Read in : English
நடிகர் விஜய் நடித்த, தமிழ் சினிமா வாரிசின் இசை வெளியீட்டு விழாவின்போது ரசிகர்கள் இருக்கைகளைச் சேதப்படுத்தியதால் நேரு உள் விளையாட்டரங்கம் தயாரிப்பு நிறுவனத்துக்கு அபராதம் விதித்தது என்று ஒரு செய்தி வந்தது. அதை வெறும் செய்தியாக மட்டும் எடுத்துக்கொள்ள முடியாது.ஏனென்றால், அதற்கு முன்னதாக வாரிசு திரைப்பட இசை வெளியீட்டு விழாவின்போது ரசிகர்கள் முட்டி மோதி விழா அரங்குக்குள் தன்னிலை மறந்து விரைந்து ஓடும் காட்சிப்பதிவுகளைச் சமூக ஊடகங்களில் பார்க்க முடிந்தது.
அடுத்து, துணிவு படத்தின் போஸ்டரை துபாயில் அந்தரத்தில் பாராசூட்டில் பறந்தபடி வெளியிட்டு விளம்பரப்படுத்தியிருக்கிறார்கள். இவற்றை எல்லாம் பார்க்கும்போது, தமிழர்களது சினிமா மோகம் சற்றும் குறையவில்லை என்றே தோன்றுகிறது. அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் வெளிவர உள்ள வாரிசு, துணிவு ஆகிய படங்களின் போட்டா போட்டி 2022ஆம் ஆண்டின் இறுதியில் தொடங்கிவிட்ட சூழலிலேயே, இந்த ஆண்டு முழுவதும் தமிழ் சினிமாவின் பயணம் எப்படியிருந்தது என்பது பற்றிப் பேச வேண்டியதுள்ளது.
இந்த நேரத்தில், தமிழ் திரைப்படங்களைப் பற்றி விடுதலையடைந்த இந்தியாவின் முதல் நிதியமைச்சரும் புகழ்மிக்க அறிவாளுமையுமான ஆர்.கே.சண்முகம் செட்டியார் எழுதிய கட்டுரை ஒன்று நினைவில் எழுகிறது. அந்தக் கட்டுரையில் அவர் இப்படிக் குறிப்பிடுகிறார்: “மக்கள் இதைத்தான் விரும்புகிறார்கள், அதைத்தான் ரசிக்கிறார்கள் என்று எல்லா ஆபாசத்திற்கும் ஜனங்கள் மேல் பழியைப் போடுவது சரியான முறையன்று.
ஜனங்களுக்குச் சரியான வழியில் கலை அறிவை ஊட்டுவது சினிமாத் தொழிலில் இறங்கியவர்களுடைய கடமை. சினிமா ஒரு நல்ல கலை. அதில் இயல், இசை, நாடகம், சித்திரம், சிற்பம், நாட்டியம் முதலிய எல்லாக் கலைகளும் அடங்கியிருக்கின்றன. இவ்வளவு உயர்ந்த ஒரு கலையை நல்ல முறையில் தமிழ்நாட்டில் வளர்ப்பது தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் செய்யும் சிறந்த தொண்டுகளில் ஒன்று என்று நான் கருதுகிறேன்.”
விரைவில் வெளிவர உள்ள வாரிசு, துணிவு ஆகிய படங்களின் போட்டா போட்டி 2022ஆம் ஆண்டின் இறுதியில் தொடங்கிவிட்ட சூழலிலேயே, ஆண்டு முழுவதும் தமிழ் சினிமா பயணம் எப்படியிருந்தது என்பது பற்றிப் பேச வேண்டியதுள்ளது
இந்தக் கட்டுரை எழுதப்பட்டு எழுபது ஆண்டுகளுக்கு மேல் இருக்கும். ஆனாலும் இன்னும் நிலைமை மாறவேயில்லை.
இந்த ஆண்டில் வெளியாகிப் பெரிய வெற்றியைப் பெற்ற படங்களின் பட்டியல் வழியே இந்த முடிவுக்குத்தான் வர முடியும். நடிகர் கமல் ஹாசன் நடித்த விக்ரம், இயக்குநர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன்: பாகம் 1, விஜய்யின் பீஸ்ட், அஜித்தின் வலிமை உள்ளிட்ட 10 படங்கள் ஐம்பது கோடி முதல் 500 கோடி ரூபாய் வரை வசூலித்துக் கொடுத்திருக்கின்றன.
சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் திரைப்படம் சுமார் 200 கோடி ரூபாய் வரை வசூலித்துக் கொடுத்துள்ளது எனில், தமிழ் ரசிகர்கள் எதற்கும் துணிந்தவர்கள்தான். வணிகரீதியில் தமிழ் திரைத் துறைக்கு இத்தகைய வெற்றிகள் ஊக்கத்தைத் தரும் என்பதை மறுக்க இயலாது.
மேலும் படிக்க: உள்ளடக்கத்தில் மாறுதல் காணும் தமிழ்ப் படங்கள்?
கொரோனா பெருந்தொற்றின் பின்னே திரையரங்குகள் புத்துயிர் பெறுமா எனப் பதைபதைத்துப் போயிருந்த திரையுலகத்துக்கு இந்த வசூல் வேட்டை தெம்பைக் கொடுத்துள்ளது. ஆனால், ஆர்.கே.சண்முகம் செட்டியாரைப் போல் சினிமாவைக் கலையாக அணுகுபவருக்கு இந்த ஆண்டு சலிப்பான ஆண்டாகவே முடிந்துள்ளது. 2021ல் வெளியான கர்ணன் போன்ற ஒரு படம் கூட இந்த ஆண்டில் வெளியாகியிருக்கவில்லை.
ஓரளவுக்குச் சொல்லக்கூடியபடம் என ஓடிடி தளங்களில் வெளியான டாணாக்காரன், முதல் நீ முடிவும் நீ போன்ற ஓரிரு படங்களை மட்டுமே நினைவுபடுத்த முடிகிறது.கர்ணன் திரைப்படத்தில் வெகுஜன ரசிகரை வசீகரிக்கும் நாயக அம்சம் தூக்கலாக இருந்தபோதும், ஒரு சினிமாவாக அது வெளிப்படுத்திய கலை அம்சத்தைப் புறந்தள்ள முடியாது.
2022ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பொங்கல் பண்டிகையின்போது பெரிய நடிகரது படம் எதுவுமே வெளியாகவில்லை. சிறிய பட்ஜெட் படங்களே வெளியாயின. அவற்றால் எந்தத் தாக்கத்தையும் உருவாக்க முடியவில்லை. பெரிய நடிகர்களது படங்களே வசூலை வாரிக்கொடுக்கும் என்பதுதான் உண்மையோ என்று எண்ணவைத்தது இந்தப் போக்கு. ஆனால், ஆண்டிறுதியில் வெளியான லவ்டுடே அடைந்துள்ள வெற்றியைப் பார்க்கும்போது, ரசிகர்களுக்குப் பிடித்தால் சிறிய பட்ஜெட் படங்களும் வசூலை வாரிக்கொடுக்கும் என்ற வழக்கமான நம்பிக்கை மீண்டும் அழுத்தம் பெறுகிறது.
கடந்த ஆண்டின் இறுதியில் வெளியான ரைட்டர் படம் போல, இந்த ஆண்டின் இறுதியில் லவ்டுடே நம்பிக்கையைத் தந்துள்ளது. ஆனால், ரைட்டர் படம் போல் சமூக பிரக்ஞையுடன் உருவாக்கப்பட்ட படமன்று லவ்டுடே. இதுவும் ரசிகரது கிளுகிளுப்பு உணர்வைத் தூண்டிவிட்டு வசூல் பார்த்த படமே. அந்த வகையில் கமல்ஹாசனின் விக்ரம், பிரதீப் ரங்கநாதனின் லவ்டுடே இரண்டும் ஒரே தரத்திலானவையே.
ஆண்டிறுதியில் வெளியான லவ்டுடே அடைந்துள்ள வெற்றியைப் பார்க்கும்போது, ரசிகர்களுக்குப் பிடித்தால் சிறிய பட்ஜெட் படங்களும் வசூலை வாரிக்கொடுக்கும் என்ற வழக்கமான நம்பிக்கை மீண்டும் அழுத்தம் பெறுகிறது
அதேநேரத்தில் இயக்குநர் சாமி இயக்கிய அக்கா குருவி படமும், சந்தோஷ் பி ஜெயகுமாரின் பொய்க்கால் குதிரையும் படு தோல்வியை அடைந்தன. இந்த இரு இயக்குநர்களும் தமிழ்ச் சமூகத்துக்கு ஏற்கெனவே உருவாக்கியளித்த படங்களைப் பற்றி அறிந்தவர்களுக்கு மட்டுமே இந்தச் செய்தி வியப்பைத் தரும்.
