Site icon இன்மதி

உச்சமும் வீழ்ச்சியும்: பாகவதர் முதல் வடிவேலு வரை

Read in : English

திரைப்படக்கலை பல்லாயிரக்கணக்கான கலைஞர்களின், உழைப்பாளிகளின் ரத்தம், கண்ணீர், வியர்வையால் கட்டமைக்கப்பட்ட நவீன உலகப் பிரம்மாண்டம். இந்த மாயக்கனவுத் தொழிற்சாலையில் நுழைந்து ஒருவர் நடிகர் ஆவது பெரும்போராட்டம்; அதைவிட ஆகப்பெரும் போராட்டம் உச்சம் தொடுவது; அதனினும் மிகமிகத் தீவிரமான போராட்டம் அவ்வாறு அடைந்த உச்சத்தை நீண்டகாலம் தக்கவைத்துக் கொள்வது.

இங்கே உச்சம் தொட்டு வீழ்ந்தவர்கள் உண்டு; வீழ்ந்து எழுந்தவர்கள் உண்டு. ஆனாலும், உச்சம் தொட்டு வீழ்ந்தவர்கள் பலர் காணாமல்தான் போயிருக்கிறார்கள் என்பது சரித்திரம் சொல்லும் உண்மை.

தமிழ்த் திரைப்படம் பேசத் தொடங்கிய 1931லிருந்து 2022இன் இறுதி வரை இந்த உண்மை ஆழமாக நிரூபிக்கப்பட்ட ஒரு நிதர்சனமாகவே உள்ளது. ஏழிசை வேந்தர் எம்.கே.தியாகராஜ பாகவதர் முதல் மண்ணின் மைந்தன் நகைச்சுவைக் கலைஞன் வடிவேலு வரைக்கும் இந்த நிஜம் முழுமையாகப் பொருந்தும்.

ஒல்லியான கறுப்புத் தேகம்; உடல்மொழியில் மதுரை மண்வாசனை; சிரிப்பை வரவழைக்கும் வட்டாரமொழிப் பேச்சு; அப்பாவி முகபாவம் – 1980களின் முடிவில் தமிழ்த் திரைப்பட உலகில் நுழைந்த வடிவேலு தன்னுடன் கொண்டுவந்த இந்த அம்சங்கள்தான் அவரைப் புகழின் உச்சத்திலும் எல்லாத்தரப்பு மக்களின் இதயங்களிலும் கொண்டு சேர்த்தன.

1988ல் டி.ராஜேந்தரின் ‘என் தங்கை கல்யாணி’ திரைப்படத்தில் வெறுமனே தலைகாட்டிய வடிவேலு, ராஜ்கிரணின் புண்ணியத்தால் 1991ல் ‘என் ராசாவின் மனசிலே’ படத்தில் முறைப்படி அறிமுகம் ஆகி பின்னர் மடமடவென்று சின்ன கவுண்டர், சிங்கார வேலன் என்று முன்னணி நட்சத்திரங்களான விஜய்காந்த், கமல்ஹாசன் ஆகியோருடன் நடித்து 1992ல் நடிகர்திலகம் சிவாஜி கணேசனுடன் ’தேவர் மகனி’ல் நடிக்கும் பாக்கியத்தையும் அவரது புகழுரையையும் பெற்றார் வடிவேலு.

1992ல் நடிகர்திலகம் சிவாஜி கணேசனுடன் ’தேவர் மகனி’ல் நடிக்கும் பாக்கியத்தையும் அவரது புகழுரையையும் பெற்றார் வடிவேலு; அப்போது சூடுபிடித்து ஏறுமுகம் கண்ட அவரது நடிப்புத் தொழில் உச்சம் தொட்டது 2006ல் வெளியான ‘இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’யில்தான்

அப்போது சூடுபிடித்து ஏறுமுகம் கண்ட வடிவேலுவின் நடிப்புத் தொழில் உச்சம் தொட்டது 2006ல் வெளியான ‘இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’யில்தான். அந்தத் திரைப்படமே வடிவேலு காமெடியின் முழுப்பரிமாணத்தையும் வெளிக்காட்டி அவருக்கு ஆகப்பெரும் கதாநாயக அந்தஸ்தைத் தந்தது. அதன் வெற்றி உற்சாகத்தாலும் நம்பிக்கையாலும் அவர் மேற்கொண்டு இந்திர லோகத்தில் நா. அழகப்பன் (2008), தெனாலிராமன் (2014), எலி (2015) ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தார். ஆனால் இம்சை அரசன் புலிகேசி போல அவரால் மீண்டும் ஒருமுறை வெற்றி பெற முடியவில்லை.

