Site icon இன்மதி

சங்கீத கலாநிதி விருது பெறும் பம்பாய் ஜெயஸ்ரீ!

Read in : English

2023ஆம் ஆண்டுக்கான மியூசிக் அகாடமியின் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் இந்த அறிவிப்பை ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கும் இசை ரசிகர்களும், ஏன் பொது ரசிகர்களும் ஏராளம். பம்பாய் ஜெயஸ்ரீக்கு இந்த ஆண்டின் சங்கீத கலாநிதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சுதா ரகுநாதன் (2013ம் ஆண்டு), சஞ்சய் சுப்பிரமணியம்(2015), சௌம்யா(2019) என்று இருந்த நால்வரில் ஜெயஸ்ரீக்கு இப்போதுதான் அளிக்கப்பட்டிருக்கிறது.

வயலின் சிகரம், ஒப்பற்ற பல அரிய உருப்படிகளை எல்லா வகைகளிலும் (அதாவது வர்ணம், பாடல்கள், தில்லானா ஆகியவற்றில்) நமக்களித்துச் சென்ற லால்குடி ஜெயராமனின் பிரதான சீடர் ஜெயஸ்ரீ. சென்னைக்கு வருவதற்கு முன்னர் பம்பாய்வாசியாக இருந்ததால், பல வித்வான்களை உருவாக்கிய டி.ஆர்.பாலாமணி அவர்களிடமும் இசை பயின்றவர்.

ஹிந்து பத்திரிகையின் தேர்ந்த விமர்சகர் காலஞ்சென்ற எஸ்விகேயின் மனம் கவர்ந்த பாடகர். இவரது குரலில் கர்நாடக இசைக்கு உகந்த ஒரு சொகுசும் சுகமளிக்கும் தன்மையும் ஒருங்கே இருக்கும். அந்த விதத்தில் பாக்கியசாலி. இந்தத் தன்மைதான் அவரது ’வசீகரா’ என்ற மின்னலே திரைப்படத்தின் பாடலை ஒரு சூப்பர்ஹிட் ஆக நெடுநாட்களுக்கு சுற்றில் இருத்தி வைத்து நிலைபெறச் செய்தது.

மதுரை சோமு அவர்களின் ’மருதமலை மாமணியே’ எந்த அளவிற்கு பிரபலமானதோ. அதே விதத்தில் இந்த வசீகரா பட்டிதொட்டிகளில் மட்டுமேயன்றி மேல்மட்டத்தில் உள்ள இசை ஆர்வலர்களையும் கட்டிப் போட்டது.

போதாததற்கு, ஹிந்துஸ்தானி இசையையும் முறைப்படி கற்றவர் ஜெயஸ்ரீ. வீணை வாசிப்பதிலும் பரதநாட்டியத்தையும் பயின்றுள்ளவர். குரலைப் பராமரிப்பதில் இவர் போல வல்லுநர் இல்லை என்று கூடச் சொல்லி விடலாம். சகட்டுமேனிக்கு கச்சேரிகள் ஒத்துக் கொள்வதில்லை. மியூசிக் சீசனுக்கும் இது பொருந்தும். எனக்குத் தெரிந்தவரை, சென்ற சீசனில் இவர் எந்த இடத்திலும் கச்சேரி செய்யவில்லை.

பம்பாய் ஜெயஸ்ரீ குரலில் கர்நாடக இசைக்கு உகந்த ஒரு சொகுசும் சுகமளிக்கும் தன்மையும் ஒருங்கே இருக்கும்

ஜெயஸ்ரீயின் இசை மகத்துவம் அறிந்து இவரை வெளிநாடுகளில் பாட அழைத்துள்ளனர் பலர். இதன் காரணமாக உலக நாடுகள் அனைத்திலும் இவர் கச்சேரிகள் நிகழ்த்தியுள்ளார். ஹிந்துஸ்தானி இசை மேதைகளுடன் இணைந்து இவர் ஜுகல்பந்தி சிறப்பாக நடத்திக் காட்டியுள்ளார்.

கே.எஸ்.காளிதாஸ்

அன்னமாச்சார்யா கிருதிகளையும் திருக்குறள் செய்யுள்களையும் செவ்வனே இசை வடிவில் அளித்த பெருமையையும் உடையவராகிறார். 2021ல் இவருக்கு மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. தமிழக அரசின் கலைமாமணி விருது 2007லும், கிருஷ்ணகான சபாவில் சங்கீத சூடாமணி விருது 2005லும் இவரை வந்தடைந்துள்ளது.

