Read in : English
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவராகப் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார் அசோக் சிகாமணி. எதிரணியில் போட்டியிட்டவர் வேட்பு மனுவை வாபஸ் பெற்றதோடு, இத்தேர்தலுக்கு காரணமாக இருந்த நீதிமன்ற வழக்கில் இருந்தும் பின்வாங்கியிருக்கிறார். இதுவே, டிஎன்சிஏ என்ற அமைப்பை மீண்டும் செய்திகளில் இடம்பெறச் செய்திருக்கிறது.
1932இல் இருந்து இயங்குகிறது டிஎன்சிஏ எனப்படும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம். சமீபத்தில் இதன் 90வது பொதுக்குழு கூட்டம் நடந்துள்ளது. அதில், அசோக் சிகாமணிக்கு எதிராகத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட பிரபு என்பவர் தனது மனுவை வாபஸ் பெற்றுள்ளார். அது மட்டுமல்ல, நீதிமன்றத்தில் இந்த தேர்தலை நடத்துவது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கையும் விலக்கிக் கொண்டிருக்கிறார். பிரபு மட்டுமல்லாமல் டி.எஸ்.கே.ரெட்டி, காளிதாஸ் வாண்டையார் என்ற இருவரும் கூட தாங்கள் தொடர்ந்த வழக்கைத் திரும்பப் பெற்றிருக்கின்றனர். இதனால், அசோக் சிகாமணி போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தில் பிசிசிஐ தலைவராகப் பொறுப்பு வகித்தவரும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன அதிபருமான சீனிவாசன் சம்பந்தப்பட்ட நபர்களே பொறுப்புக்கு வருகிறார்கள் என்றுதான் பிரபு சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தில் தேர்தல் நடத்தலாம் என்று உயர் நீதிமன்றமே சொன்னது. இந்த சூழலில் எதிரணி பின்வாங்கியிருப்பது அசோக் சிகாமணி பொறுப்புக்கு வருவதற்காகவே பின்னணியில் ஏதோ நடந்திருப்பதைக் காட்டுகிறது.
மேலும் படிக்க: ஆன்லைன் ரம்மி எனும் மாயவலை
சீனிவாசன் ஆதிக்கம்!
தொண்ணூறுகளில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கப் பொறுப்பில் இருந்த முத்தையா மூலமாக, அதனோடு இணைந்தவர்தான் சீனிவாசன். ஆனால், முத்தையாவைக் காட்டிலும் அதிக காலம் அதில் செயலாற்றியவர். இன்றும் சீனிவாசனே ‘கேம் சேஞ்சர்’, ‘கிங் மேக்கர்’ என்றும் சொல்லலாம். அவரது உடல்நலக் குறைவுதான் நேரடிப் பொறுப்பில் இருந்து விலகச் செய்திருக்கிறது. 2019 செப்டம்பரில் சீனிவாசன் மகள் ரூபா குருநாத் தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் தலைவராக இருந்தபோது அசோக் சிகாமணி துணைத் தலைவராக இருந்துள்ளார். அந்த காலகட்டத்தில் டிஎன்சிஏ சிறப்பாகச் செயல்பட்டபோதும், கோவிட் –19 தொற்று பெருந்தடையாக அமைந்தது.
பிசிசிஐயில் சீனிவாசன் பொறுப்பில் இருந்தபோதுதான், 2008 ஐபிஎல்லில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி தொடங்கப்பட்டது. தோனி அதன் ஒரு பகுதியானார். சீனிவாசன் பதவியில் இருந்தபோதுதான் ஒருநாள் கிரிக்கெட் கோப்பையை இந்தியா கைப்பற்றியது. சீனிவாசன் ஆதரவு இருந்ததாலேயே, சச்சின் தவிர்த்துச் சில மூத்த வீரர்களை அணியில் இருந்து ஒதுக்கி ரெய்னா, ரோகித், கோஹ்லி போன்ற இளம் வீரர்களைக் கொண்டுவந்தார் தோனி. இன்றும் தோனி, சீனிவாசன் பிணைப்பு தொடர்கிறது.
திமுக உறவு!
சீனிவாசன் வெகுகாலமாகவே திமுகவுடனும் கலைஞருடனும் நெருக்கமாக இருந்தவர். திமுக உறவு காரணமாக, சீனிவாசன் அணிக்கு எல்லா சலுகைகளும் கிடைத்துவிடும். அந்த உறவைத் திருப்திப்படுத்தவே, ஒரு கைம்மாறாக அசோக் சிகாமணியின் நியமனம் நடந்திருக்கிறது.
