச் செல்லும் மூன்றாம் தரநிலை ஆசிரியர் தான் நாயகன் தனுஷ் என்பதைத் தனியே விளக்க வேண்டியதில்லை. அவருக்கான கமர்ஷியல் பட பார்முலாவுக்குள் இந்த ஆசிரியர் அவதாரம் அடங்கவில்லை என்பதுதான் சிறப்பே!

எரிச்சலூட்டும் தருணங்கள்!
சமுத்திரக்கனி நடித்த ‘சாட்டை’, ‘அப்பா’ போன்ற படங்கள் பள்ளி மாணவர்களின் கல்விச் சிக்கலை, உளவியலைப் பேசியவை. ‘அடுத்த சாட்டை’ படம் கல்லூரி வாழ்வைச் சொன்னது. அவற்றிலெல்லாம் விடலைப் பருவத்தினரின் விளையாட்டும் கேலியும் கிண்டலும் பருவ ஈர்ப்பும் நிரம்பியிருந்தன. ‘வாத்தி’யில் ஆசிரியர்களாக வரும் தனுஷும் சம்யுக்தாவும் மட்டுமே காதலிக்கின்றனர். அதுவும் கூட, தலைவாழை விருந்தில் பரிமாறப்படும் ஊறுகாய் போன்றே திரைக்கதையில் ஒட்டியிருக்கிறது.

சூளையொன்றில் கொத்தடிமைகளாக இருப்பவர்களின் குழந்தைகளைப் பள்ளிக்கு வரவழைப்பதாக இயக்குனர் சற்குணத்தின் ‘வாகை சூட வா’ அமைந்திருக்கும். கிட்டத்தட்ட அதே சாயலில் அமைந்திருக்கும் வாத்தியின் கதை 2000ஆவது ஆண்டில் நடப்பதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. முந்தைய படங்களில் இருந்து வேறுபட்டு, மாணவ மாணவியர் அதிக மதிப்பெண் எடுக்கும் வகையில் பாடம் சொல்லிக் கொடுப்பதும் அவர்களைத் தேர்வெழுத வைப்பதும் நாயகனின் சாகசமாகக் காட்டப்பட்டுள்ளது.

வெவ்வேறு வேலைகள் செய்யும் மாணவ மாணவியரைப் பள்ளிக்கு வரவழைக்கும் நாயகனின் உத்திகள் பழைய படங்களை நினைவூட்டுகின்றன. அடுத்தடுத்த காட்சிகள் இப்படித்தான் இருக்கும் என்று யோசிக்கும் வகையிலேயே மொத்த திரைக்கதையும் அமைந்திருக்கிறது. இப்படியொரு கதையில் ராவணனாக, நரசிம்மாவாக, பாரதியாராக தனுஷ் வேடமிட்டு வருவது மேலும் ரசிகர்களை வெறுப்பேற்றுகிறது. நாயகனைச் சோகம் சூழும்போது மழை பெய்வது போன்ற ‘க்ளிஷே’க்களும் கூட இதில் அதிகம்.

பிளாஷ்பேக்கில் கதை நகர்வதால், தொடக்கத்திற்கும் முடிவுக்கும் இடையேயான இழை விளக்கப்பட்டிருக்க வேண்டும். அதிலும் லாஜிக் மீறல்கள் தலை நீட்டுகின்றன. மொத்தக் கதையிலும் நிரம்பியிருக்கும் செயற்கைத்தனத்தை உற்றுக் கவனித்தால், மேலும் பல குறைகளைச் சேர்க்க வேண்டியிருக்கும்.

உதிரும் கண்ணீர்!
குறைகள் பல இருந்தாலும், ‘வாத்தி’யில் இருக்கும் நிறைகள் தியேட்டரில் மக்களை அலைஅலையாகத் திரள வைக்கும் இயல்பு கொண்டவை.

பள்ளியை மையப்படுத்திய கதை என்றபோதும், ஆசிரியராக இருக்கும் நாயகனும் நாயகியும் வகுப்பறையில் காதல் வளர்க்கும் காட்சிகள் இடம்பெறவில்லை. சண்டைக்காட்சிகள் உண்டென்றாலும், சமகால தெலுங்கு, தமிழ் படங்களைப் போல அவை வன்முறையைக் கக்கவில்லை. பெரும்பாலான பாத்திரங்கள், காட்சிகள் ‘க்ளிஷே’வாக இருந்தாலும், படம் பார்க்கையில் கொஞ்சம் கூட போரடிக்கவில்லை.

மிக முக்கியமாக, நீங்கள் இளகிய மனதுடையவர் என்றால் குறைந்தபட்சம் ஐந்தாறு இடங்களில் கண்ணீர் உதிர்க்கும் அளவுக்குச் செறிவான காட்சிகளைத் தந்திருக்கிறார் இயக்குனர். காதுகளை நோக்கித்தான் கண்ணீர் வழியும் அளவுக்கு, அந்த நெகிழ்ச்சி ஆச்சர்யத்தையே தருவதாக இருக்கின்றன.

