Site icon இன்மதி

தேயிலை வேளாண்மை: கைவிடும் விவசாயிகள்!

Read in : English

நீலகிரி மாவட்டத் தேயிலை விவசாயிகள் வேகாத வெயிலில் விருப்பத்துடன் உழைத்து, தேயிலைப் பயிர்களைப் பராமரித்து, பின்பு அறுவடை செய்து சந்தையில் நல்ல விலைக்கு விற்றுத் திருப்தியுடன் வாழ்க்கை நடத்திய மகிழ்ச்சிகரமான காலம் மலையேறிவிட்டது.

தற்காலத்தில் உற்பத்திச் செலவுகளின் உயர்வு, வேறுவேலை தேடிச் சென்றுவிட்ட பண்ணைத் தொழிலாளர்களின் புலப்பெயர்வு, பாதகமான வானிலை மாற்றங்கள், உரம், பூச்சிக்கொல்லிகளின் கடுமையான விலையுயர்வு மற்றும் விரோதமான அரசுக் கொள்கைகள் ஆகியவற்றால் நொந்துபோன தேயிலை விவசாயிகள் தொழிலையே வெறுக்கும் நிலைக்கு ஆளாகிவிட்டனர்.

விளைபொருட்களின் விலை!
கடந்த தசாப்தத்தில், நீலகிரி மாவட்டத்தின் உயிர்மூச்சான பச்சைத் தேயிலையின் விலை பெரிதாக உயரவில்லை. இந்திய தேயிலை வாரியத்தின் தரவுகள்படி, பத்தாண்டுகளுக்கு மேலாக பச்சைத் தேயிலை விலை ரூ. 9-க்கும் ரூ.17-க்கும் இடையில் மட்டுமே ஊசலாடிக் கொண்டிருக்கிறது. நீலகிரிப் பிரதேசத்தின் மேட்டுப்பகுதிகளான ஊட்டியிலும் குன்னூரிலும் இருக்கும் விவசாயிகளின் நிலை சற்று பரவாயில்லை. அவர்களின் தேயிலைக்கு நல்ல விலை கிடைக்கிறது.

ஆனால் அறுவடைப் பருவத்தின் உச்சத்தில், பச்சைத் தேயிலை விலை ஒரு கிலோவுக்கு ரூ.9-ஆகக் குறைந்துவிடும். காரணம் அதிகமாக உற்பத்தியாகும் பச்சைத் தேயிலையைப் பதப்படுத்தும் ஆலைகளின் திறன் குறைவாக இருப்பதுதான். இந்தக் காலகட்டத்தில் தேயிலை வேண்டாத பொருளாகி விடுகிறது.

இந்திய  தேயிலை வாரியத்தின் தரவுகள்படி, பத்தாண்டுகளுக்கு மேலாக பச்சைத் தேயிலை விலை ரூ. 9-க்கும் ரூ.17-க்கும் இடையில் மட்டுமே ஊசலாடிக் கொண்டிருக்கிறது

கூடலூர் அருகே கையுன்னியில் வாழும் தேயிலை விவசாயிகளின் அமைப்பான கையுன்னி சிறு தேயிலை விவசாயிகள் அமைப்பு இந்திய தேயிலை வாரியத்திடம் சமர்ப்பித்த விலைத் தரவுகள் படி, கடந்த ஐந்தாண்டுகளில் தேயிலைக்கு நல்ல விலை கிடைத்தது உலகம் முழுவதும் கொரோனா பரவிய நான்கு மாதங்களில் மட்டுமே. அந்தப் பெருந்தொற்றுக் காலத்தில் விலை ரூ. 20-யைத் தாண்டின. 2020-21 ஆகஸ்டில் விலை ரூ.23, செப்டம்பரில் ரூ.27, அக்டோபரில் ரூ.24, நவம்பரில் ரூ.23 என்று ஒருகிலோ தேயிலையின் விலைகள் இருந்தன.

