Read in : English
தூய்மை மாநகரங்களுக்கான ஸ்வச் பாரத் அர்பன் மிஷன் என்பது நடுவண் அரசைப் பொறுத்தவரை வெற்றிகரமான மக்கள் புரட்சியாக இருக்கலாம். ஆனால் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட 4,320 மாநகரங்களில் கிட்டத்தட்ட எல்லாவற்றிலும் அந்தத் திட்டம் இன்னும் முழுமையடையாமலும், வளர்ச்சி குன்றிய நிலையிலும்தான் இருக்கிறது.
சொல்லப்போனால் தூய்மை (ஸ்வச்) கதாநாயகரான மகாத்மா காந்தி, சுத்தம், சுகாதாரம், என்பவற்றில் பெரும்பாலான இந்தியர்களுக்கு இருந்த அலட்சியத்தைக் கண்டு வெதும்பினார்; அவர்தான் இந்தத் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசிற்குத் தூண்டுகோல்.
பிரதமர் நரேந்திர மோடி 2014-ல் ஸ்வச் பாரத் அர்பன் மிஷன் அழைப்பை விடுக்கும்போது மகாத்மாவின் ’கனவை நனவாக்கும்படி’ மக்களைக் கேட்டுக்கொண்டார்.
ஒரு நூற்றாண்டுக்கு முந்திய தனது உரையில், அதாவது 1916-ல், காந்தியடிகள் காசி மாநகரத்தை ‘துர்நாற்றக் கோட்டம்’ என்றழைத்தார். புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோயில் இந்தத் தேச மக்களின் ‘குணாதியசத்தை’ பிரதிபலிக்கிறது என்று அவர் கருதினார்.
குப்பை அகற்றும் புரட்சியில் ஜனங்களை வழிநடத்திய ஓர் அறச்சக்தியை ஒருவர் தலைமையேற்று நடத்தினார் என்றால், அது மகாத்மாதான். ஆனால் அவர் கருத்து தெரிவித்து 105 ஆண்டுகள் கழிந்தும்கூட இந்தியாவின் மாநகரங்கள் இன்னும் தினம் டன் கணக்கில் குப்பைகளோடு போராடிக் கொண்டுதான் இருக்கின்றன.
அவர் கருத்து தெரிவித்து 105 ஆண்டுகள் கழிந்தும்கூட இந்தியாவின் மாநகரங்கள் இன்னும் தினம் டன் கணக்கில் குப்பைகளோடு போராடிக் கொண்டுதான் இருக்கின்றன
ஸ்வச் சர்வேக்ஷன் திட்டத்தின்கீழ், சுத்தத்தைப் பேணுவதில் தனிப்பட்ட மாநகரங்களுக்கு மதிப்பெண்களையும், தரவரிசையையும் வழங்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் செயற்பாடு பட்டிப்பார்த்த பலனைத்தான் தந்திருக்கிறது. அரசு வந்திருப்பதாகச் சொல்லும் புரட்சியை அது கொண்டுவரவில்லை.
மக்கும் குப்பை, மறுசுழற்சிக் குப்பை என்று பொதுவெளி விவாதங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. குறிப்பாக நெகிழி (பிளாஸ்டிக்) ஓர் அபாயகரமான பொருளாக உருவெடுத்து வருகிறது. ’எழுந்துநிற்கும் இந்தியாவில்’ கழிவுப் பிரச்சினையின் இன்னொரு அம்சத்தைப் பலரும் கவனிப்பதில்லை.
கட்டுமான, கட்டிட இடிப்புக் கழிவு (கன்ஸ்ட்ரக்ஷன் அண்ட் டெமாலிஷன் வேஸ்ட்) என்பதுதான் அது. வருடந்தோறும் 150 மில்லியன் டன்கள் அது உற்பத்தி ஆகிறது என்று அதிகாரப்பூர்வமான மதிப்பீடு சொல்கிறது. அரசு சாரா நிறுவனங்களின் மதிப்பீட்டில் அது மூன்று அல்லது நான்கு மடங்கு அதிகமாக இருக்கலாம்.
கட்டிடச் சொத்துக்களின் மறுகட்டுமானம் மிகவேகமாக வளர்ந்துகொண்டிருக்கும் ஒரு நாட்டில், மணல், விலைமதிப்பற்ற இயற்கைக் கனிமப்பொருட்கள் ஆகியவற்றை உள்ளடக்கி வைத்திருக்கும் இந்த வகையானக் கழிவு இன்னும் பல்மடங்கு அதிகமாகிக் கொண்டே இருக்கும். ஆனால் 2020-ம் ஆண்டு நிலவரப்படி, அவற்றை மறுசுழற்சி செய்யும் திறன் என்பது ஒருநாளைக்கு 6,500 டன்கள் மட்டுமே என்று விஞ்ஞானம், மற்றும் சுற்றுச்சூழல் மையம் சொல்கிறது.
