Site icon இன்மதி

வெற்றிக்கொடி நாட்டிய நாட்டு நாட்டு!

Read in : English

ஆர்ஆர்ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடல் சிறந்த பாடலுக்கான அமெரிக்காவின் கோல்டன் குளோப் விருதை வென்று சாதனை படைத்துள்ளது. எளிமையான படைப்புகள் எப்போதும் பெருவாரியான ரசிகர்களைக் கவரும். எல்லா காலகட்டத்திலும் இதற்கு உதாரணங்கள் உண்டு.

அந்த வரிசையில் இடம்பெற்றுள்ளது ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் ‘நாட்டு நாட்டு’. ரசிகர்களை உற்சாகமூட்டும் பொழுதுபோக்காக மட்டும் கருதப்பட்ட ஒரு குத்துப்பாட்டு இப்படியொரு பெருமையை அடைந்தது எப்படி?

எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில், 2017 ஏப்ரலில் வெளியானது ‘பாகுபலி 2’. பல நாடுகளில் திரையிடப்பட்டது; புதிய சந்தைக்கான கதவுகளைத் திறந்து வைத்தது. ஆனால், அந்த வெற்றி எவ்வளவு கனமானது, பொறுப்பைத் தந்தது என்பது ராஜமவுலியின் ‘ஆர்ஆர்ஆர்’ பட முன்தயாரிப்பில் நன்றாகவே தெரிந்தது. திரைக்கதை வசனத்தை தயார் செய்தது முதல் படப்பிடிப்பின்போதும் அதற்குப் பின்னுமான பணிகளைத் திட்டமிட்டது வரை அனைத்திலும் சர்வதேச கவனத்தை ஈர்க்கும் வேட்கை நிரம்பியிருந்தது.

ஒவ்வொரு வரியாகச் சரிபார்த்து, மாற்றலாமா வேண்டாமா என்று விவாதித்து, அந்த பாடல் பதிவாக 19 மாதங்கள் பிடித்திருக்கிறது

உதாரணமாக, நாட்டு நாட்டு பாடலின் பின்னே கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டு கால உழைப்பு இருக்கிறது. 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திரைக்கதையில் அப்பாடல் இடம்பெறும் சூழலை உறுதி செய்திருக்கிறார் ராஜமவுலி. அதன்பிறகு, சுமார் 20க்கும் மேற்பட்ட இசைக்கோர்வையை உருவாக்கிக் காட்டியிருக்கிறார் இசையமைப்பாளர் கீரவாணி. இதுதான் ட்யூன் என்று முடிவானபிறகு, தனது பணியை நிறைவு செய்ய அரை நாள் மட்டும் எடுத்திருக்கிறார் பாடலாசிரியர் சந்திரபோஸ்.

ஆனாலும், ஒவ்வொரு வரியாகச் சரிபார்த்து, மாற்றலாமா வேண்டாமா என்று விவாதித்து, அந்த பாடல் பதிவாக 19 மாதங்கள் பிடித்திருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால், முதலில் தந்த 90 சதவீத வரிகளோடு கூடுதலாக 10 சதவீதத்தை இணைப்பதற்காக அத்தனை காலமும் ஒரு கர்ப்பிணி போல அப்பாடலைச் சுமந்திருக்கிறார் சந்திரபோஸ்.

மேலும் படிக்க: ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் திரைப்படம் இந்து தொன்மம் குறித்த படமா? இந்துத்துவா திரைப்படமா?

சுதந்திரப் போராட்டப் பின்னணியில் அமைந்த கற்பனைக் கதை ‘ஆர்ஆர்ஆர்’ என்பது நமக்குத் தெரிந்த விஷயம். அக்கதையில் இடம்பெற்ற அல்லூரி சீதாராமராஜு ஆந்திராவைச் சேர்ந்தவர், கொமரம் பீம் தெலங்கானாவைச் சேர்ந்தவர். அதனால், இரு பிரதேசத்திற்குமான மண் சார்ந்த விஷயங்கள் பாடல் வரிகளில் இருப்பதோடு, இரண்டு இளம் நாயகர்கள் ஒன்றாகத் திரையில் தோன்றி ஆடுவதை ரசிகர்கள் கொண்டாடும்விதமாகவும் இருக்க வேண்டுமென்று விரும்பியிருக்கிறார் ராஜமவுலி.

