Site icon இன்மதி

நாடாளுமன்றத் தேர்தல்: இப்போதே தயாராகும் கட்சிகள்!

Read in : English

நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுக்கும் மேற்பட்ட காலம் இருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் உள்ள சில முக்கியக் கட்சிகள் இப்போதே அதற்கான வேலைகளைத் தொடங்கிவிட்டன. பூத் கமிட்டி அமைக்கும் நடவடிக்கைகளில் இறங்கியதுடன் தேர்தல் கூட்டணி அமைப்பது முதல் அதற்கு யார் தலைமை என்பது வரை பேசத் தொடங்கிவிட்டன. குஜராத் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட உடனேயே டிசம்பர் 8ஆம் தேதி மாவட்டத் தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டத்தைக் கூட்டினார் மாநில பாஜக தலைவர் கே.அண்ணாமலை.

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோர் தலைமையில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகளின் தேசிய அளவிலான கூட்டத்தைத் தொடர்ந்து நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாநில பாஜக தலைவர்கள், தேசிய அளவிலான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சென்னையில் நடந்த பாஜக கூட்டத்தில், அக்கட்சியின் கூட்டணி வாய்ப்புகள் மற்றும் பூத் அளவிலான ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

ஏப்ரல் 2023 முதல் தமிழ்நாடு முழுவதும் பாதயாத்திரை தொடங்குவதாக அறிவித்துள்ளார் பாஜக தலைவர் . இது தேர்தல் பிரச்சாரப் பயணமாக இருப்பதுடன் பாஜகவின் ஆதரவை அதிகப்படுத்தி கூட்டணியில் அதிக இடங்களில் போட்டியிடவும் உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னாள் முதல்வர்கள் எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் டி.டி.வி.தினகரன், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் வி.கே.சசிகலா ஆகியோரை ஒருங்கிணைத்து அவர்களுடன் கூட்டணி அமைக்க பாஜக திட்டமிட்டுள்ளது. இந்த ஏற்பாட்டை ஏற்காத பழனிசாமி, நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடவும் தயாராகிவிட்டார்.

ஏப்ரல் 2023 முதல் தமிழ்நாடு முழுவதும் பாதயாத்திரை தொடங்குவதாக அறிவித்துள்ளார் பாஜக தலைவர்; இது அதிக இடங்களில் பாஜக போட்டியிட உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தனது கட்சியின் தேர்தல் வியூகத்தை வகுப்பதற்காக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், டிசம்பரில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டினார். தமிழகத்தில் திமுக கூட்டணியே வெற்றி பெறும் என்று கூறிய ஸ்டாலின், கூட்டணி விவகாரம் குறித்துக் கவலைப்பட வேண்டாம் என்றும், நாடாளுமன்ற தேர்தலுக்குத் தயாராக வேண்டும் என்றும் கட்சியிலுள்ள தலைவர்களிடம் கேட்டுக் கொண்டார்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியின் 90வது பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தையொட்டி நடைபெற்ற கூட்டத்தில் முதலமைச்சருடன் இப்போது கூட்டணியில் இருக்கும் அனைத்துக் கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டனர். அப்போது அனைத்துத் தலைவர்களும், அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் மத்தியில் பாஜக ஆட்சியை மாற்ற திமுகவை ஆதரிப்பதாக உறுதியளித்தனர். திமுக கூட்டணிக் கட்சிகள் இடம்மாறும் வாய்ப்புகள் குறைவு என்பதை அந்தப் பொதுக்கூட்டம் காட்டியது.

மேலும் படிக்க: தேர்தல் முடிவுகள்: ஆட்சியைப் பிடிக்கும் நம்பிக்கையில் திமுக!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் தங்கள் கட்சி வெற்றி பெறும் என்ற முழக்கத்துடன் ஏற்கனவே எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி பிரச்சாரத்தைத் தொடங்கிவிட்டார். நாடாளுமன்றத் தேர்தலில் மெகா கூட்டணி அமைக்கப் போவதாக அக்கட்சி சொன்னாலும், தேர்தலுக்கான கூட்டணி வியூகத்தை இதுவரை வெளியிடவில்லை. பெரும்பாலான திமுக கூட்டணிக் கட்சிகள் அதே கூட்டணியில் நீடிப்பதால், அதிமுக புதிய கட்சிகளை ஈர்க்கும் வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன.

பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் இருவர் மீதும் கட்சியை உரிமை கொண்டாடிய வழக்கில் இந்தியத் தேர்தல் ஆணையம் இன்னும் முடிவு எடுக்கவில்லை. அதிமுக கட்சி சின்னமான ‘இரட்டை இலை’யை தற்போது பயன்படுத்த முடியாத நிலை இருக்கிறது. சின்னம் குறித்து தேர்தல் ஆணையம் தீர்ப்பு வழங்குவதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படாததால், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பழனிசாமி, இந்த பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

சின்னம் முடக்கப்பட்டாலும், பன்னீர்செல்வத்துக்கு வழங்கப்பட்டாலும், தேர்தலுக்கு முன் புதிய சின்னத்தைப் பெற்று அதை பிரபலப்படுத்த பழனிசாமி தலைமையிலான அதிமுகவுக்குப் போதிய கால அவகாசம் தேவை. உச்சநீதிமன்றம் தேர்தல் ஆணையத்திடம் விரைவில் தீர்ப்பை வழங்குமாறு கூறினாலோ அல்லது ஆணையம் தீர்ப்பளிக்க குறிப்பிட்ட தேதியை நிர்ணயம் செய்தாலோ ‘இரட்டை இலை’ சின்னத்தின் நிலை முன்பே தெரிந்துவிடும். இல்லையெனில் நாடாளுமன்றத் தேர்தல்வரை இழுபறி நீடிக்கும்.

தமிழகத்தில் திமுக கூட்டணியே வெற்றி பெறும் என்று கூறிய ஸ்டாலின், கூட்டணி விவகாரம் குறித்துக் கவலைப்பட வேண்டாம் என்று கட்சித் தலைவர்களிடம் கேட்டுக் கொண்டார்

மத்தியில் ஆளும் கட்சிகள் குறித்த காலத்துக்கு முன்பே தேர்தலை நடத்திய உதாரணங்கள் உள்ளன. இந்தக் காரணத்தையொட்டி, பாஜகவும் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளும் முன்னரே தேர்தல் வேலைகளைத் தொடங்கியிருக்கலாம். 2004ஆம் ஆண்டில் குறிப்பிட்ட காலத்துக்கு முன்பாக நாடாளுமன்றத்தைக் கலைத்து, நான்கு மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தலுடன் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதாக முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான பாஜக அறிவித்தது. செப்டம்பர் மாதத்தில் திட்டமிடப்பட்ட நேரத்திற்குப் பதிலாக ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மக்களவைத் தேர்தல்கள் நடத்தப்பட்டன.

2023ஆம் ஆண்டு தொடக்கத்தில் கர்நாடகத்தில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன; அதே ஆண்டு இறுதியில் தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்கள் டிசம்பர் 10ஆம் தேதிக்கு முன் நடைபெற வேண்டும்.

மேலும் படிக்க: பாஜகவை கண்டுகொள்ளாத பழனிசாமி!

முன்கூட்டியே தேர்தல் நடத்தும் முடிவுக்கு பாஜக செல்லுமா என்பது 2024ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நடக்கும் கர்நாடக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளைப் பொறுத்தது; அதே ஆண்டு நவம்பரில் சட்டமன்றத் தேர்தலுடன் நாடாளுமன்றத் தேர்தலை நடத்தி வெற்றி பெறவும் எண்ணலாம்.

வட இந்தியாவில் சட்டமன்றத் தேர்தல்களுடன் நாடாளுமன்றத் தேர்தலை நடத்தினால், பிரதமர் நரேந்திர மோடி ஒரே நேரத்தில் இரண்டு தேர்தல்களுக்கும் பிரச்சாரம் செய்யலாம். மேலும், சட்டமன்றத் தேர்தலில் வாக்குகளைப் பெற மோடியின் முகத்தை பாஜக முன்னிறுத்தும் வாய்ப்பும் உள்ளது.

Share the Article

Read in : English

Exit mobile version