போட்டிகளுக்கு, தரவரிசைகளுக்கு அப்பால் கட்டுமான, கட்டிட இடிப்புக் கழிவு சுழல்பயன்பாட்டு அமைப்பில் மறுசுழற்சி செய்யப்பட வேண்டும். அதுவே ஆகச்சிறந்த செயற்பாடாகும். கட்டுமானத்துறைக்கு புதிய கச்சாப்பொருட்களை உற்பத்தி செய்வதற்கு அது உதவும். அந்தப் புதிய கச்சாப்பொருட்களை கட்டுமானம் அல்லாத பயன்பாடுகளில் பிரயோகிக்க வேண்டும்.
இந்த வருடம் ஸ்வச் சர்வேக்ஷன் திட்டத்தின்கீழ், ‘தூய்மை நகரம்’ என்ற தேசிய விருதுவெற்ற இந்தூர் குறிப்பிடப்படாத அளவிலான கட்டுமான, கட்டிட இடிப்புக் கழிவவைச் செங்கற்களாக, ஓடுகளாக, மற்றும் பிற கச்சாப்பொருட்களாக தனது நிலையங்களில் மாற்றி பிரமாதமாக செயற்பட்டிருப்பதாக ஸ்வச் பாரத் அர்பன் மிஷன் 2020-ல் அந்த மாநகரைக் குறிப்பிட்டிருக்கிறது.
இதன்மூலம், இந்தூர் ஒரு வருடத்தில் ரூபாய் 2.5 கோடி வருவாய் ஈட்டியிருக்கிறது. அந்தக் கழிவின் அடர்த்தியும் அளவும் அடக்கமாக இருப்பதைத்தான் இது காட்டுகிறது. ஒரு நிலையத்தை உருவாக்கி அதில் கட்டுமான, கட்டிட இடிப்புக் கழிவை மறுசுழற்சி செய்வதைப் பற்றி நடுவண் அரசின் மத்திய விஸ்டா திட்டம் பேசிக்கொண்டிருக்கிறது.
2024-ஆம் ஆண்டு காலக்கெடுவையும் அது நிர்ணயித்திருக்கிறது. ஆயினும் பாரம்பரிய கட்டிடங்களிலிருந்து மீட்டெடுக்கப்பட்ட, பேணிக்காத்த கதவுகள் உட்பட பல்வேறு பொருட்கள் மறுபயன்பாட்டிற்கு எளிதாக இல்லாமல் போகலாம் என்று பல கட்டிடத் தொழில்நுட்பர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.
தற்போது கட்டுமான, கட்டிட இடிப்புக் கழிவை சிறிய கட்டுமானங்களிலிருந்து அகற்ற விரும்புபவர்களுக்கு நகர உள்ளாட்சி அமைப்புகளிடமிருந்து உதவியேதும் கிடைப்பதில்லை. பெரும்பாலோர் அந்தக் கழிவை சாலையோரங்களில் கொட்டிவிடுகிறார்கள்.
உள்ளாட்சி அமைப்பு தன் செளகரியத்திற்கேற்ப அதை அகற்றட்டும் என்று விட்டுவிடுகிறார்கள். இது பொதுஜனங்களின் பெருந்துயர். நகராட்சி அதிகாரிகள் கழிவை அகற்றுவதற்காக அதிகாரப்பூர்வமற்ற தொழிலாளிக் கூலியைப் பேரம் பேசுகிறார்கள். அவர்கள் எடுத்துச் செல்லும் கட்டுமானக் கழிவுகள் எவ்வாறு மறுசுழற்சி செய்யப்படுகின்றன அல்லது முற்றிலும் அழிக்கப்படுகின்றன என்பது தெளிவாகத் தெரியவில்லை.
கட்டுமானக் கழிவு நிறைய இடத்தை ஆக்ரமித்துக் கொள்கிறது. அதனால் உள்ளூர் அரசுகளுக்குச் சொந்தமான கழிவுநிரப்பும் நிலங்களின் மீது அழுத்தம் அதிகமாகிறது. 2017-ஆம் ஆண்டிற்குள் 53 மாகரங்களில் மறுசுழற்சி மையங்களை நிறுவும் திட்டங்கள் பெரும் முன்னேற்றம் காணவில்லை.
13 மாநகரங்கள் மட்டுமே அப்படிச் செய்திருக்கின்றன என்று விஞ்ஞானம், மற்றும் சுற்றுச்சூழல் மையம் சொல்கிறது.
மாநகரங்களின் செயற்பாடு போட்டியிடும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு மதிப்பெண்கள் வழங்கும் விரிவான கட்டமைப்பு கொண்ட சர்வேக்ஷன் கட்டுமான, கட்டிட இடிப்புக் கழிவிற்கும் 100 மதிப்பெண்ணை தருகிறது. அதில் 50 மதிப்பெண் கழிவைச் சேகரிப்பதற்கும், சேமிப்பு வைப்பதற்கும் வழங்கப்படுகிறது.
