Read in : English
இன்மதியின் புதிய பகுதியான ‘வேர் காணல்’ நிகழ்வு ஒரு பிரச்சினையை எடுத்துக்கொண்டு அதன் வேர் வரைக்குமான தகவல்களையும் ஆய்வுகளையும் சம்பந்தப்பட்ட நிபுணரிடம் பேசிப் பெறுகின்ற ஒரு பகுதியாகும். இதன் தொடக்கமாக இரத்தநாள அறுவைசிகிச்சை நிபுணரான ஜே.அமலோற்பவநாதன் இன்று உலகம் முழுவதும் பேசப்படும் மருத்துவமனை தொற்றுக்கள் பிரச்சினையைப் பற்றிப் பேசி விளக்கமும் தீர்வும் தந்திருக்கிறார்.
இந்தியாவிலிருந்து மருத்துவமனைத் தொற்றுக்கள் பரவும் வாய்ப்புகளும் சதவீதங்களும் அதிகம் என்று லான்செட் மருத்துவ சஞ்சிகை கடந்த செப்டம்பர் மாத இதழில் எச்சரித்திருக்கிறது. இது சம்பந்தமான கேள்விக்குப் பதிலளித்த டாக்டர் அமலோற்பவநாதன் மருத்துவமனைத் தொற்றுக்கள் என்றால் என்ன, அவற்றின் அறிகுறிகள் யாவை என்று விளக்கினார்.
“சுமார் 50 அல்லது 100 ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவமனைகள் அதிகமில்லை; நோயாளிகள் கூட்டமும் இல்லை. அப்போதிருந்த மருத்துவனைகளும் விசாலமான இடங்களில் காற்றோட்டமுள்ள இயற்கைச் சூழலில் கட்டப்பட்டிருந்தன. மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுத்த நோயாளிகள் மிகக்குறைவு. அப்படியே தங்கி சிகிச்சை எடுத்தாலும் மூன்று அல்லது நான்கு நாட்களுக்குப் பின்னர் வீடு திரும்பிவிடுவர் அல்லது இயற்கை எய்திவிடுவர். அப்போது ஏசி வசதியெல்லாம் கிடையாது. நோயாளிகளின் படுக்கைகளுக்கிடையே போதுமான இடைவெளிகள் இருந்தன. ஆதலால் மருத்துவமனைத் தொற்றுக்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை.
சுமார் 50 அல்லது 100 ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவமனைகள் அதிகமில்லை; மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுத்த நோயாளிகள் மிகக்குறைவு; ஆதலால் மருத்துவமனைத் தொற்றுக்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை
இப்போது மருத்துவமனைகள் அதிகமாகிவிட்டன; நோய்களும் கூடிவிட்டன; நோயாளிகளின் எண்ணிக்கையும் பெருகிவிட்டது. ஐசியூ என்றழைக்கப்படும் ஏசி பொருத்தப்பட்ட அவசரகாலச் சிகிச்சைப் பிரிவுகள் இல்லாத மருத்துவமனைகளே இல்லை. ஏனென்றால் கடுமையான நோய்கள் பல்கிப் பெருகிவிட்டன.
மேலும், ஐசியூ என்பது இன்று பணம் கொட்டும் ஒரு பிரிவு. உள்நோயாளிகள் 30 அல்லது 40 நாட்கள் மருத்துவமனையில் தங்கியிருந்து வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டு சிகிச்சை எடுத்துக் கொள்வது இப்போது சகஜமாகிவிட்டது. அளவுக்கு அதிகமான ஆண்டிபயோடிக்ஸ் மருந்துகள் கொடுக்கப்படுவதால் நோயாளியின் உடலிலிருந்து வெளியேறும் வைரஸ்கள் அல்லது பாக்டீரியாக்கள் மருத்துவமனைத் தொற்றுக்களை ஏற்படுத்தி விடுகின்றன.
லான்செட்டிலோ அல்லது வேறு எதிலோ படித்த ஞாபகம். இன்று அமெரிக்காவில் நிறைய மரணங்களுக்குக் காரணமாக இருப்பவை மருத்துவமனைத் தொற்றுக்கள்தான்.
மேலும் படிக்க: நோய் எதிர்ப்பாற்றல் எப்படிப் பெருகும்?
காலிலோ கையிலோ எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனைக்கு ஒருவர் செல்வதாக வைத்துக் கொள்வோம். எலும்பு முறிவுக்குச் சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கும்போதே அவருக்கு நுரையீரல் தொற்று ஏற்படலாம். இதுவோர் முரண் நகை. நோய் தீர்க்கும் மருத்துவமனையே நோய் தரும் ஸ்தலமாகிவிட்டது. இதுதான் மருத்துவமனைத் தொற்றுக்கள் சொல்லும் செய்தி.
