Site icon இன்மதி

வெள்ளம்: திசை மாறிய மழைக்கால அரசியல்!

Read in : English

வடகிழக்குப் பருவமழை தொடங்கிய நிலையில் சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் நீர் தேங்கவில்லை என்பது இந்த நூற்றாண்டின் அதிசயங்களில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. இந்த சூழலை எதிர்பார்க்காத எதிர்க்கட்சியான அதிமுக சில பகுதிகளில் நீர் தேங்கியுள்ளதை சுட்டிக்காட்டியதோடு, திமுக அரசு வேகமாக நிறைவேற்றிவரும் மழைநீர் வடிகால் திட்டத்தின் பெரும்பகுதியைத் தங்கள் ஆட்சியில் முடித்துவிட்டதாலேயே மழைநீர் தேங்கவில்லை என்றும் மார்தட்டுகிறது. மெதுவாக ‘வெள்ள நிவாரண அரசியல்’ பக்கமாகவும் கவனத்தைத் திருப்பியுள்ளது.

‘புணரி பொருத பூமணல் அடைகரை’ என்று நற்றிணை காட்டும் நெய்தல் நிலங்களில் சென்னையும் ஒன்று. அலைகள் மோதும் பூப்போன்ற மணல் நிறைந்த கடற்கரை நிலமான சென்னையின் பெரும்பாலான இடங்கள் மழை பெய்தால் வெள்ளக்காடாக மாறிவிடும். சாலைகள் குடியிருப்புகள் குளங்களாகக் காட்சி தரும். இதைத் தொடர்ந்து, இந்த நிலைக்கு ஆளுங்கட்சியே காரணம் என்று எதிர்க்கட்சிகள் களத்தில் இறங்குவதும் நிவாரணம் வழங்குவதில் ஒன்றுடன் ஒன்று போட்டி போடுவதும் வழக்கமான அரசியல் காட்சிகள்.

பொதுவாக, வெள்ள பாதிப்புகள் குறித்து ஆளுங்கட்சி கடும் விமர்சனங்களை எதிர்கொள்வதால் முதல் சுற்றில் எதிர்க்கட்சிகள் வெற்றிபெறும். இருந்தாலும், மக்களின் கோபத்தைத் தணித்து அவர்களின் ஆதரவைப் பெறும் விதமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தாராளமாக பணம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை நிவாரணமாக வழங்கி இரண்டாவது சுற்றில் ஆளுங்கட்சி வாகை சூடும்.

ஆனால், இந்த முறை வழக்கமான காட்சிகள் இல்லை. கடந்த 18 மாதங்களாக ஆளும் திமுக அரசு மேற்கொண்ட மழைநீர் வடிகால் பணிகளால் தெற்கு மற்றும் மத்தியச் சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் தேங்கவில்லை. நவம்பர் 1 ஆம் தேதி நகரில் 10 முதல் 13 செமீ மழை பெய்தது; கடந்த ஆண்டு 167 இடங்களில் வெள்ளம் ஏற்பட்டதுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு 50 இடங்களில் வெள்ளம் சூழ்ந்திருந்தது. மூத்த அமைச்சர்களின் மேற்பார்வையில் அதிகாரிகளால் விரைவாக அவ்வெள்ளம் வடிய வைக்கப்பட்டது.

முதல்வர் மு.க.ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியை முதல் நாளிலேயே கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக்கொண்டு எதிர்க்கட்சிகள் கண்காணித்துக் கொண்டிருந்தன. ஆனால், வழக்கமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் சாலைகளில் கூட இந்த முறை எந்த பாதிப்பும் இல்லை

முதல்வர் மு.க.ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியை முதல் நாளிலேயே கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக்கொண்டு எதிர்க்கட்சிகள் கண்காணித்துக் கொண்டிருந்தன. ஆனால், வழக்கமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் சாலைகளில் கூட இந்த முறை எந்த பாதிப்பும் இல்லை. இருப்பினும், இரண்டாம் நாளில் சில பகுதிகளில் நீர் தேங்கியிருந்தது எதிர்க்கட்சிகளுக்கு ஆறுதலை அளித்தது.

