Site icon இன்மதி

தஞ்சை – திருச்சி வந்தே பாரத் சேவை வருமா?

Read in : English

இவ்வாண்டு தைப்பூசம் (பிப்.5) அன்று தஞ்சை மாவட்டம் சுற்றுலாப் பயணிகளால் நிரம்பியிருந்தது, அவர்களில் பலர் வெளிநாட்டுக்காரர்கள், கொரோனா வைரஸ் அச்சம் பெரும்பாலும் நீங்கிவிட்டது. சோழர்கள் காலத்து கட்டடக்கலை சாதனைகள் புதிய காந்தக் கவர்ச்சியை கொடுத்தது. தொடர்ந்து பெய்த மழைக்குப் பிறகு ஆயிரம் ஆண்டுகள் முற்பட்ட தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தின் முக்கிய கோபுரமானது காலம் கடந்த சிற்பங்களோடும் அழிக்க இயலாத கல் கட்டமைப்பும் நீல வானப் பின்னணியில் நூற்றுக்கணக்கான பார்வையாளர்களைக் கவர்ந்திழுத்தது.

பிரகதீஸ்வரர் கோயிலானது சோழப் பேரரசின் மூலைமுடுக்கெல்லாம் பரவியுள்ள ஆரத்தின் மையப்புள்ளி போல விளங்கி காலத்திற்கு அப்பாற்பட்ட பல சாதனைகளைக் கொண்டுள்ளது. கல்வெட்டில் அக்கோயிலுக்கு தங்கம் உட்பட பல பரிசுகளையும் நானூறு நடன மங்கைகளையும் ஆட்சியர் வழங்கியுள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பேரரசர் இராஜ ராஜ சோழருக்கு அக்கட்டடத்தின் அளவு குறித்து தெளிவான சிந்தனை இருந்தது; அந்த கோயில் வளாகத்தில் சில ஆயிரம் பேர் இருக்க முடியும் என்பது ஒரு ஆச்சர்யம் தான்.

இப்போதும் கூட, அது நவீன கால கலை நிகழ்ச்சிக்கூடங்களுக்குச் சவால்விடும் வகையிலேயே உள்ளது. இதே கோயிலில் தான் 1997இல் நடந்த குடமுழக்கு நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 50 பேர் இறந்தனர்; கூரைப்பந்தலில் பட்டாசு விழுந்து அப்போது தீ விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்பட்டது.

இன்று உலகின் பாரம்பரியமான தலமாக விளங்கும் பிரகதீஸ்வரர் கோயிலானது பெரிய கோயில் என்றும் அறியப்படுகிறது. அது வழிபாட்டிற்குரிய இடம். அதை இந்தியத் தொல்லியல் கழகம் (ஏஎஸ்ஐ) (Archaeological Survey of India – ASI) தனது முயற்சிகளால் மேம்படுத்தியுள்ளது. இருப்பினும் அங்கு தகவல் அளிக்கும் வசதிகளோ அல்லது உங்கள் காலணிகளைப் பாதுகாக்கும் வசதிகளோ போதுமானதாக இல்லை. நல்வாய்ப்பாக, புகைப்படம் எடுப்பதற்குக் கட்டணம் கிடையாது என்பதால் கோயிலின் பிரம்மாண்ட பிம்பங்கள் பார்வையாளர்களின் செல்ஃபிகளில் அகண்டும் பெரியதுமாக விரிகின்றன.

இன்று உலகின் பாரம்பரியமான தலமாக விளங்கும் பிரகதீஸ்வரர் கோயிலானது பெரிய கோயில் என்றும் அறியப்படுகிறது; அங்கு தகவல் அளிக்கும் வசதிகளோ அல்லது காலணிகளைப் பாதுகாக்கும் வசதிகளோ போதுமானதாக இல்லை

மதப் படிமங்களின் தொட்டில்
தஞ்சையைச் சுற்றி பிரபலமான வரலாற்று மற்றும் மதம் தொடர்பான இடங்கள் உள்ளன. தனது “இந்தியன் டெம்பிள் ஸ்கல்ப்சர்” (விக்டோரியா அண்ட் ஆல்பர்ட் மியூசியம்) நூலில் ஜான் கய் பல மதம் சார்ந்த கட்டடங்களின் அறிவார்ந்த தன்மையைக் கொண்ட வரைபடத்தினை அளிக்கிறார். அதில் தற்போதைய தஞ்சை நகர்ப்புறம் மற்றும் சுற்றியுள்ள நகரங்கள் இடம்பெற்றுள்ளன.

