Site icon இன்மதி

ஆறு பேர் விடுதலை: ராகுல் எதிர்ப்பு?

Read in : English

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மனிதநேயமும் கண்ணியமும் மிக்கவர் என்று பலர் அவருக்குப் புகழாரம் சூட்டுகிறார்கள். நானும் அவர் அப்படித்தான் என்று நினைக்கவே விரும்புகிறேன். ஆனால் அவரால் புரிந்துகொள்ள முடியாத, ஜீரணிக்க முடியாத ஒரு விசயம் இருக்கிறது; அது இலங்கைத் தமிழர் பிரச்சினை. குறிப்பாக, அவரது தந்தை ராஜீவ் காந்தியின் படுகொலை வழக்கில் சிறைப்பட்டிருக்கும் குற்றவாளிகளின் விடுதலை பிரச்சினை. அவர்களையோ அல்லது விடுதலைப் புலிகளையோ அவர் மன்னிக்க மாட்டார் என்று தெரிகிறது.

அந்த ஆறு ஆயுள் கைதிகளையும் விடுதலை செய்யுமாறு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு காங்கிரஸ் ஆற்றிய எதிர்வினையில் ராகுலின் தாக்கம் தெளிவாகவே இருக்கிறது. ராகுலின் நம்பிக்கைக்குரிய ஆலோசகர் ஜெய்ராம் ரமேஷ் இந்தத் தீர்ப்பை “முற்றிலும் ஏற்றுகொள்ள முடியாதது, முற்றிலும் தவறானது” என்று விமர்சித்திருக்கிறார். “காங்கிரஸ் கட்சி இதைத் தெளிவாக விமர்சிக்கிறது; இந்தத் தீர்ப்பை நியாயப்படுத்த முடியாது.

இந்தப் பிரச்சினையில் இந்தியாவின் ஆன்மாவோடு இயைந்த முறையில் உச்ச நீதிமன்றம் செயல்படவில்லை” என்று அவர் கூறியிருக்கிறார்.

ஆறு ஆயுள் கைதிகளையும் விடுதலை செய்யுமாறு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு காங்கிரஸ் ஆற்றிய எதிர்வினையில் ராகுலின் தாக்கம் தெளிவாகவே இருக்கிறது

இந்தப் பிரச்சினையில் காங்கிரஸ் பல ஆண்டுகளாக நிலையான ஒரு நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது என்றும், “தீர்ப்பை மறுஆய்வு செய்வதற்கான சட்டப்பூர்வமான வழிமுறைகள் உட்பட தீர்வுக்கான எல்லா நடவடிக்கைகளையும் கட்சி எடுக்கும்” என்றும் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்வி சொல்லியிருக்கிறார்.

“எங்களின் சட்ட உரிமைகளை நாங்கள் பயன்படுத்துவோம். இப்படிச் செய்வதற்கு இந்த நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல, உச்ச நீதிமன்றத்திற்கும் அது கட்டமைத்த பாரம்பரியத்திற்கும் நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம்” என்று கூறியிருக்கும் சிங்வி, “இந்தத் தீர்ப்பு தேசத்தின் மனசாட்சிக்கு நேர்ந்த ஓர் அதிர்ச்சி” என்று கருத்து சொல்லியிருக்கிறார்.

காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி கைதிகளுக்காகக் கருணை மனு கொடுத்ததையும், 2008ல் வேலூர் சிறையில் நளினியைப் பிரியங்கா சந்தித்ததையும் சிங்வி சாமர்த்தியமாகத் தவிர்த்திருக்கிறார். அவை அவர்களின் சொந்தக் கருத்துக்கள் என்று சொன்ன அவர், உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ஏற்றுக் கொள்ளப்பட முடியாதது என்பதில் கட்சி தெளிவாகவே இருக்கிறது என்றிருக்கிறார்.

மேலும் படிக்க: ராகுல் பாரத யாத்திரை: குமரி கைகொடுக்குமா, கைவிடுமா?

