Read in : English
ஆரம்ப சுகாதார வசதி, பள்ளிகளில் அதிக அளவில் மாணவர் சேர்க்கை போன்றவற்றில் தமிழ்நாடு சமூக வளர்ச்சிக்குப் பெயர் பெற்றது. இருப்பினும் பள்ளிக் கல்வியின் தரம், அடிப்படை கற்றல் விளைவுகளைக் கொண்டு அளவிடப்படும்போது தமிழ்நாட்டில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் தரம் போதுமானதாக இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளது.
“விளைவு” அடிப்படையிலான மாதிரியை விட, உள்கட்டமைப்பை உருவாக்குதல் மற்றும் கற்றலுக்கு உதவ வன்பொருளைச் சரிசெய்தல் ஆகியவை அடங்கிய ஒரு “உள்ளீட்டு” மாதிரியிலிருந்து பள்ளிக் கல்வியில் அரசாங்கம் கவனம் செலுத்துவது ஒரு முக்கியத் தடையாக உள்ளது.
விளைவு அடிப்படையிலான மாதிரிக்கு ஆசிரியர்களின் பயிற்சி மேம்படுத்தப்பட வேண்டும்; படைப்பாற்றல் நடவடிக்கைகளுடன் பயன்பாட்டு கற்பித்தல் முறைகள் செயல்படுத்தப்பட வேண்டும். இந்த விவகாரம் தற்போது தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் கட்டமைப்பு ரீதியாகவும் அமைப்பு ரீதியாகவும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
பல ஆய்வுகள் இந்தியாவில் கற்றல் சவால்களின் தீவிரத்தை விளக்கியுள்ளன. உலகளாவிய கற்றல் வறுமையின் நிலை: 2022 குறித்த உலக வங்கி அறிக்கை, இந்தியாவில் 2017 மற்றும் 2021 ஆண்டுகளுக்கு இடையில் தேசிய மதிப்பீட்டில் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கான சராசரி மொழி மதிப்பெண்கள் 319 லிருந்து 309 ஆகவும், சராசரி கணித மதிப்பெண்கள் 310 லிருந்து 284 ஆகவும் குறைந்துள்ளது. கணித மதிப்பெண்களில் சரிவு சுமார் 10% ஆகும்.
சமீபத்திய ஆண்டுகளில் ஆரம்பப் பள்ளிகளில் குழந்தைகளின் மோசமான செயல்திறனுக்குக் காரணம் கோவிட் தொற்றுநோய் என்று குற்றம் சாட்டப்பட்டாலும், பல தசாப்தங்களாக சுயாதீனக் கல்வியாளர்கள் மற்றும் பொதுக் கொள்கை வல்லுநர்கள் குழந்தைகளுக்கான அடிப்படை கற்றலின் தரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துமாறு அரசாங்கங்களை வலியுறுத்தி வருகின்றனர் என்பதே உண்மை.
தமிழ்நாட்டில் மூன்றாம் வகுப்பு மாணவர்களில் சுமார் 50% பேருக்கு தமிழைச் சரியாகப் படிக்கத் தெரியாது; 20% பேர் மட்டுமே மூன்றாம் வகுப்பு அளவிலான தமிழ் உரையைப் புரிந்துகொள்வதில் குறைந்தபட்ச தேர்ச்சியைக் கொண்டுள்ளனர்
அதிர்ஷ்டவசமாக, இப்போது அரசாங்கங்கள் அக்கறை கொண்டுள்ளன. அடிப்படை கற்றலை மேம்படுத்துவதற்கான திட்டங்களைத் தொடங்கியுள்ளன.
2021ஆம் ஆண்டில், மத்திய கல்வி அமைச்சகம் 2027ஆம் ஆண்டிற்குள் நாட்டில் உள்ள ஒவ்வொரு குழந்தையும் 3ஆம் வகுப்பை முடிக்கும்போது அடிப்படைக் கல்வியறிவு மற்றும் எண் அறிவை அடைவதை உறுதி செய்வதற்காக “புரிந்துணர்வு மற்றும் எண்ணுடன் வாசிப்பில் தேர்ச்சிக்கான தேசிய முன்முயற்சி (நிபுன்)” (National Initiative for Proficiency in Reading with Understanding and Numeracy (NIPUN)) தொடங்கியது. இதேபோல், 2025ம் ஆண்டுக்குள் எழுத்தறிவு மற்றும் எண்ணறிவை குழந்தைகளின் 8 வயதிற்குள் மேம்படுத்தும் நோக்கில் தமிழக அரசு 2022ம் ஆண்டு ஜூன் மாதம் “எண்ணும் எழுத்தும்” திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
மேலும் படிக்க: தமிழ்நாட்டில் கற்றல்திறன் குறைந்துவிட்டதா?
