Read in : English
2021ஆம் ஆண்டில் இறுதியில் வெளியாகிப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது பிராங்கிளின் ஜேக்கப் இயக்கிய தமிழ்ப் படமான ரைட்டர். இயக்குநர் பா.இரஞ்சித்தின் குழுவிலிருந்து தமிழ்த் திரையுலகுக்குக் கிடைத்துள்ள புதிய இயக்குநர் பிராங்கிளின் ஜேக்கப். ஒருவகையில் இந்த ஆண்டு வெளியான படங்களின் போக்கைப் புரிந்துகொள்ள இந்த ரைட்டருக்குக் கிடைத்துவரும் வரவேற்பை உற்றுநோக்குவது உதவும்.
பெரிய நட்சத்திரங்கள், பெயர் பெற்ற இயக்குநர்கள் போன்ற ஈர்ப்புக்குரிய அம்சங்கள் இல்லாதபோதும், திரையில் காட்டப்படும் கதைக் களத்தை வைத்தே ரசிகர்களை ஈர்க்க முடியும் என்னும் நம்பிக்கையை ரைட்டர் போன்ற படம் விதைப்பது ஆரோக்கியமான அம்சம். தமிழ்த் திரையுலகுக்கு நம்பிக்கையூட்டும் விஷயமாக இதைப் பார்க்க முடிகிறது. இப்படியான நம்பிக்கை இப்போதுதான் விதைக்கப்படுகிறதா என்று கேட்டால், அது கடந்த காலங்களிலும் விதைக்கப்பட்டிருந்தது ஆனாலும் நல்ல அறுவடை காணாமலே காலம்போய்விட்டது. இனி, அந்தத் தவறு களையப்படும் என நம்பிக்கைகொள்வோம்.
முந்தைய ஆண்டுகளை ஒப்பிடும்போது, இந்த ஆண்டில் என்ன சிறப்பு என்று பார்த்தால், திரையரங்குகளுக்குச் சவால்விடும், உள்ளடக்கரீதியிலும் தமிழ்ப் படங்களை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த பெரிய அளவில் உதவும் ஓடிடி தளங்களின் வளர்ச்சியைத்தான் சொல்ல முடிகிறது
கொரோனா பெருந்தொற்றுக் காலம் என்றபோதும், தமிழில் 2021ஆம் ஆண்டில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. முந்தைய ஆண்டுகளை ஒப்பிடும்போது, இந்த ஆண்டில் என்ன சிறப்பு என்று பார்த்தால், திரையரங்குகளுக்குச் சவால்விடும், உள்ளடக்கரீதியிலும் தமிழ்ப் படங்களை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த பெரிய அளவில் உதவும் ஓடிடி தளங்களின் வளர்ச்சியைத்தான் சொல்ல முடிகிறது. ஒரு படம் பரவலான பார்வையாளர்களைச் சென்றடைய திரையரங்கு ஒன்றே வழி என்னும் பழைய பஞ்சாங்கம் இப்போது கிழித்து எறியப்பட்டிருக்கிறது. ஒரு படத்தைப் பார்வையாளர்களின் வீட்டுக்கே கொண்டு சேர்க்கக்கூடிய தொழில்நுட்பமாக ஓடிடி கிடைத்துள்ளது. அதே நேரத்தில் தமிழின் மிக அதிக வசூலைச் சம்பாதித்த படங்கள் என்ற பட்டியலில் ஓடிடி தளத்தில் வெளியான படம் ஒன்றுகூட இல்லை என்பதும் குறிப்பிடத்தகுந்தது.
பூமி, ஏலே, டெடி, பூமிகா, உடன்பிறப்பே போன்ற மிகச் சாதாரணப் படங்களும் ஓடிடியிலேயே வெளியாயின என்றபோதும், தமிழ்ப் படங்களின் உள்ளடக்கத்தில் பெரிய மாற்றத்தைக் கொண்டுவர வேண்டியதொரு நெருக்கடியை ஓடிடி தளங்கள் உருவாக்கியுள்ளன என்பதையும் மறுக்க இயலவில்லை. இந்த ஆண்டு ரசிகர்களின் பலத்த ஆதரவைப் பெற்ற ஜெய் பீம் ஓடிடி தளத்தில் வெளியானது என்பதை நினைத்துப் பார்க்கும்போது, ஓடிடி தளங்களின் முக்கியத்துவம் விளங்கும். வசந்த் இயக்கிய, சோனி லைவில் வெளியான சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் போன்ற ஒரு படம் திரையரங்களில் வெளியாகிப் பரவலான பார்வையாளர்களைப் பெற்றிருக்குமா என்பது கேள்விக்குறிதான். இவை எல்லாம் ஓடிடி உருவாக்கியிருக்கும் அதிசயம் என்று துணிந்துசொல்லலாம்.