சோனியாவோடும் ராஜீவ் குடும்பத்தாரிடமும் காங்கிரஸ் எந்த விசயத்தில், எப்போது இறுதியாக முரண்பட்டது?

இளவரசர் ராகுல் மறக்கவோ மன்னிக்கவோ தயாராக இல்லை என்பதை நாம் எளிதாக ஊகிக்கலாம். அவர் மோடியையோ அல்லது தன் எதிரிகளையோ கூட மன்னிக்கலாம். ஆனால் 1991 மே 21 படுகொலையில் பங்கு பெற்றவர்களை மன்னிக்க மாட்டார் என்பது தெரிகிறது. அந்த சம்பவம் நிகழ்ந்து ஒரு மாதத்திற்குப் பின்பு ராகுலுக்கு வயது 21 ஆனது; அந்தப் பிறந்தநாளில் தந்தை அவருடன் இல்லை.

மனித வெடிகுண்டுத் தாக்குதலில் ராஜீவ் காந்தி சுக்குநூறாக உடைந்து கிடந்தார்; அவரது பிணத்தைக் கூட முழுதாக இறுதியாகப் பார்க்க முடியவில்லை. இளைஞர் ராகுல் தந்தையின் சிதைக்கு நெருப்பு வைக்கும் காட்சி அப்போது பலர் இதயங்களை நெகிழ வைத்தது. ராகுலே மனம் நொறுங்கிப் போயிருப்பார்.

அவரைவிட இரண்டு வயது இளையவரான பிரியங்காவும் அப்படித்தான் வேதனைப்பட்டிருப்பார். ஆனால் அவர் ஒருவழியாக மனம் தேறியிருக்கக் கூடும்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் அவர் தமிழ்நாட்டுக்கு வந்து நளினியை வேலூர் சிறையில் சந்தித்த அந்த நிகழ்வு அதற்குச் சாட்சியாகலாம்.

அந்தச் சந்திப்பு வெறும் விளம்பர உத்தி ஜாலம் அல்ல. அது ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.

மோடியையோ அல்லது தன் எதிரிகளையோ கூட ராகுல் மன்னிக்கலாம்; ஆனால் 1991 மே 21 படுகொலையில் பங்கு பெற்றவர்களை அவர் மன்னிக்க மாட்டார் என்பது போலத் தெரிகிறது

டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்ட பின்புதான் அந்தச் செய்தி உலகத்திற்கே தெரியவந்தது. ”2008 மார்ச் 19 அன்று நான் நளினி ஸ்ரீகரனை வேலூர் மத்தியச் சிறைச்சாலையில் சந்தித்தது உண்மை. கடந்த கால வன்முறையையும் அதனால் நான் அனுபவித்த இழப்புணர்வையும் மறப்பதற்கு அந்தச் சந்திப்பு எனக்கொரு வடிகாலாக இருந்தது,” என்று பின்னர் ஓர் அறிக்கையில் அவர் சொன்னார்.

”அதுவொரு தனிப்பட்ட சந்திப்பு. நானாகத் தேர்ந்தெடுத்து சென்ற வழி அது. இந்தத் தனிமனித உணர்வு மதிக்கப்பட்டால் நான் நன்றியுணர்வோடு இருப்பேன்” என்றும் பிரியங்கா கூறினார். “கோபம், வெறுப்பு, வன்முறையில் எனக்கு நம்பிக்கை இல்லை. அவை என் வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்த அனுமதிப்பதுமில்லை” என்றும் சொன்னார்.

மேலும் படிக்க: காங்கிரஸ் கட்சிக்கு ப்ரியங்கா ஏன் தலைமை ஏற்க வேண்டும்?

ராஜீவ் கொலைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையைக் குறைத்து கருணை காட்டும்படி சோனியாவை மனு செய்யுமாறு தூண்டியதே பிரியங்காதான்.

