Read in : English
தமிழ்நாடு பட்ஜெட் நம்பிக்கை அளிக்கிறதா அல்லது எத்தகையத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து மாறுபட்ட கருத்துகள் வெளிவந்துள்ளன.
தமிழ்நாடு பட்ஜெட் குறித்து இன்மதி இணைய தளம் சார்பில் நடைபெற்ற விவாதத்தில் , ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை ஆளுநர் பேராசிரியர் ஆர்.காந்தி, பொருளாதார நிபுணர் வி.பி.ஆத்ரேயா, ஆய்வாளரும் ‘தெற்கும் வடக்கும்’ புத்தகத்தின் ஆசிரியருமான நீலகண்டன் ஆகியோர் தங்களது கருத்துகளைப் பதிவு செய்தனர். இன்மதி சார்பில் மூத்த பத்திரிகையாளர் ஜி. அனந்தகிருஷ்ணன் விவாதத்தை தொகுத்து வழங்கினார்.
பொருளாதார வளர்ச்சி, சமூகப் பாதுகாப்பு, பெண்களுக்கான கல்வி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் வசதி குறைந்த பிரிவினரின் நலன் ஆகிய ஐந்து முக்கிய முன்னுரிமைகளில் தமிழ்நாடு அரசு கவனம் செலுத்துவதை தமிழ்நாடு பட்ஜெட் வெளிப்படுத்தியுள்ளது. பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு சில தகுதி நிபந்தனைகளுடன் ரூ.1,000 உதவித்தொகையைச் செயல்படுத்துவதே இதன் முக்கிய அம்சமாகும்.
நிதிநிலை ஸ்திரப்படுத்தல் நோக்கி பட்ஜெட் பயணிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பற்றாக்குறையை, கடன் வாங்குவதை, செலவினங்களைக் கட்டுப்படுத்துதல் மற்றும் வருவாயைப் பெருக்குதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படுகிறது
நிதிநிலை ஸ்திரப்படுத்தல் நோக்கி தமிழ்நாடு பட்ஜெட் பயணிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார் காந்தி. பற்றாக்குறையை, கடன் வாங்குவதை, செலவினங்களைக் கட்டுப்படுத்துதல் மற்றும் வருவாயைப் பெருக்குதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படுகிறது.
மாநிலத்தின் நிதி நிலைமை குறித்து கவலைகள் ஓங்கியிருந்த கடந்த மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு பட்ஜெட் சில நம்பிக்கையை அளிக்கிறது, நிதி விவகாரங்களை நிர்வகிப்பதில் நல்ல அணுகுமுறைக்கு முன்னுரிமை அளிக்கிறது என்கிறார் அவர்.
மேலும் படிக்க:தமிழ்நாடு பட்ஜெட்: வாக்குறுதியை நிறைவேற்றும் திமுக!
இந்த பட்ஜெட் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பில்லை என்று கூறினார் ஆத்ரேயா, ஒன்றிய அரசு பல ஆண்டுகளாக மாநிலங்களின் அதிகார வரம்பில் அத்துமீறி நுழைந்து, வரி வருவாயில் மாநிலங்களுக்கு உரிய பங்கை மறுக்கிறது என்று 2021-22 ஆம் ஆண்டில் ஒன்றிய அரசை கடுமையாக விமர்சித்த பழனிவேல் தியாகராஜன், 2022-23 ஆம் ஆண்டில் தனது விமர்சன கருத்துகளை குறைத்துக் கொண்டு, இந்த 2023-24 ஆம் ஆண்டில் அமைதியாகிவிட்டார் என்றார்.
பெண்களுக்கான ரூ.1,000 உதவித் தொகை குறித்து அவர் கூறுகையில், பணவீக்கம், பணமதிப்பு குறைதல் போன்ற காரணிகளால், இந்த உதவியின் மதிப்பும் குறைகிறது என்கிறார். ஆனால் பள்ளிகளில் காலைஉணவுத் திட்டம் விரிவுபடுத்தப்படுவதை வரவேற்ற அவர் அதை அரசே செய்ய வேண்டுமே தவிர, அவுட்சோர்ஸிங் செய்யக் கூடாது. பொதுத்துறை தனியார் பங்கேற்பு (பிபிபி) இங்கே வேலை செய்யாது என்றார்.
நிதி ஸ்திரமாக்கல் என்று காந்தி கூறியதில் தனக்கு உடன்பாடு இல்லை என்று ஆத்ரேயா கூறினார். பல தடைகள் மற்றும் சிக்கல்களுக்கு மத்தியில், இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. பொதுவாக ஒரு வரவு செலவுத் திட்டத்தை ஆராய்ந்தால் அந்தத் துறைக்கு இவ்வளவு நிதி ஒதுக்கீடும், அந்தத் துறைக்கு இவ்வளவு நிதி ஒதுக்கீடும் கிடைக்கிறது என்ற விவரங்களை விட ஒட்டுமொத்த பட்ஜெட்டின் தன்மையை ஆராய்வது நல்லது என்பது ஆத்ரேயாவின் கருத்து.
