Read in : English
கடந்த நவம்பர் 15 அன்று நிகழ்ந்த கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் மரணம் தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளின் தரத்தைக் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது. அந்த பதின்ம வயதுப் பெண்ணுக்கு கால் மூட்டில் ஏற்பட்ட தசைநார் கிழிவைச் சரி பண்ணுவதற்காகச் செய்யப்பட்ட அறுவைச் சிகிச்சை மரணத்தில் முடிந்திருக்கிறது.
ராஜீவ்காந்தி அரசுப் பொதுமருத்துவமனைக்குச் செல்லாமல், தனது வீட்டின் அருகே உள்ள பெரியார்நகர் அரசுப் புற மருத்துவமனையில் பிரியா அறுவைச் சிகிச்சை மேற்கொண்டார் என்று ஊடகச் செய்திகள் சொல்கின்றன. ‘அறுவைச் சிகிச்சை முடிந்தவுடன் போடப்பட்ட இறுக்கமான பேண்டேஜின் விளைவைக் கவனிக்கத் தவறியதால் கால் தசைகள் இறந்துபோய் அவற்றிலிருந்து விஷ புரோட்டீன்கள் வெளியாகி, காலையே எடுக்க வேண்டியதாயிற்று. புரோட்டீன்களின் விஷத்தன்மையால் சிறுநீரகங்களும் கல்லீரலும் கெட்டுப்போய் இறுதியில் பிரியா மரணமடைந்தார்’ என்று சொல்லப்படுகிறது.
அறுவைச் சிகிச்சை சரியாகச் செய்யப்பட்டாலும் பேண்டேஜை நீக்குவதில் ஏற்பட்ட கோளாறுகள் காரணமாக மரணம் நிகழ்ந்துவிட்டது என்று சொல்லியிருக்கிறார் தமிழக சுகாதார அமைச்சர் மா.சுப்ரமணியன். சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது ஆரம்பக்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. பிரியாவின் மரணத்திற்கான நஷ்ட ஈடு நிவாரணமாக ரூ.10 லட்சம் அவரது குடும்பத்திற்கு வழங்கப்படும் என்று அரசு அறிவித்திருக்கிறது.
விளையாட்டில் நிறைய சாதிக்க வேண்டும்; அரசு வேலை பெற வேண்டும் என்றிருந்த ஒரு கால்பந்தாட்ட வீராங்கனையை தவறான சிகிச்சைமுறை சாகடித்துவிட்டது
மருத்துவக் கட்டமைப்பு மீது அச்சம்
விளையாட்டில் நிறைய சாதிக்க வேண்டும்; அதன்மூலம் அரசு வேலை பெற வேண்டும் என்று கால்பந்தாட்டத்தில் நம்பிக்கைகளோடு கனவுகளோடும் கால் பதித்த ஒரு பதின்ம வயதுப் பெண்ணின் லட்சியத்தை தவறான சிகிச்சைமுறை சாகடித்துவிட்டது. அதனால் பொதுமருத்துவக் கட்டமைப்பின்மீது மக்களுக்கு அச்சம் ஏற்பட்டிருக்கிறது.
இந்த வழக்கில் பல அம்சங்களை ஆராய வேண்டியிருக்கிறது. மருத்துவத் திறன், கவனமின்மை, அறுவைச் சிகிச்சைக்குப் பிந்திய சிகிச்சைமுறை, இடைவிடாத கண்காணிப்பு, நோய்களின் காரணத்தைக் கண்டுபிடிக்கும் வசதிகள், தேவையான சிகிச்சைகளைத் தேர்வு செய்யக்கூடிய மருத்துவர்களின் அதிகாரம் ஆகிய அம்சங்களை ஆய்வு செய்ய வேண்டும்.
எல்லாவற்றையும் விட, விலையுயர்ந்த லாபநோக்கிலான தனியார் மருத்துவமனைகளுக்கு எதிராக திறனற்ற ஒரு பொதுமருத்துவக் கட்டமைப்பை இந்த மரணம் முன்னிறுத்தியிருப்பதுதான் அடிப்படை விஷயம்.
மேலும் படிக்க: தூத்தூரில் பிறக்கும் மரடோனாக்கள் : குட்டி பிரேசிலான குமரி மீனவ கிராமம்
தங்களின் வெற்றிகளைப் பறைசாற்றும் விதமாக தனியார் மருத்துவமனைகள் தங்களால் குணமாக்கப்பட்ட நோயாளிகளின் கதைகளைத் தேர்ந்தெடுத்து ஊடகங்களில் விளம்பரமாகப் பரப்புகின்றன. அதேநேரத்தில், பொதுமருத்துவக் கட்டமைப்பு பெருந்தோல்வி அடைந்துவிட்டதாக ஊடகங்கள் கடுமையாக விமர்சிக்கின்றன.