இந்த நான்கு மாதங்களில், கேரளா அரசு தனது முகமைகளுக்கு தமிழகத்துத் தேயிலைக் கூட்டுறவு இயக்கமான இண்ட்கோவிடம் நேரடியாக தேயிலையைக் கொள்முதல் செய்யுமாறு ஆணையிட்ட பின்புதான், தேயிலை நல்ல விலைகளில் விற்றுத் தீர்ந்தன. இந்தக் காலகட்டத்தில் கொரோனாவால் அஸ்ஸாமில் தேயிலைத் தோட்டங்கள் மூடப்பட்டன; மற்ற நாடுகளிலிருந்து தேயிலை இறக்குமதியும் தடை செய்யப்பட்டது.

2017-18 தரவுகள்படி, தேயிலைக்குக் கிடைத்த ஆகப்பெரும் விலை ரூ.15 ஆகவும், மிகக்குறைவான விலை ரூ.9.50 ஆகவும் இருந்தன. கடந்த இரு தசாப்தங்களில், தேயிலை விலை கிட்டத்தட்ட ஒரே நிலையில்தான் இருக்கிறது. ஆனால் உற்பத்திச் செலவுகள் மட்டும் பன்மடங்காகி விட்டன.

மேலும் படிக்க: கனமழை: கவனமாகச் செயல்படுமா உள்ளாட்சி அமைப்புகள்?

கச்சாப்பொருட்களின் விலையுயர்வு!
நீலகிரியில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் கூலி 2005-06ல் ஆணுக்கு ரூ.500 என்றும் பெண்ணுக்கு ரூ.150 என்றுமிருந்தன. இப்போது ரூ.500 ஆகவும், ரூ.300 ஆகவும் உயர்ந்துவிட்டன. அதேநேரத்தில் எரிபொருள் விலை, போக்குவரத்து செலவு, உரவிலைகள் பன்மடங்கு உயர்ந்துவிட்டன. பண்ணை ஆட்களில் 90 சதவீதம் 50 வயதைத் தாண்டியவர்கள். ஏனென்றால் தொழிலாள வர்க்கத்தின் இளைஞர்கள் எல்லோரும் கோயம்புத்தூர், திருப்பூர், பெங்களூரூ ஆகிய நகரங்களுக்கு நல்ல வேலை தேடி புலம்பெயர்ந்து விட்டனர் என்று ஓர் ஆய்வு சொல்கிறது.

விவசாயிகளின் படித்த பிள்ளைகள் இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்குப் பிழைப்புக்காகப் புலம்பெயர்ந்து விட்டனர். தாய்மண்ணிற்குத் திரும்பும் எண்ணமும், தேயிலை வேளாண்மையில் முதலீடு செய்யும் திட்டமும் அவர்களுக்கு இல்லை.
தங்கள் தகப்பன்களும் மூதாதையார்களும் வருமானத்தையும் தன்மானத்தையும் இழந்து சுரண்டல் சமூகத்தால் சுரண்டப்பட்டு வறண்ட வாழ்க்கையை வாழ்ந்தவர்கள் என்பது அவர்களுக்கு அனுபவம் கற்றுக் கொடுத்த அவலமான பாடம்.

எல்லைமீறிய இறக்குமதி!
ஒன்றிய அரசின் மோசமான கொள்கையால் வேளாண் பொருட்கள் தங்குதடையின்றி இறக்குமதி செய்யப்பட்டு பணப்பயிர்களின் விலை சரிந்துவிட்டதாக நினைக்கின்றனர் விவசாயிகள். மிளகு, பாக்கு ஆகிய பணப்பயிர்களின் விலைகளையும் சரித்துவிட்டன. இந்தியாவின் மொத்த மிளகு உற்பத்தி 50,000 டன்; மொத்த நுகர்வு 70,000 டன். உற்பத்திச் செலவுகள் உயர்ந்துவிட்டபடியால், மிளகு விவசாயம் செய்வதை விட்டுவிட்டார்கள் விவசாயிகள்.