மற்றுமொரு 50 மதிப்பெண் மறுசுழற்சிக்கு தரப்படுகிறது. இந்த மதிப்பெண்கள் எல்லாம் மொத்தம் 800 மதிப்பெண் கொண்ட ஒட்டுமொத்த கழிவுச் சேகரிப்பு, அகற்றல் என்ற தலைப்பின்கீழ் வழங்கப்படுகின்றன. மேலும், தனித்தனியான பிரிப்பெடுத்தலுக்கும், தொடர்ந்து பேணப்படும் சுகாதாரத்திற்கும் தனித்தனியாக 600 மதிப்பெண்கள் கொடுக்கப்படுகின்றன.
இந்தூரின் சாதனை என்று சொல்லப்படும் நிகழ்வு சேவை மட்டத்து முன்னேற்றத்தில் ஆழங்கால் பட்டிருக்கிறது. அதுதான் உச்சப்பிரிவு. இதற்குள் கட்டுமான, கட்டிட இடிப்புக் கழிவு வருகிறது. குப்பைச் சேகரிப்புத் திறன், மூலப்பிரிப்பு, கழிவுநீர் வடிகாற்குழாய்களின் பேணல், நெகிழி (பிளாஸ்டிக்) கழிவின்மீதான கடுமையான தடைகள் ஆகியன வழமையான அம்சங்கள். மொத்தம் 2,400-ல், இந்தூர் எடுத்திருப்பது 2,313 மதிப்பெண்.
கட்டுமானத் தொழிலின் மையமான பெங்களூரு 1,933 மதிப்பெண் வாங்கியிருக்கிறது. மும்பைக்கு 1692.33; அசுரத்தனமாய் வளரும் நவிமும்பைக்கு 2112.02; புது தில்லிக்கு 2223.19; ஹைதராபாத்திற்கு 1797.96. சென்னை வாங்கியிருக்கும் மதிப்பெண் 1392.87.
நெகிழிக் கழிவின் மீதான தடைகளோடு, குறிப்பிட்ட அளவு நெகிழிகளை மறுசுழற்சி செய்தல், கட்டுமான, கட்டிட இடிப்புக் கழிவு மறுசுழற்சியை அதிகரித்தலில் கவனம் குவித்தல் ஆகியவையே தொடர்ந்து இயங்கும் குப்பை மேலாண்மையின் பிரதானமான அம்சங்கள். பசுமை உட்கட்டமைப்பில் செய்யப்படும் முதலீடுகள், கழிவு உற்பத்தியாளர்கள் தரும் நஷ்டஈடு ஆகியவை சாதிப்பது போல, போட்டிப்போட்டு தாக்கும் சவால்கள் குப்பை மேலாண்மையைத் திறமையாகச் சாதிக்குமா என்பது விவாதத்திற்குரியது.
நெகிழிக் கழிவின் மீதான தடைகளோடு, குறிப்பிட்ட அளவு நெகிழிகளை மறுசுழற்சி செய்தல், கட்டுமான, கட்டிட இடிப்புக் கழிவு மறுசுழற்சியை அதிகரித்தலில் கவனம் குவித்தல் ஆகியவையே தொடர்ந்து இயங்கும் குப்பை மேலாண்மையின் பிரதானமான அம்சங்கள்
சர்வேக்ஷன் திட்டத்தின்படி, இந்தூர் அரசுசாரா அமைப்புகள் மறுசுழற்சி செய்யத்தக்க கழிவு கிலோ ஒன்றிற்கு ரூபாய் 2.5-ஐ மக்களுக்கு கொடுத்திருக்கின்றன. மற்ற மாநகரங்களிலும் இந்த மாதிரியான ஏற்பாட்டைக் கொண்டுவந்தால், குப்பையிலிருந்து பணம்வரும் என்ற புதிய அறிவுக்கு ஆளாகும் குடிமக்களை அது ஈர்க்கும்.
ஏனென்றால் பழைய செய்தித்தாள்கள் போன்ற கழிவுப்பொருட்களை விற்பதில் வரும் பணத்தை விட இந்தப் புதிய ஏற்பாட்டினால் அவர்கள் அதிகமாகவே சம்பாதிக்க முடியும்.
தனியாக கழிவு மறுசுழற்சி பேட்டைகளை உருவாக்கி பிரித்தெடுக்கப்பட்ட குப்பைகளை அங்கே கொட்டினால, நகரங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் இயங்கும் சின்னச்சின்ன, மாசுபடுத்தும், மறுசுழற்சி நிலையங்களை நிறுத்திவிடலாம்.
இந்த தர அடிப்படையில் மாநிலங்களை மதிப்பீடு செய்யலாம். கடுமையான கழிவுப் பிரச்சினை, விதிகளைச் செயல்படுத்துவதில் சுணக்கம், மகாத்மா காந்தி வருத்தப்பட்ட பொதுஜன அலட்சியம், எல்லாவற்றையும் விட முக்கியமாக, பொறுப்பற்ற அரசுகள் ஆகியவை கோலோச்சிக் கொண்டிருக்கும்போது, குறிப்பிட்ட மாநகரங்களை, மாநிலங்களைக் குறிப்பிட்டு புகழ்மாலை சூட்டுவதினால் பெரிய பலன் ஒன்றுமில்லை.
Read in : English