Read in : English
2024 நாடாளுமன்றத் தேர்தல் வெற்றியைக் குறிவைத்து இப்போதே நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ள முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பாஜக பற்றிப் பேசுவதை முழுவதுமாகத் தவிர்த்து வருகிறார். மத்தியில் ஆளும் பாஜக ஆட்சி தொடர வேண்டுமா என்பதை மையமாக வைத்தே நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழ்நாட்டில் அப்படி ஒரு கட்சியே இல்லை என்பதுபோல் அவர் கடந்து செல்வது அதிமுக கூட்டணியில் பாஜக இடம்பெறுமா என்ற கேள்வியை வலுப்படுத்துகிறது.
கடந்த வாரம் திமுக அரசை எதிர்த்து கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய பழனிசாமி தமிழ்நாடு, புதுச்சேரியில் இருக்கும் 40 தொகுதிகளையும் அதிமுக கூட்டணி கைப்பற்றும் என்று உறுதியாகக் கூறினார். அவரது பேச்சு நாடாளுமன்றத் தேர்தலை மையமாக வைத்துச் சுழன்றாலும் அவர் எடுத்துக்கொண்ட பிரச்சினைகள் மாநிலத்தில் இருக்கும் திமுக அரசை எதிர்க்கும் விதமாகவே இருந்தன.
தமிழ்நாட்டில் ‘தமிழினத்தின் எதிரிகள்’ காலூன்றச் சிலர் உதவுவதாக அதிமுகவை மறைமுகமாகக் குற்றம்சாட்டினார் ஸ்டாலின்; இந்தக் குற்றச்சாட்டை பழனிசாமி கண்டுகொள்ளவே இல்லை
அதிமுக-பாஜக கூட்டணி தொடர்கிறது என்று தமிழ்நாடு பாஜக தலைவர் கே.அண்ணாமலை கூறிவரும் நிலையில் அதிமுக தலைவர்களின் பேச்சில் அதற்கான அறிகுறியே தெரியவில்லை. ஒன்றிய அரசின் செயல்பாடுகளைப் பற்றியோ, மத்தியில் எந்தவிதமான ஆட்சி அமைய வேண்டும் என்றோ பழனிசாமி உள்ளிட்ட எந்தத் தலைவரும் பேசவில்லை. தமிழ்நாட்டில் போட்டி என்பது பழனிசாமி தலைமையிலான அதிமுகவுக்கும் ஆளும் திமுகவுக்கும் இடையில்தான் இருக்கிறது என்ற தோற்றத்தையே அந்தப் போராட்டம் தந்தது.
தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகக் குற்றம்சாட்டிய பழனிசாமி மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு உள்ளிட்ட மாநிலப் பிரச்சினைகளையே பேசினார். திமுகவுக்கு எதிரான பிரச்சாரம் போலவே அப்பேச்சு அமைந்திருந்தது.
மேலும் படிக்க: பழனிசாமியின் ஆளுநர் சந்திப்பு: அதிமுக முடிவு என்ன?
முதல்வர் மு.க.ஸ்டாலின் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வியூகத்தை ஏற்கனவே தெளிவாக அறிவித்துவிட்டார். மத்தியில் பாஜக ஆட்சியை வீழ்த்துவோம் என்று கூறியவர் தமிழ்நாட்டில் ‘தமிழினத்தின் எதிரிகள்’ காலூன்றச் சிலர் உதவி செய்வதாக அதிமுகவை மறைமுகமாகக் குற்றம்சாட்டினார்.
ஆனால், இந்தக் குற்றச்சாட்டை பழனிசாமி கண்டுகொள்ளவே இல்லை. பாஜகவை ஆதரித்து எதுவும் பேசாமல் இருந்ததே இந்தக் குற்றச்சாட்டுக்கான அவரது பதிலாகவும் இருக்கலாம். பத்தாண்டு கால பாஜக ஆட்சியைப் பாராட்டிப் பேசியிருந்தால், அது திமுக தலைவர் ஸ்டாலினின் குற்றச்சாட்டை வலுப்படுத்துவதுபோல் இருந்திருக்கும். பெட்ரோல், டீசல், சமையல் வாயு விலை உயர்வு போன்ற மக்களைக் கடுமையான கோபத்தில் தள்ளிய பிரச்சினைகளுக்கு அவர் பதில் சொல்ல வேண்டிய நிலையும் ஏற்பட்டிருக்கும்.
கோவையைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் நகரங்களிலும் கிராமங்களிலும் போராட்டம் நடைபெறும் என்றும் பழனிசாமி அறிவித்துள்ளார். பாஜக இதுவரை நடத்திய போராட்டங்களுடன் ஒப்பிடும்போது அதிமுகவின் கோவை போராட்டம் மிகப்பெரிய கூட்டத்தைத் திரட்டியது. அதிமுக அறிவித்துள்ளது போல தமிழ்நாடு முழுவதும் எல்லா இடங்களிலும் பாஜகவால் போராட்டம் நடத்த முடியுமா என்பது மிகப்பெரிய கேள்வி.
அதிமுக அறிவித்துள்ளது போல தமிழ்நாடு முழுவதும் எல்லா இடங்களிலும் பாஜகவால் போராட்டம் நடத்த முடியுமா என்பது மிகப்பெரிய கேள்வி
ஆளுநர் ஆர்.என்.ரவி உடனான சந்திப்புக்குப் பின்னும் கூட, பாஜகவுடன் எந்தவிதமான உடன்பாடும் ஏற்படவில்லை என்பதைக் காட்டும் விதத்திலேயே பழனிசாமியின் பேச்சு இருந்தது. அந்த சந்திப்பு திமுக அரசுக்கு எதிரான குற்றச்சாட்டு மனுவை அளிப்பதற்கானது என்றும் திமுக எதிர்க்கட்சியாக இருக்கும்போதும் அப்போதைய ஆளுநரை ஸ்டாலின் சந்தித்தார் என்றும் பழனிசாமி பத்திரிகையாளர்களிடம் பதில் கூறினார்.
2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு திமுக அளித்த வாக்குறுதிகளை சுட்டிக்காட்டிய பழனிசாமி, கடந்த 18 மாதங்களில் திமுக அரசு சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று குற்றம்சாட்டினார். அதேநேரத்தில், திராவிட இயக்கக் கொள்கைகள் தொடர்பான எந்தப் பிரச்சினையையும் அவர் தொடவில்லை. மக்களின் அன்றாடப் பிரச்சினைகளை ஒட்டியே அவரது பேச்சு இருந்தது.
தமிழக மக்கள் சட்டமன்றத்துக்கும் நாடாளுமன்றத்துக்கும் மாறுபட்ட தீர்ப்புகளை பல நேரங்களில் வழங்கியுள்ளனர். நிறுவனர் எம்.ஜி.ஆர் தலைமையிலான அதிமுக 1980 மக்களவைத் தேர்தலில் படுதோல்வி அடைந்தாலும், சில மாத இடைவெளியில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியைப் பிடித்தது. பாஜக தலைவராக வாஜ்பாய் இருந்தபோது, திமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்து 1999 நாடாளுமன்றத் தேர்தலில்வெற்றி பெற்றது, ஆனால் 2001 சட்டமன்றத் தேர்தலில் அதே கூட்டணி தோல்வியடைந்தது.
2009 நாடாளுமன்றத் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்ற திமுக, 2011 சட்டமன்றத் தேர்தலில் வீழ்ச்சி அடைந்தது.
மேலும் படிக்க: பாஜகவின் கனவு: கலைத்த பழனிசாமி!
தற்போது, ஸ்டாலின் அரசின் 18 மாத கால செயல்பாடுகளையும் அதிமுகவின் பத்தாண்டு கால ஆட்சி குறித்தும் விவாதம் செய்ய ஸ்டாலினுக்கு சவால் விடுத்துள்ளார் பழனிசாமி. நாடாளுமன்றத் தேர்தலில் திமுக ஆட்சியின் நிறைகுறைகள் முக்கியப் பிரச்சினையாக இருக்க முடியாது. ஒன்றியத்தில் பாஜக ஆட்சி தொடர்ந்து நீடிக்க வேண்டுமா, வேண்டாமா என்பதுதான் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் முக்கியக் கேள்வியாக இருக்கும்; அதற்கான பதிலை பழனிசாமி அப்போது சொல்லியாக வேண்டும்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 16 மாதங்கள் இருக்கும் சூழலில், இப்போதே அதற்கான பிரச்சாரத்தை பழனிசாமி தொடங்கிவிட்டார். ஒருவேளை தேர்தல் நேரத்தில் பாஜகவுடன் கூட்டணி அமைக்கும் நிலை வந்தால் இப்போது பேசிவரும் பிரச்சினைகள் எடுபடாமல் போகும். தேர்தல் களத்தில் பேசப்படும் பிரச்சினைகளும் முழுவதுமாக மாறியிருக்கும்.
Read in : English