வழக்கமான பொழுதுபோக்கு என்னும் வகையில் வெளியாகி வெற்றிபெற்ற படங்கள் என விக்ரம், பொன்னியின் செல்வன், பீஸ்ட், வலிமை, திருச்சிற்றம்பலம், சர்தார், விருமன் போன்றவற்றைப் பட்டியலிடலாம். அதேநேரத்தில் மாற்றுப் படங்கள் என்னும் சாயல் கொண்டு வெளியானவையும் உண்டு. அந்தப் பட்டியல் கடைசி விவசாயி படத்தில் தொடங்குகிறது.கள்ளன், குதிரைவால், சாணிக்காயிதம், நட்சத்திரம் நகர்கிறது, விட்னஸ் எனச் சில படங்கள் வந்து போயின.
அவையும் பெரிய தாக்கத்தை உண்டுபண்ணிய திரைப்படங்களாக அமையவில்லை என்பதே யதார்த்தம். ஒருபுறம் சாதாரண வணிகப் படங்கள் பெரிய வெற்றியை ஈட்டுகின்றன; இன்னொரு புறம் கலை முயற்சியில் உருவான படங்கள் சோடை போகின்றன.
மேலும் படிக்க: சீதா ராமம் முன்வைப்பது மத நல்லிணக்கமா?
இவ்விரண்டுக்கும் இடைப்பட்ட இடைவெளியில் ஓரிரு படங்கள் வந்தன. அதாவது, முழுமையான கலைப்படமாகவும் அமையாமல் பொழுதுபோக்கு எனச் சுட்டவும் முடியாத படங்கள். இந்த வகைக்கு உதாரணங்களாக மாமனிதன், கார்கி, நெஞ்சுக்கு நீதி போன்ற படங்களைக் குறிப்பிடலாம். ஆனால், அவை வசூலில் பெரிய உயரத்தைத் தொடவில்லை; கலைரீதியாகவும் சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கவில்லை. கடந்த ஆண்டு வெளியான மாநாடு திரைப்படம் இந்த வகைக்குள் அடங்கியது. விமர்சனரீதியாகவும் வணிகரீதியாகவும் சொல்லிக்கொள்ளும்படியான வெற்றியைப் பெற்றது.
இவற்றைத் தவிர்த்து, இந்த ஆண்டு வெளியான படங்களில் கவனத்தை ஈர்த்தவை என இரவின் நிழல், நம்பி: ராக்கெட்ரி விளைவு முதலிய படங்களைக் குறிப்பிடலாம். இரவின் நிழல் பார்த்திபனின் வழக்கமான மாறுபட்ட முயற்சி. ஆனால், படத்தைப் பற்றிய இயக்குநர் பேசிய அளவு படம் பேசப்படவில்லை. நம்பி: ராக்கெட்ரி விளைவும் மாதவனின் இயக்க முயற்சி என்பதைத் தாண்டி பெரிதாக சோபிக்கவில்லை.
நேரடித் தமிழ்ப் படங்கள் தவிர காந்தாரா, சீதாராமம் ஆகிய மொழிமாற்றப் படங்களும் சலனத்தை ஏற்படுத்தின. தமிழக அமைச்சரானதால் இனி நடிக்கப் போவதில்லை என உதயநிதி ஸ்டாலின் முடிவெடுத்ததும், பிரபல இயக்குநரும் நடிகருமான பிரதாப் போத்தனின் மறைவும் இந்த ஆண்டை நினைவூட்டும் நிகழ்ச்சிகள்.
ஊடகத்தின் பெருங்கவனத்தை ஈர்த்த சம்பவங்களில் ஒன்றாக அமைந்தது நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகியோருடைய திருமணம். நடிகர் ரஜினிகாந்த் நடித்த பாபா திரைப்படம் மீண்டும் வெளியிடப்பட்டு மீண்டும் தோல்வியடைந்தது மற்றொரு குறிப்பிடத்தக்க சம்பவம். வழக்கமாக தீபாவளி, பொங்கல் போன்ற திருவிழாக்களின் போது வெளியாகும் படங்கள் தான் வசூல் சாதனை படைக்கும் இந்த ஆண்டு அந்த வகையில் மாறுபட்டது.
மொத்தத்தில், ஒரு கலவையான படங்களைப் பார்த்துள்ளோமே தவிர கவனத்தில் நிலைக்கும்படியான, கலையறிவை ஊட்டும்படியான ஒரு படத்தையும் பார்க்கவில்லை என்பதே நிதர்சனம். அடுத்த ஆண்டாவது அப்படி ஒரே ஒரு படமாவது வருகிறதா எனப் பார்ப்போம்.
Read in : English