Site icon இன்மதி

வானிலை: தமிழ்நாடு எதிர்கொள்ளவிருக்கும் அபாயம்

Read in : English

பருவகாலங்களின் உபயத்தால் பல ஆண்டுகளாக நீர்வளம் செழிப்பாக இருந்தது.  2023இல் சில நாட்களும், 2024ஆம் ஆண்டு முழுவதுமாக எல் நினோ இயற்கை நிகழ்வால் வானிலையைக் கணிக்க முடியாமல் போய்விடக்கூடிய அபாயம் உருவாகலாம் என்று தற்போது உலகம் முழுக்க ஓர் எச்சரிக்கை உலா வருகிறது. அதீத வெப்பம், அதிக வறட்சி, இந்தியாவின் சில வடமேற்கு மாநிலங்களில் வெள்ளம் மற்றும் தீபகற்ப பருவமழைக் காலத்தில் மாற்றங்கள் ஆகியன உண்டாகலாம்.

வானிலை மாற்ற நிகழ்வுகளை எதிர்கொள்ளவதற்காக ஒரு சிறப்புத்துறையைக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டிற்கு கட்டுக்குள் அடங்காத வானிலையைக் கையாள்வதற்கான ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. வானிலை மாற்றம் ஓர் உலக இயற்கை நிகழ்வு. அதன் தாக்கத்தால் எல்லா நாடுகளிலும் கடுமையான உள்ளூர் பாதிப்புகள் இருக்கின்றன. கடந்த சில ஆண்டுகளில் நிலவிய குளிரான ’லா நினா’ இயற்கை நிகழ்வால் இந்தியாவில் கனமழை பெய்தது; கேரளாவிலும் தமிழ்நாட்டிலும் வெள்ளச் சேதங்கள் ஏற்பட்டன. இனி கணிக்க முடியாத அளவுக்கு மழையும் வெயிலும் ஏற்படலாம்.

“2023ல் உஷ்ணமான பசிபிக் வெப்பநிலை லா நினா கட்டம் படுவேகமாக முடிவுக்கு வந்துவிடும். 2023ன் இரண்டாவது பகுதியில் எல் நினோ நிலைக்கு வானிலை மாறிவிடும் என்று உலக வானிலை மாதிரிகள் கணித்துள்ளன” என்று நாசா விஞ்ஞானி ஜேம்ஸ் ஹான்சென் ஜனவரி மாதத் தொடக்கத்தில் கூறியிருக்கிறார்.

வானிலை மாற்ற நிகழ்வுகளை எதிர்கொள்ளவதற்காக ஒரு சிறப்புத்துறையைக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டிற்கு கட்டுக்குள் அடங்காத வானிலையைக் கையாள்வதற்கான ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது

2023ஆம் ஆண்டின் எல் நினோ தாக்கம் அடுத்த ஆண்டும் இருக்கும்; 2024 மனிதகுல வரலாற்றிலே மிகக்கடுமையான வெப்ப ஆண்டாக இருக்கும் என்று 2022 செப்டம்பரில் பேராசிரியர் ஹான்சென்னும் அவரது சகாக்களும் ஆரூடம் சொல்லியிருக்கிறார்கள். கடலோடு சம்பந்தப்பட்ட மற்றுமொரு இயற்கை நிகழ்வு வானிலையில் தாக்கம் ஏற்படுத்தும். அது இந்தியப் பெருங்கடல் டைபோல் என்று அறியப்படுகிறது. அது சுயாதீனமாக உருவாகிறது அல்லது எல் நினோ கடல்தளத்தில் ஏற்படும் வெப்பநிலையோடு சேர்ந்து உருவாகிறது.

இந்தியா உட்பட இந்தியப் பெருங்கடலைச் சுற்றியுள்ள நாடுகளின் வானிலை மீது அது  தாக்கம் ஏற்படுத்துகிறது. இந்த இயற்கை நிகழ்வுகளுக்கு இடையிலான உறவுகளைப் பற்றியும், மழையின் ஒழுங்கிசைவின் மீது அவை கொண்டிருக்கும் தாக்கத்தைப் பற்றியும் வானிலை ஆராய்ச்சி பிரதானக் கவனம் செலுத்தி வருகிறது.

மேலும் படிக்க: தேயிலை வேளாண்மை: கைவிடும் விவசாயிகள்!