அதற்கேற்ப, துள்ளி விளையாடும் காளைகள் போல இரண்டு நாயகர்களும் ஆடுகின்றனர் என்றே தன் பாடலில் குறிப்பிட்டிருக்கிறார் சந்திரபோஸ். ஆந்திராவின் காரசாரமான உணவுச் சுவையையும் அதிரவைக்கும் இசை ரசனையையும் வார்த்தைகளில் இழைத்திருக்கிறார். அந்த உழைப்பின் பலனாகவே, திரையில் புழுதி பறக்க ஆடுவதற்கான ஓசைநயம் அமைந்தது. ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் மையக்கதை, பாத்திரங்களின் இயல்பு, திரைக்கதையின் சாராம்சம் ஆகியனவும் பாடலில் பிரதிபலிக்கப்பட்டிருந்தது.

இசை, பாடல் வரிகள் தாண்டி இப்பாடலைப் பாடிய ராகுல் சிப்லிகுஞ்ச், காலபைரவாவின் குதூகலமும் சேர்ந்தே ஈர்ப்பை அதிகமாக்குகிறது என்பதை நம்மால் உணர முடியும்.

யார் பெரியவர் என்ற போட்டித்தீ சாதாரண மனிதர்கள் மத்தியில் இலகுவாகப் பற்றிக்கொள்ளும்போது, பிரபலங்கள் பற்றி கேட்கவா வேண்டும். பொதுவாகவே இரண்டு முன்னணி நடிகர்கள் ஒன்றாகத் திரையில் தோன்றுவது குதிரைக்கொம்பு போன்றது. அதை மீறித்தான், உலகம் முழுக்க ‘மல்டிஸ்டார்’ திரைப்படங்கள் வருகின்றன.

அப்படி இரண்டு நடிகர்கள் ஒரே படத்தில் தோன்றும்போது அவர்கள் எதிரெதிராக மோதுகிறார்களா, ஒன்றாக இணைந்து நிற்கிறார்களா என்ற கேள்வி அவரவர் ரசிகர்களுக்கு எழும். ஒருவேளை ஒன்றாக நின்றால் இருவரும் சேர்ந்து நடனமாடுவார்களா, சண்டையிடுவார்களா என்பதுதான் ’இரண்டு கைகள் இணைந்துவிட்டால்..’ என்று ரசிகர்கள் உற்சாகக் கூத்தாடும் ஆனந்தத் தருணம்.

பாடல் வரிகள், இசை போன்று உற்சாகமூட்டும் வகையில் பிரேம் ரக்‌ஷித்தின் நடன வடிவமைப்பும் அமைந்ததுதான் இதில் சிறப்பு. நாட்டுப்புறப் பாணி நடன அசைவுகளை மேற்கத்திய சாயலில் ஆடுவதென்பது உண்மையிலேயே ஆகப்பெரும் சவால். அது எளிமையாக இருப்பதோடு இதுவரை காணாததாகவும் இருக்க வேண்டும். அதனைச் சாத்தியப்படுத்தி இருந்தார் பிரேம்.

