Read in : English
உடையார்பாளையத்தில் 19 கலைப்பொருட்களைத் திருடி வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்தார் என்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நவம்பர் 1, 2022 அன்று சுபாஷ் கபூருக்கு பத்தாண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்திருக்கிறது கும்பகோணம் நீதிமன்றம்.
அமெரிக்காவில் ’ஆர்ட் ஆஃப் பாஸ்ட்’ என்ற கலைக்கூடத்தை நடத்தி வந்தவர் சுபாஷ் கபூர். 2011 அக்டோபரில் ஜெர்மனி விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டார்; அவர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்திய அரசு கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில் 2012, ஜூலை 14 அன்று அவரை இந்தியாவிடம் ஒப்படைத்தது ஜெர்மனி.
தமிழ்நாட்டில் சோழர் காலத்துச் சிலைகள் உட்பட சுமார் 143 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயிரக்கணக்கான கலைப்பொருட்களைத் திருடி விற்ற, சிலைக்கடத்தல் செய்து வந்த இந்திய அமெரிக்கரான கபூர் கடந்த பத்தாண்டுகளாகத் திருச்சி சிறையில் அடைபட்டுக் கிடக்கிறார்.
சுபாஷ் கபூரின் கைது நடவடிக்கையிலும், திருடப்பட்ட இந்திய கலைப்பொருட்களை மீட்டெடுக்கும் தொண்டிலும் ஈடுபட்டிருக்கும் ’இந்தியா பிரைட் பிராஜெக்ட்’ என்னும் கலை ஆர்வலர்களின் தன்னார்வ நிறுவனத்தின் இணை நிறுவனரான எஸ்.விஜயகுமார் இன்மதியிடம் தன் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். 2018ல் எழுதிய ‘சிலைத்திருடன்’ என்னும் ஆங்கிலப் புத்தகத்தில் கலைப்பொருள் திருடர்களையும் தொன்மை வாய்ந்த இந்தியச் சிலைகளைத் தேடிக் கண்டுபிடித்த அனுபவங்களையும் பதிவு செய்திருக்கிறார்.
கப்பல் தொழிலில் ஈடுபட்டு பின்னர் கலைப்பொருள் மீட்பாளராக மாறிய விஜயகுமார் கபூருக்குக் கொடுக்கப்பட்ட தண்டனையைப் பற்றி என்ன நினைக்கிறார்?
தமிழ்நாட்டில் சோழர் காலத்துச் சிலைகள் உட்பட சுமார் 143 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயிரக்கணக்கான கலைப்பொருட்களைத் திருடி விற்கும் தொழிலைச் செய்துவந்த இந்திய அமெரிக்கரான சுபாஷ் கபூர் கடந்த பத்தாண்டுகளாகத் திருச்சி சிறையில் அடைபட்டுக் கிடக்கிறார்
அதை வரவேற்ற விஜயகுமார் ’இது தங்கள் நிறுவனத்தின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த ஓர் அடையாள வெற்றி’ என்றார். “ஆனாலும் இது ஒரு துளி மட்டுந்தான். கபூர் கடத்திய கலைப்பொருட்கள் இன்னும் அதிகமிருக்கின்றன. இன்னும் பல வழக்குகள் இருக்கின்றன. கபூரின் இந்த தண்டனைக்குப் பின்னால் ஜெர்மனி அரசின் அழுத்தம் இருக்கிறது” என்றார் விஜயகுமார்.
“பொதுவாகக் கலைப்பொருள் கடத்தல் வழக்கில் மாட்டிக் கொள்பவர்கள் அடிமட்டத்துக் குற்றவாளிகள்தான். பெரிய மனிதர்கள் மாட்டிக் கொள்வதில்லை. கபூர் வழக்கு அதை மாற்றிவிட்டது. 62 வயதில் சிறைக்குச் சென்றவர் பத்தாண்டுகளாக கைதியாகவே இருக்கிறார் என்பதும், இப்போது அதிகாரப்பூர்வமான குற்றவாளியாகி விட்டார் என்பதும் கலைப்பொருள் கடத்தலுக்கு எதிரான யுத்தத்திற்குக் கிடைத்த வெற்றி” என்று தெரிவித்தார் விஜயகுமார்.
“வழக்கு பத்தாண்டாக இழுவையிலே நடந்திருக்கிறது. அதற்கு முக்கியக் காரணம் கலைப்பொருள் திருட்டுக்கென்று தனியாகச் சட்டங்கள் இல்லை. வீடு புகுந்து கொள்ளையடிக்கும் திருட்டுக்கான சட்டத்தில் கீழ்தான் கலைப்பொருள் திருட்டு வழக்கும் பதிவு செய்யப்படுகிறது. அதனால், 1993ல் தமிழ்நாட்டில் திருட்டு சம்பந்தமான சட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டுவரப்பட்டு கலைப்பொருள் திருட்டும் அதில் சேர்க்கப்பட்டது. ஆனால் நடைமுறையில் அப்படியொரு சட்டத்திருத்தம் இருப்பது போல காவல்துறை செயல்பட்டதாகத் தெரியவில்லை” என்றார்.
