Site icon இன்மதி

பிட்னெஸ் மேனியா: அபரிமிதமான உடற்பயிற்சி உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்துமா?

Read in : English

கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் உடற்பயிற்சி செய்த நிலையில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். சிலர் உடனடியாக உடல் எடையைக் குறைப்பதாக உடற்பயிற்சி நிறுவனங்களுக்குச் சென்று அதிக அளவில் உடல் பயிற்சியில் இறங்குவார்கள். சில நேரங்களில் அதீத உடற்பயிற்சி செய்பவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்திவிடுகிறது.

“ஜிம்களுக்கு உடற்பயிற்சிக்காக வரும் பெரும்பாலானோர் சரியான புரிதல் இல்லாமல் உடனே உடல் எடையை குறைக்கவோ அல்லது கட்டுக்கோப்பான உடலை கொண்டு வரவோ ஆசைப்படுகின்றனர். பொதுவாக 35 வயதை கடந்த ஆண்களுக்கு உடலுக்கு வலு கொடுக்கும்  ஆற்றலான  டெஸ்டோஸ்டிரான் ஹார்மோன் சுரப்பு குறைய தொடங்கி விடும். இதனால், உடல் சோர்வடைய தொடங்கும். இந்த சூழலில் அவசரமாகவும், வேகமாகவும் உடற்பயிற்சி செய்ய கூடாது” என்கிறார் சென்னை  ராயப்பேட்டையில் உடற்பயிற்சி அளித்து வரும் வெங்கடேஷ்.

“உதாரணமாக உடனே உடல் எடை குறைய வேண்டுமென எண்ணி ஜிம்களில் தானாக வெயிட் லிப்ட், கார்டியோ உள்ளிட்ட பயிற்சிகளை எடுக்கும் போது சீரான இடைவெளியும், நேரத்தையும் கடைப்பிடிப்பது தவிர்க்கப்படுகிறது.  இதனால், திடீரென உடல் நலக்கோளாறும், இருதய அடைப்பும் ஏற்பட்டு விடுகிறது.

ரத்த அழுத்தம், நீரிழிவு அல்லது பிற பாதிப்புகள் இருப்பவரும், மன அழுத்தம் இருப்பவர்களும், ஆரோக்கியமான உணவை எடுத்து கொள்ளாதவர்களும் எடை தூக்கும் பயிற்சியை மேற்கொள்ளக்கூடாது. (Photo: Pixahive)

உடற்பயிற்சியின் ஆரம்ப கட்டத்திலோ அல்லது சீரற்ற உடற்பயிற்சியின் போதோ இதயம் அதிகமாக துடிக்க தொடங்கும். ரத்தத்தில் ஆக்சிஜன் தேவை அதிகரிக்கும் போது அதைச் சமப்படுத்துவதற்காக இதயத்தின் செயல்பாடும் அதிகரிக்கும். இதனால் தானாகவே ரத்த அழுத்தம் ஏற்பட்டு இதயத்தின் துடிக்கும் வேகம் மேலும் அதிகரிக்க தொடங்கும். சில நேரங்களில் ஏற்படும் கூடுதல் அழுத்தம் இதயத்தின் வேகத்தையே நிறுத்திவிடும். கன்னட நடிகர் புனித் ராஜ்குமாருக்கும் இது போன்று தான் நிகழ்ந்திருக்க வாய்ப்பிருக்கிறது” என்கிறார் அவர்.