அதன்பின்னர் ஏற்பட்ட பல்வேறு சர்ச்சைகள் வடிவேலுவை சில ஆண்டுகள் திரைப்பட உலகத்திலிருந்து தள்ளிவைத்தன. 2011 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாகச் செய்த பிரச்சாரம், விஜயகாந்துடன் கொண்ட மோதல், சக நடிகர்கள் சிங்கமுத்து போன்றவர்களுடன் கொண்ட பகை, 2011ல் அஇஅதிமுக மீண்டும் ஆட்சியைப் பிடித்தது ஆகிய காரணங்களுக்கு வடிவேலுவைத் திரையுலகில் இருந்து தள்ளி வைத்ததில் முக்கியப் பங்குண்டு.

மேலும் படிக்க: தரம் இழந்து போகும் நகைச்சுவை: உருவத்தை கேலி செய்து கிண்டலடிக்கும் தமிழ் சினிமா!

மேலும் இம்சை அரசன் 24ஆம் புலிகேசியை எடுக்க முயன்ற தயாரிப்பாளர் ஷங்கருடன் ஏற்பட்ட பிரச்சினை வடிவேலுவுக்கு எதிரான ஓர் அலையை உருவாக்கியது.

தற்போது 62 வயதாகும் வடிவேலு இதுவரை 118 படங்களில் நடித்துள்ளார். கிட்டத்தட்ட முப்பதாண்டுக்கும் மேலாக திரைப்படத் துறையில் இருந்து வருகிறார்; ஆனால், சமீபத்திய படமான ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ மீண்டும் உச்சம் தொட நினைத்த வடிவேலுவின் திட்டங்களைத் தவிடுபொடியாக்கி விட்டது.

2001ல் ‘ப்ரெண்ட்ஸ்’ படத்தில் வந்த காண்ட்ராக்டர் நேசமணி 20 ஆண்டுகள் கழித்து சமூக வலைத்தளத்தில் மீண்டும் உயிர்பெற்றது ஆச்சரியத்திலும் ஆச்சரியம். சமூக வலைத்தளங்களின் மீம் படைப்பாளிகளுக்கு எப்போதுமே வடிவேலுதான் பிரம்மா

அதீத தொழில்நுட்பமும் பளபளப்பான தோற்றமும் கொண்ட வந்த நாய் சேகர் இந்த மின்னணு யுகத்துக்கு வேண்டுமானால் பொருத்தமாக இருக்கலாம். ஆனால் ‘தலைநகரம்’ படத்தில் கோமாளித்தனமான பேண்டும் கோட்டும் அணிந்து ‘நானும் ரவுடிதான்’ என்று அலப்பறை செய்து கொண்டே வந்து ‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’ என்று டயலாக் விட்டு சிரிப்பலைகளை உருவாக்கிய அந்த நாய்சேகர் தான் ஜனங்களுக்கு மிகவும் பிடித்தமானவர்; அந்த நாய்சேகர் – டிஜிட்டல் பளபளப்பில் காணாமல் போனதால் சமீபத்திய படம் யாருடைய கவனத்தையும் ஈர்க்காமலே போய்விட்டது.

“ஏம்பா அந்தப் பொண்ண கையப்பிடிச்சி இழுத்தியா?” என்று பஞ்சாயத்துத் தலைவர் கேட்டதற்கு, “என்ன கையப்பிடிச்சி இழுத்தியா?’ என்று எதிர்கேள்வி கேட்ட வடிவேலுவின் முகத்தில் வில்லத்தனம் கலந்த வெகுளித்தனம் கொப்பளித்தது. அவரது உடல்மொழியும், திரும்பத் திரும்பச் சொன்ன அவரது “என்ன….” என்ற வார்த்தையும் பல பேரைப் பைத்தியம் பிடிக்க வைத்தது; அதேபோல, நிஜ வாழ்க்கையிலும் பல ரசிகர்களை இமிடேட் செய்ய வைத்தது.

“இதுவரை யாரும் என்னை கை வைச்சதில்ல…’ என்று வடிவேலு சொல்ல, “போன மாசம்தானே வாங்கின எங்கிட்ட” என்று வில்லன் சொல்ல, மீண்டும் “அது போன மாசம். நான் சொல்றது இந்தமாசம்” என்று சீரியஸான முகத்தோடு பதில் சொன்ன அந்த கைப்புள்ள (வின்னர் – 2003) ரெளடித்தனத்தின் பகடி ஆட்டத்தினை ஆடியபோது அவர் தொட்ட உச்சம் வியப்புக்குரியது.