மேலும் படிக்க: சிலைக் கடத்தலின் பின்னணியில் பெரும் புள்ளிகள்: அம்பலப்படுத்த தயாராகும் ‘சிலை திருடர்’ புத்தகம்
சுபாஷ் கபூரின் தந்திரங்கள் பற்றிப் பேசும்போது விஜயகுமார் ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டுப் பேசினார். “இண்டர்போல் பிடியில் சிக்கிக்கொண்ட கபூர் தன் காதலி மூலம் சகோதரிக்கு ஒரு குறிப்பை அனுப்பினார். தனது வீட்டு பீரோவில் நான்கு இந்திய வெண்கலச் சிலைகள் (பார்வதி, பரமேஸ்வரன் சிலைகள்) இருப்பதாகவும் அவற்றை மறைத்து வைக்கும்படியும் அதில் எழுதியிருந்தார். பின்பு அமெரிக்க நீதிமன்றத்தில் கபூர் சகோதரி சுஷ்மா சரீன் மீது வழக்கு பதியப்பட்டது. ஆனால், இறுதியில் அந்தப் பெண்மணி வெறும் 10,000 டாலர் பிணையில் வெளிவந்துவிட்டார். தமிழ்நாட்டில் சுத்தமல்லி கிராமத்தில் வரதராஜப் பெருமாள் கோயிலில் 2008 பிப்ரவரியில் திருடப்பட்ட 14 சிலைகளில் அந்த நான்கு வெண்கலச் சிலைகளும் அடக்கம்.
இப்படிப் பல்வேறு சிலைக்கடத்தல் வழக்குகள் ஆதாரமின்றி முடிந்து போயிருக்கின்றன” என்று வருத்தத்துடன் தெரிவித்தார் விஜயகுமார்.
“ராஜஸ்தானில் சுபாஷ் கபூர் போலவே சிலைக் கடத்தல்காரர் ஒருவர் 10,000 சிலைகளைக் கடத்தியிருந்தார். ஆனால், ஆதாரம் இல்லை என்பதால் அவரை வழக்கிலிருந்து விடுவித்தது அந்த மாநிலத்து உயர்நீதி மன்றம்.
ஆந்திரா, கர்நாடகம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் சிலைக் கடத்தல் வழக்குகளில் மிகக்கடுமையாகப் புலன்விசாரணை செய்வதில்லை. அதனால் ஏராளமான சிலைகளும் இந்திய பாரம்பரிய கலைப் பொருட்களும் வெளிநாட்டில் தேங்கிக் கிடக்கின்றன. அவற்றில் சில மீட்கப்பட்டாலும் குற்றவாளிகள் தப்பி ஓடிவிடுகின்றனர். மீறிப் பிடிபட்டாலும் அவர்கள் வெறும் ரூ.3,000 அபராதம் கட்டிவிடுகின்றனர் அல்லது மூன்றாண்டு சிறைத்தண்டனை அனுபவித்து வெளியே வந்துவிடுகின்றனர். ஆனால் சிலைகளை விற்றுக் கொள்ளையடித்த பணம் அப்படியே அவர்களிடம் இருக்கிறது. நீதிமன்றத்தில் சிலைக்கடத்தல் வழக்குகள் தோற்றுப் போகும்போது எங்கள் முயற்சிகள் எல்லாம் தோற்றுவிடுகின்றன” என்றார் விஜயகுமார்.
இந்திய புலனாய்வுக் கட்டமைப்பில் ஊழலும் குழப்பங்களும் மலிந்து கிடக்கின்றன என்பது விஜயகுமாரின் வாதம். 2009ல் கபூரின் முக்கிய கையாளான அசோகன் சஞ்சீவி கைது செய்யப்பட்டார். 2016ல் மீண்டும் அந்நபர் கைது செய்யப்பட்டார். “அப்போது, அதனைப் பெரிய சாதனை என்று காவல்துறை பெருமையடித்துக் கொண்டது. 28 ஆண்டுகளாகத் தப்பி ஓடிய குற்றவாளியைப் பிடித்துவிட்டோம் என்று கூறியது காவல்துறை. ஆனால், 2009லிருந்து மீண்டும் கைதான 2016ஆம் ஆண்டு வரை அசோகன் என்ன செய்து கொண்டிருந்தார்? முதன்முறை கைதானபிறகு போலீஸ் பிடியிலிருந்து வெளியேறியது எப்படி? இந்தக் கேள்விகளுக்குக் காவல்துறையிடம் விடைகள் இல்லை”.