அடிப்படையில் திரைப்படம் காட்சிமொழியிலானது எனினும் இன்னும்கூட வசூல்ரீதியாகப் பெரிய வெற்றியைப் பெறும் தமிழ்ப் படங்கள் திரையில் மலரும் நாடகங்களாகத்தாம் உள்ளன.
அடிப்படையில் திரைப்படம் காட்சிமொழியிலானது எனினும் இன்னும்கூட வசூல்ரீதியாகப் பெரிய வெற்றியைப் பெறும் தமிழ்ப் படங்கள் திரையில் மலரும் நாடகங்களாகத்தாம் உள்ளன. இதற்கு எடுத்துக்காட்டுகளாக, இந்த ஆண்டில் வெளியான படங்களில் அதிக வசூல் பெற்ற படங்களாக விஜய் நடித்த மாஸ்டர், ரஜினி நடித்த அண்ணாத்த, சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் ஆகியவற்றைச் சுட்டிக்காட்ட முடிகிறது. ஒரு புறம், கர்ணன், சார்பட்டா பரம்பரை, ஜெய் பீம், ரைட்டர் போன்ற படங்கள் நம்பிக்குரியனவாக வெளிவருகின்றன. இதேபோல் மண்டேலா, விநோதய சித்தம், தேன், ஆல்பா அடிமை, கடைசீல பிரியாணி, ஜெயில் போன்ற படங்கள் வெளிவந்துள்ளன என்பதையும் மறுப்பதற்கில்லை. மறுபுறம், மாஸ்டர், அண்ணாத்த, டாக்டர், சுல்தான் என கமர்சியல் மசாலாக்கள் வெளிவந்து சூழல் இன்னும் பெரிதாக மாறவில்லையோ என்ற எண்ணத்தையும் ஏற்படுத்துகின்றன. பொழுதுபோக்குப் படங்களுக்கும் கலைப் படங்களுக்குமான பாரதூர இடைவெளி இன்னும் இட்டுநிரப்பப்படாமலேயேதான் உள்ளன என்பதற்கு இப்படங்களின் வெற்றி ஒரு சான்று. எனினும், இத்தகைய படங்களின் எண்ணிக்கை ஓரிலக்கத்தைத் தாண்டவில்லை என்பது மட்டுமே தற்போதைய ஆறுதல்.
பெரிய நட்சத்திரங்களின் ஆதிக்கம் பெரிதாக இந்த ஆண்டில் இல்லை என்றே சொல்ல வேண்டும். அஜித், கமல்ஹாசன் ஆகியோர் நடித்த எந்தப் படமும் இந்த ஆண்டில் வெளியாகவில்லை. விஜய்க்கும் ரஜினிக்கும் ஒரே ஒரு படம்தான் வெளியாகியுள்ளது. சூரியா நடித்து வெளியான ஜெய் பீம் படமும் நாயக அம்சத்தை மட்டுமே தூக்கிப்பிடித்த படமன்று. அது முழு வணிகப்படம் என்னும் வகைக்குள் அடங்காது. அதன் உள்ளடக்கம் அதை முழு கமர்சியல் படம் என்ற சட்டத்தில் அடைத்துவிட முடியாதபடி தடுத்திருக்கிறது. மாரி செல்வராஜ் இயக்கிய தனுஷ் நடித்த கர்ணன் படமும் இதே ரகம்தான்.
ஜெய் பீம், கர்ணன் இரண்டு படங்களுமே கதாநாயக அம்சங்களைக் கொண்டிருந்தபோதும், அவை முழுமையான வணிகத்தையே முதன்மை நோக்கமாகக் கொண்டிருந்தன எனச் சொல்லிவிட முடியாது. காரணம் அந்தப் படங்களின் உள்ளடக்கம். அவை அதிகாரத்தை எதிர்த்துக் கேள்வி கேட்கும் சாமானிய மனிதர்களைப் படத்தின் முதன்மைப் பாத்திரங்களாகக் கொண்டிருந்தன.