மாவுக்கட்டு போடப்பட்ட நோயாளிக்கு எலும்பு முறிவு சரியானவுடன் திடீரென்று அவருக்குக் காய்ச்சல் ஏற்படலாம். அதற்கும் மருந்து மாத்திரைகள் தருவார்கள். ஆனால் நான்கைந்து நாளாகியும் காய்ச்சல் கட்டுப்படாது. அப்போதுதான் மருத்துவருக்குத் தோன்றும், இந்த நோயின் மூலகாரணம் வேறு ஏதோவொன்று என்பது. பின்னர் பாக்டீரியாக்களைக் கண்டுபிடிக்கும் கல்சர் பரிசோதனைகள் செய்யப்படும்போது அந்தக் காய்ச்சல் மருத்துவமனைத் தொற்றினால் ஏற்பட்டது என்று தெரியவரும்.
மருத்துவமனைத் தொற்றுக்களுக்கு நோயாளிகள் மட்டுமல்ல, மருத்துவர்களும் செவிலியர்களும் மற்றும் கடைநிலை ஊழியர்களும் கூட ஆளாவார்கள். ஏனென்றால் தினமும் அதிக நேரம் நோயாளிகளுடன் உறவாடுவதும் மணிக்கணக்கில் ஏசி சூழலில் இருப்பதும் அவர்கள்தான்.
அளவுக்கு அதிகமான ஆண்டிபயோடிக்ஸ் கொடுக்கப்படுவதால் நோயாளியின் உடலிலிருந்து வெளியேறும் வைரஸ்கள் மருத்துவமனைத் தொற்றுக்களை ஏற்படுத்தி விடுகின்றன
மருத்துவமனைத் தொற்றுக்கள் அதிகம் பாதிப்பது குறைமாதக் குழந்தைகளையும் புற்றுநோயாளிகளையும் ஐசியூவில் அனுமதிக்கப்படும் சர்க்கரை, இரத்தக்கொதிப்பு நோயாளிகளையும், வெண்டிலேட்டரில் சுவாசிக்கும் நோயாளிகளையும் தான். வெண்டிலேட்டர் மூலம் பரவும் ‘நிமோனியா’ என்ற நோய் ஒன்று இருக்கிறது; அதை ஆங்கிலத்தில் ‘வாப்’ என்கிறார்கள். இந்த நோயினால் சுவாசக் கோளாறு, வயிற்றுப்போக்கு, மூளைக்காய்ச்சல் போன்றவை ஏற்படலாம்” என்கிறார் டாக்டர் அமலோற்பவநாதன்.
மூன்றாம் நிலை மருத்துவமனைகளிலிருந்து மருத்துவமனைத் தொற்றுக்கள் பரவுகின்றன என்ற கருத்தும் இருக்கிறது. அவற்றைப் பற்றி உங்கள் நிலைப்பாடு என்ன? இந்த கேள்விக்கு நிதானமாகப் பதிலளிக்கிறார் டாக்டர் அமலோற்பவநாதன்.
“இயற்கையாக காற்றோட்டமுள்ள சூழலில் ஒரு மருத்துவமனை அமைவதுதான் நல்லது. ஆனால் பரபரப்பும் நெருக்கடியும் மிக்க இக்காலச் சூழலில் அது சாத்தியமில்லை. தற்கால மருத்துவமனைகளில் ஏசி, கணினி என்று தொழில்நுட்பச் சாதனங்கள் பிரிக்கமுடியாத அங்கமாகி விட்டன. அவற்றில் தூசி படிந்து மாசு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். ஹீபா ஃபில்டர் எல்லாம் இருக்கிறது. ஆனால் அதன் விலை அதிகம். என்றாலும் அந்த ஃபில்டர்கள் எல்லாம் வைரஸ்களைத் தடுத்து நிறுத்தும் என்று சொல்ல முடியாது.
ஒரு நோயாளிக்கு ஒரு செவிலியர் என்ற கொள்கை மருத்துவமனைத் தொற்றுக்களைத் தடுக்கக் கூடியது. ஒரு செவிலியரே பல்வேறு நோயாளிகளைக் கவனித்தால் அது தொற்றுக்களைப் பரப்பிவிடக் கூடும். அதனால் பயன்படுத்திவிட்டு தூர எறிந்துவிடும் கையுறைகளைச் செவிலியர்கள் பயன்படுத்துகிறார்கள். இப்படி மருத்துவமனைத் தொற்றுக்கள் ஏற்படாதவாறு ஏகப்பட்ட எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுவதால் ஐசியூ சிகிச்சை அதிகச் செலவை ஏற்படுத்துகிறது” என்கிறார்.
மேலும் படிக்க: அலோபதியில் மாற்று மருத்துவம்: சரியா?
வெளியே ஏற்படும் தொற்றுகளுக்கும் மருத்துவமனைத் தொற்றுக்களுக்கும் இருக்கும் வித்தியாசத்தை எப்படிக் கண்டுபிடிப்பது? இந்த கேள்விக்கு, “நோய்க்குச் சிகிச்சை அளிக்கும்போது நான்கைந்து நாட்கள் ஆனபின்னும் நோய் தீரவில்லை என்றால் பரிசோதனைகள் செய்து மருத்துவமனைத் தொற்றுக்கள் ஏற்பட்டதைக் கண்டுபிடித்துவிடுவார் மருத்துவர்” என்கிறார் அமலோற்பவநாதன்.