மத்திய அரசின் திட்டங்களும் தமிழக அரசின் திட்டங்களும் ஒரே மாதிரியானவை.
தமிழ்நாட்டில் தொடக்கப் பள்ளிக் குழந்தைகளின் கல்வியறிவு மற்றும் எண் கற்றலின் தற்போதைய நிலை மிகவும் மோசமானது என்று மூன்று ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. இந்தக் கண்டுபிடிப்புகள் பலரை ஆச்சரியப்படுத்தியிருக்கலாம். ஆனால் உண்மையில் இது நீண்ட காலமாக நிலவும் போக்குதான்.
நிபுன் திட்டத்தின் விளைவு மதிப்பீட்டின் ஒரு பகுதியாக, அடிப்படைக் கற்றல் ஆய்வு எனும் எஃப்எல்எஸ் (Foundational Learning Study – FLS) 2022 மார்ச்சில் நாடு முழுவதும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலால் (என்சிஇஆர்.டி) நடத்தப்பட்டது.
ஆய்வில் பங்கேற்ற 86,000 மாணவர்களில் 336 பள்ளிகளைச் சேர்ந்த 2,937 மாணவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். நாட்டில் மிகவும் குறைவான கற்றல் செயற்பாடுகளைக் கொண்ட முதல் 10 மாவட்டங்களில் திருச்சியும் ஒன்று.
தமிழ்நாட்டில் மூன்றாம் வகுப்பு மாணவர்களில் சுமார் 50% பேருக்கு தமிழைச் சரியாகப் படிக்கத் தெரியாது என்றும், 20% பேர் மட்டுமே மூன்றாம் வகுப்பு அளவிலான தமிழ் உரையைப் புரிந்துகொள்வதில் குறைந்தபட்ச தேர்ச்சியைக் கொண்டுள்ளனர் என்றும் எஃப்எல்எஸ் ஆய்வு வெளிப்படுத்தியிருக்கிறது.
மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் குழந்தைகளின் செயல்திறனுடன் ஒப்பிடும்போது தமிழ்நாட்டுக் குழந்தைகளின் செயல்திறன் மிகக் குறைவு.
தமிழ்நாட்டில் 3ம் வகுப்பில் 11.2% குழந்தைகளால் மட்டுமே கழித்தல் கணக்கைச் செய்ய முடிகிறது; 5ம் வகுப்பில் 14.9% குழந்தைகளால் மட்டுமே வகுத்தல் கணக்கைச் செய்ய முடிகிறது
எண் கற்றலில், தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களில் 23% பேர் மட்டுமே எண்களைக் கண்டறிதல், வாசித்தல், கூட்டல், கழித்தல், பெரிய எண்களை அடையாளம் காணுதல், காலண்டரில் உள்ள நாள், தேதி, மாதம் ஆகியவற்றை அடையாளம் காணுதல் ஆகியவற்றில் குறைந்தபட்ச தேர்ச்சியைக் கொண்டுள்ளனர் என்று என்.சி.இ.ஆர்.டி ஆய்வு கண்டறிந்துள்ளது.
சுமார் 52% மாணவர்களால் காலண்டரில் உள்ள நாள், தேதி மற்றும் மாதத்தைக் கூட அடையாளம் காண முடியவில்லை. இதற்கு நேர்மாறாக, பிற தென்மாநிலங்களைச் சேர்ந்த மூன்றாம் வகுப்பு மாணவர்களில் 40% க்கும் அதிகமானோர் எண் கற்றலில் குறைந்தபட்ச தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மேலும் படிக்க: சொந்த செலவில் ஊராட்சிப் பள்ளியை சீர் செய்த ஆசிரியர்கள்!
தமிழகத்தில் உள்ள தொடக்கப் பள்ளி மாணவர்கள் ஆங்கிலம் வாசிப்பதிலும் பின்தங்கியுள்ளனர். 29% மாணவர்களால் மட்டுமே ஒரு நிமிடத்தில் 35 வார்த்தைகளுக்கு மேல் படிக்க முடிந்தது. மேலும் 43% மாணவர்கள் அடிப்படை அறிவு மற்றும் திறன்களைக் கொண்டிருக்கவில்லை; ஒரு நிமிடத்தில் 0 முதல் 14 சொற்களை மட்டுமே அவர்களால் வாசிக்க முடிந்தது.
பெரும்பாலான மாணவர்களால் மிகவும் அடிப்படையான கிரேடு அளவிலான பணிகளை முடிக்க முடியவில்லை.
ஆனால் தேசிய அளவில் 17% பேர் மட்டுமே அடிப்படை அறிவு மற்றும் திறன்களைக் கொண்டிருக்கவில்லை; 54% பேர் ஆங்கிலத்தில் குறைந்தபட்ச தேர்ச்சியைக் கொண்டிருந்தனர்.