வேலூர் சிறைச் சந்திப்புக்கு பிரியங்காவுடன் ராகுல் செல்லவில்லை. ”இந்த விசயங்களைப் பற்றி எனக்கொரு வேறுபட்ட அணுகுமுறை உண்டு” என்று மட்டுமே ராகுல் அந்த சமயத்தில் கூறினார். ”நளினியை நீங்களும் சந்திப்பீர்களா?” என்று கேட்டபோது ராகுல் சொன்ன பதில் இது: “எனக்கொன்றும் பிரச்சினை இல்லை.” ஆனால் அவர் நளினியைச் சந்திக்கவே இல்லை.

”நாங்கள் வெறுப்புணர்வைச் சுமந்து செல்வதில்லை, கோபத்தையும்தான்,” என்று ராகுல் கண்ணியமாகக் கூறினார்.

1999ல் அப்போதைய குடியரசுத்தலைவர் கே.ஆர்.நாராயணனுக்கு ஒரு கடிதம் எழுதினார் சோனியா காந்தி. “உங்களுக்கே தெரியும், எங்கள் அன்புக்குரியவர் ராஜீவின் இழப்பால் நானும் என் குழந்தைகளும் அனுதினமும் அளவிட முடியாத மனவேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம் என்று.

ஆனால் என் கணவரின் அவல முடிவுக்குக் காரணமானவர்களைத் தூக்கில் போடுவதை என் குழந்தைகளும் நானும் ஒருபோதும் விரும்பவில்லை” என்று சோனியா கடிதத்தில் சொல்லியிருந்ததாக ஊடகச் செய்திகள் கூறின. ஆனாலும் அந்தக் கடிதம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.

பிரியங்கா-நளினி சந்திப்பை ராகுல் விரும்பவில்லை என்றும், ஆனால் பிரியங்கா பிடிவாதமாக இருந்ததால் அவர் விட்டுக்கொடுத்தார் என்றும் செய்திகள் உலா வந்தன.

இலங்கையில் இறுதிக் கட்டப்போர் நடந்தபோது இந்தியா தலையிட வேண்டும் என்ற கோரிக்கைக்கு ராகுல் செவிசாய்க்கவில்லை. இதிலிருந்தே அவர் தன் தந்தையின் படுகொலையைப் பற்றியும், விடுதலைப் புலிகளைப் பற்றியும் என்னமாதிரியான மனப்பான்மை கொண்டிருந்தார் என்று சூசகமாகத் தெரிகிறது.

அந்தக் காலகட்டத்தில் இலங்கைத் தமிழ்தேசியவாதிகளுக்குத் தமிழ்நாட்டில் ஒரு வசீகரம் இருந்தது. அப்போது காங்கிரஸ் தலைமையிலான ஒன்றிய அரசில் அங்கம் வகித்த திமுக பிரபாகரனையும் அவரது கூட்டாளிகளையும் இலங்கை அரசு கொல்லாமல் இருப்பதற்கு இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதற்காக எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டது. “முதலில் அவர்களைக் கைது செய்யுங்கள்; அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதைப் பின்பு யோசிக்கலாம்”, இதுதான் திமுக சொன்ன சேதி.

அன்றைய பிரதமர் மன்மோகன் சிங்கிடமும் சோனியாவிடமும் தன் வேண்டுகோளை முன்வைத்தது திமுக. அப்போது ராகுல் அமைச்சரவையில் இல்லை என்றாலும் அவருக்கென்று பெருஞ்செல்வாக்கு இருந்தது. அப்போது ராகுலும் உடனிருந்தார். ஆனால் ராகுல் விடுதலைப் புலிகளைக் காப்பாற்றும் முடிவைப் பிடிவாதமாக மறுத்துவிட்டார். அது சம்பந்தமாக அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என்று மட்டும் சொன்னார். ஆனால் அவரது விருப்பங்களுக்கு எதிராக மன்மோகன் சிங்கும் சோனியாவும் செயற்படவில்லை. இதெல்லாம் திரிபாக இருக்கலாம். ஆனால் அந்தக் காலகட்டம் முழுவதும் ராகுலும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்பது யதார்த்தமான உண்மை..