அதனால் இந்திய அரசு தரங்குறைந்த வியட்நாம் மிளகை இறக்குமதி செய்கிறது. வியட்நாம் மிளகையும் இந்திய மிளகையும் கலந்து இந்திய மிளகு என்ற பேரில் ஏற்றுமதி வேறு நடக்கிறது. இதனால் உலகச் சந்தையில் நிஜமான இந்திய மிளகின் பேரும் கெட்டுவிடுகிறது.

ஒன்றிய அரசின் மறைமுகமான சம்மதத்துடன் உர நிறுவனங்கள் உரங்களின் விலைகளையும், மற்ற வேளாண்மைக் கச்சாப்பொருட்களின் விலைகளையும் தாறுமாறாக ஏற்றிவிட்டபடியால், தேயிலை வேளாண்மை கட்டுப்படியாகும் தொழிலாக இல்லாமல் போய்விட்டது.

கடந்த ஐந்தாண்டுகளில் தேயிலைக்கு நல்ல விலை கிடைத்தது உலகம் முழுவதும் கொரோனா பரவிய நான்கு மாதங்களில் மட்டுமே

மனிதர்களுக்கும் விலங்குகளுக்குமான போராட்டம்
தேயிலை வேளாண்மையை விவசாயிகள் கைவிடுவதற்கு மற்றுமொரு காரணம் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையில் நடக்கும் போராட்டம். வனத்துறையின் தரவுகள்படி கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் யானைகள் தாக்கியதில் 10க்கும் மேலானோர் இறந்துவிட்டனர் (2021 மற்றும் 2022 செப்டம்பர் வரை). காட்டெல்லைகளுக்கு அப்பால் வசிக்கும் விவசாயிகளின் பயிர்களையும் மேய்ந்து யானைகள் பாழ்படுத்தி விடுகின்றன.

மோசமான காட்டு மேலாண்மையால் காடுகள் தரிசானபடியால் யானைகள் தங்களுக்குப் பிடித்த பலா, வாழை, காய்கறிகள் போன்ற தீவனங்கள் தேடி ஊருக்குள் வந்து பயிர்களை அழித்து நாசம் செய்துவிடுகின்றன. வெடிச்சத்தம், முழவுச் சத்தம் அல்லது கும்பல் எழுப்பும் சத்தம் என்று எதற்கும் யானைகள் அஞ்சுவதில்லை. போதாதற்கு குரங்குகள், கரடிகள், மயில்கள், மான்கள் என்று வெவ்வேறு விலங்குகள் தங்கள் பங்கிற்கு இரவும் பகலும் வந்து விவசாயிகளின் துயரங்களை அதிகமாக்கி விடுகின்றன.

மேலும் படிக்க: நீலகிரி வரையாடுகள் வசிக்கும் சோலைக் காடுகளை ஏன் பாதுகாக்க வேண்டும்?

பாதகமான வானிலை
விவசாயிகளின் துயர நெருப்பில் பாதகமான வானிலை வேறு நெய் வார்க்கிறது. அதனால் காஃபி, தேயிலை, மிளகு, பாக்கு ஆகிய பணப்பயிர்களின் வேளாண்மை பாதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்திலும், கேரளாவின் வயநாடு மாவட்டத்திலும் ஜூலையிலும் ஆகஸ்டிலும் பெய்த தொடர் கனமழையால் அங்கிருந்த தேயிலைத் தோட்டங்கள் நாசமாயின; கிட்டத்தட்ட தேயிலைத் தொழில் முழுவதும் முடங்கிப் போனது.

அந்தப் பகுதிகள் முற்றிலும் பல வாரங்களாக ஈரத்தில் உறைந்து போனதால், 50,000க்கும் மேலான விவசாயிகளும், இலட்சக்கணக்கான தோட்டத்தொழிலாளர்களும், தேயிலை வினியோகிப்பவர்களும், ஆலைத் தொழிலாளர்களும் வாழ்வாதாரம் இழந்து தவித்தனர்.