’இந்தியாவில் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்கணித நிலை அறிக்கை -2022’ எனும் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தின் போட்டித்திறன் நிறுவனம் வெளியிட்டுள்ள மற்றுமொரு ஆய்வில், தமிழ் வழியில் பயிலும் தமிழக மாணவர்கள் மோசமான செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளதாகவும், 9% மாணவர்கள் மட்டுமே உலகளாவிய தேர்ச்சி அளவை விட அதிகமாகவும், 48% மாணவர்கள் உலகளாவிலான ஓரளவு தேர்ச்சி நிலைக்கும் கீழே உள்ளனர் என்பதையும் வெளிப்படுத்தியது. தேர்ச்சி நிலை மற்றும் ஓரளவு தேர்ச்சி நிலை குறித்த உலகளாவிய அளவுகோல் முறையே 51% மற்றும் 6% ஆகும்.
பள்ளி உள்கட்டமைப்பு, கல்விக்கான அணுகல், அடிப்படை சுகாதாரம், கற்றல் விளைவுகள் மற்றும் ஆளுமை போன்ற ஐந்து முக்கிய கருப்பொருள்களில் பள்ளிக் கல்வியை மதிப்பிடுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 40 குறிகாட்டிகளில் 32 குறிகாட்டிகளில் (80%) தமிழ்நாடு குறைவான செயல்திறன் கொண்ட மாநிலமாக உள்ளது என்று போட்டித்திறன் நிறுவனம் 2021ஆம் ஆண்டு நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
தமிழகம் 6 குறியீடுகளில் (15%) மட்டுமே சிறப்பாகச் செயல்படுவதாகவும், இரண்டு குறிகாட்டிகளில் (5%) மட்டுமே எதிர்பார்த்த வரம்பிற்குள் செயல்படுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டு ஆய்வில், மேம்படுத்தப்பட்ட 39 செயல்திறன் குறிகாட்டிகளில் 15 குறிகாட்டிகளில் (38%) தமிழ்நாடு மிக அதிகமாகவும், 23 குறிகாட்டிகளில் (59%) வரம்பிற்குள் செயல்படுவதாகவும், ஒரு குறியீட்டில் (3%) மட்டுமே குறைவான செயல்திறன் கொண்டதாகவும் இருந்தது.
வருடாந்திர கல்வி நிலை அறிக்கையின் படி (ஏஎஸ்இஆர் 2022) (Annual Status of Education Report, (ASER 2022)), ஆரம்பப் பள்ளிக் கல்வியில் மிகக்குறைந்த வாசிப்பு நிலை (4.8%) கொண்ட மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாகும். தமிழ்நாட்டில் 3ம் வகுப்பில் 11.2% குழந்தைகளால் மட்டுமே கழித்தல் கணக்கைச் செய்ய முடிகிறது. 5ம் வகுப்பில் 14.9% குழந்தைகளால் மட்டுமே வகுத்தல் கணக்கைச் செய்ய முடிகிறது.
மேலும், மத்திய கல்வி அமைச்சகத்தின் 2019-20ஆம் ஆண்டின் செயல்திறன் தரவரிசை குறியீட்டெண் (பி.ஜி.ஐ) (Performance Grading Index (PGI)) அறிக்கை, கற்றல் விளைவுகள் மற்றும் கல்வியின் தரம் ஆகியவற்றின் அடிப்படையில் தமிழ்நாடு தென் மாநிலங்களில் மிகக்குறைந்த இடத்தில் இருப்பதைக் கண்டறிந்துள்ளது. இதேபோல், தமிழகத்தைச் சேர்ந்த 8 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிக்கலான கணிதப் பிரச்சினைகளைத் தீர்க்கும் திறன் இல்லை என்றும், அன்றாட வாழ்க்கையில் பகுத்தறிவு எண்களை அவர்களால் பயன்படுத்த முடியவில்லை என்றும் தேசிய சாதனை கணக்கெடுப்பு (என்ஏஎஸ்) 2021 கண்டறிந்துள்ளது. வரைபடத்தில் முக்கியமான வரலாற்று இடங்களையும் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.
மேலும், தமிழ்நாட்டிற்கான என்ஏஎஸ் அறிக்கை, பத்தாம் வகுப்பு மாணவர்களில் 2% பேர் மட்டுமே அறிவியலில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்றும், 8% பேர் கணிதம் மற்றும் சமூக அறிவியலில் திட்டமிட்ட கற்றல் விளைவுகளை அடைந்துள்ளனர் என்றும் கண்டறிந்துள்ளது. மீதமுள்ள மாணவர்கள் அடிப்படை மற்றும் அடிப்படைக்கு கீழான நிலைகளில் இருந்தனர்.