இப்போதும் நாட்டு நாட்டு பாடலைப் பார்த்தால் ராம்சரணின் நேர்த்தியான ஆட்டத்தைவிட பாடலோடு ஒன்றிணைந்து மெய்மறந்த என்.டி.ஆரின் அசைவுகளே நம்மை அதிகமும் ஈர்ப்பதை உணர முடியும்

திரைக்கதையின்படி என்.டி.ஆருக்காக ராம்சரண் பாத்திரம் விட்டுக்கொடுப்பதாக காட்சிப்படுத்தப்பட்டது. கமர்ஷியல் சினிமா அளவுகோல்படி, உண்மையிலேயே ராம்சரணுக்கு ஈடாக நடனமாடும் திறன் கொண்டவர் என்.டி.ஆர். ஆனாலும், அப்படியொரு அம்சத்தை என்.டி.ஆர் ரசிகர்களும் ஏற்றுக்கொண்டனர் என்பதே பெரிய விஷயம். அந்த மனப்பான்மையே ‘மல்டிஸ்டார்’ படங்கள் உருவாக அடிப்படை.

இப்போதும் நாட்டு நாட்டு பாடலைப் பார்த்தால் ராம்சரணின் நேர்த்தியான ஆட்டத்தைவிட பாடலோடு ஒன்றிணைந்து மெய்மறந்த என்.டி.ஆரின் அசைவுகளே நம்மை அதிகமும் ஈர்ப்பதை உணர முடியும்.

தெலுங்கில் மட்டுமல்லாமல் தமிழ், இந்தி, கன்னடம், மலையாளத்திலும் இப்பாடல் மொழியாக்கம் பெற்றது. ‘நாட்டு கூத்து’ என்ற பெயரில் மதன் கார்க்கியால் தமிழில் ஆக்கம் செய்யப்பட்டது; பெரும் வரவேற்பையும் பெற்றது. ’ஆர்ஆர்ஆர்’ வெளியானபோது கலவையான விமர்சனங்கள் வெளியானாலும், படத்தில் இடம்பெற்ற சண்டைக்காட்சிகள், விஎஃப்எக்ஸ் தாண்டி ரசிகர்கள் திரையரங்கைத் தேட இப்பாடலே காரணமாக அமைந்தது. அப்படியொரு ரசனையும் ஈர்ப்புமே ‘கோல்டன் குளோப் விருது’ பெறவும் அடிப்படை ஆகியிருக்கிறது.

மேலும் படிக்க: இராஜமெளலி படத்தில் ஓரினச்சேர்க்கை உறவா?

கலைப்படைப்புகள் மட்டுமல்லாமல் கமர்ஷியல் படங்களும் கூட சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற முடியும் என்பதற்கு பல விருதுகள் உதாரணம். அந்த வகையில் அமெரிக்காவில் திரைப்படங்களுக்காக வழங்கப்படும் ‘ஆஸ்கர்’, தொலைக்காட்சி படைப்புகளுக்கான ‘எம்மி’ விருதுகள் போலவே இரண்டு பிரிவுகளிலும் விருதுகள் வழங்கும் ‘கோல்டன் குளோப்’ விழா ரொம்பவே பிரபலம்.

ஹாலிவுட் ஃபாரின் பிரஸ் அசோசியேஷன் (Hollywood Foreign Press Association – HFPA) சார்பில் இது வழங்கப்படுகிறது. பெரும்பாலும் இம்மூன்றிலும் விருதுகள் பெறுவது கவுரவமாக நோக்கப்படுவதோடு, அப்பட்டியல்களிலும் பெரிதாக வேறுபாடில்லாமல் இருப்பதைக் காண முடியும்.

ஒரு திரைப்படத்தின் சாராம்சத்தை தாங்கி நிற்கும் சிறந்த பாடலுக்கான பிரிவில் விருதை வென்றிருக்கிறது நாட்டு நாட்டு. டெய்லர் ஸ்விப்ட், ரிஹானா, லேடி காகா, சியோ பாபாவின் பாடல்களோடு போட்டியிட்டு இந்த பெருமையைப் பெற்றிருக்கிறது கீரவாணி குழு.

