Site icon இன்மதி

வெளிநாடுகளில் வாழும் தமிழர்களிடம் களைகட்டிய முருகன் கோயில் தைப்பூசம்!

மலேசியாவில் பத்துமலை முருகன் கோயிலில் உள்ள 140 அடி உயர முருகன் சிலை

Read in : English

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பொங்கல்தான் மிகப்பெரிய பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. மதச்சார்பற்ற பண்டிகை என்பதாலும், நாட்டின் முதுகெலும்பான உழவுத்தொழிலைச் செய்யும் மக்களால் கொண்டாடப்படும் பண்டிகை என்பதாலும் பொங்கல் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. ஆனால், திராவிட இயக்கங்களைப் பொறுத்தவரை பொங்கல் பண்டிகைக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுத்து ஆதரிப்பதாலும் இப்பண்டிகை இவ்வளவு விமரிசையாக கொண்டாடப்படுகிறதோ என்ற கருத்தும் நிலவுகிறது. காரணம் திராவிட இயக்கம் இல்லாத வெளிநாடுவாழ் தமிழர்கள் இன்றுவரை தமிழ்க் கடவுளான முருகன் கோயிலில் நடத்தப்படும் தைப்பூசத்தைதான் மிகப்பெரிய பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர். மலேசியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் வாழும் தமிழர்கள் தைப்பூசத்தை மட்டுமே மூன்று நாள் விழாவாக கொண்டாடி வருவதே இதற்குச் சான்று.

தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே ஏற்பட்ட போரில் தேவர்களால் அசுரர்களை ஜெயிக்க முடியாத நிலையில் அவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர். தங்களுக்குத் தலைமைதாங்கிச் செல்லக்கூடிய சக்திமிக்க ஒரு தலைவனை உருவாக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். அதனால் சிவபெருமான் தனது நெற்றிக்கண்ணிலிருந்து தீப்பொறிகளாக தனது சக்தியை வெளியேற்றி ஆறு குழந்தைகளாக முருகனை உருவாக்கினார். பின்னர் கார்த்திகைப் பெண்கள் வளர்த்த அந்த ஆறு குழந்தைகளையும் பார்வதி தேவி கட்டியணைத்து ஒரே குழந்தையாக்கினார். பின்னர் பழனி மலையில் ஆண்டிக்கோலத்தில் நின்ற முருகனிடம், பார்வதி தேவி அசுரர்களை அழிப்பதற்காக ஞானவேல் வழங்கிய நாளே தைப்பூசத் திருநாள் ஆகும். அந்த வேலினைக்கொண்டே முருகன் அசுர குலத்தை அழித்து தேவர்களைக் காப்பாற்றினார் என்பது ஐதீகம். அதனாலேயே, தமிழ்க் கடவுளான முருகனின் கோயில்களில் மிக முக்கியமானதாக தைப்பூச நாள் கொண்டாடப்படுகிறது. 27 நட்சத்திர மண்டலத்தில் எட்டாவது நட்சத்திரம் பூச நட்சத்திரம் ஆகும். தை மாதத்தில் பூச நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் சேர்ந்துவரும் நாளே தைப்பூசமாகக் கொண்டாடப்படுகிறது.

தமிழ்க் கடவுளான முருகனின் கோயில்களில் மிக முக்கியமானதாக தைப்பூச நாள் கொண்டாடப்படுகிறது.