“சில ஆண்டுகள் தொடர்ந்து உடற்பயிற்சி எடுத்து கொண்டு 2 அல்லது 3 ஆண்டுகள் இடைவெளி விட்டு மீண்டும் திடீரென உடற்பயிற்சியை மேற்கொள்வோருக்கும் பிரச்சினைகள் ஏற்படலாம். ஏனெனில், அவர்கள் உடனே தங்களது பழைய கட்டான உடல்வாகு வேண்டுமென விருப்பம் தெரிவித்து அதிக அழுத்தத்தை கொடுப்பார்கள். செய்யும் வேலை, எடுத்து கொள்ளும் உணவு, அவர்களுக்கு இருக்கும் தீய பழக்கவழக்கங்களின் அடிப்படையில் முறையான ஆலோசனையுடன்  உடற்பயிற்சி எடுப்பது அவசியம். உடற்பயிற்சி மட்டுமின்றி உடலுக்கான உணவை எடுத்து கொள்வதிலும் கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டும். உணவுப் பழக்கத்தைச் சரியாகக் கடைப்பிடித்தால் உடற்பயிற்சிக்கு நமது உடல் ஒத்துழைக்கும். முக்கியமாக உடற்பயிற்சி செய்யும் போது மனமும், உடலும் ஒரேநிலையில் இருக்க வேண்டும். பொதுவாக பயிற்சி எடுக்கும் போது உடல் ஒத்துழைக்கவில்லை என்றால் சில அறிகுறிகளை உணர முடியும். கண்களின் துடிப்பு, இடது பக்க கை வலி, வியர்த்து விடுவது, உடல் வெப்பநிலை அதிகரிப்பு உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்படும். இதை உணராமல் உடற்பயிற்சியை தொடர்ந்து செய்தால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படும். உடற்பயிற்சியின் போது, அசௌகரியமாக தோன்றினால் உடனே பயிற்சியை நிறுத்திவிட்டு சிறிது நேரம் ஓய்வு எடுக்க வேண்டும்” என்றார் வெங்கடேஷ்.

தீவிரமான உடற்பயிற்சியான டெட்லிப்ட் செய்வதிலும் மிகுந்த கவனம் வேண்டும். இந்தப் பயிற்சியை கட்டாயம் ஃபிட்னஸ் பயிற்சியாளரின் உதவியுடன் தான் செய்ய வேண்டும்

நேர கட்டுப்பாட்டை கடைபிடித்து உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டுமென நங்கநல்லூரியில் 10 ஆண்டுகளுக்கு மேலாக உடற்பயிற்சி அளித்து வரும் லோகேஷ் கூறுகிறார். குறிப்பிட்ட வயதை கடந்தவர்கள் ஸ்குவாட்ஸ், கார்டியோ, டெட்லிப்ட்ஸ் உள்ளிட்ட  பயிற்சிகளை கவனமுடன் எடுக்க வேண்டும் என்றார்.  ”கார்டியோ ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும் தீவிரமான கார்டியோ பயிற்சிகள் பாதிப்பை ஏற்படுத்த கூடும். 40 வயதை கடந்தவர்களுக்கு தசைகள் பலவீனமாக இருப்பதால் தீவிரமான உடற்பயிற்சிகளை செய்தால், அது மேலும் பிரச்சினையை உண்டாகும். உதாரணமாக, கார்டியோ பயிற்சியில் முழங்கால்கள் மற்றும் ஜம்பிங் ஜாக்குகளை 40 வயதிற்கு மேல் செய்தால் தசைநார்கள் கிழியும் நிலைகூட வரலாம். இதனால் 40 வயதை கடந்தவர்கள்  குறைவான கார்டியோ பயிற்சிகளை எடுக்க பரிந்துரைக்கின்றோம். ஸ்குவாட்ஸ் பயிற்சியும் 40 வயதிற்கு மேல் இருப்பவர்களுக்கு கொஞ்சம் கடினமான பயிற்சி தான்.  பெரும்பாலும் உடற்பயிற்சி நிலையங்களில் கடைப்பிடிக்கப்படும் ஸ்குவாட்ஸ் பயிற்சி நன்மையாக இருந்தாலும், 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அது காயத்தை ஏற்படுத்த கூடும்” என்றார். இதற்கெல்லாம் மேலாக மிக தீவிரமான உடற்பயிற்சியான டெட்லிப்ட் செய்வதிலும் மிகுந்த கவனம் வேண்டும்” என லோகேஷ் எச்சரிக்கிறார்.

“இந்த பயிற்சியை கட்டாயம் ஃபிட்னஸ் பயிற்சியாளரின் உதவியுடன் தான் செய்ய வேண்டும் என கூறும் லோகேஷ்,  ”ஆரம்பத்தில் டெட்லிப்ட் சுலபமாக இருந்தாலும் குறிப்பிட்ட வயதிற்கு மேல் அந்த பயிற்சி எடுப்பதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் குறிப்பிட்ட வயதிற்கு மேல் உடல் ஒத்துழைப்பு, மன ஆரோக்கியம், சரியான உணவு முறை என்பது அவசியமாகிறது. இதில் எதை கடைப்பிடிக்காவிட்டாலும், அவருக்கு பாதிப்பு தான் ஏற்படும். ரத்த அழுத்தம், நீரிழிவு அல்லது பிற பாதிப்புகள் இருப்பவரும், மன அழுத்தம் இருப்பவர்களும், ஆரோக்கியமான உணவை எடுத்து கொள்ளாதவர்களும் இந்தப் பயிற்சியை மேற்கொள்வது சிரமம்” என்றார் அவர்.

