Read in : English
அண்மையில் 2022ஆம் ஆண்டுக்கான ஒன்றிய அரசின் ‘ஸ்வச் சர்வேக்ஷன்’ (தூய்மை ஆய்வு) விருதுகள் அறிவிக்கப்பட்டன. இந்தியாவின் நகர்ப்புறக் கழிவு மேலாண்மைச் சட்டத்தின் அடிப்படைத் தோல்விகளை அந்த விருதுகள் மறைத்துவிட்டன. ஒன்றிய அரசின் வீட்டுத்துறை மற்றும் நகர்ப்புற அமைச்சகத்தின் அளவுகோல்கள்படி, தமிழ்நாடு நகர்ப்புறக் கழிவு மேலாண்மை விஷயத்தில் மோசமாகச் செயல்பட்டிருக்கிறது. கோயம்புத்தூரின் புறநகரான போத்தனூருக்கு மட்டும் புதுமைக்கும், ஆகச்சிறந்த செயல்பாட்டுக்குமான விருது வழங்கப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் பரவாயில்லை. வீடுகளுக்குக் கொடுக்கப்பட்ட இணைப்புகள் மூலம் நீர் வழங்கப்படும் திட்டத்தில் கிராமங்கள் நன்றாகச் செயல்பட்டிருக்கின்றன.
கழிவு மேலாண்மையை ஒரு வட்டப் பொருளாதாரத்திற்கு நகர்த்துவதில் அடையும் வெற்றிகளைவிட இருக்கும் கண்ணோட்டங்களே ஸ்வச் சர்வேக்ஷன் நகர்ப்புற விருதுகளில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. மாநகரங்களில் கழிவுகளிலிருந்து பொருள்களை மீட்டெடுப்பதுதான் வட்டப் பொருளாதாரம். இந்த அணுகுமுறை திடக்கழிவு மேலாண்மை விதிகளில் விதிக்கப்பட்டிருக்கிறது.
ஸ்வச் விருது பெறுவதற்கான முக்கியக் காரணிகளில் சில: பிரித்தெடுக்கப்பட்ட கழிவுச் சேகரிப்பு; பொதுக் கழிவறைகளின் தூய்மை; மாநகரை அழகுபடுத்தல்; திறந்தவெளிக் குப்பைக் கிடங்குகள் இல்லாமை; குறைகள் தீர்க்கும் கட்டமைப்பு.
மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நகராட்சி திடக்கழிவு மேலாண்மை பற்றிய தரவுகளை வெளியிட்டிருக்கிறது; அவற்றை வீட்டுத்துறை அமைச்சகம் வெளியிடவில்லை. தில்லியைத் தவிர எட்டுப் பெரிய மாநிலங்கள் ஒட்டுமொத்தமாக ஒரு நாளைக்கு 1.01 இலட்சம் டன் திடக்கழிவை உற்பத்தி செய்கிறது. அதில் 96,000 டன் சேகரிக்கப்படுகிறது; அதில் 59,000 டன் சுத்திகரிக்கப்படுகிறது; மற்றும் 12,400 டன் குப்பைநிலங்களில் நிரப்பப்படுகிறது. இந்தியா ஒருநாளைக்கு 1.6 இலட்சம் டன் கழிவை உற்பத்தி செய்கிறது.
இந்தியாவின் மிகவும் நகர்ப்புறமான மாநிலங்களில் ஒன்று தமிழ்நாடு. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 10-12 சதவீதம் பங்களிப்பு செய்கிறது. ஒருநாளைக்கு 13,422 டன் திடக்கழிவை உற்பத்தி செய்கிறது. அதில் 95% திரட்டப்படுவதாகச் சொல்லப்படுகிறது. 9,430 டன் சுத்திகரிக்கப்படுகிறது; மேலும் 2,301 டன் கழிவு குப்பைநிலங்களில் நிரப்பப்படுகிறது.