கோலாலம்பூரிலிருந்து வடக்கே 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பத்துமலை

தைப்பூசம் என்றாலே உலகளாவிய தமிழர்களின் நினைவுக்கு வருவது மலேசியாவில் உள்ள பத்துமலை முருகன் கோயில் விழாதான். தமிழ்நாட்டின் பழனியில் பெரிதாகக் கொண்டாடப்பட்ட தைப்பூச விழா, தற்போது தமிழ்நாட்டைவிடவும் மலேசியாவில் பிரபலமானது எப்படி என்பதைப் பார்க்கலாம்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மலேசியாவில் கூலித்தொழிலாளிகளாகப் பணி செய்த தமிழர்களின் தலைவராக நாகப்பட்டினத்தைச் சேர்ந்த காயாரோகணம் பிள்ளை இருந்தார். இவரது முயற்சியால் மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் 1873ஆம் ஆண்டு ஒரு மாரியம்மன் கோயில் கட்டப்பட்டது. அதன்பின், தனது இளைய மகன் முருகனுக்கு ஒரு கோயில் அமைக்கும்படி அம்மன் கனவில் வந்து சொன்னதாகக்கூறி அங்கிருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பத்துமலையில் 1888ஆம் ஆண்டு ஒரு வேலை வைத்து வழிபட்டார். அதன்பின் 1891ஆம் ஆண்டு சிறிய கோயிலாக உருவாக்கப்பட்டதே பத்துமலை முருகன் கோயில். தரையிலிருந்து 400 அடி உயரத்தில் உள்ள கோயிலுக்குச் செல்ல கரடுமுரடான பாதையே முதலில் இருந்தது. பிறகு 1938ஆம் ஆண்டில் கோயிலுக்குச் செல்ல 272 படிகளைக் கொண்ட மூன்று நடைபாதைகள் அமைக்கப்பட்டன. அத்துடன் ரயில் பாதை ஒன்றும் அமைக்கப்பட்டது.

பத்துமலை முருகன் கோயிலல் தைப்பூச திருவிழாவில் பிரார்த்தனைக்காக அலகு குத்தி வரும் பக்தர்கள். (Photo credit http://murugan.org/temples/batumalai.htm)

உலக அளவில் மலேசியாவின் அடையாளமாகத் திகழ்வது பிரம்மாண்டமான பத்துமலை முருகன் சிலைதான். கோயில் அடிவாரத்தில் பக்தர்களை எதிர்கொண்டு அழைப்பதுபோல் நிற்கும் 140 அடி உயரமான (42.7 மீட்டர்) முருகன் சிலை அமைக்கும் பணி 2003ஆம் ஆண்டு தொடங்கி, 2006ஆம் ஆண்டு நிறைவடைந்தது.  இந்திய மதிப்பில் இரண்டு கோடியே நாற்பது லட்சம் ரூபாய் செலவில் இந்தச் சிலை அமைக்கப்பட்டது தாய்லாந்தில் தயாரிக்கப்பட்ட சிறப்பான பொன்னிறக் கலவையால் முருகனின் மேனி ஜொலிக்கிறது. அதன்பிறகே மேலும் பிரபலமான இந்தக் கோயில், தற்போது உலக அளவில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபடும் தலமாக விளங்குகிறது.

பத்துமலை முருகன் கோயிலில் தைப்பூச விழா மூன்று நாட்களுக்கு நடைபெறுவதாக அங்கு வசிக்கும் இரண்டாம் தலைமுறை தமிழரான தனம் தெரிவிக்கிறார்.

