Read in : English
நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் மூலம் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வைகைப் புயல் வடிவேலு நடிக்க வந்திருக்கிறார். சுராஜ் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையில், வடிவேலு நடிக்கும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. ஏற்கெனவே சுராஜ் இயக்கிய தலைநகரம், மருதமலை போன்ற படங்களில் வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிகள் சாகாவரம் பெற்றவை. ஆகவே, இந்தப் படம் அவருக்கு மீண்டும் ஒரு வெற்றிப் படமாக அமைந்து வடிவேலு தொடர்ந்து முன்பைப் போல படங்களில் நடிப்பார் என்று அவரும் அவரது ரசிகர்களும் பெரிய எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள். இந்தப் படத்தின் போஸ்டர் வீடியோவையே பல லட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள்.
எல்லோரையும் சிரிக்கவைக்கும் கலைஞர்கள் வாழ்வில் துயரங்களுக்குப் பஞ்சமிருக்காது என்பார்கள். கடுந்துயரத்தின் மத்தியில்தான் நகைச்சுவை மலரும் என்பது நகைமுரண்தான். வடிவேலு வாழ்க்கையிலும் அவர் கடினமான காலத்தைக் கடந்துவந்திருக்கிறார். பட்டகாலிலே படும் கெட்ட குடியே கெடும் என்பது தமிழ்ப் பழமொழி. அதற்கேற்பக் கடந்த பத்தாண்டுகளாகவே வடிவேலுவின் வாழ்க்கைப் பயணத்தில் பல தடைக் கற்கள்.
1988இல் டி.ராஜேந்தரின் என் தங்கை கல்யாணி என்னும் படத்தில் வடிவேலு ஒரு சிறு வேடத்தில் நடித்திருப்பார். ஆனால், அப்போது ரசிகர்களுக்கு அவர் வடிவேலு என்பதெல்லாம் தெரிந்திருக்கவில்லை. ஏனெனில், ராஜ்கிரண் கதாநாயகனாக நடித்த, கஸ்தூரி ராஜா இயக்கிய என் ராசாவின் மனசிலே படத்திலே தான் வடிவேலுவை ரசிகர்கள் அறிவார்கள். அந்தப் படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடித்ததுடன் போடா போடா புண்ணாக்கு என்னும் பாடலையும் பாடியிருந்தார். தொடர்ந்து சின்னக்கவுண்டர், சிங்கார வேலன், கோகுலம் என நடித்து பரவலான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டார். தேவர் மகன், எம் மகன் போன்ற படங்களில் அவரது குணச்சித்திர நடிப்பும் ரசிகர்களைக் கவர்ந்திருந்தது. ஆனாலும், அவரது நகைச்சுவை நடிப்புதான் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. எத்தனையோ கஷ்டங்களில் மூழ்கிக் கிடந்த ரசிகர்களைச் சுற்றிக் கவலை வலைபின்னாமல் தனது உற்சாகமான நகைச்சுவை நடிப்பால் அவர்களைக் காப்பாற்றினார் வடிவேலு.
சந்திரமுகி படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்னர் முதலில் வடிவேலுவிடம் கால்ஷீட் வாங்கிவிடுங்கள் என ரஜினி சொல்லியிருக்கிறார் என்பதிலிருந்து வடிவேலுவின் அப்போதைய சந்தை மதிப்பையும் அவருக்கிருந்த செல்வாக்கையும் உணர்ந்துகொள்ள முடியும்.
