Site icon இன்மதி

பருவமழை: காக்குமா மழைநீர் வடிகால் திட்டம்?

Read in : English

இந்திய வானிலைத் துறை அறிவிப்பின்படி வடகிழக்குப் பருவகாலம் ஆரம்பமாகிவிட்டது. அக்டோபர் 31 முதல் நவம்பர் 3 வரை தமிழ்நாடு முழுவதும் கனத்த மழை அல்லது மிகவும் கனத்த மழை பெய்யும் என்னும் கணிப்பை வானிலைத் துறை வெளியிட்டிருக்கிறது. திமுக அரசின் ஆகப்பெரும் மழைநீர் வடிகால் திட்டம் எப்படி வேலை செய்கிறது என்பதை அறிந்துகொள்ளும் முதல் வாய்ப்பு சென்னைக்குக் கிடைத்திருக்கிறது.

வடகிழக்குப் பருவத்தின் முதன்மழை திங்கள் இரவு (31.10.22) அன்று பெய்து சென்னையில் சில பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டது என்று ஊடகச் செய்திகள் சொன்னது. மற்ற இடங்களில் உருவாக்கப்பட்ட புதிய வடிகால் அமைப்பு கனமழைக்குத் தாக்குப்பிடித்திருக்கிறது. நுங்கம்பாக்கம் வானிலை கண்காணிப்புப் பகுதியில் செவ்வாய்க் கிழமை காலை 8.30 வரை 8 செமீ மழை பதிவாகியிருக்கிறது. கடந்த வருடம் பாதிக்கப்பட்ட கோடம்பாக்கம் போன்ற ஏரியாக்கள் இந்த வருடம் அவ்வளவாகப் பாதிக்கப்படவில்லை. ஆனால் விஸ்வநாதபுரம் முதல் தெருவில் சில பழைய கட்டிடங்களில் மெட்ரோவாட்டர் சம்புகள் மாசுபட்டுவிட்டன.

மேற்கு மாம்பலத்தில் புதிய மழைநீர் வடிகால்கள் ஆர்ய கெளடா சாலையையும், தபால்தந்தி காலனியையும் நல்ல நிலைமையில் வைத்திருந்தன. ஆனால் மூர்த்தி தெரு, மாம்பலம் ரயில் நிலையத்திற்கருகே இருக்கும் பாபு ராஜேந்திர பிரசாத் போன்ற ஏரியாக்களில் அப்படி இல்லை.

மாநகரத்தில் பல பகுதிகளில் நீர் தேங்கிக் கிடந்தது என்று செய்திகள் கூறுகின்றன. ஆனால் தேங்கிக் கிடந்த நீர் செவ்வாய்க்கிழமை காலையில் மழை நின்றவுடன் வடிந்துவிட்டது. தண்ணீர் தேங்கிக் கிடப்பதைப் பற்றி புகார் தெரிவிக்க மக்கள் இரண்டு முதல் நான்கு மணி நேரம் வரை காத்திருக்க வேண்டும் என்று பெருநகர சென்னை மாநகராட்சி கூறியிருக்கிறது.

2021-ஆம் ஆண்டு பருவகாலம் அதிமுக்கியமான ஒன்றாக மாறிப் போனது. அப்போது சென்னையின் பெரும்பாலான கிடைமட்ட நிலப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின

செங்குன்றத்தில் 13 செமீ மழையும், பெரம்பூரில் 12 செமீ, அயனாவரத்தில் 9 செமீ, டிஜிபி அலுவலக ஏரியா, எம்ஜியார் நகர் மற்றும் நந்தனத்தில் 7 செமீ மழையும் பதிவாகியுள்ளன.

சென்னைக்கும், தமிழ் நாட்டின் மற்ற பகுதிகளுக்குமான அக்டோபர் 31 வானிலை ஆருடம் இப்படிச் சொன்னது: “கனமழையும், மிக கனமழையும் காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் தனித்த இடங்களில் பெய்யும். சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் கனமழை பெய்யக்கூடும்.” நவம்பர் 3 அன்று மழை இருக்காது என்றாலும், அடுத்த சில நாட்களில் சென்னையில் கனமழை பெய்யும் என்று ஆருடம் சொல்கிறது.

மேலும் படிக்க: மழைநீர் வடிகால் பள்ளங்கள் பலிபீடங்களா?

2021-ஆம் ஆண்டு பருவகாலம் அதிமுக்கியமான ஒன்றாக மாறிப் போனது. அப்போது சென்னையின் பெரும்பாலான கிடைமட்ட நிலப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. அந்தாண்டு நவம்பர் 7 அன்று சென்னையில் அதிகமான கனமழை பெய்தது. மைலாப்பூர் டிஜிபி அலுவலக ஏரியாவில் 23 செ.மீ. மழையும், நுங்கம்பாக்கம், அம்பத்தூர் பகுதிகளில் தலா 21 செ.மீ மழையும் பதிவாகின. மற்ற பகுதிகளில் 11 முதல் 18 செ.மீ. வரை மழை பதிவானது.