மேலும் படிக்க: மத்திய சர்வே அறிக்கை: கட்டடக் கழிவுகளால் மாநகரங்கள் இழந்து போன வாய்ப்புகள்
கழிவு மேலாண்மையில் மத்தியப்பிரதேசமும், மஹாராஷ்டிரமும் தமிழ்நாட்டை விட சிறப்பாகச் செயல்படுகின்றன. இந்தியாவின் ‘மிகச் சுத்தமான’ நகரம் மத்திய பிரதேசத்தின் இந்தூர். 2011இல் அந்த நகரத்தின் மொத்த மக்கள்தொகை 19.6 இலட்சம். அந்த மாநிலம் ஒருநாளைக்கு மொத்தம் 8,022 டன் கழிவை உற்பத்தி செய்கிறது. அதன் கழிவுச் சேகரிப்புத் திறன் 90 சதவீதம்; கழிவுச் சுத்திகரிப்பு விகிதம் 80 சதவீதம். அருகிலிருக்கும் மஹாராஷ்டிரம் பெரிய தொழில் மற்றும் பொருளாதார அடிப்படை கொண்ட ஒரு மாநிலம். அது ஒருநாளைக்கு 22,632 டன் கழிவை உற்பத்தி செய்கிறது; அதன் கழிவுச் சேகரிப்புத் திறன் 99 சதவீதம்.
தோற்றுப்போன கண்ணோட்டம்
அர்பேசர் சுமீத் என்னும் தனியார் நிறுவனம் சென்னையின் திடக்கழிவை மேலாண்மை செய்கிறது. ஆயினும், தமிழ்நாடு மீண்டும் ‘கண்ணோட்டப் போரில்’ தோற்றுப் போயிருக்கிறது. இதற்குப் பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாமைதான் காரணம் என்று குடிமை முகமைகள் சொல்கின்றன. மத்திய அரசின் ‘ஸ்வச்’ (தூய்மை) விருதுக்கு ஆசைப்படும் மாநகரங்கள் மற்றும் மாநிலங்களில் எதிர்பார்க்கப்படுவது பலமானதொரு செயற்முறை அல்ல; கண்ணுக்குத் தெரியும் சுத்தமான தாக்கம் மட்டுமே. ஏனென்றால், ‘கண்ணை விட்டு மறைந்தால் மனதை விட்டும் மறைந்துவிடும்’ என்பது பழமொழி. மாநகரத்தின் கழிவைத் தீவைத்து எரிப்பதற்கு ஓர் அழுத்தம் கொடுக்கப்படுகிறது; ஆனால், சுற்றுப்புறமாசுப் பிரச்சினைகள் வரும் என்பதால் அந்த முறை சர்ச்சையான ஒன்று.
அடையாறு, பக்கிங்காம் கால்வாய், கூவம் நதி ஆகியவற்றை மீட்டெடுக்க ரூ.2,400 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. கடந்த காலத்தில் செலவழிக்கப்பட்ட பெரும் நிதி எந்தவிதமான பலனையும் கொடுக்காத ஒரு பிரச்சினைக்கு மீண்டும் ஒரு தடவை பொதுமக்கள் நிதி செலவழிக்கப்படுகிறது.
ஸ்வச் விருது பெறுவதற்கான முக்கியக் காரணிகள் பின்வருமாறு:
- பிரித்தெடுக்கப்பட்ட கழிவுச் சேகரிப்பு
- சாலைகள் மற்றும் பொதுக் கழிவறைகளின் தூய்மை
- மாநகரை அழகுபடுத்தல்
- சந்தைகளில், குடியிருப்புப் பகுதிகளில், வடிகால்களில், நீர்நிலைகளில் இருக்கும் தூய்மை
- குடியிருப்புப் பகுதிகளைத் தினமும் பெருக்கிச் சுத்தப்படுத்துதல்
- திறந்தவெளிக் குப்பைக் கிடங்குகள் இல்லாமை
- குறைகள் தீர்க்கும் கட்டமைப்பு
ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் தடையை வலுவாக நடைமுறைப்படுத்துதல் போன்ற மற்ற காரணிகளும் இருக்கின்றன. வார்டு மட்டத்தில் கழிவைக் குறைப்பதற்கும், மறுபயன்பாட்டுக்கு உட்படுத்துவதற்கும் மறுசுழற்சி செய்வதற்கும் தேவையான புதுமையைக் கையாள வேண்டும். தூய்மைப் பணியாளர்களுக்கான சிறந்த பணிநிலையை உருவாக்க வேண்டும்; முறைசாராக் கழிவுப் பணியாளர்களுக்கு நல்ல ஊதியம் கொடுக்க வேண்டும்; உள்ளாட்சி அமைப்புகளின் ஊழியர்களின் திறன்களை மேம்படுத்த வேண்டும்; பெளதீக உட்கட்டமைப்பை உயர்த்த வேண்டும்.