அமெரிக்காவில் ’ஆர்ட் ஆஃப் பாஸ்ட்’ என்ற கலைக்கூடத்தை நடத்திவந்த கபூர் ஜெர்மனி விமானநிலையத்தில் 2011 அக்டோபரில் கைது செய்யப்பட்டார்; அவர்மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்திய அரசு கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில் அவரை 2012, ஜூலை 14 அன்று ஜெர்மனி இந்தியாவிடம் ஒப்படைத்தது
இந்திய நிர்வாகத்தில் இருக்கும் குறைகள் பற்றிப் பேசிய விஜயகுமார், ஏராளமான சிலைகள் மீட்கப்பட்டு வெளிநாடுகளில் இருக்கும் இந்திய தூதரகங்களில் தேங்கிக் கிடப்பதாகவும், அவற்றை இந்தியாவுக்குள் கொண்டுவர முடியாத அளவுக்கு இந்தியப் பொருளாதாரம் பலவீனமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
“இத்தாலியில் பொதுமக்களும் வழக்குரைஞர்களும் தன்னார்வலர்களும் சிலைக் கடத்தலைத் தடுக்கும் கலையில் பயிற்சி பெற்றிருக்கிறார்கள். அங்கே பலமான ஒரு விழிப்புணர்வு வலைப்பின்னல் இருக்கிறது. அதுமாதிரியான ஒரு அமைப்பை உருவாக்க முடியாமல் இந்தியாவைத் தடுப்பது பொருளாதாரக் காரணங்கள்தான்” என்று வருத்தப்பட்டார் விஜயகுமார்.
“பொன்னியின் செல்வன் திரைப்படத்தால் உருவான நல்ல விசயங்களில் ஒன்று, மக்களுக்குச் சோழர்கள் மீதும் அவர்கள் உருவாக்கிய கலைகள் மீதும் ஏற்பட்டிருக்கும் ஆர்வம்தான். சோழர் காலத்துச் சிலைகள் மற்றும் கலைப்பொருட்கள் மீது எனக்கு ஆர்வம் ஏற்படக் காரணம் கல்கியின் பொன்னியின் செல்வன் புதினம் தான்.
மேலும் படிக்க: வெளிநாட்டு அருங்காட்சியகங்களில் இருக்கும் எல்லா இந்திய கலைப்பொருட்களும் திரும்பக் கிடைக்குமா?
ஆதித்த கரிகாலன் கொலை அந்தக் கதையில் பெரியதொரு மர்மம். அந்தக் கொலையைச் செய்தவர்கள் என்று சோமன், ரவிதாசன் மற்றும் பரமேஸ்வரன் ஆகியோர் பெயர்கள் உடையார்குடிக் கோயில் கல்வெட்டில் இருக்கின்றன. கொலையாளிகளின் சொத்துக்களும் அவர்களுடைய தாயாதிகளின் சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்ட தகவல் அந்தக் கல்வெட்டில் இருக்கிறது.
பொன்னியின் செல்வனில் நடித்தவர்களும் கலைஞர்களும் ஒருமுறையாவது உடையார்குடிக்குச் சென்று அதனைப் பார்க்க வேண்டும். சோழர்காலக் கலாச்சாரப் பொக்கிசங்களைக் காக்கும் பணிக்கு நிதியுதவி செய்ய வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார் விஜயகுமார்.
“நமது கலாச்சாரப் பெருமைகளைப் பேசும் சிலைகளையும் கலைப்பொருட்களையும் மீட்பது நமது கடமை. எப்படியோ அவை வெளிநாடுகளில் இருக்கின்றன. இது சம்பந்தமான விழிப்புணர்வு மக்களுக்கு வேண்டும்.
உதாரணமாக ’லெய்டன் தட்டுக்கள்’ என்று ஆய்வாளர்கள் சொல்லும் செப்பேடுகள் நெதர்லாந்து பல்கலைக்கழகத்தில் இருக்கின்றன. அவை ராஜ ராஜ சோழன் பொ.ஆ. 10ல் நாகப்பட்டினத்தில் இருந்த புத்த விகாரத்திற்குக் கொடுத்த நன்கொடைகள் பற்றிய செப்பேடுகள். 300 ஆண்டுகளுக்கு முன்பு அவை தமிழ்நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கின்றன.
இவ்வாறு நமது கலாச்சாரப் பெருமைமிக்க பொருட்கள் பலவற்றை இழந்திருக்கிறோம். அவற்றை எல்லாம் மீட்டெடுக்க ஒரு மக்கள் இயக்கம் எழுச்சி பெற வேண்டும்” என்று முடித்தார் விஜயகுமார்.
Read in : English