Read in : English
தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்துக்குத் தடைவிதிக்கும் சட்டமொன்றை இயற்ற தமிழ்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி முதலான சூதாட்டங்களில் இளைஞர்கள் பலர் பணத்தை இழந்துள்ளனர்; பலர் உயிரையும் பறிகொடுத்துள்ளனர். இது தொடர்பாகத் தொடர்ந்து சமூக ஆர்வலர்கள் குரலெழுப்பி வந்தனர்.
ஆகவே, 2020 நவம்பர் 21 அன்று அப்போதைய அதிமுக அரசு, ஆன்லைன் ரம்மி, போக்கர் போன்ற சூதாட்ட விளையாட்டுகளைத் தடைசெய்யும் வகையிலான அவசரச் சட்டம் ஒன்றை இயற்றியது. ஆளுநரும் இந்தச் சட்டத்துக்கு ஒப்புதல் அளித்திருந்தார்.
இந்தத் தடைச் சட்டத்தை எதிராக ஆன்லைன் சூதாட்டத்தை நடத்தும் ஜிங்க்லி கேம்ஸ், ரீட் டிஜிட்டல், ப்ளே கேம்ஸ் ஆகிய நிறுவனங்கள், சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என வழக்குத் தொடுத்தன. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட சென்னை உயர்நீதிமன்றம், அவசரச் சட்டத்தை ரத்து செய்து தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்புக்கு எதிராகத் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருக்கிறது.
இதனிடையே 2021ஆம் ஆண்டில் திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதலே இத்தகைய ஆன்லைன் விளையாட்டைத் தடைசெய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தவண்ணம் உள்ளன. இத்தகைய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதால் ஆன்லைன் ரம்மி முதலான விளையாட்டுகளைத் தடைசெய்யும் வகையில் ஒரு வலிமையான சட்டத்தை இயற்றுவது தொடர்பான அறிவிப்பு 2022 ஜூன் 10 அன்று வெளியிடப்பட்டது.
2020 நவம்பர் 21 அன்று அப்போதைய அதிமுக அரசு, ஆன்லைன் ரம்மி, போக்கர் போன்ற சூதாட்ட விளையாட்டுகளைத் தடைசெய்யும் வகையிலான அவசரச் சட்டம் ஒன்றை இயற்றியது. ஆளுநரும் இந்தச் சட்டத்துக்கு ஒப்புதல் அளித்திருந்தார்
ஆன்லைன் ரம்மி விளையாட்டுத் தொடர்பான பாதிப்புகளைப் பற்றிய முழுவிவரங்களையும் அறிந்துகொள்ளும் பொருட்டு ஓய்வுபெற்ற நீதியரசர் கே.சந்துரு தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு தனது அறிக்கையை ஜூன் 27 அன்று அரசிடம் சமர்ப்பித்தது.
அதன் பின்னர் இத்தகைய ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பாக பள்ளிக்கல்வி துறை மூலம் ஒரு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது; கலந்தாலோசனைக் கூட்டமும் நடத்தப்பட்டது. இவை எல்லாவற்றின் அடிப்படையில் ஆகஸ்ட் 29 அன்று ஒரு வரைவுச் சட்டம் தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்டு விவாதிக்கப்பட்டது.
மேலும் படிக்க: போலீஸ் துறையில் உள்குத்து இருந்தும் லாட்டரி தடை எப்படி வந்தது
இந்தச் சட்டத்தில் சில திருத்தங்களை மேற்கொண்டு அந்தச் சட்டத்துக்குத் தமிழ்நாடு அமைச்சரவை 26.09.2022 அன்று ஒப்புதல் அளித்துள்ளது. ஆளுநரின் ஒப்புதல் பெற்றபின்னர் இது சட்டமாகும். இந்தச் சட்டம் அமலானால் ஆன்லைன் சூதாட்டம் தடைசெய்யப்படும், ஆன்லைன் விளையாட்டுகள் ஒழுங்குபடுத்தப்படும் எனத் தெரிகிறது.
இந்தச் சட்டம் தொடர்பான உரையாடல் சமூகத்தில் அதிகரித்துவருவதை ஒட்டி இன்னொரு விஷயமும் பலராலும் கவனிக்கப்படுகிறது. அது கிரிக்கெட் விளையாட்டின் அடிப்படையில் ஆன்லைனில் நடத்தப்படும் விளையாட்டுகளான ஃபேண்டஸி லீக், ட்ரீம் 11 போன்றவற்றின் மீது வெளிச்சம் பாய்ச்சுகிறது.