முன்பு வெள்ளம், இப்போது வறட்சி!
சென்னையில் வடகிழக்குப் பருவகாலத்தில் சில ஆண்டுகளாகத் தொடர்ந்து குறுகிய காலகட்டத்தில் 1,000 மில்லிமீட்டரையும் தாண்டி மழை பெய்ததால், நிலத்தடி நீர்மட்டம் விடாப்பிடியாக உயர்ந்தது. பல பகுதிகளில் வீடுகளில் ஈரங்கசிந்தது. அதன் விளைவால் மழைநீர் சேகரிப்புக்கு அவசியமில்லாமல் போய்விட்டது.

பருவகாலச் சீரொழுங்கு மாற்றத்தால் இந்த நிலை மாறலாம். ஏனென்றால் குழாய்நீர் வழங்கல் குறைவதால் நிலத்தடி நீரை அதிகமாகப் பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்படும். திறந்தவெளிக் கிணறுகளின் நீர்வளம் வற்றிவிடும். அப்போது பல ஆண்டுகளாகப் புறக்கணிக்கப்பட்டிருந்த மழைநீர்ச் சேகரிப்புக் கட்டுமானங்கள் மீண்டும் முக்கியத்துவம் பெறும்.

2021ஆம் ஆண்டு சென்னை வெள்ளத்தின் போது மாநில அரசு விரைந்து செயலாற்றியது. முன்னெப்போதையும் விட சென்னையின் முக்கியப் பகுதிகளில் அதிகமான வெள்ளநீர் வடிகால் கட்டமைப்புகள் கட்டப்பட்டு, வடகிழக்குப் பருவமழை வரும் முன்பே அப்பணிகள் முடிக்கப்பட்டன. அதனால், 2022ஆம் ஆண்டில்  பெய்த மழை 1,000 மி.மீ. அளவைத் தொட்டாலும் வெள்ளம் ஏற்படாமல் சென்னை தப்பித்தது.

2023 புத்தாண்டு தொடங்கியபோது பிரதீப் ஜான் உட்படப் பல வானிலை அவதானிப்பாளர்கள் டெல்டா மாவட்டங்களில் மழையைக் கொண்டுவரும் சில இயற்கை நிகழ்வுகளைச் சுட்டிக் காட்டினர். ஆனால் இந்த ஆருடங்கள் 2023ஆம் ஆண்டின் பிற்பகுதியில் வரவிருக்கும் எல் நினோ வானிலைக்கான ஆரூடத்திற்கு மிகமிக முந்தியவை.

குறுகிய காலம் பெய்யும் மழைநீர் சேகரிக்கப்படாமல் வீணாக்கப்பட்டால், வெப்பமான மாதங்களில் நீர்வறட்சி ஏற்படும்

சென்னையின் நீர்த்தேக்கங்கள் 91 சதவீதம் நிரம்பியிருக்கிறபடியால் குடிநீர்ப் பிரச்சினை எதுவும் இல்லாமல் சென்னை செளகரியமாக இருக்கிறது. கடந்த திங்கள் (ஜனவரி 23, 2022) அன்று மெட்ரோவாட்டர் கொடுத்த தரவுகள்படி, செங்குன்றம், பூண்டி, சோழாவரம், தேர்வாய்கண்டிகை மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளின் ஒட்டுமொத்த நீர்சேமிப்பு 10,800 மில்லியன் கனஅடி.

அவற்றின் மொத்த கொள்திறன் 11,757 மில்லியன் கனஅடி. அவற்றில் கொஞ்சம் நீர்வரத்தும் இருக்கிறது. இதுபோக வீராணம் ஏரியில் 2022 அக்டோபர் 20 அன்று நிலவரப்படி 1,000க்கும் மேலான மில்லியன் கனஅடி நீர் சேமிப்பில் இருந்தது.

மேலும் படிக்க: மாண்டஸ் புயலுக்குப் பிறகும் மழை அபாயம்!

வளமும் பற்றாக்குறையும்
வானிலை ஒழுங்கீனங்களால் சீரற்ற வானிலை நிலவுகிறது. அழுத்தமான குறுகியகால மழை நாட்கள்; மழையற்ற நாட்கள் என்று பருவகாலம் சிதைகிறது. அதேநேரத்தில் வெள்ளத்திற்கான சூழ்நிலையும் உருவாகிறது. குறுகிய காலம் பெய்யும் மழைநீர் சேகரிக்கப்படாமல் வீணாக்கப்பட்டால், வெப்பமான மாதங்களில் நீர்வறட்சி ஏற்படும்.