இந்தியாவில் சுமார் 90% ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள் தனியார் வசம் இருப்பதால், அவை சுயநலமிக்கதாக இருக்கின்றன
ஏஎஸ்இஆர் (ASER) சர்வே கண்டுபிடிப்புகளைப் பார்க்கும்போது, தமிழ்நாட்டின் தொடக்கப் பள்ளிகளில் மூன்றாம் வகுப்பு படிக்கும் குழந்தைகளின் வாசிப்புத் திறன் அளவு 2012ஆம் ஆண்டில் 8.4 சதவீதமாக இருந்து, 2022ஆம் ஆண்டில் 4.8 சதவீதமாகப் படிப்படியாகக் குறைந்து வருவதைக் காணலாம்.
அரசு மற்றும் தனியார் பள்ளிகளைத் தனித்தனியாகப் பார்த்தால், 2012ஆம் ஆண்டில் அரசுப் பள்ளிகளில் 8.5% ஆக இருந்த தேர்ச்சி விகிதம் 2022ஆம் ஆண்டில் 4.7% ஆகவும், 2012ஆம் ஆண்டில் 8.4% ஆக இருந்த தனியார் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 2022ஆம் ஆண்டில் 5% ஆகவும் குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், 2022ஆம் ஆண்டில் ஐந்தாம் வகுப்பு மாணவர்களில் 25.2% பேர் மட்டுமே இரண்டாம் வகுப்பு பாடத்தை படிக்க முடிந்தது; இந்த எண்ணிக்கை 2012ஆம் ஆண்டில் 30.3% ஆக இருந்தது.
இந்தியாவில் சுமார் 90% ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள் தனியார் வசம் இருப்பதால், அவை சுயநலமிக்கதாக இருக்கின்றன. அதனால் ஆசிரியர் பயிற்சி,கல்வி மற்றும் சேவை பயிற்சி முறைகளின் தற்போதைய மாதிரி அதிகக் குறைபாடுடையது. தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் குழந்தைகளைப் பன்முகக் கண்ணோட்டத்தில் அணுக வேண்டும். எனவே, புதிய கல்விக் கொள்கை-2020, நிபுன் மற்றும் எண்ணும் எழுத்தும் போன்ற திட்டங்கள் தொடக்கப் பள்ளி மாணவர்களின் அடிப்படைக் கற்றல், தேர்ச்சியை மேம்படுத்த உதவும் என்று நம்புவோம்.
தொடக்கப் பள்ளி மாணவர்களின் மோசமான செயல்திறனுக்கான முக்கியக் காரணங்களாக ஆசிரியர்கள் பற்றாக்குறை, கற்பித்தல் மற்றும் கற்றல் நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் ஒரு கட்டமைப்பின்மை ஆகியவை சொல்லப்படுகின்றன. எனினும் 20 குழந்தைகளுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தில், நாட்டிலேயே சிறந்த மாணவர்-ஆசிரியர் விகிதாச்சாரம் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. ஆனால் குழந்தைகளின் செயல்திறன் மோசமாக உள்ளது. மற்றொரு சிக்கல் என்னவென்றால், தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் வழக்கமான கற்பித்தல் அல்லாத நடவடிக்கைகளில் அரசாங்கத்தால் ஈடுபடுத்தப்படுகிறார்கள் என்பதுதான்.
மேலும், பள்ளி ஆசிரியர்களுக்குப் பொறுப்பும் இல்லை; பொறுப்பை நிர்ணயிக்கும் கட்டமைப்பும் இல்லை. போதிய ஆசிரியர் பயிற்சி இல்லாததால், கற்றல் மற்றும் வளர்ச்சிக்கு உகந்த மனநிலையுடன் குழந்தைகளை அணுகும் அளவுக்கு கல்வியாளர்களிடம் உத்வேகம் இல்லை. எனவே கற்பிக்கும் முறையில் புதுமையான முறைகளையோ அல்லது சுவாரஸ்யமான எடுத்துக்காட்டுகளையோ பயன்படுத்த எந்த முயற்சியும் இல்லை.
தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிப்பதிலும், அடிப்படைக் கற்றல் மீது குழந்தைகளுக்கு ஈர்ப்பு உண்டாவதை ஊக்குவிக்கும் புதுமையான வளங்களை ஆசிரியர்களுக்குக் கிடைக்கச் செய்வதிலும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் பலமாகச் செயற்படுவது போலத் தெரியவில்லை.
(கட்டுரையாளர் ஒரு பொருளியலாளர் மற்றும் பொதுக்கொள்கை நிபுணர்)
Read in : English