Site icon இன்மதி

புற்றுநோயைக் குணப்படுத்தும் கீரைகள்!

Read in : English

உணவே மருந்து என்ற பழமொழியை கேள்விப்பட்டிருப்போம். அப்படி நமது உணவில் அன்றாடம் தவிர்க்க முடியாத ஒரு பொருளாக கட்டாயம் கீரை இருக்க வேண்டும் என அறிவுறுத்துவதுகின்றனர் மருத்துவர்கள். தினமும் உணவில் கீரைகளை எடுத்துக் கொண்டால் நோய்கள் அண்டாமல் உடல் ஆரோக்கியத்துடன் வாழலாம் என்றும் மருத்துவம் கூறுகிறது.

கீரைகளின் மருத்துவப் பண்புகளை தெரிந்து கொண்டதால் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள் நம் முன்னோர். ஆனால், நாம் உடலுக்குக் கேடுகளைத் தரும் துரித உணவுகளை உண்டு இலவசமாக நோய்களை வாங்கிக் கொள்கிறோம்.

உடல் ஆரோக்கியம் மிகவும் முக்கியம். உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உணவு முறையும், உடற்பயிற்சியும் அவசியம். உடலுக்குத் தேவையான ஆரோக்கியமான உணவுகளில் கீரைகளுக்கு முக்கியப் பங்கு உண்டு. ஆனால், மலிவான விலையில் கிடைக்கும் கீரைகளை ஒதுக்கி விடுகிறோம்.

உடலுக்குத் தேவையான ஆரோக்கியமான உணவுகளில் கீரைகளுக்கு முக்கியப் பங்கு உண்டு; ஆனால், மலிவான விலையில் கிடைக்கும் கீரைகளை ஒதுக்கி விடுகிறோம்

அவை தான் ஆரோக்கியத்தை தரும் அருமருந்து என்பதைப் புரிந்து கொண்டால் போதும்; ஒவ்வொருவரும் உடல் ஆரோக்கியத்துடன் வாழலாம். சரி, இப்போது சில கீரைகளின் பலன்களைப் பார்ப்போம்.

உடல் ஆரோக்கியத்தைத் தர பசலை, மணத்தக்காளி, பிரண்டை, புதினா, தூதுவளை, முருங்கை, முளைக்கீரை, முள்ளங்கி கீரை, பொன்னாங்கன்னி, பருப்புக் கீரை, முடக்கத்தான், அரைக்கீரை, சிறுகீரை, அகத்திக்கீரை, பாலக்கீரை, நாட்டு பொன்னாங்கன்னி, கல்யாண முருங்கை, வல்லாரை, புளிச்ச கீரை, கீழாநெல்லி, வெந்தயக் கீரை, கரிசலாங்கண்ணி, கொத்தமல்லி என நூற்றுக்கணக்கான கீரைகள் உள்ளன.

மேலும் படிக்க: உருளைக்கிழங்கு சாப்பிட்டால் நன்மையா, தீமையா?

பசலைக் கீரை:
பசலைக் கீரை கோடைக்காலத்தில் வரக்கூடிய நோய்களைத் தவிர்க்கக் கூடியது. இது கொடிப்பசலை, குத்துப்பசலை, தரைப்பசலை, வெள்ளைப் பசலை, சிலோன் பசலை என பல வகைகளில் கிடைக்கின்றன.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளதால் இதனை அடிக்கடி சாப்பிட்டலாம். கால் மூட்டுகளில் வரக்கூடிய வாதத்தைத் தவிக்க கூடியது. கீரையின் சாறு, முகப்பருக்களை நீக்கக் கூடியது. வெள்ளைப்பசலை சாப்பிட்டு வந்தால் உடல்சூடு குறையும். கொடிப்பசலை தாகம் மற்றும் சூட்டைத் தணிக்கக் கூடியது.

இதயநோய் வராமல் தடுக்க உதவுவதுடன், குழந்தைகளுக்கு வரும் நரம்பு தொடர்பான நோய்களைத் தடுக்கும் சக்தி கொண்டது பசலை. பசலைக் கீரையில் அதிகமாகப் பச்சையம் உள்ளதால், கொழுப்பைக் கரைக்கும் தன்மை கொண்டதால் இதனை உண்டு உடல் பருமனைக் குறைக்கலாம்.

இது ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கள் மற்றும் ஹீமோகுளோபின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும். பசலைக் கீரையில் ஃப்ளேவோனாய்டு (Flavonoid) பைட்டோ நியூட்ரியண்ட்டுகள் இருப்பதால் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் தன்மை உடையது. பசலைக் கீரை குளிர்ச்சி நிறைந்தது; அதனால் உடல் குளிர்ச்சி உடையவர்கள் இதனை அதிகமாகச் சாப்பிடுவதைத் தவிர்க்கலாம்.