ஆங்கிலம் அல்லாத பிறமொழிகளுக்கான சிறந்த திரைப்படங்களுக்கான பட்டியலில் ’ஆர்ஆர்ஆர்’ இடம்பெற்றபோதும், அர்ஜெண்டினாவின் ‘1985’ அதனை வென்றிருக்கிறது. ஆனாலும், ஆஸ்கர் விருது பட்டியலில் ‘ஆர்ஆர்ஆர்’ இடம்பெறும் என்ற எதிர்பார்ப்புக்கும் இதுவே காரணமாகியிருக்கிறது. விருதை வென்றாலும் வெல்லாவிட்டாலும், பட்டியலில் இடம்பெறுவதே கூட இந்தியத் திரையுலகின் மீது உலகம் முழுக்கவிருக்கும் சினிமா ரசிகர்களின் கவனம் மேலும் கூர்மை பெற பாதை காட்டும். அதன் வழியே, புதிதாகப் பல பகுதிகளில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட இந்தியத் திரைப்படங்கள் திரையிடுவதற்கான வாய்ப்புகளும் அதிகமாகும். வருமானமும் பெருகும்.

அனைத்தையும் தாண்டி உலக அளவில் அங்கீகாரம் கிடைப்பதென்பது, நம்மூர் படைப்பாளிகளிடம் அதேபோன்று தானும் சாதிக்க வேண்டுமென்ற வேட்கையைத் தூண்டிவிடும். கோல்டன் குளோப் விருதை ‘நாட்டு நாட்டு’ வென்றது பற்றி குறிப்பிட்ட பாடலாசிரியர் சந்திரபோஸ், ஒரு கலைஞனுக்குப் பணம், புகழ், சொத்து அனைத்தையும் தாண்டி அங்கீகாரம்தான் மகிழ்ச்சி தரும் என்றிருக்கிறார். சிரஞ்சீவி உட்பட பலரும் தன்னை அழைத்து வாழ்த்துவதில் பெருமகிழ்ச்சி என்றதோடு, தனது வீட்டு வரவேற்பறையில் நிறைந்திருக்கும் விருதுகளைக் காட்டி ’நிலம், வீடு, பணத்தைக் காட்டிலும் இவையே எங்களுக்கான சொத்து’ என்று கூறியிருக்கிறார்.

ஒவ்வொரு ரசிகனும் ஆராதிக்க வேண்டும் என்பதற்காகத் தன்னையே மறந்து ஒரு படைப்பை உருவாக்கும் சந்திரபோஸ் போன்ற கலைஞர்களின் கூட்டுழைப்புக்கான பலனே நாட்டு நாட்டு பெற்றிருக்கும் கோல்டன் குளோப் விருது

ஒவ்வொரு ரசிகனும் ஆராதிக்க வேண்டும் என்பதற்காகத் தன்னையே மறந்து ஒரு படைப்பை உருவாக்கும் சந்திரபோஸ் போன்ற கலைஞர்களின் கூட்டுழைப்புக்கான பலனே ‘நாட்டு நாட்டு’ பெற்றிருக்கும் கோல்டன் குளோப் விருது.

இரண்டு சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கை நிகழ்வுகளை ஒரு பெரும் புனைவில் பொதித்த காரணத்தாலேயே எதிர்மறையாக விமர்சிக்கப்பட்ட ‘ஆர்ஆர்ஆர்’, இன்னும் சில நாட்களில் ஆஸ்கர் பட்டியலில் இடம்பெற்று பலரால் கொண்டாடப்படலாம். ’ஆர்ஆர்ஆர்’ படத்தை உருவாக்குவதற்கான ராஜமவுலியின் தன்னம்பிக்கைக்குப் பின்னும் அந்த காரணமே இருக்கிறது.

அப்படைப்பின் பின்னே பேருழைப்பு இருப்பதற்கான ஒரு சான்றாக அமைந்திருப்பதன் மூலம், அந்த வாய்ப்பினை அடையும் தொலைவை வெகுவாகக் குறைத்திருக்கிறது ‘நாட்டு நாட்டு’; அமெரிக்க மண்ணில் இந்தியக் கொடியை நாட்டியிருக்கிறது. அதற்காகவே மனதார வாழ்த்தலாம்!

Share the Article

Read in : English

Exit mobile version