முதல்வர் தொகுதியின் சில பகுதிகள் தண்ணீரில் மூழ்கியிருப்பதை நகராட்சி நிர்வாக அமைச்சர் கே.என்.நேருவும் ஏற்றுக்கொண்டார். எதிர்க்கட்சி ஊடகங்களில் பணிபுரியும் புகைப்பட பத்திரிக்கையாளர்களின் வேலை இந்த முறை சற்று கடினமாகவே இருந்தது. வழக்கமாக நீர் தேங்கும் இடங்களுக்குச் சென்றவர்களுக்கு பெரும் ஏமாற்றம் காத்திருந்தது. நீர் தேங்கியுள்ள இடங்களைக் கண்டறிய பெரிதும் அலைய வேண்டிய சூழல் உருவானது.

மேலும் படிக்க:பருவமழை: காக்குமா மழைநீர் வடிகால் திட்டம்?

தென் சென்னையிலும் மத்தியச் சென்னையிலும் நீர் தேங்காத நிலையில் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்; வடசென்னையின் சில பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்திருந்தது. ஆனால், இதற்கு முன்னர் இருந்ததைவிட இந்த ஆண்டு மிகவும் வெள்ளம் குறைவாக இருக்கிறது என்று அம்மக்கள் அரசைப் பாராட்டியதோடு, அடுத்த ஆண்டு இந்த பாதிப்பும் கூட இருக்காது என்று நம்பிக்கையை வெளிப்படுத்தினர்.

அடையாறு ஆற்றின் கரையோரமாக இருக்கும் தாம்பரம், பெருங்களத்தூர், முடிச்சூர், மண்ணிவாக்கம், மணிமங்கலம், வரதராஜபுரம் ஆகிய பகுதிகளில் ஆற்றுக்குத் தண்ணீர் செல்வதைத் தடுக்கும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதால், இம்முறை வெள்ள பாதிப்புகள் பெரிதாக இல்லை. ஆக்கிரமிப்புகளை இடித்து ஆற்றின் படுகையே விரிவுபடுத்தப்பட்டு, கரைகள் உயர்த்தப்பட்டு பலப்படுத்தப்பட்டிருந்தன.

பெரிய வெள்ளமோ நீர் தேங்கும் நிலையோ இந்த ஆண்டு இல்லாத சூழலில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி முதல் மூன்று நாட்கள் கழித்தே தனது அறிக்கையை வெளியிட்டார். மழைநீரை வெளியேற்ற முந்தைய அதிமுக ஆட்சி எதுவும் செய்யவில்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டிய பின்னர்தான் அந்த அறிக்கையும் வெளிவந்தது.

அதேநேரத்தில், வெள்ளத்தைத் தடுக்கத் தவறியதற்காக அரசைக் குற்றம் சாட்டும் வழக்கமான அறிக்கையாக அது இல்லை. அதற்கு மாறாக, தலைநகரில் மழைநீர் வடிகால் பணிகளுக்கு பழனிசாமி உரிமை கோரினார். அதிமுக அரசால் திட்டமிட்டு பணிகள் தொடங்கப்பட்ட இத்திட்டத்தை நிறைவேற்றிய பெருமையை திமுக தட்டிச்செல்வதாக வேதனை தெரிவித்தார்.

1996ம் ஆண்டு சென்னை மேயராக இருந்த ஸ்டாலின், நகரை அழகுபடுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார். மேயராகவும் உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் ஸ்டாலின் இருந்தபோது மழைநீர் வடிகால்களை அமைத்திருந்தால், அதிமுகவுக்கு இந்தப் பணிகளைச் செய்ய வேண்டிய தேவையே இருந்திருக்காது என்று கூறினார் பழனிசாமி. அதிமுக ஆட்சியில்தான் பெரும்பாலான வடிகால் பணிகள் முடிக்கப்பட்டன என்றும், ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அப்பணிகள் நிறுத்தப்பட்டதால் மட்டுமே கடந்த ஆண்டு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது என்றும் கூறினார்.