ஒன்றிய அரசிடமிருந்து தமிழகத்திற்கு நிதிப் பகிர்வு குறைந்து வருவது குறித்து நீலகண்டன் பேசினார். இந்தப் பின்னணியில், தமிழக அரசு தனது சொந்த வருவாய் ஆதாரங்களை அதிகரிக்க வேண்டும். உண்மையில், மாநிலத்தின் வருவாயில் 17 சதவீதம் மட்டுமே ஒன்றிய அரசிடமிருந்து வருகிறது. ஆனால், அந்த நிதியும் சுருங்கிப் போவதால் தன்னைத் தற்காத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது தமிழக அரசு.
நிதி ஸ்திரப்படுத்தல் என்று பேராசிரியர் காந்தி கூறியதை அடைவதற்காக மக்கள்மீது வழக்கத்தை விட இரண்டு மடங்கு அதிகமான வரி விதிப்பதைத் தவிர மாநில அரசுக்கு வேறு வழியில்லை. உண்மையில், இந்த நிதி ஸ்திரப்படுத்தல் என்ன செலவில் செய்யப்படுகிறது? இது மக்களிடமிருந்து வசூலிக்கப்படும் அதிக வரிகளால்தான் செய்யப்படுகிறது. இது நியாயமா என்று அவர் கேட்டார்.
மாநிலத்தின் வருவாயில் 17 சதவீதம் மட்டுமே ஒன்றிய அரசிடமிருந்து வருகிறது. ஆனால், அந்த நிதியும் சுருங்கிப் போவதால் தன்னைத் தற்காத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது தமிழக அரசு
இதே கருத்தை எதிரொலித்த ஆத்ரேயா, நாட்டின் ஒட்டுமொத்த நிதி அமைப்பில் ஒன்றிய அரசுதான் குற்றவாளி என்றார். உதாரணமாக, ஒன்றிய அரசுக்கு வருவாய் ஈட்டித்தரும் மறைமுக வரிகளில் ஒன்றான ஜிஎஸ்டி வருமானத்தை, தற்போது சுருங்கி வரும் ஜிஎஸ்டி, இழப்பீட்டைத் தவிர, மாநிலங்களுடன் ஒன்றிய அரசு அதிகம் பகிர்ந்து கொள்வதில்லை. மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியாத செஸ் கூடுதல் வரி வருமானமும் ஒன்றிய அரசுக்கு உள்ளது.
இந்தச் சூழ்நிலையில், ரியல் எஸ்டேட் மற்றும் மதுபானம் மூலம் தமிழ்நாடு தனது சொந்த வருவாய் ஆதாரங்களை திரட்ட வேண்டியுள்ளது. ஆனால் அந்த வருவாயில் 50 சதவீதம் கசிவு இருப்பதாக பழனிவேல் தியாக ராஜன் கடந்த ஆண்டு கூறினார்.
இத்தனை தடைகளுக்கு மத்தியில், மக்கள்நலன் மற்றும் வளர்ச்சிக்கான தேவைகளையும், கோரிக்கைகளையும் சமநிலைப்படுத்தும் வகையில் தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உண்மையில், மாநில அரசு சிறந்த வரி வசூலைத் திட்டமிட வேண்டும் என்று கூறிய ஆத்ரேயா, மாநில அரசு தனது வரி வருவாயில் ஒரு பகுதியை ஒன்றிய அரசுக்கு வருவாய் ஈட்டித்தரும் மறைமுக வரிகளில் ஒன்றான அரசின் திட்டங்களுக்கு 50 சதவீத பங்களிப்பை வழங்க வேண்டியிருக்கிறது என்றார் ஆத்ரேயா.
மேலும் படிக்க: தமிழக பட்ஜெட்: மக்கள் கேட்டது கிடைக்குமா?
மாநிலங்களை மத்திய அரசு அநியாயமாக நடத்துகிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த காந்தி, மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடு நிதி ஆணையத்தின் பரிந்துரைகளின் பேரில் மட்டுமே செய்யப்படுகிறது என்றார். எனவே, நிதிப் பகிர்வு விஷயத்தில் ஒன்றிய அரசு தன்னிச்சையாக செயல்படுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. ஒன்றிய அரசிடமிருந்து மாநிலங்களுக்கு 17 சதவீத நிதி மட்டுமே கிடைக்கிறது என்ற நீலகண்டனின் கருத்தில் திருத்தம் செய்த காந்தி, மற்ற காரணிகளைக் கருத்தில் கொண்டால், அது 17 சதவீதம் அல்ல, 33 சதவீதம் என்பது தெளிவாகும் என்றார்.
