Read in : English
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே உள்ள முருகன்குடி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியப் நடுநிலைப் பள்ளியில் உள்ள இரண்டு அறைகளின் தரைத்தளத்தை தங்களது சொந்த செலவில் சீரமைத்துள்ளனர் அந்தப் பள்ளி ஆசிரியர்கள்.
கடலூர் மாவட்டம் நல்லூர் ஒன்றியம் முருகன்குடி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி 1926ஆம் ஆண்டில் தொடக்கப் பள்ளியாகத் தொடங்கப்பட்ட பள்ளி தற்போது நடுநிலைப் பள்ளியாகத் திகழ்கிறது. முருகன்குடியையும் அதைச் சுற்றியுள்ள சில கிராமங்களையும் சேர்ந்த 234 மாணவ, மாணவியர் தற்போது இந்தப் பள்ளியில் படித்து வருகின்றனர்.
இப்பள்ளியில் தலைமை ஆசிரியர் உள்பட 7 நிரந்தர ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இதுதவிர பகுதி நேர ஆசிரியர்களாக 3 பேரும் தற்காலிக ஆசிரியர்களாகப் பணிபுரிகின்றனர். அனைத்து ஆசிரியர்களும் பள்ளி மாணவர்களுக்கு நல்ல கல்வியை வழங்குவதில் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படுகின்றனர்.
பள்ளி தரமாகச் செயல்படுவதால் பள்ளியில் மாணவர் எண்ணிக்கை இந்த அளவுக்கு உள்ளது. கொரானா காலத்திற்குப் பிறகு, தனியார் பள்ளிகளில் படித்த சில மாணவர்கள் இந்த அரசுப் பள்ளியில் சேர்ந்துள்ளனர் என்கிறார் பள்ளித் தலைமை ஆசிரியர் ஜே. விஜி ஆனி.
ஆசிரியர்களின் உதவிக்கரத்தால் ரூ.75 ஆயிரம் பணம் சேர்ந்தது. இதை வைத்து இந்தப் பள்ளியில் தரைத் தளமும் மற்ற பூச்சு வேலைகளும் செய்யப்பட்டன. தற்போது சீரமைக்கப்பட்ட வகுப்பறைகளில் வகுப்புகள் நடைபெறத் தொடங்கியுள்ளது
இந்தப் பள்ளியில் மூன்று கட்டங்கள் உள்ளன. அதில் பழைய கட்டத்தில் தரைத்தளம் பெரிதும் சேதமடைந்து இருந்தது. இதனால், வகுப்பறையில் தரையில் அமர்ந்து படிக்க மாணவர்கள் சிரமப்பட்டனர். மழை காலம் என்றால் கேட்கவே வேண்டாம். பெரிய பிரச்சினையாக இருந்தது. இந்தப் பிரச்சினையை தாங்களே சொந்த செலவில் சரி செய்யலாம் என்று இந்தப் பள்ளி ஆசிரியர்கள் முடிவு செய்தனர். அதையடுத்து, அவர்கள் சொந்தப் பணத்திலிருந்து இதற்காக பணத்தை வழங்கினார்கள்.
ஏற்கெனவே இந்தப் பள்ளியில் பணிபுரிந்து வேறு பள்ளிகளுக்கு மாறுதலாகிச் சென்ற ஆசிரியர்களும் இந்தப் பணிக்கு உதவ முன்வந்தனர். இப்படி ஆசிரியர்களின் உதவிக்கரத்தால் ரூ.75 ஆயிரம் பணம் சேர்ந்தது. இதை வைத்து இந்தப் பள்ளியில் தரைத் தளமும் மற்ற பூச்சு வேலைகளும் செய்யப்பட்டன. தற்போது சீரமைக்கப்பட்ட வகுப்பறைகளில் வகுப்புகள் நடைபெறத் தொடங்கியுள்ளது.
இந்தப் பள்ளியின் மேம்பாட்டுக்காகத் தங்களது சொந்தப் பணத்தைச் செலவிட்ட ஆசிரியர்கள் தங்களது பெயர் விவரங்கள் வருவதைக்கூட விரும்பவில்லை என்பது பாராட்டத் தகுந்த விஷயம்.
இந்தப் பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு கழிப்பறை வசதி இல்லாததால், மாணவர்களுக்குத் திறந்த வெளிக் கழிப்பிடம்தான் ஒரே வழி. மாணவிகள் 200 மீட்டர் தூரத்தில் உள்ள வெள்ளாற்றங்கரைக்குச் செல்ல வேண்டிய நிலைமை இருந்து வந்தது. இதுகுறித்து கிராமசபைக் கூட்டங்களிலும் அதிகாரிகளிடமும் மனு கொடுத்தும் உடனடியாக எந்த நடவடிக்கையும் இல்லை.