வெள்ளத்தைத் தடுக்கத் தவறியதற்காக அரசைக் குற்றம் சாட்டும் வழக்கமான அறிக்கையாக அது இல்லை. அதற்கு மாறாக, தலைநகரில் மழைநீர் வடிகால் பணிகளுக்கு பழனிசாமி உரிமை கோரினார்

அடையாறு மற்றும் கூவம் பகுதிகளில் அதிமுக ஆட்சியில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மண் அகற்றும் பணிகளால் இந்த ஆண்டு அருகில் உள்ள பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படவில்லை. அதிமுக அரசு பம்ப் செட் அமைத்து தண்ணீரை வெளியேற்றியதால் சுரங்கப்பாதைகளில் வெள்ளம் தவிர்க்கப்பட்டது என்றும் பழனிசாமி சொன்னார்.

இந்தப் பிரச்சினை பற்றிப் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெள்ள நிவாரணப் பணிகளில் திமுக அரசு கவனம் செலுத்தவில்லை என்று அடுத்தகட்டத்துக்குச் சென்றார். வடசென்னையில் பாதிக்கப்பட்ட பகுதி ஒன்றில் சிக்கன் பிரியாணியை மக்களுக்கு வழங்கிப் பேசிய ஜெயக்குமார், ’திமுக அரசு நிவாரணப் பணிகளை தொடங்கவில்லை.

உணவுகூடத் தரவில்லை’ என்றார். அவரைத் தொடர்ந்து, வடசென்னையின் பல இடங்களில் அதிமுக நிர்வாகிகள் பொதுமக்களுக்கு உணவு விநியோகம் செய்து வருகின்றனர். வெள்ள நிவாரணப் பணிகளில் வழக்கமாக தீவிரம் காட்டும் திமுகவினர் பாதிப்பு பெருமளவு இல்லாததால் இந்தமுறை அமைதியாக உள்ளனர்.

மேலும் படிக்க: அடுத்த மழை வெள்ளம் வருவதற்கு, இன்னும் 5 மாதங்கள்தான்: விரைவில் செயல்படுமா அரசு?

அறுபதுகளில் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசுப் பள்ளிகளிலும், அரசுக் கட்டிடங்களிலும் தங்குமிடம் வழங்கியது, அவர்களுக்கு கோதுமை கஞ்சி, உப்புமா போன்ற எளிய உணவுகள் வழங்கப்பட்டன. 1977ல் நாகப்பட்டினம் மாவட்டம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது, முதல்வராக இருந்த எம்.ஜி.ராமச்சந்திரன் டெல்டா மாவட்ட மக்களுக்கு 50 கிலோ அரிசியும் நூறு ரூபாய் பணமும் வழங்கினார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னையின் பல பகுதிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.

சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்களுக்கு வழங்கப்படும் பண இழப்பீட்டை முன்னாள் முதல்வர் உயர்த்தி வழங்கினார். 2015ல் குடிசைவாசிகளுக்கு 10,000 ரூபாயும் ஏனைய மக்களுக்கு 5,000 ரூபாயும் தரப்பட்டது. முன்னாள் முதல்வர் பழனிசாமியும் பாதிக்கப்பட்ட இடங்களில் குடியிருந்த மக்களுக்கு 5,000 ரூபாய் வழங்கினார்.இந்த நிவாரண உதவி 2021 சட்டமன்றத் தேர்தலில் மக்களின் ஆதரவைப் பெற அவருக்கு உதவியது.

கடந்த ஆண்டு விநியோகிக்கப்பட்ட நிவாரணப் பொருட்களில் சிக்கன் பிரியாணி, காய்கறி பிரியாணி, சாம்பார், எலுமிச்சை, தக்காளி சோறு, அரிசி, ரொட்டி பாக்கெட்டுகள், பால், படுக்கை விரிப்புகள், பருப்பு சமையல் எண்ணெய் போன்ற பொருட்கள் அடங்கும். அரை நூற்றாண்டுக்கு முன் கோதுமை உப்புமாவில் தொடங்கிய வெள்ள நிவாரணம் இன்று சிக்கன் பிரியாணி வரை வந்துள்ளது.

Share the Article

Read in : English

Exit mobile version