ஒருசிலர்  யூடியூப் பார்த்து விட்டு பயிற்சியாளர் மற்றும் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் தானாகவே உடற்பயிற்சியை எடுப்பதால் பாதிப்புகள் ஏற்படுகின்றன.

வேலை, உணவு முறை, தூக்கம் ஆகியவற்றை கணக்கிட்டு ஒருவர் சரியான உடற்பயிற்சி எடுத்து வந்தால் ஆரோக்கியமாக இருக்கலாம் என்கிறார் தரமணியில் உடற்பயிற்சி அளித்துவரும் விஜய்குமார். ”ஒருசிலர்  யூடியூப் பார்த்து விட்டு பயிற்சியாளர் மற்றும் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் தானாகவே உடற்பயிற்சியை எடுப்பதால் பாதிப்புகள் ஏற்படுகின்றன. சிலர் ஒரு நாள் உடற்பயிற்சி எடுப்பதை தவறவிட்டால் அடுத்த நாள் அதை சரிசெய்யும் விதமாக கூடுதலாக ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்கின்றனர். இதனால் அவர்களின் உடலில் சீக்கிரம் முன்னேற்றம் ஏற்படும் என நினைத்து கொள்கின்றனர். அது முற்றிலும் தவறானது. உடலை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள ஆரோக்கியமான உணவு, தூக்கம் மிக அவசியம். மன அழுத்தம் உடற்பயிற்சியில் இருக்கவே கூடாது. தூக்கம் இல்லை என்றால் அது மன அழுத்தத்தை அதிகரிக்கும். அந்த சூழலில் உடலுக்கு வேலை கொடுத்தால் ரத்த ஓட்டம் சீரற்றதாக இருக்கும். இதை தவிர்க்க குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிட்டு, சரியாக தூங்கினால் எந்த வயதிலும் உடற்பயிற்சியை செய்யலாம். உடற்பயிற்சிக்கு வயது வித்தியாசம் இல்லை. ஆனால், நாம் உணவை எடுத்து கொள்வதிலும், உடல் நலத்தில் அலட்சியம் காட்டக்கூடாது. 87 வயதான முதியவர் கூட மிஸ்டர் தமிழ்நாடு போட்டியாளர்களுக்கு போட்டியாக உள்ளார். அந்த அளவுக்கு உடலில் மீது மிகுந்த கவனம் செலுத்துவதால் தான் முதியவரால் 87 வயதிலும்  இளைஞர்களுக்கு சவால்விடும்படி ஆரோக்கியமாக வாழ முடிகிறது. அதனால், அனைவரும் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்” என்றார்.

மூன்று ஆண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் வந்து உடற்பயிற்சி செய்வது சற்று கடினமாக உள்ளது என போக்குவரத்திற்கான டிக்கெட் பதிவு செய்யும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் வில்சன் கூறியுள்ளார். வேலை, திருமணம், குழந்தைகள் என கடந்த 3ஆண்டுகளாக உடற்பயிற்சி செய்வதை கைவிட்டேன். தற்பொழுது வேலை பளு குறைந்ததாலும் 30 வயதை கடந்ததாலும் மீண்டும் உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்துள்ளேன். இடைவெளி விட்டு உடற்பயிற்சி செய்வதால் சிரமமாக உள்ளது.  ஆனால், தொடர்ந்து பயிற்சியைக் கடைபிடித்தால் வலி இருக்காது. குடும்ப சூழலுக்காக சில காலம் செலவிட்ட நான், என் உடலின் நலனுக்காக மீண்டும் பயிற்சி எடுக்கிறேன். உடற்பயிற்சி செய்வதால் ஆரோக்கியமாக உணர்கிறேன் என்றார்.

Share the Article

Read in : English

Exit mobile version