இந்தாண்டு தமிழ்நாடு அரசு செய்யவேண்டிய பணிகள் பின்வருவாறு:

– எல்லாக் கட்டிடங்களிலும் இருக்கும் மழைநீர்ச் சேகரிப்புக் கட்டுமானங்களைப் புதுப்பிக்க வேண்டும்

– நகர்ப்புறங்களில் நீர் வடிந்து சிறிய குளங்களுக்கும், கோயில் தெப்பக்குளங்களுக்கும், புறநகர் ஏரிகளுக்கும் செல்வதற்கான கால்வாய்களைத் தூர் வாரிச் சுத்தப்படுத்த வேண்டும்|

– புறநகர் ஏரிகள் உள்ளூர் மக்களால் மீட்கப்பட வேண்டும்; அதற்கு ஆதரவளிக்க வேண்டும்

– புதிய கட்டிடங்களில் நீர் சேமிக்கும் உபகரணங்கள் பொருத்தப்பட வேண்டும் என்று கட்டிட விதிகள் உருவாக்கப்பட வேண்டும்.

– தொழில் பயன்பாட்டு நீரைத் திறமையாகப் பயன்படுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

– பழைய கட்டிடங்களில் பழைய நீர்க்குழாய்களை மாற்றி திறன்மிக்க, விலைகுறைந்த புதிய குழாய்களைப் பொருத்த வேண்டும்.

– நிழற்சாலைகளில் மரங்களைப் பேணிப் பராமரிக்க வேண்டும்.

2024 ஓர் அதீத வெப்ப ஆண்டாக இருக்கும் என்றதோர் ஆரூடம் நிலவிவரும் நிலையில், குடிமக்களைத் தயார்நிலையில் வைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் மட்டுமே கடுமையான சோதனையை மட்டுப்படுத்த முடியும்

– விலையுயர்ந்த வெள்ளநீர் வடிகால் கட்டமைப்புகளை அடிக்கடி சோதனை செய்தும் தூர் வாரியும் பராமரிக்க வேண்டும்.

– நீர்நிலைகளில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்; அவற்றில் குடியிருக்கும் மனிதர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் மாற்று இடங்கள் தந்து அவர்களை அகற்ற வேண்டும்.

– வானிலைத் துயர்களால் பாதிக்கப்பட்ட நகர்ப்புற குடியிருப்புவாசிகளுக்கு நட்டஈடு தரும்வண்ணம் நிதிக் கொள்கைகளை வகுக்க வேண்டும்.

– நகர்மயமாதல் காரணமாக காங்கிரீட் கட்டிடங்கள் பெருகிவிட்டதால், அதீத வெப்பத்தால் ‘வெப்பத்தீவு விளைவு’ ஏற்பட்டு அதனால் உள்ளூர் மழை பெய்து வெள்ளம் கூட உருவாகும் நிலை ஏற்படலாம்.

2024 ஓர் அதீத வெப்ப ஆண்டாக இருக்கும் என்றதோர் ஆரூடம் இருக்கிறது. பாரிஸ் ஒப்பந்தம் எதிர்நோக்கும் 1.5 பாகை செல்சியஸ் அளவை வெப்பநிலை தொட்டுவிடலாம் என்று பல்வேறு மாதிரிகள் சொல்கின்றன. அதெல்லாம் மெய்யாகி விடலாம். ஆதலால் குடிமக்களைத் தயார்நிலையில் வைப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் மட்டுமே கடுமையான சோதனையை மட்டுப்படுத்த முடியும்.

வரவிருக்கும் நீர் மற்றும் கழிவுநீர் வரிகள் உயர்வுகளுக்கேற்ப அரசுக் கொள்கை நடவடிக்கைகள் அடுத்துவரும் ஆபத்தான நாட்களுக்கேற்ப சென்னை மாநகரைத் தயார்படுத்தும் என்ற நம்பிக்கையை மக்களிடம் உருவாக்க வேண்டும். அதற்கு வருமுன் காக்கும் திட்டங்களும் செயற்பாடுகளும் அவசியம்.

Share the Article

Read in : English

Exit mobile version