வடிவேலுவைத் திரையுலகில் இருந்து தள்ளி வைத்ததில் 2011 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக அவர் செய்த பிரச்சாரம், விஜயகாந்துடன் கொண்ட மோதல், சக நடிகர்கள் சிங்கமுத்து போன்றவர்களுடன் கொண்ட பகை, 2011ல் அஇஅதிமுக மீண்டும் ஆட்சியைப் பிடித்தது ஆகிய காரணங்களுக்கு முக்கியப் பங்குண்டு

அன்றாட வீதிமொழியிலும் கூட ‘ங்கொய்யால,’ ‘வென்டரு’, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ போன்ற அவரது டிரேட்மார்க் வார்த்தைகள் இடம்பெற்றன; இது வடிவேலு காமெடியின் தாக்கத்திற்கான உதாரணங்கள். அவர் சொன்ன சில சொற்கள் திரைப்படங்களின் தலைப்புகளாக மாறியிருக்கின்றன. ‘நானும் ரவுடிதான்,’ ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்,’ ‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’ ஆகிய படங்களைச் சொல்லலாம்.

2001ல் ‘ப்ரெண்ட்ஸ்’ படத்தில் வந்த காண்ட்ராக்டர் நேசமணி 20 ஆண்டுகள் கழித்து சமூக வலைத்தளத்தில் மீண்டும் உயிர்பெற்றது ஆச்சரியத்திலும் ஆச்சரியம். சமூக வலைத்தளங்களின் மீம் படைப்பாளிகளுக்கு எப்போதுமே வடிவேலுதான் பிரம்மா.

ஆனால் ஒருகாலத்தில் உச்சம் தொட்டு தற்போது வீழ்ந்துவிட்ட வடிவேலு மீண்டும் உச்சம் தொடுவாரா என்பதைப் பொறுத்துத்தான் பார்க்க வேண்டும்.

மேலும் படிக்க: நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்: பெரிய திரையில் மீண்டும் கொடி கட்டிப் பறப்பாரா வடிவேலு?

இதைப் போன்ற ஒரு நிலைதான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கும். 45 ஆண்டுகளுக்கும் மேலாக நிலைத்து நின்ற ஒரு சாதனையாளர் அவர். “அபஸ்வரம்” என்ற வரவேற்பு வாசகத்தோடு இரும்புக் கதவைத் தள்ளிவிட்டுக் கொண்டு கலைந்த தலைமுடியோடும் தாடியோடும் உள்ளே நுழைந்தவாறு அறிமுகம் ஆன (அபூர்வ ராகங்கள்:1975) ரஜினிக்கு எம்ஜிஆருக்குக் கூட கிடைக்காத உலகச் சந்தை கிடைத்தது. வீரா, அண்ணாமலை, பாட்ஷா என்று மிரட்டிய கலைஞர் அவர்.

1996 சட்டமன்றத் தேர்தலில் அவர் கொடுத்த குரல் ஜெயலலிதா தலைமையிலான அஇஅதிமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பிவிட்டு கருணாநிதியின் திமுகவை ஆட்சிக் கட்டிலில் அமர வைத்தது. அப்போதிருந்து அவர் அரசியலுக்கு வந்து எம்ஜிஆர் உருவாக்கி வைத்திருந்த ஒரு வெற்றிடத்தை நிரப்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அவரை முந்திக்கொண்ட வயோதிகமும், சமீபத்தில் வெளியான காலா, தர்பார், அண்ணாத்தே போன்ற படங்களின் தோல்வியும் அவரை பாட்ஷா காலத்துப் புகழைத் தக்கவைக்கப் போராட வைத்துவிட்டன.

தற்போது ஒரு பெரிய ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ரஜினி அரசியலை விட்டு விலகியது ஒன்றும் ஆச்சரியமில்லை. அவரது ரசிகர்களுக்கு வேண்டுமானால் ஏமாற்றமாக இருக்கலாம். சினிமா வெற்றியை அரசியல் வெற்றியாக மொழிபெயர்க்க, எம்ஜிஆர் அளவுக்குத் தன்னிடம் வசீகரம் இல்லை என்ற நிதர்சனத்தைப் புரிந்துகொண்ட புத்திசாலி நடிகர் சூப்பர்ஸ்டார்.

சொல்லப்போனால் எம்ஜிஆருக்கே கூட திரைப்படத் துறையில் இது போன்ற தள்ளாட்டம் ஏற்பட்டது. 1973ல் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ சூப்பர் டூப்பர் வெற்றியை ஈட்டிய கையோடு அரசியலில் குதித்துவிட்டார். அதற்குப் பின்வந்த இதயக்கனி, உரிமைக்குரல் போன்ற திரைப்படங்களைத் தவிர பட்டிக்காட்டு பொன்னையா, நவரத்தினம், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன், ஊருக்கு உழைப்பவன், உழைக்கும் கரங்கள் போன்ற தோல்விப் படங்கள் திரைப்படத் துறை தன்னைக் கைவிட்டுவிட்டதோ என்ற சந்தேகத்தை எம்ஜிஆருக்கு ஏற்படுத்தியிருந்தன.