ஏன் இந்த சர்ச்சை?
தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்துவரும் பொன்முடியின் மகன் அசோக் சிகாமணி. சுமார் 17 ஆண்டுகளுக்கும் மேலாக குழந்தை மருத்துவராகப் பணியாற்றி வருபவர். இவருக்கு கிரிக்கெட்டிலும் ஆர்வம் உண்டு. விழுப்புரம் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தோடு பல ஆண்டுகளாக இணைந்து செயலாற்றி வருகிறார். பொன்முடியின் மகன் என்பதாலேயே, தற்போது இவர் தலைவர் பொறுப்பை ஏற்றிருப்பது இது விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கிறது.
ஜெய்ஷாவின் ஆதிக்கம்!
பிசிசிஐ உடன் மாநில கிரிக்கெட் நிர்வாகங்கள் ஒருங்கிணைந்து இணங்கிச் செயல்பட வேண்டும். ஒரு சர்வதேசப் போட்டி சென்னையில் நடைபெறுவதாக அட்டவணையிடப்பட்டால், அதையொட்டி அனைத்துச் செயல்பாடுகளையும் டிஎன்சிஏ மேற்கொண்டாக வேண்டும். தற்போது, பிசிசிஐ செயலாளராக ஜெய்ஷா இருக்கிறார். இவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகன். அரசியல் முரண் என்பது இங்குதான் வருகிறது.
கங்குலிக்கும் ஜெய்ஷாவுக்கும் மோதல் இருந்ததாலேயே இரண்டாவது முறையாக அவர் தேர்ந்தெடுக்காமல் தவிர்க்கப்பட்டிருக்கிறார். தற்போது எழுபது வயதான ரோஜர் பின்னி பிசிசிஐ தலைவராகத் தேர்வாகியிருக்கிறார்.
பிசிசிஐயை ஆட்டிப் படைப்பது ஜெய்ஷா தானோ என்ற சந்தேகமும் எழுகிறது. ஏனென்றால், ஐபிஎல்லில் கூட அதிக போட்டிகள் குஜராத்தில்தான் நடத்தப்பட்டன. இத்தகைய சூழலில் ஜெய்ஷா, அசோக் சிகாமணி தலைமை வகிக்கும் நிர்வாகம் இடையே எவ்வாறு ஒருங்கிணைப்பு தொடருமென்ற கேள்வி விமர்சகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
கிரிக்கெட்டில் கட்சிகள்!
கடந்த எட்டாண்டுகளாக பிசிசிஐயில் பாஜகவின் ஆதிக்கம் அதிகமாகியிருக்கிறது. காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் சரத் பவார் போன்றவர்களின் ஆதிக்கம் இருந்ததுண்டு. அவர் மும்பை கிரிக்கெட் சங்கப் பொறுப்பையும் வகித்திருக்கிறார். ஆனால், இவ்வளவு நேரடியாகத் தாக்கம் இருந்தது கிடையாது.
கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானம் பெரும்பாரம்பரியம் கொண்டுள்ள நிலையில், குஜராத்தில் இறுதிப்போட்டியை நடத்துவது அப்பட்டமாக அவரது அரசியல் ஆதிக்கத்தை வெளிக்காட்டியுள்ளது.
கிரிக்கெட் என்பது பணம், புகழ், பதவி, பெயரை அள்ளித் தரும் ஒரு விளையாட்டு. தேசியக் கட்சிகளோடு தொடர்புடையவர்கள் பிசிசிஐ தலைவராகவும் பொறுப்புகளிலும் வர வேண்டுமென்று ஆசைப்படுவதற்கும் இதுவே காரணம்.
கிரிக்கெட் என்பது பணம், புகழ், பதவி, பெயரை அள்ளித் தரும் ஒரு விளையாட்டு. தேசியக் கட்சிகளோடு தொடர்புடையவர்கள் பிசிசிஐ தலைவராகவும் பொறுப்புகளிலும் வர வேண்டுமென்று ஆசைப்படுவதற்கும் இதுவே காரணம். அது ஒரு பெருமையாகவும் கூட கருதப்படுகிறது.
புதிய அறிவிப்புகள்!
கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு வீர்ர்களைப் போலவே ஊதியம் கிடைக்கும் எனும் அம்சம் கங்குலி காலத்திலேயே அறிவிக்கப்பட்டது, ரோஜர் பின்னி தலைவர் ஆனதும் அமலுக்கு வரவிருக்கிறது.