இந்த காலகட்டத்தில் 292 பச்சைத் தேயிலை ஆலைகளில் பெரும்பாலானவை பல வாரங்களாக மூடப்பட்டன. ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக நடக்கும் இந்தத் தொழிலில் இப்படிப்பட்ட முடக்கம் நிகழ்ந்ததில்லை என்று நிபுணர்கள் கருதுகிறார்கள்.

விவசாயிகளின் படித்த பிள்ளைகள் இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, சிங்கப்பூர், ஆஸ்ட்ரேலியா ஆகிய நாடுகளுக்குப் பிழைப்புக்காகப் புலம்பெயர்ந்து விட்டனர்

தொடர் மழையோடு கனத்த உறைபனி தாக்கி தேயிலைகளில் கொப்பளங்கள் ஏற்பட்டு 80 சதவீத அறுவடை பாதிப்புக்குள்ளானது. ஒரு ஏக்கர் தேயிலைத் தோட்டம் வைத்திருக்கும் ஒரு விவசாயி சராசரியாக மாதம் 500 கிலோ பச்சைத் தேயிலை அறுவடை செய்வார். ஆனால் இந்த ஆகஸ்டு மாதத்தில் வெறும் 124 கிலோதான் அவருக்குக் கிடைத்தது; அதனால் வருமானமும் குறைந்தது. வழக்கமாக ஒரு விவசாயிக்கு 500 கிலோ தேயிலைக்கு ரூ.5,500 மாதம் கிடைக்கும் (ஒரு கிலோ ரூ.11). இந்த ஆகஸ்டில் அது ரூ. 1,364-ஆக குறைந்தது.

இந்திய தேயிலை வாரியத்தின் தரவுகள் படி, நீலகிரியில் பதிவு செய்த தேயிலை விவசாயிகள் எண்ணிக்கை 48,000; வயநாட்டில் 2,650. ஆனால் பதிவு செய்யப்படாத விவசாயிகளும் ஏராளமான பேர் இருக்கிறார்கள். தேயிலை வேளாண்மைக்கு ஏற்பட்ட நட்டங்களை மதிப்பீடு செய்ய ஒரு நிபுணர் குழுவை அமைக்கும்படி ஒன்றிய, மாநில அரசுகளிடம் விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

2006ல் சமர்ப்பிக்கப்பட்ட எம்.எஸ்.சுவாமிநாதன் குழுவின் பரிந்துரைகள் படி, பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்கும்படியும் அவர்கள் கோரிகை வைத்துள்ளனர். ஒரு நாளைக்கு குறைந்தது 10,000 கிலோ தேயிலை வந்தால்தான் தேயிலை ஆலைகள் இயங்கும். ஆனால் அந்த அளவு தேயிலைவரத்து இல்லை என்பதால் பெரும்பாலான ஆலைகள் மூடப்பட்டன.

வயநாட்டில் இருக்கும் பிராந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் தந்த தரவுகள் படி, இந்தப் பிராந்தியத்தில் 60 ஆண்டுகளில் பெய்த மழையளவை ஆராய்ச்சி செய்ததில், இந்தாண்டு ஜூலையில் 65 சதவீதம் அதிக மழையும், ஆகஸ்டில் 62 சதவீதம் அதிக மழையும் பதிவாகியுள்ளது தெரிய வந்திருக்கிறது.

இவ்வாறு பல்வேறு காரணங்களால் நொந்துபோன தேயிலை விவசாயிகள் தொழிலையே வெறுக்கும் நிலைக்கு ஆளாகிவிட்டனர். அதனால் தங்கள் குழந்தைகளாவது கஷ்டப்படக்கூடாது என்பதற்காக அவர்களை உள்நாட்டிலோ வெளிநாட்டிலோ வேறு வேலைகளுக்கு அனுப்பி வைக்கிறார்கள்.

Share the Article

Read in : English

Exit mobile version