எல்லாம் முடிந்து சிறிது காலத்திற்குப் பின்பு ராகுல் சிங்கப்பூரில் ஒரு கூட்டத்தில் பேசினார். தொலைக்காட்சியில் பிரபாகரன் இறந்து கிடக்கும் காட்சிகளைத் தான் பார்த்தபோது தனக்கேற்பட்ட உணர்ச்சிகளைப் பற்றி அப்போது சொன்னார். “எனக்குள் இரண்டு உணர்வுகள் எழுந்தன: அவர்கள் ஏன் இந்த மனிதனை இப்படிக் கேவலமாக நடத்துகிறார்கள் என்ற உணர்வு முதலில் எனக்குள் எழுந்தது.

இந்தாண்டு பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்; மற்றவர்களின் விடுதலைக்காகப் பெரும்பாலான கட்சிகள் குரல் கொடுத்தபோது காங்கிரஸ் கண்டுகொள்ளவே இல்லை

இரண்டாவது, நான் அவருக்காகவும் அவரது குழந்தைகளுக்காகவும் நிஜமாகவே வருத்தப்பட்டேன். ஏனென்றால் இந்தப் பிரச்சினையின் மறுபக்கத்தில் இருப்பது என்றால் என்ன என்பதை நான் ஆழமாகப் புரிந்து வைத்திருக்கிறேன்.”

முள்ளிவாய்க்கால் ரத்தக்களரியைத் தவிர்க்க அவர் ஏன் ஒன்றுமே செய்யவில்லை என்று யாரும் ராகுலிடம் கேட்டதில்லை. அதுதான் இந்தியாவின் ஊடக இனம்; டில்லி மேல்தட்டு அறிவுஜீவி வர்க்க ‘லட்ச்யென்ஸ்’ ஊடகங்கள் என்று கூடச் சொல்லலாம். அவர்கள் ஒருபோதும் முள்ளிவாய்க்கால் பிரச்சினையை ராகுலிடம் எழுப்பியதில்லை.

ராகுல் காந்தி அனுபமற்றவர் அல்ல. இலங்கை உள்நாட்டு யுத்தத்தில் ஏதோவொரு வகையில் தலையிட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வந்திருந்தால் தமிழ்நாட்டில் காங்கிரஸின் அரசியல் பலத்தை அதிகரித்திருக்கலாம் என்பது நன்றாகவே அவருக்குத் தெரிந்திருக்கும். ஆனால் அவர் அப்படி செய்யவும் இல்லை; அதைப்பற்றி அலட்டிக் கொள்ளவும் இல்லை.

ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட ஏழு கைதிகளின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது என்னவோ உண்மைதான். ஆனால் கொலையில் தங்களின் பங்கு மிகக்குறைவாக இருந்தும், சுமார் முப்பதாண்டுகளாகவே அவர்கள் சிறையில் வாடி வதங்கி விட்டனர்.

இந்தாண்டு அவர்களில் ஒருவரான பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். மற்றவர்களின் விடுதலைக்காகப் பெரும்பாலான கட்சிகள் குரல் கொடுத்தபோது, காங்கிரஸ் கண்டுகொள்ளவே இல்லை.

இப்போது அந்தக் கட்சி உச்ச நீதிமன்ற தீர்ப்பை விமர்சிக்கிறது.

கட்சியில் ராகுலின் செல்வாக்கு தொடர்ந்தபடியேதான் இருக்கிறது. அவரது விருப்பத்திற்கேற்ப ஒவ்வொருவரும் வளைந்து கொடுக்கிறார்கள். 1991ஆம் ஆண்டு அவலநிகழ்வின் அதிரடித் தாக்கத்திலிருந்து ராகுல் இன்னும் வெளிவரவில்லை; மீளவில்லை. இந்த விசயத்தில் தமிழுணர்வைப் பகைத்துக் கொள்வதினால் ஏற்படும் விளைவுகளை எதிர்கொள்ள அவர் தயாராக இருப்பது போலவே தெரிகிறது.

Share the Article

Read in : English

Exit mobile version