அரிமளம் பத்மநாபன்

கே.எஸ்.காளிதாஸ் அவர்களுக்கு சங்கீத கலா ஆசார்யா விருது அளித்து, மியூசிக் அகாடமி தன்னையே கௌரவித்துக் கொண்டுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். இப்போது தான் இவர் போன்றோர் மியூசிக் அகாடமியின் கண்ணுக்குத் தெரிகிறார்கள் போலும். இதனை இவருக்கு அளிக்கப்பட்ட ஒரு சிறிய அடையாள விருதாகத்தான் கொள்ளத் தோன்றுகிறது. மஹாவித்வான் பழனி அண்ணா என்று அனைவரும் அழைத்து வந்த, காலஞ்சென்ற சுப்பிரமணியப் பிள்ளை எனும் அவரது குருவைக் கௌரவித்ததற்கு இணையாகும்.

மேலும் படிக்க: புல்லாங்குழல் தந்த பிரமிப்பு: பொன்னுசாமியின் அனுபவம்!

நிறைய சீடர்களை உருவாக்கியுள்ள பெருமை காளிதாஸைச் சாரும். இங்ஙனம் பாரம்பரியம் மிக்க செறிவான ’புதுக்கோட்டை பாணி’ என்பதனை மிருதங்க வாத்தியத்தில் முன்னெடுத்துச் சென்ற பெருமையைப் பற்றிக் குறிப்பிட்டே ஆக வேண்டும்.

மியூசிக் அகாடமி இசைத்துறை ஆர்வப் பயிற்சி முறை (மியூசிகாலஜிஸ்ட்) விருதை, முனைவர் அரிமளம் பத்மநாபனுக்கு வழங்க இருக்கிறார்கள். இவருடைய தந்தையார் வித்வான் பி.எஸ்.வி.சுப்பிரமணியத்திடம் இசையைக் கற்றுள்ளார். சின்னஞ்சிறு வயதிலேயே பொது நிகழ்ச்சிகளில் பாடத் தொடங்கியவர் பத்மநாபன்.

சற்குருநாத ஓதுவார்

1976ஆம் ஆண்டில் மத்திய அரசுப் பள்ளியில் இசை ஆசிரியர் பணியில் சேர்வதற்காகப் புதுச்சேரி வந்தவர், 1977ஆம் ஆண்டில் புதுச்சேரி அரசின் கல்வித் துறையில் இசை ஆசிரியராகப் பணியேற்றார். இன்று வரை தம் தமிழாய்வுப் பணிகளையும் இசைப் பணிகளையும் தொடர்ந்து கொண்டிருக்கிறார். தமிழின் முதல் ‘இசைத் தமிழ்க் கலைச் சொல் அகராதி’யின் தொகுப்பு ஆசிரியராகவும் உள்ளார்.

இசைத்தமிழ், நாடகத்தமிழ் குறித்து ஆய்வுப் பணிகள் செய்துள்ளார் அரிமளம் பத்மநாபன். தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகங்களில் இசைக் கூறுகள், சங்கரதாஸ் சுவாமிகளின் சந்தங்கள் ஓர் ஆய்வு, தமிழிசையும் இசைத்தமிழும், கம்பனில் இசைத்தமிழ், சங்கரதாஸ் சுவாமிகளின் நாடக இசைக் கருவூலம் ஆகியன இவர் வெளியிட்ட நூல்கள்.

சங்கீத கலா ஆசார்யா விருதை கே.எஸ்.காளிதாஸூக்கு வழங்கி மியூசிக் அகாடமி தன்னையே கௌரவித்துள்ளது; இதனை அவருக்கு அளிக்கப்பட்ட ஒரு சிறிய அடையாள விருதாகத்தான் கொள்ளத் தோன்றுகிறது

இவரது இசையமைப்பில் உருவானவை : ஆவணப்படங்கள் –2, தமிழிசைக் குறுவட்டு – 4, இசை, நாட்டியம், நாடகங்கள் – 10, மரியம்மை காவியம் – ஒரு சிறு பகுதி மட்டும் –36 பாடல்கள், திருவருட்பா பாடல்கள். இது தவிர பழந்தமிழிசையில் திருக்குறள் முழுமையும் பல மூத்த இசைக் கலைஞர்களுடன் பாடி ஆவணப் பதிவாக உருவாக்கி இருக்கிறார்,(அகில இந்திய வானொலி நிலையம், புதுச்சேரி) மற்றும் திருக்குறள் இசைத் தமிழ் – 56 குறட்பாக்கள் (குறுவட்டு), (தமிழ் மையம், சென்னை) வெளியிட்டிருக்கிறார். சென்னை மியூசிக் அகாடமி சிறந்த இசை விளக்க உரை விருதினை இவருக்கு அளித்துள்ளது.

