Site icon இன்மதி

திருவண்ணாமலையில் கொத்தடிமை நிலையில் வெளி மாநில பழங்குடிகள்

Read in : English

திருவண்ணாமலையில் கரும்பு அறுவடைப் பணிகளில் வெளி மாநிலப் பழங்குடிகள் குறைந்த கூலியில் அதிக நேரம் வேலையில் ஈடுபடுத்துவது அதிகரித்து வருகிறது. எந்த அடிப்படை வசதியும் அற்ற பகுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ள அவர்களுக்கு முறையான வசதிகள் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரும்பு அறுவடை காலம் துவங்கியுள்ளது. இந்த நேரத்தில் விளைந்த கம்பை வெட்டுவதற்கு, கூலித் தொழிலாளர்கள் அதிகம் தேவை. குறைந்த சம்பளத்தில் உள்ளூரில் தொழிலாளர்கள் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் உரிய நேரத்தில் மட்டுமே பணியாற்றுவர். இதனால், உள்ளூர் பணியாளர்களை கரும்பு ஆலைகள் தேடுவதில்லை.

குறைந்த கூலிக்கு இந்தியாவின் வடக்கு மற்றும் மத்திய பகுதியில் இருந்து, கரும்பு வெட்டும் பணிக்கு தொழிலாளர்களை தரகர்கள் மூலம் அழைத்து வருவது அதிகரித்துள்ளது. இப்படி அழைத்து வரும் தொழிலாளர்களிடம், மிகவும் குறைந்த கூலி வழங்குவதுடன், அதிக நேரம் வேலை வாங்குவது வாடிக்கையாக உள்ளது.

சுகாதார வசதியுடன் குடியிருப்பு என அடிப்படை வசதி எதையும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இது போன்று மோசடியாக நடத்தப்படும் கூலித் தொழிலாளர்களை பாதுகாக்க அரசு அமைப்பு எதுவும் நடவடிக்கை எடுப்பதில்லை.

குறைந்த கூலிக்கு இந்தியாவின் வடக்கு மற்றும் மத்திய பகுதியில் இருந்து, கரும்பு வெட்டும் பணிக்கு தொழிலாளர்களை தரகர்கள் மூலம் அழைத்து வருவது அதிகரித்துள்ளது

கிராமப்புறங்களில் கரும்பு வயல்வெளி பகுதி மற்றும் பாதுகாப்பற்ற காட்டு பகுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் தொழிலாளர்கள். ஒரு டன் கரும்பு வெட்ட, 1000 ரூபாய் கூலி என பேசப்படுகிறது. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு, 360 ரூபாய் என்ற கணக்கில் கூலி கிடைக்கிறது. கிட்டத்தட்ட 14 மணி நேரம் வேலை செய்தால் மட்டுமே இதை பெற முடியும்.

சில நாட்களாக இது போல் தொழிலாளர்களை தரகர்கள் அழைத்து வருவது திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகரித்துள்ளது. பல நூறு குடும்பங்களை சேர்ந்தோர் கரும்பு வெட்டும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குழுவாக பிரித்த பல இடங்களிலும் பணி செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க: தேர்வா?: கவுரவ விரிவுரையாளர்கள் குமுறல்!

திருவண்ணாமலை, கீழ் பென்னாத்துார் பகுதியில் இதுபோல பல குடும்பங்களை காண முடிந்தது. அடிப்படை வசதியற்ற, காட்டுப்பகுதியில் குழந்தைகளுடன் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு நாளும் காலை 7:00 மணி துவங்கி, மாலை 7:00 மணி வரை கரும்பு வெட்டும் பணியில் ஈடுபடுவர்.

வயலில் விளைந்த கரும்பை வெட்டுவது, அவற்றை அடுக்கி கட்டுவது, கட்டியதை டிராக்டர் மற்றும் லாரிகளில் ஏற்றுவது என அனைத்து பணிகளையும் செய்ய வேண்டும். கீழ் பென்னாத்துார் பகுதியில் மகாராஷ்டிரா மாநிலம், மல்லேவாடி, தண்டா பரளி பகுதிகளில் வசித்த பழங்குடி மக்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் லம்பாடி என்ற இனம் பழங்குடி பட்டியலினத்தில் உள்ளது. இந்த இனம், தமிழகத்தில் பின்தங்கியோர் பட்டியலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து கீழ் பென்னாத்தூர் வாசிகளிடம் கேட்டபோது, ‘குறைந்த கூலிக்கு கால நேரம் பார்க்காமல், கேள்வி கேட்காமல் பணி செய்வதற்காக, வெளி மாநிலங்களில் இருந்து குடும்பம் குடும்பமாக ஆண், பெண்களை குழந்தைகளுடன் அழைத்து வந்து தங்க வைக்கப்படுள்ளனர்.

இவர்களுக்கு, கழிப்பறை வசதி இல்லாததால், வெட்ட வெளிகளை கழிப்பிடங்களாக பயன்படுத்துகின்றனர். இதனால், இங்கு சுகாதார கேடு ஏற்பட்டுள்ளது. பணியாளர்களை அழைத்து வந்த புரோக்கர்கள், இவர்கள் தங்குவதற்கு தேவையான அடிப்படை வசதி எதையும் செய்வதில்லை. அதற்கு பொறுப்பும் ஏற்பதில்லை. அதிகாலை முதல், இரவு வரை கடுமையாக வேலை வாங்குவதில் மட்டும் குறியாக உள்ளனர். குறைந்த கூலிக்கு அதிக நேரம் வேலை வாங்குகின்றனர்…’ என்றனர்

வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு, முறைசாரா தொழிலாளர்களை அழைத்து வருவதை முறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

ஆதிவாசி தோழமை கழக அமைப்பாளர் கே.கிருஷ்ணன் கூறுகையில், ‘இதுபோன்ற பணிகளுக்கு பிற மாநில தொழிலார்களை அழைத்து வரும் போது, உரிய விதிமுறைகள் எதுவும் கடைபிடிக்கப்படுவதில்லை. அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பது பற்றி அரசு நிர்வாகங்களும் கவனித்து வலியுறுத்துவதில்லை.

பிரச்சினை இருப்பதாவே கண்டு கொள்ள மாட்டார்கள் அதிகாரிகள். இதை முறைப்படுத்த தமிழக மற்றும் மகாராஷ்டிர அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும்…’ என்றார். மேலும் கூறுகையில், ‘லம்பாடி போன்ற பழங்குடியின மக்கள், தமிழகத்தில் பின்தங்கியோர் பட்டியலில் உள்ளனர். வெளி மாநிலங்களில் பழங்குடி இன பட்டியலில் உள்ளனர். இவர்களை தரகர்கள் ஏமாற்றி அழைத்து வந்து வேலை வாங்குகின்றனர். அரசுகள் தலையிட்டு இதற்கு தீர்வு காண வேண்டும்…’ என்றார்.

வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு, முறைசாரா தொழிலாளர்களை அழைத்து வருவதை முறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். புரோக்கர்களை கட்டுப்படுத்த வேண்டும். மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதுடன் அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.

Share the Article

Read in : English

Exit mobile version