மாநில அரசு தனது தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான பெண்களுக்கு ரூ.1000 உதவித் தொகையை நிறைவேற்றியுள்ள நிலையில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீட்டெடுப்பது குறித்து பட்ஜெட் மவுனம் சாதிக்கிறது. நாடு முழுவதும் உள்ள அரசு ஊழியர்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தின் தீமைகள் குறித்து உணரத் தொடங்கியுள்ளனர், இது பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் அவர்கள் அனுபவித்து வரும் அனைத்து நன்மைகளையும் பறிக்கிறது என்று ஆத்ரேயா கூறினார்.
இந்த விமர்சனத்திற்கு பதிலளித்த காந்தி, பல்வேறு பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ள அமைப்புசாராத் தொழிலாளர்கள் உட்பட பல்வேறு துறைகளில் உள்ள ஏராளமான தொழிலாளர்கள் மீது ஒன்றிய அரசு கவனம் செலுத்துகிறது. இந்நிலையில் மக்களின் ஒரு சிறு பகுதியான ஓய்வூதியர்களின் பிரச்சினைக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமா என்றார்.
எஸ்.சி/ எஸ்.டி நலனுக்கு ஊக்கமளிக்கும் பட்ஜெட் ஒதுக்கீடுகளைப் பாராட்டிய ஆத்ரேயா, சமூக நீதியை வலியுறுத்தும் அரசாங்கம் எஸ்.சி / எஸ்.டி மக்களின் நலனை உறுதி செய்வதில் ஆர்வமாக உள்ளது என்றார்.
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் உள்ள அனைத்து பள்ளிகளும் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் கொண்டு வரப்படும் என்ற பட்ஜெட் அறிவிப்பு ஆத்ரேயாவை இந்தக் கருத்தை தெரிவிக்க வைத்தது.
மதுரை, கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் திருச்சியில் ரூ.100 கோடி செலவில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான நவீன விடுதிகள் கட்டப்படும் என்றும், ரூ.100 கோடி ‘அண்ணல் அம்பேத்கர்’ பெயரிலான புதிய திட்டம் தொடங்கப்படும் என்றும் நிதிநிலை அறிக்கை தெரிவித்திருக்கிறது.
எஸ்.சி/ எஸ்.டி நலனுக்கு ஊக்கமளிக்கும் பட்ஜெட் ஒதுக்கீடுகளைப் பாராட்டிய ஆத்ரேயா, சமூக நீதியை வலியுறுத்தும் அரசாங்கம் எஸ்.சி / எஸ்.டி மக்களின் நலனை உறுதி செய்வதில் ஆர்வமாக உள்ளது
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு தொழில் முனைவோர் வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதே ‘அண்ணல் அம்பேத்கர்’ திட்டத்தின் நோக்கமாகும்.
ரூ.1000 கோடியில் தொடங்கப்படவுள்ள ‘அயோத்திதாச பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டம்’ நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள ஆதிதிராவிடர் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை உறுதி செய்வதோடு, விரிவான சமூக பொருளாதார வளர்ச்சியையும் ஏற்படுத்தும். தமிழ்நாடு பட்ஜெட்டில் இடம்பெற்ற இந்தத் திட்டங்கள் தலித்துகளின் மீதான அரசின் அக்கறையை வெளிப்படுத்துகிறது.
பருவநிலை மாற்ற விவகாரத்தைப் பொருத்தவரை, பட்ஜெட்டில் பெரிய அறிவிப்புகள் எதுவும் இல்லை. பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு இப்போதுதான் உருவாகத் தொடங்கியுள்ளது. இந்த விவகாரம் குறித்து அடிக்கடி விவாதிக்கப்பட்டால் மட்டுமே அது கொள்கை வடிவம் பெறும். அப்போதுதான் இந்த தலைப்பின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று நீலகண்டன் குறிப்பிட்டார்.
சுருக்கமாகச் சொல்வதானால், தமிழ்நாடு பட்ஜெட் மாநிலத்தை நிதிஸ்திரநிலைக்குக் கொண்டு செல்லும், வருவாய்ப் பற்றாக்குறையைக் குறைக்கும் ஒரு பொறுப்பான பட்ஜெட் என்றும் காந்தி கூறினார். இருப்பினும், ஆத்ரேயா, தமிழ்நாடு பட்ஜெட் பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தாது என்றார்.
Read in : English