ஆனால், இந்த அளவுகோல்களின்படிப் பார்த்தால் சென்னை போன்ற மாநகரமும், கோயம்புத்தூர், திருச்சி, மதுரை போன்ற பிற மாநகரங்களும் மத்திய அரசின் தூய்மை விருதுக்குத் தகுதியல்ல. ஏனென்றால், அங்கேயெல்லாம் தூய்மைச் செயற்பாடுகளில் முன்னேற்றம் ஏதுமில்லை. சென்னையில் பிளாஸ்டிக் தடை மீறப்படுவது சகஜமாகிவிட்டது.
என்றாலும், ஸ்வச் சர்வேக்ஷன் (தூய்மை ஆய்வு) விருதுக் கணிப்புமுறை தாக்குப்பிடிக்கக் கூடியதல்ல. கழிவு மேலாண்மை விசயத்தில் சில செயற்பாடுகளை எதிர்மறை மதிப்பீடு செய்யும் ஒரு முக்கிய அம்சம் விருது தேர்வுக் கட்டமைப்பில் இடம்பெறவில்லை. எதிர்மறை மதிப்பீடு கருத்துப்படி, திடக்கழிவு மேலாண்மை முகமை அகற்றப்பட வேண்டிய கழிவின் அளவைக் குறைக்க வேண்டும்; பிரித்தெடுக்கப்படும் நகர்ப்புறக் கழிவின் அளவையும், அதிலிருந்து மீட்கப்படும் பொருள்களின் அளவையும் குறைக்க வேண்டும். ஸ்வச் சர்வேக்ஷன் முறை விளைவுகளை அடிப்படையாகக் கொண்டதில்லை. அபூர்வமான பொருள்கள் உட்பட கழிவிலிருந்து மீட்கப்படும் பொருள்களின் அடிப்படையில் அந்தத் தூய்மை ஆய்வு நடத்தப்படுவதில்லை.
மேலும் படிக்க: ஸ்வத்சித் சர்வேக்ஷன் அறிக்கை: கழிவு மேலாண்மையில் பின்தங்கியுள்ளதா தமிழ்நாடு?
தமிழ்நாட்டில், குறிப்பாக சென்னையில் நகராட்சி கழிவிலிருந்து உற்பத்தி செய்யப்படும் உரத்திற்கான கழிவு அளவு பற்றித் தெளிவான தரவுகள் இல்லை. இந்தியாவின் கழிவுகளில் பெரும்பாலானவை கரிமக் கழிவு என்பது தெரிந்த விசயம்தான். ஈரக்கழிவைப் பதப்படுத்தும் சுழற்சிக்கு 150 மதிப்பெண் கொடுக்கிறது 2022-க்கான ஸ்வச் சர்வேக்ஷன் டூல்கிட். உலர்கழிவுக்கு வழங்கப்படும் மதிப்பெண் 100 புள்ளிகள். கழிவிலிருந்து மீட்கப்பட்டு விற்கப்படும் பொருள்கள் உலர்கழிவில் அடங்கும். சென்னையில் அர்பேசர் சுமீத் பணியாளர்கள் மீட்டெடுக்கும் மறுசுழற்சிக்குரிய பொருள்களை உள்ளூர் காயலான் கடைகளில் விற்றுவிடுகிறார்கள். இந்த விசயத்தில் கணக்கும் இல்லை; கண்காணிப்பும் இல்லை.