சிதம்பரம், கும்பகோணம், திருவெண்காடு, பூம்புகார், ஸ்ரீரங்கம் மற்றும் திருச்சி அதிலுள்ளன. இதே போன்று தாராசுரம், திருவலஞ்சுழி விநாயகர் கோயில், சுவாமிமலை முருகன் கோயில் (அறுபடை வீடுகளில் ஒன்று) என்று பல கோயில்கள் அருகாமையில் உள்ளன. தஞ்சைக்கு அருகில் இருந்தாலும், இவற்றில் மக்கள் கூடுவது குறைவு. இன்றும் சுவாமிமலையில் வெண்கலச் சிலைகளை உருவாக்கும் பாரம்பரியக் கலைஞர்கள் உண்டு.

மேலும் படிக்க: தடைகளைக் கடந்து வென்ற ரயில்-18

இருந்தாலும் தஞ்சைக்கான போக்குவரத்து வசதி போதாமையுடன் உள்ளது. அதிகப் பயணிகளை ஏற்றிச் செல்லும் புதிய விரைவு இரயில் சேவையினால் மட்டுமே அதனைத் தீர்க்க இயலும். இந்த கட்டுரையாசிரியர் அப்பகுதிக்குச் சமீபத்தில் சென்றபோது தஞ்சையில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் எதையும் மாற்றவில்லை என்பதைக் கண்டார். தனியாகச் செல்லும் பயணிகளுக்கு (குழுவாகச் செல்வது அல்லது தனிப்பட்ட சொகுசுப் பயணம்) திருச்சி-தஞ்சை பகுதியானது போதுமான வசதிகளை அளிப்பதில்லை; குறிப்பாக தைப்பூசம் போன்ற விழாக்களுக்குச் செல்லும்போது சுற்றுலா நோக்கங்களுக்குத் தகுதியுடையதாகத் தெரியவில்லை. பேருந்துப் போக்குவரத்து பெரியளவில் இருந்தாலும் மோசமாக நிர்வகிக்கப்படுகிறது.

தேவையான தகவல்களைக் கொடுப்பதற்குத் தகவல் மையங்கள் இல்லை; திருச்சி போன்ற அருகாமை இடங்களுக்குச் சிரமமின்றிச் செல்வதை இவை கடுமையாகக் கட்டுப்படுத்துகின்றன. உள்ளூர் ஆட்டோ ரிக்‌ஷாக்கள் கடுமையான கட்டணங்களை வசூலிக்கின்றன.

இந்நகரங்களுக்கு இடையிலான பேருந்து சேவை அதிகச் செலவு பிடிக்கும் விவகாரம் என்பதால் ஏன் வந்தே பாரத் சேவையை தஞ்சைக்கும், திருச்சிக்கும் சென்னையிலிருந்து இயக்கக்கூடாது என்று ஒரு ட்விட்டர் பதிவு கேள்வி எழுப்பியது. சிலர் இதை வரவேற்றனர்; ஆனாலும் சிதம்பரம் -கும்பகோணம் வழியே சென்னையில் இருந்து தஞ்சைக்கு வந்தே பாரத் சேவை சாத்தியமில்லாதது என்றும், அவ்வழியில் சிங்கிள் டிராக் சேவையே உள்ளது எனவும் தெரிவித்தனர்; ஆனால், திருச்சி வழியே தஞ்சைக்கு ரயிலைச் செலுத்துவது சாத்தியம் என்றும், அவழியில் இரட்டை அடுக்கு அகலப்பாதை உள்ளன என்றும் தெரிவித்தனர்.