‘படிப்பு தேவையா என்ன’ எனும் தொனியில் அமைந்த தனது முந்தைய படங்களில் இருந்து விலகி ‘படிப்பு ரொம்ப முக்கியம் குமாரு’ என்று திரையை நோக்கி தனுஷை சொல்ல வைத்திருக்கிறது

ஒரு காட்சியில் தண்டோரா போடுபவர் தன் மகனைப் பார்த்து ‘அவருக்கு உதவி பண்ணா ஊரை விட்டு ஒதுக்கி வச்சுடுவாங்க’ என்று சொல்ல, அவரது மகனோ ‘ஏற்கனவே ஊருக்கு ஒதுக்குப்புறமாதான் இருக்கோம்; இன்னும் தூரமா போறதால என்ன நடந்திடும்பா’ என்று கேட்பார்.

ஏற்கனவே பார்த்துப் புளித்த காட்சியாகத் தோன்றினாலும், இது போன்ற காட்சிகளின்போது திரையை விட்டு கண்களை அகற்ற முடியவில்லை. காரணம் நாயகனாக நடித்த தனுஷ் முதல் சமுத்திரக்கனி, தணிகலபரணி, நரேன், சாய்குமார் உள்ளிட்டோரின் சிறப்பான நடிப்பு.

இந்தியில் வெளியான ‘சூப்பர் 30’, ‘3 இடியட்ஸ்’ உட்படச் சில படங்களின் சாயல் மிகச்சில காட்சிகளில் தென்படுகின்றன. அவற்றைத் தாண்டி, ‘எங்கவீட்டுப் பிள்ளை’ எம்ஜிஆரை நினைவூட்டும் வகையில் மடித்துவிடப்பட்ட அரைக்கை சட்டையோடு படம் முழுக்க தனுஷ் வந்திருப்பதும், ‘வாத்தியார்’ என்ற பெயரை ஒலிக்கவிட்டிருப்பதும் அவரது அரசியல் நிலைப்பாடு குறித்த கேள்விகளை எழுப்புகின்றன.

மேலும் படிக்க: தனுஷ் நடித்த மாறன்: தயவுசெய்து இந்த மாதிரி பத்திரிகையாளர் திரைப்படங்களை எடுக்காதீர்கள்!

தனியார் பள்ளிகளின் எதிர்ப்பு!
தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளின் பெருக்கம் 1985வாக்கில் தொடங்கியது என்றபோதும், அதற்கு முன்னரே இங்கு சில பள்ளிகள் இயங்கி வந்தன. தொண்ணூறுகளில் அரசுப் பள்ளிகளில் சேர்க்கை குறையும் அளவுக்குப் புற்றீசல் போல பல பள்ளிகள் தோன்றின. அவற்றால் பல கிலோமீட்டர் தூரம் மாணவர்கள் பயணிப்பது குறைந்தபோதும், அதிகப் பணம் செலவழித்தால் மட்டுமே நல்ல கல்வி கிடைக்கும் என்ற மனநிலையும் மக்கள் மத்தியில் வளர்ந்தது.

அதனைச் சுட்டிக்காட்டும் வகையில், ’வாத்தி’யில் நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியின் ‘தனியார்மயக் கொள்கை’யால் கல்வி வியாபாரமாக மாறியதாகச் சொல்லப்பட்டுள்ளது.

கொரோனா காலத்தில், ‘அதிகக் கட்டணம் தரமான கல்வி’ என்ற வாசகம் பல்லிளிக்கத் தொடங்கிவிட்டது. தனியார் பள்ளிகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்த முறைகேடுகள் செய்திகளாகின; விரைவில் அச்செய்திகள் முடக்கப்பட்டன. அதேநேரத்தில், அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களை எதிர்த்து அத்துமீறல்களில் மாணவர்கள் ஈடுபட்டது சமூகவலைதளங்களில் வைரலானது. தனியார் பள்ளிகள் தான் தரமானவை என்ற எண்ணத்தை விதைப்பதற்கான சதியோ இது என்ற விவாதம் எழுந்ததும் அந்த செய்திகள் அடங்கிப் போயின.

இன்று, தினமும் பள்ளிக்குச் சென்றாலே தேர்ச்சி பெற்றுவிடலாம் என்ற மனநிலை மாணவ சமூகத்தைத் தொற்றியுள்ளது. கஷ்டப்பட்டு படித்தாக வேண்டும் என்ற வேட்கை தளர்ந்துள்ளது. இந்தச் சூழலில் ‘வாத்தி’ போன்ற கமர்ஷியல் படங்களால் பெரிதாக மாற்றத்தைக் கொணர முடியாததுதான். ஆனால் மிகச்சிறு அதிர்வை மிகப்பரந்தளவில் ஏற்படுத்திட முடியும்.

அனைத்துக்கும் மேலே, ‘படிப்பு தேவையா என்ன’ எனும் தொனியில் அமைந்த தனது முந்தைய படங்களில் இருந்து விலகி ‘படிப்பு ரொம்ப முக்கியம் குமாரு’ என்று திரையை நோக்கி தனுஷை சொல்ல வைத்திருக்கிறது ‘வாத்தி’.

இன்றைய நட்சத்திர நடிகர்கள் சமூகப் பொறுப்புணர்வைச் சுமக்கிற திரைப்படங்களைத் தருகிறார்களா எனும் கேள்விக்கான சிறியதொரு பதிலாகவும் அமைந்திருக்கிறது. அரியது நிகழும்போது, குறைகளை மீறிக் கொண்டாடத்தானே வேண்டும்!

Share the Article

Read in : English

Exit mobile version