“எங்கள் வீட்டிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில்தான் பத்துமலை முருகன் கோயில் உள்ளது. ஆண்டுதோறும் தைப்பூசத்துக்கு முதல் நாள் கோலாலம்பூரில் உள்ள அம்மன் கோவிலில் இருந்து தேர் புறப்பட்டு முருகன் கோயிலுக்கு வரும். தைப்பூச நாளில் விழா கோலாகலமாக கொண்டாடப்படும். அடுத்த நாள் மாலை தேரானது முருகன் கோயிலிலிருந்து புறப்பட்டு, அதிகாலையில் அம்மன் கோயிலைச் சென்றடையும்.  மூன்று நாட்களும் சிங்கப்பூர், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபடுவார்கள். தைப்பூசத்தன்று கோலாலம்பூர் மாரியம்மன் கோயிலிலிருந்து முருகன் கோயிலுக்கு ஊர்வலமாக நடந்து வருவார்கள். நேர்த்திக்கடன் செலுத்துபவர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும் வருவார்கள். கீழே உள்ள ‘சுங்கை பத்து’ ஆற்றில் நீராடி மலையேறிச் சென்று முருகனை தரிசிப்பார்கள். நாங்கள் முருகன் கோயிலுக்கு அருகிலேயே இருப்பதால், தைப்பூசத்துக்கு அடுத்த நாள் தேருடனே அம்மன் கோயில் வரை விடியவிடிய நடந்தே செல்வோம். மூன்று நாட்களும் வழி நெடுகிலும் ஆங்காங்கே அன்னதானம் செய்வார்கள். சாலையின் இருபுறமும் வரிசையாக கடைகளும் அமைக்கப்பட்டு இரவும் பகலும் வியாபாரம் நடக்கும். ஆனால், இந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று காரணமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதால், பக்தர்கள் வருகை குறைந்துள்ளது“ என்கிறார் 50 வயதான தனம்.

‘நீங்கள் ஏன் பொங்கல் பண்டிகையை இவ்வளவு கோலாகலமாகக் கொண்டாடுவதில்லை?‘ என்று கேட்டதற்கு, “தெரியவில்லை. பொதுவாக பொங்கல், உழவர்களால் கொண்டாடப்படும் பண்டிகை என்பதும், இங்குள்ள தமிழர்களில் பெரும்பாலும் யாரும் உழவர்கள் இல்லை என்பதுமேகூட காரணமாக இருக்கலாம். பொங்கலுக்கு இங்கே விடுமுறையும் கிடையாது. ஆனால், தைப்பூச தினத்தன்று மலேசியாவில் அரசு விடுமுறை ஆகும். அந்த அளவுக்கு தைப்பூச விழாவைத்தான், பொங்கலைவிட பெரிய பண்டிகையாக இங்குள்ள தமிழ் மக்கள் கொண்டாடி வருகிறோம்“ என்கிறார் தனம்.

மூன்று நாட்களும் சிங்கப்பூர், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபடுவார்கள். ஆனால், இந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று காரணமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதால், பக்தர்கள் வருகை குறைந்துள்ளது

 

பத்துமலை முருகன் கோயிலுக்குச் செல்வதற்கு 272 படிகளில் ஏறிச் செல்ல வேண்டும்.

மலேசியாவின் பினாங்கு மாநிலம், ஜார்ஜ் டவுன் மாநகரத்தின் அருகேயுள்ள தண்ணீர்மலை கோயிலிலும் தைப்பூசம் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இங்கே தமிழர்கள் மட்டுமின்றி சீனர்களும் தைப்பூசத்தைக் கோலாகலமாகக் கொண்டாடுகின்றனர். எனவே, பினாங்கு மாநில அரசும் தைப்பூச தினத்தை அரசு விடுமுறையாக அறிவித்துள்ளது. அதேபோல், ஈப்போ அருகில் உள்ள குனோங் சீரோ சுப்பிரமணியர் கோயிலிலும் தைப்பூசம் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

சிங்கப்பூரில் உள்ள முருகன் கோயிலில் வேல் மட்டுமே மூலவராக உள்ளது. இங்கும் தைப்பூச விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அலகு குத்தல், காவடி, தேர் இழுத்தல் என்று மூன்று நாட்கள் களைகட்டும் விழாவில் சீனர்களும் பங்கேற்று நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

இலங்கையில் யாழ்ப்பாணத்திலும் தைப்பூச நாளில் முருகனுக்கு பால்குடம் எடுத்தும், காவடி எடுத்தும் வழிபடுகின்றனர். அன்றுதான், உழவர்கள் தங்கள் வயலில் விளைந்த நெல்லை முதன்முதலாக அறுத்து சமைத்து உண்ணும் சடங்கான புதிர் எடுத்தலும் நடைபெறுகிறது.

Share the Article

Read in : English

Exit mobile version