தஞ்சை-கும்பகோணம் பொருளாதாரத்தில் பெரும்பாலும் விவசாயமும் சுற்றுலாவும் பெரும்பங்கு வகிப்பதால், சென்னை-திருச்சி-தஞ்சை இடையே இரயில்வே வாரியமானது வந்தே பாரத் சேவையைக் கொண்டு வரலாம்.

“ ஆமாம், அது போன்ற நடவடிக்கைகளே தமிழ்நாடு பாஜகவிற்கு ஓட்டுக்களைப் பெற்றுத் தரும். அல்பமான ட்விட்டர், ஃபேஸ்புக் மற்றும் யூடியூப் டிரெண்டிங்கினால் அல்ல” என்கிறார் ட்விட்டர் பயனர் ராம்ஜி யாஹூ. கும்பகோணம் – மயிலாடுதுறை பாதையானது இரட்டைப்பாதையாக மாற்றப்பட வேண்டும் என்றும், அதுவரை வந்தே பாரத் சேவை தஞ்சை திருச்சி வழியிலுள்ள இரட்டைப் பாதையைப் பயன்படுத்தி அளிக்கலாம் என்றும் சிலர் ஆலோசனை தெரிவிக்கின்றனர்.

சென்னை – திருச்சி இடையே டபுள் டெக்கர் இரயில் சேவையானது பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும். அது போன்ற முயற்சிகளை மதுரைக்கும் அளிக்கலாம். மதுரை பண்டைய நகரம் மட்டுமின்றி ஏராளமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கக் கூடியது. (இந்திய அரசின் இரயில் பெட்டி தொழிற்சாலை 2020ஆம் ஆண்டில் 160 கிமீ/ஒரு மணி நேரத்திற்கு எனும் வேகம் கொண்ட இரட்டை அடுக்கு இரயில் பெட்டிகளை உற்பத்தி செய்துள்ளதாகத் தெரிவித்தது).

தஞ்சை-கும்பகோணம் பொருளாதாரத்தில் பெரும்பாலும் விவசாயமும் சுற்றுலாவும் பெரும்பங்கு வகிப்பதால், சென்னை-திருச்சி-தஞ்சை இடையே இரயில்வே வாரியமானது வந்தே பாரத் சேவையைக் கொண்டு வரலாம்

இன்றைக்கான ஸ்மார்ட் சுற்றுலா!
தமிழ்நாடு அரசு நினைத்தால் மட்டுமே அதிகளவில் சுற்றுலாவை மேம்படுத்த முடியும். அதில் உள்கட்டுமானம், உள்ளூர் பேருந்துச் சேவை, தரமான, சுத்தமான உணவகங்கள், தகவல் தொழில்நுட்ப வசதி போன்ற அனைத்து வசதிகளைக் கொண்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க வேண்டும்.

சென்னையில் இருந்து லால்குடி, திருச்சி வழியாக தஞ்சாவூர் செல்லும் இரட்டை ரயில் பாதையையும், சென்னையில் இருந்து சிதம்பரம் செல்லும் ஒற்றை ரயில் பாதையையும் காட்டும் வரைபடம்

இங்கு குறிப்பிட வேண்டிய இடம் இராஜகிருஷ்ணாபுரத்திலுள்ள ராயல் பேலஸ் மியூசியம். இவ்வளாகத்தில் பஞ்சலோக மற்றும் கற்சிலைகள் உள்ளன. இவை 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. அவற்றிற்கு வளமான புராணக் கதைகள் உண்டு. இங்கு திருபராந்தகர், ஸோமஸ்கந்தர், சந்திரசேகரர், பிக்‌ஷாண்டார், பைரவர் மற்றும் தனித்தன்மை கொண்ட எந்தோல் முகன் எம்மான் (பாம்பினை அணிந்த அதிகம் காணப்படாத இறைத்தோற்றம்) போன்ற சிவபெருமானின் பலவிதத் தோற்றங்கள் காணப்படுகின்றன. திருஞானசம்பந்தரின் பண்டைய பிம்பங்கள் உள்ளன.

மேலும் படிக்க: வெளிநாடுகளில் வாழும் தமிழர்களிடம் களைகட்டிய முருகன் கோயில் தைப்பூசம்!