சுகாதார அமைச்சரின் ஆரம்பநிலை கருத்துக்களைத் தாண்டி, பிரியாவின் மரணத்தை வெளிப்படையாகத் தணிக்கை ஆய்வு செய்ய வேண்டும்.
தங்கள் மருத்துவத் தேவைகளுக்குச் சொந்த பணத்தையோ அல்லது காப்பீட்டுப் பணத்தையோ செலவு செய்யும் மக்களைத் தவிர்த்து, பொதுமக்களின் சுகாதாரத்திற்காக அரசு செய்யும் செலவீனங்கள் பற்றிய சமீபத்து தரவுகள் சொல்லும் செய்தி இதுதான்: பொது சுகாதாரத்திற்காக தமிழ்நாடு மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் 1 சதவீதத்திற்கும் குறைவாகவே செலவு செய்கிறது. அது 2 சதவீதமாக உயர்த்தப்பட வேண்டும் என்று நிபுணர்கள் விரும்புகிறார்கள்.
பிரியாவின் கால் திசுக்கள் நாசத்தை உடனடியாக ரத்தப் பரிசோதனைகளில் கண்டுபிடித்திருக்க முடியும்; உடனே தீவிரக் கண்காணிப்பையும் சிகிச்சையையும் தொடங்கியிருக்கலாம்
நிதி ஒதுக்கீடு உயர்த்தப்பட்டால், தலைமைப் பொதுமருத்துவமனைகள் மீதான அழுத்தம் குறையலாம். மிகவும் அடிப்படை சேவைகளைத் தவிர்த்து விசேஷமான சிகிச்சைகளை மேற்கொண்டு தொடர் கண்காணிப்போடு ஆபத்துநிலையில் இருக்கும் நோயாளிகளைக் கவனிக்க முடியும். தீவிர நோய்களின் ஆரம்ப அறிகுறிகளைக் கண்டுபிடிக்கும் முறைகளில் தலைமைப் பொதுமருத்துவமனைகளால் அதிகக் கவனம் செலுத்த முடியும்.
பிரியாவின் கால் திசுக்கள் நாசத்தை உடனடியாக ரத்தப் பரிசோதனைகளில் கண்டுபிடித்திருக்க முடியும்; உடனே தீவிரக் கண்காணிப்பையும் சிகிச்சையையும் தொடங்கியிருக்கலாம். பெரியார் நகர் மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை முடிந்தவுடன் போடப்பட்ட இறுக்கமான பேண்டேஜினால் முதல் சிக்கல் ஏற்பட்ட நவம்பர் 7ஆம் தேதியிலிருந்தே அப்பெண்ணைத் தொடர்ந்து கண்காணித்திருக்க வேண்டும். ஆனால் அவர் அப்படித் தீவிரமாகக் கண்காணிக்கப்படவில்லை என்பதையும் அதனால் அவரை ராஜீவ் காந்தி அரசுப் பொதுமருத்துவ மனைக்கு மாற்றும்படியாகி விட்டது என்பதையும் சம்பவங்களின் கோர்வை தெளிவாகவே காட்டிவிட்டது.
பொது மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் அதிக எண்ணிக்கைக்குத் தகுந்தாற் போன்று சுகாதார நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டால், அரசியல் கவனமும் ஊடகக் கவனமும் பெறாத மற்ற மருத்துவமனை உயிரிழப்புகளைத் தவிர்க்க முடியும். 2014ல் ஸ்டான்லி மருத்துவமனையில் சிறுநீரக டயாலிசிஸ் பெற்ற 16 நோயாளிகளுக்கு ஹெபடிட்டிஸ்-சி தொற்று ஏற்பட்டது. அடுத்த சில ஆண்டுகளில் அவர்களில் பலர் இறந்துவிட்டனர்.
மேலும் படிக்க: பிட்னெஸ் மேனியா: அபரிமிதமான உடற்பயிற்சி உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்துமா?
அலட்சியத்திற்கான ஆதாரங்கள்!