எண்பதுகளில் இறுதியில் நடிக்க வந்துவிட்டாலும், தொண்ணூறுகளில் இறுதியில் பார்த்திபன் வடிவேலு இணை வெற்றிபெற்றுவிட்டாலும் இரண்டாயிரத்துக்குப் பின்னர் வெளியான சித்திக் இயக்கிய ஃப்ரண்ட்ஸ் படத்தில் அவர் வெளிப்படுத்திய நகைச்சுவை நடிப்பு ரசிகர்களை அவரிடத்தில் கொண்டுவந்து குவித்தது. அதிலும், வின்னர் படம் வெளிவந்த பின்னர் வடிவேலு என்னும் நகைச்சுவை நடிகன் தமிழ்த் திரைப்படங்களில் தவிர்க்க முடியாத சக்தியாகவே மாறிப்போனார். ரஜினி, அர்ஜுன், பிரபு தேவா, சத்யராஜ் எனப் பெரிய கதாநாயகர்கள் யார் நடித்திருந்தாலும் அவர்களுடன் இணைந்து நகைச்சுவையில் அசத்தினார். வடிவேலுவுக்காகவே ரசிகர்கள் படம் பார்க்க வரத் தொடங்கினர். சந்திரமுகி படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்னர் முதலில் வடிவேலுவிடம் கால்ஷீட் வாங்கிவிடுங்கள் என ரஜினி சொல்லியிருக்கிறார் என்பதிலிருந்து வடிவேலுவின் அப்போதைய சந்தை மதிப்பையும் அவருக்கிருந்த செல்வாக்கையும் உணர்ந்துகொள்ள முடியும்.
என்.எஸ்.கிருஷ்ணன், தங்கவேலு, சந்திரபாபு, நாகேஷ், வி.கே.ராமசாமி, சுருளிராஜன், கவுண்டமணி, விவேக் என எண்ணற்ற நடிகர்கள் தங்கள் நகைச்சுவை நடிப்பால் தமிழ் ரசிகர்கள் கவலை மறந்து சிரிக்க உதவியுள்ளனர். ஆனால், இவர்களுக்கு எல்லாம் இல்லாத ஒரு வாய்ப்பு வடிவேலுவுக்கு அமைந்தது அது என்னவென்றால், ரசிகர்களால் தங்களை வடிவேலுவுடன் அடையாளப்படுத்திக்கொள்ள முடிந்தது. இந்த வாய்ப்பு பிற நகைச்சுவை நடிகர்களுக்குக் கிடைக்கவில்லை. நாள்தோறும் சாதாரண மனிதர்கள் எதிர்கொள்ளும் நடைமுறை வாழ்க்கையிலிருந்துதான் வடிவேலு தனது கதாபாத்திரங்களுக்கான சம்பவங்களைத் தேர்ந்தெடுக்கிறார். மேலும், தமிழனின் போலிப் பெருமிதத்தை, வெற்றுப் பெருமையை மிக அநாயாசமாக கேலிசெய்து காட்சிப்படுத்திவிடுகிறார். வெறுமனே உதார் விடும் சாதாரண மனிதர்களின் பிரதிநிதியாகவே அவர் எல்லாப் படங்களிலும் வேடமேற்றிருக்கிறார். அறிவுப் புழுதியோ, அறிவுரை, அறவுரை இத்யாதியோ இல்லாத நகைச்சுவையையே அவர் பெரும்பாலும் வழங்குகிறார். வாய் விட்டுச் சிரிச்சா நோய் விட்டுப் போச்சு என்பதே அவரது நகைச்சுவையின் அடிநாதமாக இருக்கிறது.
வெட்டித்தனமாக வீரமாகப் பேசி அடி வாங்கும் எத்தனையோ மனிதர்களை நாம் கடந்துவருவோம். நாம் எளிதில் கடந்துவிடும் சம்பவங்களில் கிடைக்கும் நகைச்சுவைத் தன்மையை வடிவேலு இனம் கண்டு அவற்றைத் தனது உடல்மொழி, முகபாவம், வசன வெளிப்பாட்டுப் பாணி, தனித்துவமான மதுரைத் தமிழ், யாரையும் இழிவுபடுத்தாத தன்மை ஆகியவற்றின் உதவியுடன் நாம் ஆயுளுக்கும் மறக்கு முடியாத நகைச்சுவைக் காட்சிகளாக்கி நமக்குத் தந்துவிடுகிறார். அதுதான் வடிவேலுவின் தனித்தன்மையாகிறது. அதனால் தான் நானும் ரௌடிதான், பேஸ்மெண்ட் ஸ்ட்ராங் பில்டிங் வீக் என்னும் அவரது வசனங்கள் பலத்த கைதட்டலைப் பெறுகின்றன. இதில் இயக்குநர்களுக்கும் பங்கு உண்டு என்றபோதும், முதன்மை இடத்தை வடிவேலு எடுத்துக்கொள்கிறார் என்பது மறுக்கவியலாத உண்மை.