திடக்கழிவு மேலாண்மையிலும், தூய்மை விசயத்திலும் தமிழ்நாட்டில் ஆழமான பிரச்சினைகள் இருக்கின்றன. கழிவுநீர்ச் சுத்திகரிப்புத் திறன் ஒருநாளைக்கு 1,359 மில்லியன் லிட்டர் (எம்எல்டி) என்ற அளவில் இருக்கிறது. புதிய சுத்திகரிப்பு நிலையங்கள் திட்டமிட்டபடி கட்டப்பட்டால், இந்த திறன் 1,000 எம்எல்டி-யாக மட்டுமே குறையும். 2022 பிப்ரவரி 4 அன்று நடந்த கூட்டத்தில் இப்படிச் சொல்லியிருக்கிறது மத்திய கண்காணிப்புக் குழு.
இந்தக் கூட்டத்தில் தமிழ்நாட்டின் நகராட்சி திடக்கழிவு பற்றிய மேம்படுத்தப்பட்ட புள்ளிவிவரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. ஒருநாளைக்கு 14,292 டன் மொத்தக் கழிவு மாநிலத்தில் உருவாகிறது என்றும் அதன் சுத்திகரிப்புத் திறன் 68 சதவீதம் என்றும் அந்தப் புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. இன்னும் நான்கு அல்லது ஐந்து மாதங்களில், கழிவு மேலாண்மை, தூய்மை மற்றும் கடலோரக் கண்காணிப்புச் செயற்பாடுகள் ஆகியவற்றைப் பற்றி நவீன அறிக்கை ஒன்றை வழங்குவதாகத் தமிழ்நாடு அந்தக் கூட்டத்தில் சொல்லியிருக்கிறது. இந்த வாக்குறுதி கொடுக்கப்பட்ட மாதம் பிப்ரவரி.
தமிழ்நாட்டில், குறிப்பாக சென்னையில் நகராட்சி கழிவிலிருந்து உற்பத்தி செய்யப்படும் உரத்திற்கான கழிவு அளவு பற்றித் தெளிவான தரவுகள் இல்லை.
ஜல் சக்தி அமைச்சகம் நடத்திய இந்தக் கூட்டம், தமிழ்நாட்டில் மலக்கழிவுச் சுத்திகரிப்பு நிலையங்களைத் தொடங்கும் முயற்சிகள் மந்தமாகி விட்டதைச் சுட்டிக்காட்டியது. மேலும், கடலோர மாசு மேலாண்மைத் திட்டமிடுதல் விஷயத்திலும் மந்தநிலை இருக்கிறது என்பதையும் கூட்டம் தெரிவித்தது. “36 பொதுச் சுத்திகரிப்பு நிலையங்கள் எப்படி விதிகளை அனுசரிக்கின்றன என்பது பற்றிய அறிக்கை இல்லை” என்று கூட்டம் சொன்னது.
தமிழ்நாட்டுத் தலைமைச் செயலரின் தலைமையிலான சென்னை நதிகள் மீட்டெடுப்பு அறக்கட்டளை (சிஆர்ஆர்டி) என்பதைப் பெரும்முயற்சியாகச் சுட்டிக்காட்டியது மாநில அரசு. அடையாறு, பக்கிங்காம் கால்வாய், கூவம் நதி ஆகியவற்றை மீட்டெடுக்க ரூ.2,400 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது என்று கூறியது தமிழக அரசு. கடந்த காலத்தில் செலவழிக்கப்பட்ட பெரும் நிதி எந்தவிதமான பலனையும் கொடுக்காத ஒரு பிரச்சினைக்கு மீண்டும் ஒரு தடவை பொதுமக்கள் நிதி செலவழிக்கப்படுகிறது.
ஸ்வச் விருதுகளுக்கான தேடலைத் தமிழ்நாடு கைவிடலாம் (கேரளமும் விருது வாங்கவில்லை). ஆனால், தமிழகம் சுற்றுப்புறப் பாதுகாப்புக்கான அளவுகோல்களை மேம்படுத்த வேண்டும். நகர்ப்புறக் கழிவு மேலாண்மை என்பது இந்த ஆட்டத்தில் ஓர் எளிமையான அங்கம். குடிமக்கள் தாங்களாகவே வீட்டுக் கழிவுகளைப் பிரித்தெடுத்துத் தருவதற்கு அவர்களைத் தூண்ட வேண்டும்.
Read in : English