ஆன்லைன் ரம்மி, பப்ஜி, ஃப்ரீ ஃபயர் போன்ற ஆன்லைன் விளையாட்டுகள் எந்த அளவு அடிமைப்படுத்தும் தன்மை கொண்டவையோ அதே அளவு அடிமைப்படுத்தும் தன்மை கொண்டவையே ஃபேண்டஸி லீக், ட்ரீம் 11 போன்ற ஆன்லைன் கிரிக்கெட் விளையாட்டுகளும்.
கேம விளையாடுங்க கேஸ வின் பண்ணுங்க… என்று வெறும் விளையாட்டைப் போலவே இந்த விளையாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இந்த விளையாட்டுகளில் முதலில் ஒரு குழுவை உருவாக்கச் சொல்கிறார்கள். அந்தக் குழுவின் விளையாட்டுத் திறமையைப் பொறுத்து பணம் கிடைக்கும் என்று சொல்வார்கள். முதலில் சிறு தொகையைக் கட்டி விளையாடத் தொடங்கும் ஒரு கிரிக்கெட் ரசிகர் நாளாவட்டத்தில் இந்த விளையாட்டுக்கு அடிமையாகிவிடுவதைத் தவிர்க்க இயலாது.
ஃபேண்டஸி லீக், ட்ரீம் 11 போன்ற விளையாட்டுகள் ஒருவகையில் லாட்டரி டிக்கெட் போன்றவை. அதுவும் இவை சுரண்டல் லாட்டரி போன்றவை. இந்த விளையாட்டுகள் உங்களைச் சிறிது சிறிதாகப் பழக்கப்படுத்தி அடிமையாக்கும் தன்மை கொண்டவை என்பதுதான் இதில் மிகப் பெரிய ஆபத்து.
ஃபேண்டஸி லீக், ட்ரீம் 11 போன்ற விளையாட்டுகள் ஒருவகையில் லாட்டரி டிக்கெட் போன்றவை. அதுவும் இவை சுரண்டல் லாட்டரி போன்றவை. இந்த விளையாட்டுகள் உங்களைச் சிறிது சிறிதாகப் பழக்கப்படுத்தி அடிமையாக்கும் தன்மை கொண்டவை என்பதுதான் இதில் மிகப் பெரிய ஆபத்து
ஆன்லைன் ரம்மியை விமர்சிக்கும் பலர் ஆன்லைன் கிரிக்கெட் விளையாட்டுகளைச் சாமர்த்தியமாக மறைத்தோ மறந்தோவிடுகிறார்கள். ஏனெனில் கிரிக்கெட் விளையாட்டுகளில் நிறைய முதலீடுகள் உள்ளன; பெரிய நிறுவனங்களும் பெரிய மனிதர்களுக்கும் தொடர்பு உள்ளது.
ஃபேண்டஸி லீக், ட்ரீம் 11 போன்ற ஆன்லைன் விளையாட்டுகளில் தொடக்கத்தில் இது பொருளாதார இழப்பு கொண்டது உள்ளிட்ட எச்சரிக்கை வாசகம் எவையும் இடம்பெற்றிருக்கவில்லை. பின்னர், விளையாடுவோர் எண்ணிக்கை அதிகரித்தது; பொருளாதார இழப்புகள், உயிரிழப்புகள் போன்றவையும் ஏற்பட்டன; இது தொடர்பான சர்ச்சைகளும் விவாதங்களும் எழுந்தன. அதன் பின்னர்தான் அப்படியான எச்சரிக்கை வாசகங்கள் இடம்பெற்றன.
மேலும், இத்தகைய விளையாட்டுகளை நடத்தும் நிறுவனங்களின் விளம்பரங்களில் கிரிக்கெட் வீரர்களே நடிக்கிறார்கள். உதாரணமாக, ட்ரீம் 11 நிறுவனம், ஐபிஎல் நேரத்தில் தோனி போன்ற கிரிக்கெட் வீரர்கள் பலரையும் தனித்தனியாக நடிக்கவைத்து விளம்பரங்களை உருவாக்குவார்கள்; அவற்றை ஒளிபரப்புவார்கள். அதைப் பார்க்கும் ரசிகர்கள் ஏராளமானோர் இந்த ஆன்லைன் விளையாட்டை விளையாடத் தூண்டப்படுவார்கள். வீரர்களால் உந்துதல் பெற்ற ரசிகர்கள் பெரும்பான்மையாக விளையாடுவதால் இந்த நிறுவனங்கள் பெரிய அளவிலான வருமானத்தைப் பார்க்கின்றன.