தற்போது டிஎன்சிஏ தலைவராகி இருக்கும் அசோக் சிகாமணி, ஓய்வு பெற்ற தமிழ்நாடு கிரிக்கெட் வீரர்களுக்கு மாதம்தோறும் 10,000 வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். அவர்கள் தமிழ்நாடு அணிக்காக 10 முதல் 24 ஆட்டங்கள் விளையாடியிருக்க வேண்டுமென்பது இதற்கான தகுதி.
தமிழ்நாடு, இந்திய அணிக்காக விளையாட வேண்டுமென்ற கனவுடன் இருந்து, சில காரணங்களால் அவ்வாய்ப்பைத் தவறவிட்டவர்கள் இருப்பார்கள். அது போன்ற நலிந்த வீரர்கள் அடையாளம் காணப்பட வேண்டும். அவர்களுக்கு இந்த நிதியுதவியை வழங்க வேண்டும்.
மேலும் படிக்க: கண்ணியமான கிரிக்கெட் ஆட்டத்தில் முறையற்ற விளையாட்டு ஏன்?
அதே போல, மாவட்ட அளவில் நல்ல வீரர்கள் அடையாளம் காணப்பட்டு தேர்வு செய்யப்படுவார்கள் என்று அசோக் சிகாமணி அறிவித்திருக்கிறார். அது நல்ல விஷயம். கிராமப்புற வீரர்களுக்கு இது நல்ல வாய்ப்பு. ஏனென்றால், டிஎன்பிஎல் வந்தபிறகுதான் கிராமங்களில் இருந்து வர ஆரம்பித்திருக்கின்றனர்.
மகளிர் கிரிக்கெட் மேம்படவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நிரஞ்சனா, கிருஷ் காமினி, ஹேமலதா என்று இப்போது இந்திய அணிக்காக விளையாடும் வீராங்கனைகள் தமிழ்நாடு அணியைச் சேர்ந்தவர்களே.
சீனிவாசன் ஆதரவு இருந்ததாலேயே, சச்சின் தவிர்த்துச் சில மூத்த வீரர்களை அணியில் இருந்து ஒதுக்கி ரெய்னா, ரோகித், கோஹ்லி போன்ற இளம் வீரர்களைக் கொண்டுவந்தார் தோனி.
புதிய நிர்வாகத்தின் கீழ் தமிழ்நாடு அணி ரஞ்சிக் கோப்பையை வெல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்படும்; தமிழ்நாட்டில் நிறைய கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் என்றிருக்கிறார். மாநில அளவில் அசோக் சிகாமணிக்கு பெரிய எதிர்ப்புகள் இருக்காது. அதேநேரத்தில், பிசிசிஐ உடன் ஜெய்ஷா உடன் சுமூக உறவை எவ்வாறு கையாளப் போகிறார் என்பதைப் பொறுத்தே இவையெல்லாம் செயல்பாட்டுக்கு வரும்.
அரசியல் ஆதிக்கம் அகலுமா
தற்போது, ஒரேநாளில் வழக்கையும் தேர்தல் மனுவையும் எதிரணி வாபஸ் பெற்றதன் மூலமாக டிஎன்சிஏவில் அரசியல் ஆதிக்கம் இருப்பது தெரிய வந்திருக்கிறது; இதே போன்ற அரசியல் ஆதிக்கத்தை தேசிய அளவில் சீனிவாசன் & கோ எப்படி எதிர்கொள்ளவிருக்கிறது என்பதையும் பார்க்கப் போகிறோம்.
அதேபோல, கடந்த பல ஆண்டுகளாகவே வீரர்கள் தேர்விலும் மாநில கிரிக்கெட் நிர்வாகத்திலும் சாதி ஆதிக்கம் இருப்பதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. சாதி அரசியலால் கீழ்மட்ட அளவிலேயே வேறு சாதிகளைச் சேர்ந்த வீரர்கள் வடிகட்டப்பட்டுள்ளனர். ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக இதுவே நடைமுறையாக உள்ளது. நடராஜன் போன்ற அபாரத் திறமையாளர்கள் மட்டுமே விதிவிலக்கு. அதை மாற்றி, தகுதியின் அடிப்படையில் மாநில அளவிலும் தேசிய அளவிலும் விளையாடும் நிலையை உருவாக்க வேண்டும். கிரிக்கெட் சங்க நிர்வாகத்திலும் இந்த நிலையை ஏற்படுத்த வேண்டும்.
அதை அசோக் சிகாமணி உருவாக்க முடியுமா என்பது கேள்வி. ஏனென்றால், சீனிவாசனின் முகாமில் இருந்து வந்தவர் என்ற அடையாளம் அவருக்கு இருக்கிறது!
Read in : English