இப்படியான படங்கள் உருவாகும் தமிழ்ச் சூழலில் மாடத்தி, மேதகு, கூழாங்கல் போன்றவையும் உருவாக்கப்படுகின்றன. இத்தைகைய படங்கள் திரையரங்குகளைவிடத் திரைப்பட விழாக்களை நோக்கமாகக் கொண்டு படைக்கப்பட்டுள்ளனவோ? லீனா மணிமேகலை இயக்கிய மாடத்தி திரைப்படம், புதிரை வண்ணார் என்னும் சமூகம் எதிர்கொள்ளும் சாதிசார்ந்த தாக்குதலை உள்ளடக்கமாகக் கொண்டிருந்தது. கிட்டு இயக்கிய மேதகு படம் ஈழத் தமிழர் விடுதலைக்காகப் போராடிய தலைவர் பிரபாகரனின் வாழ்க்கைச் சம்பவங்களைச் சித்தரித்து உருவாக்கப்பட்டிருந்தது. அது ஒரு சிறு முயற்சி என்றபோதும், அதனளவில் அது நேர்த்தியாக அமைந்திருந்தது.
சிற்றூர் ஒன்றின் எளிய குடும்பம் ஒன்றை மையமாக எடுத்துக்கொண்டு அதன் வழியே அந்தப் பகுதியினரின் வாழ்க்கையை முழுமையாகக் காட்சிமொழியில் கூறும் திரைப்படம் கூழாங்கல்
பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கிய கூழாங்கல் ஆஸ்கர் வரை சென்று வந்த காட்சிமொழியிலான ஒரு திரைப்படம். சிற்றூர் ஒன்றின் எளிய குடும்பம் ஒன்றை மையமாக எடுத்துக்கொண்டு அதன் வழியே அந்தப் பகுதியினரின் வாழ்க்கையை முழுமையாகக் காட்சிமொழியில் கூறும் திரைப்படம். ஈரானியப் படம் போன்று காட்சிப்படுத்தப்பட்டிருந்த தமிழ்ப் படம் அது.
மேற்கண்ட எந்தப் படத்திலும் வகைப்படுத்த முடியாதது வெங்கட் பிரபு இயக்கிய மாநாடு திரைப்படம். அது முழுக்க முழுக்க வணிகத்துக்காக உருவாக்கப்பட்டதாக இருந்தபோதும், அதன் உள்ளடக்கம் முற்றிலும் மாறுபட்டிருந்தது. அதை நீங்கள் கலைப் படம் என ஒருபோதும் சொல்லிவிட முடியாது, அதே நேரத்தில் அதன் உள்ளடக்கம் ஒரு மாற்றுப் படத்துக்கானது என்பதையும் மறுத்துவிட முடியாது. மாநாடு பக்கா தமிழ் சினிமா. ஆனால், சிறுபான்மை இஸ்லாமியர் பற்றிய சித்தரிப்பில் ஒரு மாறுபட்ட தமிழ் சினிமா. மாநாடு படத்தின் முக்கியத்துவம் அது. இப்படியான படங்களே வணிகத்துக்கும் கைகொடுக்கும்; உள்ளடக்கரீதியாகவும் திரைப்படங்களை ஒரு படி மேலே தூக்கிக்கொண்டு போக உதவும்.
இந்த ஆண்டில் வெளியான தமிழ்ப் படங்களின் வாயிலாகப் புதிய புதிய இயக்குநர்கள் திரைத்துறைக்குக் கிடைத்துள்ளார்கள். இது திரைத்துறைக்குப் புத்துணர்வைத் தரும் என நம்புவதற்கு இடமளிக்கிறது. புதிய இயக்குநர்கள் உள்ளே வருவது என்பது திரைத்துறைக்குப் புதிய ரத்தம் பாய்ச்சுவது போலானது. அவர்கள் வெற்றிபெறும்போது, அடுத்தடுத்த நல்ல படங்களை எதிர்பார்க்கும் சூழல் உருவாகும்.
சாமானிய மக்களின் துயரங்களை, சிறுபான்மையோரின் சிக்கல்களை, ஒடுக்கப்பட்டோரின் உரிமைக் குரலை, அதிகாரத்துக்கு எதிரான முழக்கங்களை மொத்தத்தில் சமூக நீதியை உள்ளடக்கமாகக் கொண்டு வெளியாகும் படங்களுக்கு ரசிகர்கள் ஆதரவு தரும் வகையிலான ஒரு புதிய போக்கு உருவாகியுள்ளது. இந்தப் போக்கை நீர்த்துப்போக விடாமல், வணிகச் சலனத்துக்கு ஆட்படாமல், தொடர்ந்து இதே பாதையில் இயக்குநர்கள் பயணப்படும்போது, வணிக வெற்றியைப் பெறும் கலாபூர்வமான தமிழ்ப் படங்கள் உருவாகி, உலக அரங்கில் அவை கவனம் பெறும் வாய்ப்பு உருவாகலாம்.
Read in : English