மேலும் படிக்க: வர்த்தக நோக்கில் செயல்படும் ஐபிஎல் கிரிக்கெட்டின் மதிப்பை உயர்த்தும் சமூக சேவை!
துபாயில் ஐபிஎல் நடந்தபோது, நிகழ்ச்சி ஏற்பாட்டாளராக இருந்தது ட்ரீம் 11 நிறுவனம்தான்; இந்திய கிரிக்கெட் வாரியம் இதற்கு ஒத்துழைக்கிறது.
ஃபேண்டஸி லீக் விளம்பரத்தில் தோனி, சச்சின், கங்குலி போன்ற பல வீரர்கள் நடித்துள்ளனர். சூதாட்டம் என்பதை மிக சாமர்த்தியமாக மறைத்து கிரிக்கெட் செய்திகள் உள்ளிட்ட பல அம்சங்களையும் இந்தச் செயலியில் சேர்த்துக் கொடுக்கிறார்கள். மேலும், இவை திறமையை வைத்து ஆடப்படுகிறது என நம்பவைக்கிறார்கள். இது மிக ஆபத்தானது. இத்தகைய விளம்பரங்களில் கிரிக்கெட் வீரர்கள் நடிப்பதைக் குறித்து அவர்கள் பரிசீலனை செய்யலாம். அவர்கள் விளம்பரங்களில் நடித்தால்கூட, ரசிகர்கள் விழிப்புணர்வு பெற்று இந்த மாய வலையில் சிக்காமல் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டியுள்ளது.
கிரிக்கெட் வீரர் ராகுல் திராவிட் இப்படியான எந்த விளம்பரத்திலும் நடித்ததில்லை. இப்படி ஒவ்வொரு வீரரும் முடிவெடுப்பார்களா? இந்திய கிரிக்கெட் வாரியமும் இதை எந்தக் கேள்வியும் கேட்க இயலாது என்பதுதான் யதார்த்தம்.
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் தொண்ணூறுகளில் ஸ்பான்சர்களாக வில்ஸ் சிகரெட் நிறுவனம் இருந்தது. கிரிக்கெட் வீரர்களது டிஷர்ட்டை நினைவுபடுத்திப் பாருங்கள். இப்போது பைஜு என்னும் நிறுவன விளம்பரம் இருப்பது போல அப்போது அந்த டி ஷர்ட்களில் வில்ஸ் என இருந்தது உங்கள் ஞாபகத்துக்கு வரும். அது தொடர்பாக சர்ச்சைகள் எழுந்த பின்னர் இப்போது, அந்த நிறுவனம் கிரிக்கெட் விளையாட்டின் பக்கம் வருவதில்லை, இதே போல் பெப்ஸி, கோக் போன்ற குளிர்பானங்களையும் குறிப்பிடலாம். மக்கள் விழிப்புணர்வு ஏற்பட்ட பின்னர் இந்த நிறுவனங்கள் கிரிக்கெட் பக்கம் வரவில்லை என்னும் நிலை உருவாகியுள்ளது.
அப்படி இந்த ஆன்லைன் விளையாட்டுகளிலும் சமூகம் விழிப்புணர்வைப் பெற்றாக வேண்டும். ஆசை காட்டி மோசம் புரியும் ஆன்லைன் விளையாட்டுச் செயலிகள் பற்றிய கவனத்துடன் சிறுவர்களும் இளைஞர்களும் அதை அணுக குடும்பத்தினர் உதவ வேண்டும். மொபைல் விளையாட்டு என்னும் பழக்கத்திலிருந்து சிறுவர்களையும் இளைஞர்களையும் மீட்டெடுக்க மைதான விளையாட்டு உதவும். அது உடலுக்கும் மனதுக்கும் நல்லதாகவும் அமையும்.
ஆக்கப்பூர்வமான விளையாட்டு என்னும் அம்சத்தை அடிமைப்படுத்தும் நச்சாக மாற்றும் ஆன்லைன் விளையாட்டு மோகத்திலிருந்து இளைஞர்களை மீட்டெடுப்பதில் அரசின் ஆன்லைன் ரம்மி சூதாட்டத் தடைச் சட்டம் முதலடியே; போக வேண்டிய தொலைவோ மிக அதிகம்.
Read in : English