இந்த நிலையில் இந்தப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பில் படித்து வரும் ம. மதிவதனி என்ற மாணவி, இதுகுறித்து தமிழக முதல்வர்களுக்குக் கடிதம் எழுதினார். இதை அடுத்து, அந்தப் பள்ளியில் கழிப்பறை கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். தொழிலாளர் துறை அமைச்சர் சி.வெ. கணேசன் டிசம்பர் கடைசி வாரத்தில் பள்ளியைப் பார்வையிட்டு, அந்தப் பணிகளைத் தொடங்கி வைத்தார்.
பள்ளியில் கழிப்பறை வசதி கோரி முதல்வருக்குக் கடிதம் அனுப்பிய மாணவி மதிவதனியையும் மாநில அளவில் ஓவியப் போட்டியில் பங்கேற்ற பள்ளி மாணவி பா. மோகனப்பிரியாவையும் அமைச்சர் பாராட்டினார்.
இந்தப் பள்ளியில் ரூ.12 லட்சம் செலவில் கழிப்பறைகள் கட்டப்பட்டு வருகின்றன. விரைவில் அந்தப் பணிகள் முடிந்துவிடும். கழிப்பறைகள் கட்டப்பட்டு விட்டால் இந்தப் பள்ளி மாணவ, மாணவியருக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
ஆசிரியர்களின் கடுமையான உழைப்பு, முன்னாள் மாணவர்களின் பங்களிப்பு, முருகன்குடி தாய் பள்ளி வளர்ச்சி குழு, பள்ளி மேலாண்மை குழு, திருவள்ளுவர் தமிழர் மன்றம், செந்தமிழ் மரபு வழி வேளாண் நடுவம், ஊர் பொதுமக்கள், பெற்றோர்கள் என பல்வேறு தரப்பினர் இப்பள்ளியின் வளர்ச்சிக்கு காரணமாக இருக்கிறார்கள் என்கிறார் முருகன்குடியைச் சேர்ந்தவரும் தமிழ் தேசியப் பேரியக்கத்தின் மாநிலத் துணைத் தலைவருமான க. முருகன்.
இந்தப் பள்ளிக்கு உள்ள மற்றொரு பிரச்சினை போதிய வகுப்பறைகள் இல்லாததுதான். இதனால் இரண்டு வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் திறந்த வெளியில் அமர்ந்து படிக்க வேண்டிய நிலை உள்ளது
இந்தப் பள்ளிக்கு உள்ள மற்றொரு பிரச்சினை போதிய வகுப்பறைகள் இல்லாததுதான். இதனால் இரண்டு வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் திறந்த வெளியில் அமர்ந்து படிக்க வேண்டிய நிலை உள்ளது.
பள்ளியின் மொத்தப் பரப்பளவு 3 ஆயிரம் சதுர அடிக்குக் குறைவாக உள்ளதால் புதிதாக கட்டடம் எழுப்புவதற்கு போதிய இடமில்லாத சூழ்நிலை உள்ளது. இதுகுறித்து பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் தமிழ்மொழி கிராம சபையில் கோரிக்கையை முன்வைத்தார்.
இப்பள்ளியில் போதிய இடவசதியின்றி வகுப்பறைகள் பற்றாக்குறை இருப்பதை எடுத்துச் சொல்லி பள்ளி மேலாண்மை குழு, தமிழக உழவர் முன்னணி, தமிழ்த்தேசியப் பேரியக்கம், மகளிர் ஆயம், திருவள்ளுவர் தமிழர் மன்றம், செந்தமிழ் மரபுவழி வேளாண் நடுவம், முருகன்குடி தாய்ப் பள்ளி வளர்ச்சி குழு, தமிழக இளைஞர் முன்னணி ஆகிய அமைப்புகள் பள்ளிக்கு வந்த தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசனிடம் இதுகுறித்து கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
பள்ளியின் மேல்தளத்தில் கூடுதலாக இரண்டு புதிய வகுப்பறைகளைக் கட்டித் தர நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதி அளித்துள்ளார். புதிய வகுப்பறைகளும் கட்டப்பட்டுவிட்டால், இந்தப் பள்ளியில் மாணவர்கள் திறந்தவெளியில் படிக்க வேண்டிய நிலைமை தொடராது என்கிறார் முருகன்.
Read in : English