வடிவேலு படங்களில் அவர் பேசிய பல வசனங்கள் நமது அன்றாட வாழ்க்கையில் பல தருணங்களில் நமது கஷ்டமான நிலைமையை நகைச்சுவையாக்கி எளிதில் கடக்க உதவும். ஆணியே புடுங்க வேண்டாம், வந்துட்டான்யா வந்துட்டான், நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன், பில்டிங் ஸ்ட்ராங் பேஸ்மெண்ட் வீக், வட போச்சே எனச் சொல்லிக்கொண்டே போகலாம். திரைப்படத்தையும் தமிழ் நகைச்சுவையையும் தீண்டத்தகாத விஷயம் போல் கருதும் எழுத்தாளர்களும் அறிவுஜீவிகள் எனச் சொல்லப்படும் மனிதர்களும்கூட வடிவேலுவின் வசனங்களை மிக இயல்பாகப் பயன்படுத்தும் சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்பது வடிவேலுவின் வெற்றி. மாற்று இதழான காலச்சுவடு உள்ளிட்டவற்றில்கூட வடிவேலு பற்றிய கட்டுரைகள் வெளிவந்திருக்கின்றன. அவர் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எல்லோருக்குமான நகைச்சுவைக் கலைஞர்.
அப்படிப்பட்ட வடிவேலுவின் திரைப்பயணத்தில் பெரிய சறுக்கலைத் தந்தது அவரது அரசியல் ஈடுபாடு. நகைச்சுவைக் கலைஞர்கள் சாதி, மத பேதமற்றவர்களாக அனைவருக்கும் பொதுவானவர்களாக இருக்க வேண்டும் என்பார்கள். இந்த விஷயத்தில் வடிவேலு ஒரு சிறு தவறு செய்துவிட்டார். சாதி, மதம் சாராத வடிவேலு அரசியலில் ஒரு கட்சி சார்ந்து செயல்பட்டுவிட்டார். 2011ஆம் ஆண்டு தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
தேர்தல் நேரத்தில் வடிவேலு செல்லுமிடங்களில் எல்லாம் அவரது பேச்சுக்கு மக்கள் விழுந்து விழுந்து சிரித்தார்கள். ஆனால், தேர்தல் முடிவுக்குப் பின்னர் அவரது நிலைமை சிரிப்பாய்ச் சிரிக்கும்படி ஆகிவிட்டது. சிறு வயது முதல் எவ்வளவோ துயரங்களைச் சந்தித்தபோதும் எல்லாவற்றையும் மிகச் சாதாரணமாகத் தனது நகைச்சுவை உணர்வால் கடந்துவந்த கலைஞனான வடிவேலுக்கு உண்மையிலேயே இது ஒரு கஷ்ட காலம். தனக்கும் விஜய்காந்துக்குமான தனிப்பட்ட பகையை அரசியல் மூலம் தீர்த்துக்கொள்ள நினைத்த அவருக்கு வாழ்க்கை வேறு ஒரு பாடத்தைக் கற்பித்துவிட்டது.