இந்தப் பகுதிகள் மழைநீர் வடிகால் கட்டமைப்பின் திறனுக்குச் சோதனைக் களங்களாகும். 2021-ஆம் ஆண்டு வெள்ளத்திற்குப் பின்னர், தி.நகர் மற்றும் மேற்கு மாம்பலம் போன்ற பகுதிகளில் தரைத்தள வீடுகளின் மதிப்பு குறைந்து போனது. இந்தப் பகுதிகளில் அவற்றின் விலை சதுர அடிக்கு ரூ.13,000 முதல் ரூ. 15,000 வரை இருந்தது. வெள்ளம் பெருக்கெடுத்தோடிய போது மக்கள் ஓட்டல்களில் தஞ்சம் புகுந்தனர். வார்டு எண் 134 (மேற்கு மாம்பலம்) கவுன்சிலர் உமா ஆனந்தன் திமுக அரசின் மிகப்பெரும் மழைநீர் வடிகால் திட்டத்தைப் புகழ்ந்து பேசியது ஆச்சரியமில்லை.

வடிகால் வடிவமைப்பும் தரமும்
திமுக அரசின் படுவேகமான வடிகால் திட்டம் எப்படி அளந்து பார்த்தாலும் அசாதாரணமானதுதான். அரை பில்லியன் டாலர் மதிப்புள்ள நிதியை ஒதுக்கி ஐஐடி-மெட்ராஸ் நிபுணர்களை வரவழைத்து நீர்ப்போக்கை மதிப்பீடு செய்து, பருவகாலம் வருவதற்கு முன்பே புதிய மழைநீர் வடிகால்களை உருவாக்க ஒப்பந்தங்கள் வழங்கியது அரசு. திட்டத்தின் சில வேலைகள் இந்தாண்டு முடியும் வாய்ப்பு இல்லை; அவை மேலும் தொடரும். அரசுக்கு ஆலோசனை சொல்லும் திருப்புகழ்க் குழு தனது பணியைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது.

ஆனால் தனியார் ஒப்பந்தக்காரர்களின் மோசமான செயலாக்கங்கள் மாநகரை முடக்கி திட்டத்தைக் கவிழ்த்துவிட்டன. ஈக்காட்டுத்தாங்கலில் பத்திரிகையாளர் முத்துகிருஷ்ணன் இறந்ததாலும், மாநில நெடுஞ்சாலைத் துறையின் மோசமான கண்காணிப்பில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்றதாலும், பணிமுடிவுறாத எல்லா வடிகால்களும் தடுப்புகளால் மூடப்பட்டதாக பெருநகர சென்னை மாநகராட்சி அக்டோபர் 30 அன்று அறிவித்தது.

ஆயத்த (பிரிஃபாப்ரிகேட்டட்) வடிகால்களைப் பயன்படுத்தியிருந்தால், திட்டம் படுவேகமாகவும் தரமாகவும் நிறைவேறியிருக்கும். ஒப்பந்தக்காரர்களின் திறனில் இருக்கும் சீர்குலைவு சரிசெய்யப்பட்டிருக்கும்.

சென்னையின் பல இடங்களில் ஒப்பந்தக்காரர்கள் தரத்தைப் பலிகொடுத்து விட்டார்கள். அவர்கள் நிறைய களிமண்ணை வடிகால் கட்டமைப்புக் களங்களில் கொட்டிவிட்டதால், பருவகாலத்திற்கு முந்திய மழையில் அந்தக் களிமண் குவியல்கள் புதிய வடிகால்களில் ஏற்கனவே கலந்து மிதக்க ஆரம்பித்து விட்டன. வடிகால்களை முழுத்திறனோடு கட்டிமுடித்து எந்தக் கட்டுமானக் கழிவுகள் இல்லாமல் ஒப்படைக்க வேண்டும் என்ற விதி ஏதும் இல்லை.

திமுக அரசின் படுவேகமான வடிகால் திட்டம் எப்படி அளந்து பார்த்தாலும் அசாதாரணமானதுதான். அரை பில்லியன் டாலர் மதிப்புள்ள நிதியை ஒதுக்கி ஐஐடி-மெட்ராஸ் நிபுணர்களை வரவழைத்து நீர்ப்போக்கை மதிப்பீடு செய்து, பருவகாலம் வருவதற்கு முன்பே புதிய மழைநீர் வடிகால்களை உருவாக்க ஒப்பந்தங்கள் வழங்கியது அரசு