வசந்தலக்ஷ்மி நரசிம்மாச்சாரி

டி டி கே விருது திருமுறைப் பண் விற்பன்னர் மேதகு சற்குருநாத ஓதுவார் அவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. டீக்கடைக்காரர் ஒருவர், தர்மபுரம் ஆதீனத்தின் ஒரு அங்கமெனப் போற்றக்கூடிய மேதகு தர்மபுரம் சுவாமிநாதனைப் பற்றித் தெரியுமா என்று சற்குருநாதனைக் கேட்ட கேள்வியினால் பிரமித்துப் போய், தானும் சுவாமிநாதனைப் போல் தெருவில் உள்ள சாமானியர்களுக்கு மத்தியில் அறியப்பட முயற்சிப்பேன் என்று தனக்குத்தானே உறுதியளித்துக் கொண்டு புறப்பட்டவர் தான் சற்குருநாதன்.

மேலும் படிக்க: பழனி சுப்புடுவுக்கு மிருதங்கம் கற்றுத் தர மறுத்த அப்பா!

பம்பாய் ஜெயஸ்ரீ

திருநாகேஸ்வரம் டி.ஆர்.சுப்பிரமணியம்

1970 மற்றும் 1980 களில் ஒரு முக்கிய தேவார ஆளுமையாக இருந்தவர் தான் இந்த தர்மபுரம் சுவாமிநாதன் எனும் மகான். சற்குருநாதன், முதல் படியாக, தொண்டையார்பேட்டையில் உள்ள பொற்கொல்லர் நண்பர் புவனேஸ்வர் மூலம், பி.அச்சுதராமனிடம் இசைச் சீடராகி, அவரது பயிற்சியில் ஐந்து ஆண்டுகள் இசை நுணுக்கங்களைக் கற்றார். 1993 இல் தனது 19 வயதில் ஆல் இந்தியா ரேடியோவில் 25 நிமிட திருமுறை நிகழ்ச்சியை வழங்கும் வாய்ப்பையும் பெற்றார். முறையாக இந்தப் பயிற்சியில் திருமுறை இசையைப் பயின்று, கடந்த 25 ஆண்டுகளாக, கற்பகாம்பிகை உடனுறை கபாலீஸ்வரர் கோவிலில் ஒதுவாராக இருந்து வருகிறார்.

அவரது புகழ் உலகம் முழுவதும் பரவியுள்ளது. ஒவ்வொரு பதினைந்து நாட்களுக்கும் ஒரு பெரிய நிகழ்வு ஒன்றாக பக்தர்கள் அவருடைய பாராயணத்தை எதிர்நோக்கும் நிகழ்வாக அமைந்து விடுகிறது. அவரது திருமுறை விளக்கங்கள் குறுந்தகடுகளாக வெளிவந்துள்ளன. ஆர்வமுள்ளவர்களுக்குப் புனிதமான வசனங்களையும் தொடங்கிவைத்து வருகிறார்.

தொடர்ந்து மாணவர்களுக்கு திருமுறை இசையினைக் கற்பித்தும் வருகிறார். கபாலீஸ்வரர் கோவிலில் அப்பர் பாசுரங்களைச் சமர்ப்பிக்கும் போது அவருக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுகிறது, ஏனெனில் அப்பர் தனது எளிமையான வசனங்களால் பக்தரின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார் என்று நம்புகிறார்.

பல்குலாங்கர அம்பிகா தேவி

இது தவிர நிருத்திய கலாநிதி விருது வசந்தலக்ஷ்மி நரசிம்மாச்சாரி அவர்களுக்கும், மற்றொரு டிடிகே விருது தவில் கலைஞர் திரு திருநாகேஸ்வரம் டி.ஆர்.சுப்பிரமணியம் அவர்களுக்கும், இன்னொரு சங்கீத கலா ஆசார்யா விருது பல்குலாங்கர அம்பிகா தேவி அவர்களுக்கும் வழங்கப்பட இருக்கிறது.

Share the Article

Read in : English

Exit mobile version