இங்கு இராஜராஜன் பூஜைக்குப் பயன்படுத்திய பாத்திரங்கள் கண்ணாடி அறையின் பின்னே வெறுமையாக “பூஜை பாத்திரங்கள்” என எழுதப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. இங்கு சிலைகள் மீது குறைந்தளவே வெளிச்சம் விழுகின்றன. பெரிய நடராஜர் சிலைகளைப் பார்வையாளர்கள் தொடும்படி பாதுகாப்பற்று வைத்துள்ளனர்.

தஞ்சையில் குறைந்த செலவிலான தங்கும் விடுதிகளும் தேவை. கும்பகோணம் உட்பட அருகிலுள்ள பல இடங்களுக்கு பல பேருந்து சேவைகளை அளிக்கும் வலைப்பின்னலும் ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் வசதியும் உருவாக்கப்பட வேண்டும்.

தஞ்சைக்கான ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட ரூ 70 கோடியில் சுமார் ரூ 49 கோடி குடிநீர் வழங்கலுக்கும், மீதமுள்ளவை பசுமை வெளிகள், மக்கள் சேவையை டிஜிட்டல்மயம் செய்வது, பழைய பேருந்து நிலையத்தை இடம் மாற்றுவது, எல்இடி தெருவிளக்குகள் போன்றவற்றுக்கு ஒதுக்கியுள்ளதாக மத்திய அமைச்சக இணையத் தளம் தெரிவிக்கிறது.

இராஜகிருஷ்ணாபுரத்திலுள்ள ராயல் பேலஸ் மியூசியம் வளாகத்தில் திருபராந்தகர், ஸோமஸ்கந்தர், சந்திரசேகரர், பிக்‌ஷாண்டார், பைரவர், எந்தோல் முகன் எம்மான் போன்ற சிவபெருமானின் பலவிதத் தோற்றங்கள்  காணப்படுகின்றன

கோவிட்-19 நோய் பரவலும், ஆட்சி மாற்றமும் மேற்கொண்டு பணிகள் நடப்பதைத் தடுத்திருக்கலாம். பெரிய கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் குறிப்பாக பழைய பேருந்து நிலையம் அருகில் சாலைகள் தூசுப்படலமாகவும் சேறு நிரம்பியவையாகவும், குடிநீர் இணைப்பு வேலைகள் பாதி நிறைவேறிய நிலையிலும் காட்சியளிக்கிறது. இப்பகுதிக்குச் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகின்றனர். பல்லடுக்கு வாகன நிறுத்த இயந்திரம் பயன்படுத்தப்படாமல் கிடக்கிறது.

பிரம்மாண்டத்தை விரும்பும் இராஜராஜன் கற்பனை செய்த எதிர்கால நகரமல்ல அது. அவனது சிலை உயரமாக, பெயரளவில் கச்சிதமாக, கல் போன்ற உறுதி கொண்டதாகவும் ஆர்வத்தைத் தூண்டுவதாகவும் உள்ளது. பிற்காலத்திய ஆட்சியாளர்கள் சிறியவர்களாக ஒப்பிடும் திறனற்றவர்களாக, அவர்களது கற்பனையானது தேர்தல் சுழற்சியிலும் இலாப வேட்கையிலும் கட்டுப்பட்டுள்ளது தெரிய வருகிறது. சிறிய பணிகளைக் கூட அரைகுறையாக விட்டிருக்கின்றனர்.

தஞ்சைக்கும் அதன் நிகரற்ற முத்திரை மனிதர்களுக்கும் ஒருமுறை மட்டும் வருகை புரிந்து விட்டுப் பேசுவது நியாயமாகாது. சோழர்களின் உச்சபட்சக் காலத்தில் இப்பகுதி பெற்றிருந்த வளத்தை இன்று தூண்டவும், மக்களுக்கும் சுற்றுலாப்பயணிகளுக்கும் தூய்மையான, பசுமையான நகரத்தை அளிக்கவும் அதிகம் பாடுபட வேண்டியுள்ளது. அதன் பாரம்பரியத்தின் மீது எவ்விதமான பாதகமும் விழாது அதைச் செய்ய வேண்டும்.

Share the Article

Read in : English

Exit mobile version