புதிய மழைநீர் வடிகால்களுக்குள் நுழையும் சாலை சமதள மட்டத்தின் கோணங்களை முன்பைவிட பெரி்தாக வடிவமைத்திருந்தது ஐஐடி. கே.கே.நகரில் ராமசாமி சாலை மற்றும் லட்சுமண சாலை ஆகியவற்றில் தவறான முறைகள் பயன்படுத்தப்படுகின்றன என்று ஊடகச் செய்திகள் சொன்ன பின்பு, ஐஐடி கொடுத்த வடிகால் வடிவமைப்பு மாதிரியைக் கடைப்பிடிக்குமாறு ஐஐடி மாநராட்சியைக் கேட்டுக் கொண்டது. மழைநீர் தேங்காமல் புவியீர்ப்புச் சக்தியால் வெளியேறி வடிகால்களுக்குள் கலக்கும் வண்ணம் சமதளத்தின் சரிவுக் கோணங்களை வடிவமைத்திருந்தது ஐஐடி.

இந்த அம்சங்களை சென்னை மாநகராட்சி விளக்கவில்லை. ஆனால் தனது ஊழியர்களை புதிய வடிகால்களின் திறனை மழைநாட்களில் படங்களோடு விளக்குமாறு மாநகராட்சி கேட்டுக் கொண்டிருக்கிறது.

மேலும் படிக்க: மத்திய சர்வே அறிக்கை: கட்டடக் கழிவுகளால் மாநகரங்கள் இழந்து போன வாய்ப்புகள்

சுத்தப்படுத்துவதற்கான செலவுகள் அதிகரித்துவிட்டதா?
தரங்களில் கவனம் செலுத்தவில்லை என்றால் அது நீண்டகாலம், மற்றும் குறுகிய காலத்தில் பாதிப்பை உண்டாக்கும். 2021-க்குப் பின்பு சென்னை மாநகராட்சி சில வடிகால்களைச் சுத்தம் செய்ய ரூ.70 கோடி ஒதுக்கீடு செய்ததாகச் சொல்லப்படுகிறது. மழைநீரை உள்வாங்கும் உலோக அரிப்புகளிலும் சிமிண்ட் உள்பாதைகளிலும் கட்டுமானக் கழிவுகள் நுழைவதைத் தடுத்துவிட்டால் சுத்தப்படுத்தும் செலவு மிச்சமாகும். நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தின் காலஅளவு நீட்டிக்கப்பட்டிருப்பதால், சென்னை மாநகர சபை அதன் பயனாளிகளை மழைநீர் வடிகால்களின் பராமரிப்புக்குப் பயன்படுத்தலாம்.

சென்னையின் பலபகுதிகளில் ஒழுங்குப்படுத்தாத சாலை ஓரங்களின் குப்பைகளும், ஒப்பந்தக்காரர்கள் கொட்டும் மணலும் மழைநீர் வடிகால்களில் நுழைந்துவிட்டபடியால், வடிகால்கள் சரியான பயன்பாட்டுக்கு வருமுன்னே பிரச்சினைகள் உருவாகி விடுகின்றன. கோடம்பாக்கம் போன்ற பெரிய பகுதிகளில் மழைநீர் வடிகால்களின் உட்பகுதிகளில் நடைபெறும் பணிகள் இன்னும் முற்றுப்பெறவில்லை.

சில மழைநீர் வடிகால்களில் பருவகாலத்திற்கு முந்திய மழையால் நீர் தேங்கிக் கிடக்கிறது. உடனடியாக அவற்றை ஆய்வு செய்ய வேண்டிய கடமை மாநகராட்சிக்கு இருக்கிறது. குறிப்பிட்ட காலம் தாண்டியும் நீர் தேங்கிக் கிடந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும், ஒப்பந்தக்காரர்களையும் மாநகராட்சி விசாரிக்கும் என்று நம்பப்படுகிறது. இதைத் தலைமைச் செயலர் இறையன்பு தாம்பரம் மற்றும் ஆவடி மாநகராட்சிப் பகுதிகளில் மழைநீர் வடிகால்களை ஆய்வு செய்யும் போது அதிகாரிகளிடம் தெளிவாக எடுத்துரைத்தார். சென்னையில் உள்ள 20 வாகனச் சுரங்கப்பாதைகளும் மற்றும் 30 கால்வாய்களும் கவனிக்கப்பட வேண்டும்.

மழைநீர் வடிகால் திட்டத்தின் வெற்றி பருவகால மழைநீரை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்பதைப் பொறுத்து மதிப்பீடு செய்யப்படும். அங்கொன்றும் இங்கொன்றுமான நுட்பமான வேலைகள் மட்டுமே செய்யப்பட்டால், பல ஏரியாக்கள் மழையில் மூழ்கிவிடலாம். அப்போது மழைநீர் கெட்டுப் போய்விடும். அதைச் சேகரிக்கவும் முடியாது.

Share the Article

Read in : English

Exit mobile version