ஆஸ்துமா, மார்புச் சளி உள்ளவர்கள்  முருங்கைக் கீரையை சூப் வைத்துக் குடித்து வரலாம்; ஆண், பெண் இருபாலருக்கும் மலட்டுத் தன்மையை குறைக்கும் வல்லமையும் முருங்கையில் உள்ளது

மணத்தக்காளிக் கீரை:
மருத்துவ மூலிகைகளில் ஒன்றாக கருதக் கூடியது மணத்தக்காளி. சாதாரணமாக வீடுகளில் கூட இதனை விளைவிக்கலாம். மணத்தக்காளிக் கீரை தொண்டை கட்டுக்கு சிறந்த மருத்துவ உணவாகும். குடல் புண், செரிமானப் பிரச்சனை உள்ளவர்கள் மணத்தக்காளிக் கீரையை கூட்டு வைத்தோ அல்லது குழம்பாகவோ சாப்பிடலாம். தொடர்ந்து உணவில் மணத்தக்காளிக் கீரையைச் சேர்த்துக் கொண்டால் விரைவில் குடல் புண் குணமாகும்.

மணத்தக்காளியில் வைட்டமின், இரும்புச் சத்து, பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் இதர தாதுக்கள் உள்ளதால், குழந்தைகளுக்கும் கருவுற்ற பெண்ணிற்கும் ஆரோக்கியத்தை தரும். மணத்தக்காளிக் கீரையை தினமும் உணவில் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் சிறுநீரகக் கற்கள் கரையும். வாரம் 2 அல்லது 3 முறை சாப்பிட்டு வந்தால் பெண்கள் கருப்பை பலமடைந்து கருத்தரிக்கலாம். வாய்ப்புண், அல்சர் பிரச்சனை உள்ளவர்களுக்கு மணத்தக்காளி சிறந்த மருந்து.

மேலும் படிக்க: தாமரைவிதைத் தின்பண்டம் மக்கானா ஓர் உணவு-மருந்து

முருங்கைக் கீரை:
முருங்கைக் கீரையை வாரத்தில் இரண்டு நாட்கள் சாப்பிட்டு வந்தால் வாழ்க்கை முழுவதும் மருத்துவமனைக்குச் செல்லும் அவசியம் வராது. முருங்கைக் கீரையில் அதிக அளவில் புரதச் சத்தும், மற்ற தாவரங்களைக் காட்டிலும் 25 மடங்கு அதிகமாக இரும்புச் சத்தும் இருப்பதால் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகப்படுத்துகிறது.

குழந்தைகளுக்கு முருங்கைக் கீரையைக் கொடுப்பதால் புரதம், கால்சியம், இரும்பு, வைட்டமின் ஏ உள்ளிட்ட சத்துகள் கிடைக்கும். கண் நோய் வராமல் தடுப்பதுடன், உடல் சூட்டைத் தணிக்கக் கூடியது. முருங்கை இலை கொண்டு மிளகு ரசம் வைத்து சாப்பிட்டு வந்தால் கை, கால் உடம்பு வலி நீங்கும்.

ரத்த சோகை உள்ளவர்கள் முருங்கை இலைகளை நெய்யில் வதக்கிச் சாப்பிட்டால், ரத்தத்தின் அளவு அதிகரிக்கும். நீளமான முடி வளரவும், வயிற்றுப்புண் குணமாகவும் முருங்கைக் கீரை உதவும். ஆஸ்துமா, மார்புச் சளி உள்ளவர்கள் முருங்கைக் கீரையை சூப் வைத்துக் குடித்து வரலாம். ஆண், பெண் இருபாலருக்கும் மலட்டுத் தன்மையை குறைக்கும் வல்லமையும் முருங்கையில் உள்ளது.

YouTube player

முள்ளங்கிக் கீரை:
முள்ளங்கியை விட அதன் கீரையில் தான் ஏராளமான‌ மருத்துவப் பலன்கள் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. முள்ளங்கிக் கீரை இரைப்பைக் கோளாறு, சிறுநீரகம் தொடர்பான நோய்களைக் குணப்படுத்துவதுடன், நீரிழிவு நோய்க்குச் சிறந்த மருந்தாகவும் உள்ளது. இதயம் பலவீனமாக உள்ளவர்கள் வாரம் ஒருமுறை உணவில் முள்ளங்கிக் கீரையைச் சேர்த்துக் கொள்ளலாம். முள்ளங்கிக் கீரையை அடிக்கடி உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை பலப்படும். வைட்டமின் பற்றாக்குறைகளும் நீங்கும்.

பொன்னாங்கன்னி:
கண் தொடர்பான நோயைக் குணப்படுத்தும் கீரை தான் பொன்னாங்கன்னி. இந்த கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை பாதிக்கப்படாது. கண் எரிச்சல், கண் மங்கல், கண்ணில் கட்டி, கண்ணில் நீர் வடிதல் போன்ற கண் நோய்கள் குணமாகும். பொன்னாங்கன்னி கீரையை வாரம் ஓரு முறையாவது உணவில் சேர்த்துக் கொண்டால் ரத்தத்தில் உள்ள கழிவுகள் நீங்கும்; இது புற்றுநோய் வராமல் தடுக்கும் தன்மை கொண்டது.

இப்படி நமக்குப் பலனளிக்கக்கூடிய கீரைகள் பல உள்ளன. எளிதில், மலிவான விலையில் கிடைக்கக்கூடிய கீரைகளை அலட்சியம் செய்துவிடாமல், உணவில் அவற்றைச் சேர்த்துக் கொண்டால் பல்லாண்டு காலம் ஆரோக்கியமாக வாழலாம்.

Share the Article

Read in : English

Exit mobile version