அறுவைச் சிகிச்சையைப் பொறுத்தவரையில் மருத்துவர்க்கு அதுவோர் ஆபத்தான விஷயம். ஆனால் அதிலிருக்கும் அபாயங்கள் பற்றி நோயாளிகளுக்குப் பெரும்பாலும் விஷயஞானம் கிடையாது. ஆதலால் மருத்துவ அலட்சியம் என்பதைச் சட்டப்பூர்வமாகத் தீர்மானிப்பதற்கு சம்பந்தப்பட்ட மருத்துவரின் அணுகுமுறையிலும் கவனத்திலும் இருக்கும் நியாயத்தன்மையே முக்கியக் காரணியாக இருக்கிறது.
அமெரிக்காவின் புகழ்பெற்ற மருத்துவரும் எழுத்தாளருமான அடுல் கவாண்டே பிரபலமாக்கிய ‘சரிபார்ப்புப் பட்டியல்’ (CHECKLIST) முறையைக் கையாண்டால் மருத்துவச் சிகிச்சையிலும் அறுவைச் சிகிச்சையிலும் தவறுகளைக் குறைக்கலாம். சிகிச்சையிலிருக்கும் ஆபத்துகளின் காரணங்களைக் கண்டுபிடிக்க வல்லது இந்த அணுகுமுறை. மருத்துவ நிலையங்களின் அலட்சியத்தைத் தீர்மானிக்கும்போது நீதிமன்றங்கள் அந்த நிலையங்கள் காட்டிய ஆரம்பகட்ட சிரத்தையையும் அதீத கவனத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ளவே செய்யும்.
2022ல் ஒரு தனியார் மருத்துவமனையின் மூன்று மருத்துவர்களுக்கு இரண்டு ஆண்டு சிறைத்தண்டனையை வழங்கித் தீர்ப்பளித்தது கர்நாடக பிடார் மாஜிஸ்ட்ரேட். வெண்டிலேட்டர் இல்லாமல் அறுவைச் சிகிச்சை செய்ததினால் நோயாளி ஒருவர் இறந்து போனார் என்பதுதான் அதற்குக் காரணம். அந்த வழக்கில் தவறாகச் செய்யப்பட்ட சிகிச்சை முறைகள் மூடி மறைக்கப்பட்டன; மேலும், உண்மைகள் பொய்யாகவும் பொய்கள் உண்மையாகவும் காட்டப்பட்டன.
பொது சுகாதாரத்திற்காக தமிழ்நாடு மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் 1 சதவீதத்திற்கும் குறைவாகவே செலவு செய்கிறது
மருத்துவ அலட்சியத்தை நிரூபிக்கும் சாட்சியங்கள் குறை சொல்ல முடியாததாக இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது. ”மருத்துவ அலட்சியத்தை அப்பட்டமாகக் காட்டும் குறிப்பிட்ட நடத்தையை மனுதாரர் காட்டவில்லை என்றால், மருத்துவர்கள் அளிக்கும் சிகிச்சையின் போக்கை வைத்து மட்டும் மருத்துவர்களைப் பற்றிய ஒரு மருத்துவத் தீர்மானத்தை வெறும் இரண்டாம் ஊகத்தின் மூலம் நீதிமன்றத்தால் அடைய முடியாது….” என்று 2022 செப்டம்பர் மாதம் வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சட்டப் புதிரைத் தாண்டி, எதிர்க்கட்சிகளின் அரசியல் அழுத்தத்தையும் திமுக அரசு இப்போது எதிர்கொண்டிருக்கிறது. பிரியாவின் குடும்பத்திற்கு இன்னும் அதிகமான நிவாரணம் தர வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோருகின்றன.
தாய்-சேய் நலம், ஊட்டச்சத்து, தடுப்பூசி ஆகிய விசயங்களில் தமிழ்நாட்டின் பொது சுகாதாரக் கட்டமைப்பின் திறன் புகழ்பெற்றது. அதனை மறுக்கவில்லை. ஆனால் தனியார் மருத்துவமனைகளில் உள்ளது போல சிறந்த மருத்துவர்களைக் கொண்டு பெரிய அரசு பொது மருத்துவமனைகளையும், உள்ளூர் மருத்துவ நிலையங்கள் மூலமாக எல்லா இடங்களிலும் இலவசமாகக் கிடைக்கக்கூடிய முதல்நிலை மருத்துவ வசதியையும் மேம்படுத்த வேண்டும். இதுதான் கால்பந்து விளையாட்டு வீராங்கனை பிரியாவின் மரணம் உணர்த்தும் செய்தி.
Read in : English