மருத்துவமனைத் தொற்றுக்களை எதிர்கொண்டு சமாளிப்பதற்கும் நீக்குவதற்கும் எந்த நாடாவது வழியேதும் கண்டுபிடித்திருக்கிறதா?
இதற்குப் பதிலளித்த டாக்டர் அமலோற்பவநாதன், “அப்படி தெரியவில்லை” என்றார்.
“இந்தப் பிரச்சினை மருத்துவமனையின் கட்டிட அமைப்பைப் பொறுத்து, குறிப்பாக ஐசியூ கட்டிட அமைப்பைப் பொறுத்து எழுகின்ற பிரச்சினை. தொற்று ஏற்படாதவாறு மருத்துவமனை கட்டிட அமைப்பு இருக்க வேண்டும். அதனால்தான் ஐசியூவில் எல்லோரையும் அனுமதிப்பதில்லை. ஐசியூவில் புழங்குவதற்கும் பணியாளார்கள் போய்வருவதற்கும் நிறைய விதிமுறைகள் இருக்கின்றன” என்கிறார்.
கல்லூரிகளுக்கும் பள்ளிகளுக்கும் இருப்பது போல மருத்துவமனைகளுக்கும் கட்டிட அமைப்பு விதிகள் இருக்கின்றனவா?
இக்கேள்விக்கு ‘ஆம்’ என்று பதிலளித்த டாக்டர் அமலோற்பவநாதன், அது சம்பந்தமான விவரங்கள் தன்னிடம் இல்லை என்றார். “இரண்டு படுக்கைகளுக்கு இடையே குறைந்தது மூன்றடி இடைவெளி இருக்க வேண்டும் என்பது உட்படப் பல்வேறு விதிமுறைகள் இருக்கின்றன. அமெரிக்காவில் ஜாயிண்ட் கமிசன் இண்டர்நேசனல் போல இந்தியாவிலும் மருத்துவமனைகளின் தரங்களை மதிப்பீடு செய்யும் வாரியம் இருக்கிறது. விதிகள்படி ஒரு மருத்துவமனை கட்டப்பட்டிருக்கிறதா, பணியாளர்கள் விதிகளைக் கடைப்பிடிக்கிறார்களா போன்ற அளவுகோல்கள் படி ஒரு மருத்துவமனை தரமதிப்பீடு செய்யப்பட்டு அதற்கு ராங்கிங் தரப்படுகிறது” என்று தெரிவிக்கிறார்.
இயற்கையாக காற்றோட்டமுள்ள சூழலில் ஒரு மருத்துவமனை அமைவதுதான் நல்லது; பரபரப்பும் நெருக்கடியும் மிக்க இக்காலச் சூழலில் அது சாத்தியமில்லை
மருத்துவமனைத் தொற்றுக்கள் சம்பந்தமாக செவிலியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறதா என்ற கேள்விக்கு ‘ஆம்’ என்று பதிலளித்த டாக்டர் அமலோற்பவநாதன், செவிலியர்களுக்கான வகுப்புகளும் பயிற்சி அமர்வுகளும் தொடர்ந்து நடைபெறுகின்றன என்கிறார்.
கொரோனா காலத்தில் முகக்கவசம் அணிந்தது போன்ற கட்டுப்பாடுகள் மருத்துவமனைத் தொற்றுக்கள் விசயத்திலும் பின்பற்றப்பட வேண்டுமா?
அதற்குத் தேவையில்லை. மருத்துவமனைத் தொற்றுக்கள் கொரோனா தொற்றுக்கள் போல அதிபயங்கரமானவை அல்ல. மொத்த தொற்றுக்களில் 10 முதல் 15 சதவீதம் மருத்துவமனைத் தொற்றுக்கள்தான். என்றாலும் அதிகம் பயப்படத் தேவையில்லை. அவற்றைக் கண்டுபிடிக்கும் முறைமைகளும் மருந்துகளும் பரிசோதனைகளும் இருக்கின்றன. எச்சரிக்கையோடு செயற்பட வேண்டும். உதாரணமாக, மருத்துவமனைப் படுக்கைகளில் விரிப்புகளை மட்டுமே அடிக்கடி மாற்றுகிறார்கள். மெத்தைகளையும் அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். விதிமுறைகளைச் சரியாகப் பின்பற்றினால் மருத்துவமனைத் தொற்றுக்களை நம்மால் தவிர்க்க முடியும்” என்கிறார்.
இறுதியாக, “தேவை ஏற்பட்டால் ஒழிய மருத்துவமனைக்கு அடிக்கடிச் செல்லாதீர்கள். குழந்தைகளும் முதியோர்களும் நீண்ட நேரம் மருத்துவமனையில் இருப்பது நல்லதல்ல” என்று கூறி பேச்சை நிறைவு செய்தார் டாக்டர் அமலோற்பவநாதன்.
Read in : English