 ‘உலகம் சுற்றும் வாலிபன்’ சூப்பர் டூப்பர் வெற்றிக்குப் பிறகு எம்ஜிஆருக்கே கூட இது போன்ற தள்ளாட்டம்  ஏற்பட்டது; அதற்குப் பின்வந்த படங்களில் இதயக்கனி, உரிமைக்குரல் தவிர மற்றெதுவும் அவருக்குக் கைகொடுக்கவில்லை

ஆனால் அதிர்ஷ்டத் தேவதை அவரை ஆட்சிக் கட்டிலில் அமரவைத்து அவருக்கான வெற்றியை மறையும் காலம் வரையிலும் உறுதி செய்தது. கூட்டிக் கழித்துப் பார்த்தால் சினிமாவிலும் அரசியலிலும் எம்ஜிஆர் பேர் புகழோடு வாழ்ந்த காலம் மொத்தம் 40 ஆண்டுகள் என அறுதியிட்டுச் சொல்லலாம்.

சற்று பின்னோக்கிப் பார்த்தால் உச்சம் தொட்டு வீழ்ந்த ஒரு பெரிய கலைஞர் ஞாபகத்திற்கு வருகிறார். அவர் எம்கேடி என்று மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட மாயவரம் கிருஷ்ணமூர்த்தி தியாகராஜ பாகவதர். அவரைப் போன்று வாழ்ந்தவரும் இல்லை, வீழ்ந்தவரும் இல்லை என்று பலர் நினைவுகூர்கிறார்கள்.

1934ல் ‘பவளக்கொடி’யில் அறிமுகம் ஆன 24 வயது பாகவதர் தன் வசீகர குரலில் பாடிய பாட்டுக்களுக்குத் தமிழ்நாடு மொத்தமும் கட்டுண்டு கிடந்தது. அவரது வசீகரத்தையும் உச்சப் புகழையும் பிற்காலத்து எம்ஜியார், சிவாஜி ரசிகர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. சிந்தாமணி, சிவகவி, அசோக்குமார், அம்பிகாபதி, ஹரிதாஸ் போன்ற படங்கள் பாகவதரைப் புகழேணி உச்சியில் கொண்டு நிறுத்தின.

பத்திரிகையாளர் லட்சுமிகாந்தன் கொலைவழக்கில் 1944ல் சிறைசென்ற போது தீபாவளிக்கு வெளியான ‘ஹரிதாஸ்’ அவர் 1947ல் விடுதலையானபோதும் ஓடிக் கொண்டிருந்தது. மூன்று தீபாவளிகளைக் கண்ட ஒரே திரைப்படம் என்ற பேரைப் பெற்றது. சிறையிலிருந்து மீண்டுவந்த பாகவதர் சினிமாவிற்குள் மீண்டும் வர முயன்றார். ஆனால் சிறைவாசம் அவரது உடல்நலத்தைப் பாதித்திருந்தது; மேலும், 1940களின் இறுதியில் மக்கள் ரசனை பாட்டிலிருந்து வசனத்திற்குத் தாவிவிட்டது.

அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி போன்ற திராவிட இயக்க எழுத்தாளர்கள் அனல் கக்கும் சமூகச் சீர்திருத்த வசனங்களால் மக்களை வசீகரித்திருந்தனர். அப்போது எம்ஜிஆர், சிவாஜி கணேசன் ஆகிய அடுத்த தலைமுறை சூப்பர்ஸ்டார்கள் உருவாகிக் கொண்டிருந்தனர்.

தன் பழைய புகழை மீட்டெடுக்கும் முயற்சியில் ராஜமுக்தி (1948), அமரகவி (1952), சியாமளா (1958), மற்றும் சிவகாமி (1960) ஆகிய படங்களில் நடித்தார் பாகவதர். ஆனால் அந்த முயற்சிகள் கைகொடுக்கவில்லை. வறுமை மற்றும் நோய்கள் அவருக்கான சந்தையைத் திருடிக்கொண்டு போயின. இறுதியில் திரைப்படத் துறையும் பூமியும் அவருக்கு விடைகொடுத்து வழியனுப்பி வைத்தன; அப்போது அவருக்கு வெறும் 49 வயதுதான்; நடித்த மொத்த படங்கள் வெறும் 13 தான்.

இப்படிச் சரித்திரம் நிறைய பாடங்களை வைத்திருக்கிறது. பிரச்சினை என்னவென்றால், யாரும் பாடம் கற்றுக் கொள்வதில்லை என்பதுதான்.

Share the Article

Read in : English

Exit mobile version