பத்தாண்டுகளாகவே சொல்லிக்கொள்ளும்படியான படமில்லையெனினும் இன்னும் தமிழ்நாட்டில் எல்லா வீடுகளையும் அவர் தனது படங்களின் நகைச்சுவைக் காட்சிகளாலும் மீம்களின் வடிவிலும் சிரிக்கவைத்துக்கொண்டிருக்கிறா
ர் .*
சுமார் இரண்டு ஆண்டுகள் பொதுமேடைகளிலோ பொதுநிகழ்ச்சிகளிலோ கலந்துகொள்ளமலே காலம் கழித்து வந்தார். இந்தக் காலத்தில் அவரது படங்களின் நகைச்சுவைக் காட்சிகள் யூடியூபில் பல லட்சக்கணக்கானோரால் பார்க்கப்பட்டது; மீம்களின் வழியே அவர் உயிர்ப்புடன் வைக்கப்பட்டார். ஆகவே, புகழ் வெளிச்சம் அவர்மீது இடைவிடாமல் பட்டுக்கொண்டேயிருந்தது.
இரண்டாண்டுகளுக்குப் பிறகு அவர் இம்சை அரசன் 23ஆன் புலிகேசி போல் மீண்டும் நாயகனாக நடித்து வெற்றிபெறலாம் என நினைத்தார். ஆகவே, தெனாலிராமன், எலி ஆகிய படங்களைத் தந்தார். ஆனால், அவரது பழைய படங்களின் நகைச்சுவைக் காட்சிகளை இப்போதும் பார்த்து ரசிக்கும் ரசிகர்கள் அவரது புதிய படங்களை ரசிக்க முடியவில்லை. இம்சை அரசன் 23ஆம் புலிகேசியின் இரண்டாம் பாகத்தில் நடிக்கலாம் என ஷங்கர் தயாரிப்பில் இம்சை அரசன் 24ஆம் புலிகேசி தொடங்கப்பட்டது. ஆனால், வடிவேலுவுக்கும் படக் குழுவுக்கும் பிரச்சினையானது. அதில் ஏற்பட்ட சிக்கலால் வடிவேலுவுக்குத் தடைவிதிக்கும் நிலைக்குத் தயாரிப்பாளர் சங்கம் தள்ளப்பட்டது. ஒருவழியாக இந்தப் பிரச்சினைகளிலிருந்து எல்லாம் மீண்டிருக்கிறார் வடிவேலு.
பத்தாண்டுகளாகவே சொல்லிக்கொள்ளும்படியான படமில்லையெனினும் இன்னும் தமிழ்நாட்டில் எல்லா வீடுகளையும் அவர் தனது படங்களின் நகைச்சுவைக் காட்சிகளாலும் மீம்களின் வடிவிலும் சிரிக்கவைத்துக்கொண்டிருக்கிறார். அவருக்குப் பள்ளிப் படிப்போ, கல்லூரிப் படிப்போ வாய்க்கவில்லை. ஆனால், அவரது படிப்பெல்லாம் நடிப்பென்றாகிவிட்டது. அவர் ஒரு பிறவி நடிகர் என்பதில் பொய்யில்லை. அப்படியிருக்கப் போய்தான் அவரால் இப்படி அசுரத்தனமாக ரசிகர்களைக் கட்டிப்போட முடிந்திருக்கிறது. இப்போது மீண்டும் பழைய உற்சாகத்துடன் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். அந்தப் படத்துக்கு முதலில் நாய்சேகர் என்றுதான் தலைப்பு வைக்கப்பட்டது. ஆனால், அந்தத் தலைப்பை ஏற்கெனவே ஒரு தயாரிப்பு நிறுவனம் வைத்திருந்ததால் நாய் சேகர், நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் ஆகியிருக்கிறது. இப்படியான தடைகளை எல்லாம் தாண்டி, எனக்காடா எண்ட் கார்டு போடுறீங்க எனக்கு எண்டே கிடையாதுடா என்ற அவரது வசனம் பலிக்குமா? இல்லையெனில், ரசிகர்கள் வழக்கம்போல் அவரது பழைய படங்களைப் பார்த்து திருப்திபட்டுக்கொள்ள வேண்டிய நிலையே தொடருமா என்பதை முடிவுசெய்யும் படமாகியிருக்கிறது நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்
Read in : English